மஹ்ரில் பெண்களுக்கான உரிமைகள்
மஹ்ர்
மஹ்ர் என்பது அரபு வாசகமாகும். இதற்கு தமிழில் மணக்கொடை எனக் கூறுவர். மஹ்ர் எனும் சொல் ஸதாக், தவ்ல், அஜ்ர், அதிய்யா, ஹிபா, அலாஇக், நிஹ்லா, பரீழா போன்ற பல ஒத்தக் கருத்துச் சொற்களில் அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மஹ்ரும், அதன் இஸ்லாமிய சட்டமும், அது கடமையாக்கப்பட்டதன் நோக்கமும்.
பெண்களுக்கு பூரண உரிமைகளை வழங்குவதில் இஸ்லாம் சிறப்பான மார்க்கமாகத் திகழ்கிறது. அந்த வகையில் எந்த ஆணாயிருப்பினும் ஓர் பெண்ணைத் திருமணம் செய்ய நினைத்தால் அப்பெண்ணுக்கான மஹ்ரை கொடுத்து திருமணம் செய்துகொள்ளுமாறு இஸ்லாம் கட்டாயப்படுத்தியுள்ளது. மஹ்ரை பெண்களுக்கு வழங்க வேண்டிய கட்டாய உரிமையாகவே இஸ்லாம் கருதுகிறது. கொடுத்த மஹரை மனைவியின் விருப்பமின்றி வழுக்கட்டாயமாகவோ, தந்திரங்களைப் பயன்படுத்தியோ எடுப்பதும் கூடாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். அல்லாஹ் கூறுகிறான், “பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!” (அல்குர்ஆன் 04:04).
இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களில் பெண்கள் திருமணம் செய்யும் போது ஆண்களுக்கு மஹ்ரைக் கொடுக்க வேண்டுமென வழுக்கட்டாயமான சட்டம் இருக்கிறது. இதற்காக குறித்த பெண்ணும், பெண்வீட்டார்களும் பணம் சேர்ப்பதில் பல அசௌகரியங்களை சந்திக்கின்றனர். பல நேரங்களில் பணம் சேர்க்கப்போய் பெண்கள் தமது மாணத்தையும் இழக்கின்றனர். முஸ்லிம்களில் சிலரும் அந்நிய மதக்கலாச்சாரமான இதை சீதணம் எனும் பெயரில் பெறுவது கவலைக்குரியது. தனது அக்கா, தங்கைகளுக்காக தான் கொடுத்தவற்றை திருமணம் செய்யும் போது பெண்வீட்டாரிடமிருந்து பெறவேண்டுமென்ற வழுக்கட்டாய வழக்கம் தலைத்தோங்கி, சுற்று முறையில் இது நடைபெறுவதால் பல ஆண்கள் இஸ்லாத்திற்கு விரோதமாக இருந்தாலும் இதை ஆதரிக்கின்றனர்.
மஹ்ர் என்பது கணவன் பயன்படுத்துவதற்கோ, அல்லது பெண்ணின் தாய், தந்தை பயன்படுத்துவதற்கோ கொடுக்கப்படும் கொடை கிடையாது. அது குறித்த பெண்ணுக்கான உரிமையாகும். அதை அவள் இஸ்லாம் அனுமதித்தவற்றில் விரும்பியவாறு பயன்படுத்தலாம். அதை அவளிடமிருந்து பெறவேண்டுமென்ற எண்ணம் கணவனுக்கும், பெண்ணின் பெற்றோருக்கும் இருக்கக்கூடாது.
மஹ்ரின் இஸ்லாமிய சட்டம்
அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் திருமணத்தின் போது கணவன், தன் மனைவிக்கு மஹ்ர் கொடுப்பது கட்டாயக் கடமை எனக் கூறுகின்றனர். அதற்கு அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலிருந்தும் அதிக ஆதாரங்களை முன்வைக்கின்றனர். அவற்றில் சில வருமாறு:
அல்குர்ஆனின் ஆதாரங்கள்
01. அல்லாஹ் கூறுகிறான், “பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள்!” (அல்குர்ஆன் 04:04).
02. அல்லாஹ் கூறுகிறான், “இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள்.” (அல்குர்ஆன் 04:24).
ஸுன்னாவின் ஆதாரங்கள்
01. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணந்துகொண்டபோது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'அவளுக்கு எவ்வளவு மஹ்ர் (விவாகக் கொடை) கொடுத்தாய்?' என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரழி, 'ஒரு பேரிச்சங் கொட்டை எடை அளவுத் தங்கத்தை'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் y, நூல்: புஹாரி 5167).
02. (கைபர் போரில் கைது செய்யப்பட்ட) ஸஃபிய்யா பின்த் ஹுயைய் ரழி அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள்; (ஸஃபிய்யா அவர்களின் விடுதலையையே அவர்களுக்குரிய மஹ்ராகவும் (விவாகக் கொடையாகவும்) ஆக்கினார்கள். அ(வர்களை மணந்த)தற்காக (விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும்) 'ஹைஸ்' எனும் பண்டத்தை வலீமா (மணவிருந்தாக) அளித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் y, நூல்: புஹாரி 5169).
03. ஒரு பெண்மணி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்'' என்று கூறினார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு அதைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு தம் தலையைத் தொங்கவிட்டார்கள். தம் விஷயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப்பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்!'' என்று கூறினார். நபி ஸல் அவர்கள் (அவரிடம்), '(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, இறைத்தூதர் அவர்களே!'' என்று பதில் கூறினார். திரும்பத்திரும்ப அவரை அனுப்பி ஏதும் கிடைக்கிறதா எனப் பார்க்கச் சொல்ல அவரும் இல்லை என்றே கூறினார். இறுதியாக நபி (ஸல்) அவர்கள், 'உம்முடன் குர்ஆனில் என்ன ( மனப்பாடமாக) உள்ளது?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(குர்ஆனில்) இன்ன , இன்ன (அத்தியாயங்கள்) என்னுடன் உள்ளன'' என்று அவற்றை அவர் எண்ணி எண்ணிக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?' என்று கேட்டார்கள். 'ஆம் (ஓதுவேன்)'' என்று அவர் பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள், 'உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள். -ஹதீஸின் சுருக்கம்- (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் ரழி, நூல்: புஹாரி 5126).
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.