மூளையின் முன்பகுதி - The Frontal Lobe Of The Brain - MJM. Hizbullah Anvari (B.Com Reading)

 


மூளையின் முன்பகுதி - The Frontal Lobe Of The Brain

மூளை ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியமான உறுப்பாகும். அது நாம் விழிப்பின்றி இருக்கும் நிலையில் உள்ள செயற்பாடுகள், விழிப்புடன் இருக்கும் நிலையிலான செயற்பாடுகள் என எமது உடலின் அனைத்து அசைவுகளையும் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

அதிலும் குறிப்பாக முடிவுகள் எடுத்தல், முகாமைத்துவம் செய்தல், உணர்ச்சி வசப்படுதல், உண்மை, பொய், கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் என அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்திலாகும். இதற்கு முன் புறணி எனவும் கூறுவர். இது முன்நெற்றியின் மண்டையோட்டுக்குக் கீழ் உள்ள பகுதியாகும். ஒவ்வொரு உயிரனமும் சரியான பாதையைத் தேர்வு செய்து அதில் பயணிப்பதற்கு மூளையின் முன்பகுதி மிக முக்கிய பங்காற்றுகிறது. அல்லாஹ் தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுவதற்கும், தான் நாடியோரை வழிகேட்டில் செல்ல வைப்பதற்கும் மூளையின் இம் முன்பகுதியைத் தான் பயன்படுத்துகிறான்.

ஹூத் (அலை) அவர்கள் தன் சமூகத்தினரின் நேர்வழிக்காக ஆற்றிய உபதேசத்தில் பின்வருமாறு குறிப்பிட்டதாக அல்லாஹ் கூறுகிறான், எனது இரட்சகனும் உங்களது இரட்சகனுமாகிய அல்லாஹ்விடமே நிச்சயமாக நான் பொறுப்புச் சாட்டியுள்ளேன். எந்த உயிரனமாயினும் அதன் முன்நெற்றியை அவன் பிடித்தவனாகவே அன்றி இல்லை. நிச்சயமாக எனது இரட்சகன் நேரான பாதையில் இருக்கிறான்.” (அல்குர்ஆன் 11:56).

கவலையின் போது ஓத வேண்டுமென நபியவர்கள் கற்றுத் தந்த துஆவில் பின்வருமாறு ஓர் வாசகம் இடம் பெறுகிறது, இறைவா! நான் உன் அடிமை, உன் அடிமைகளான ஓர் ஆண்-பெண்ணின் மகன். என் முன்நெற்றி உன் வசம் உள்ளது...” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: அஹ்மத் 3712, இப்னு ஹிப்பான் 972).

தூங்கும் போது ஓத வேண்டுமென நபியவர்கள் கற்றுத் தந்த துஆவில் பின்வருமாறு ஓர் வாசகம் இடம்பெறுகிறது, ...அனைத்துப் பொருட்களின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அவற்றின் முன்நெற்றியை நீயே பிடித்துள்ளாய். இறைவா! நீயே ஆரம்பமானவன்; உனக்கு முன்னர் வேறெதுவும் இல்லை. நீயே இறுதியானவன்; உனக்குப் பின்னர் வேறெதுவும் இல்லை. நீயே மேலானவன்;” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 2713).

முன்நெற்றியின் செயற்பாடுகள்

1. உடலின் அனைத்துப் பகுதிகளின் செயற்பாடுகளையும் தன் கட்டுக்கோப்புக்குள் வைத்துள்ளது.

2. மனிதன் மற்றும் ஏனைய விலங்குளின் நடத்தைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. நல்லவற்றை விரும்புவதற்கும், நல்லவற்றை தேர்வு செய்வதற்கும், தீயவற்றை விரும்புவதற்கும், தீயவற்றை தேர்வு செய்வதற்கும் வழிவகுக்கிறது.

3. குறிப்பாக மனிதப் பண்புகளில் அதிக தாக்கம் செலுத்துகிறது. ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும், தீயவனாக மாறுவதற்கும் இது ஒன்றே காரணியாக இருக்கிறது.

4. உண்மை, பொய் இவ் இரண்டையும் பிரித்தறியும் ஆற்றல் இதனிடமே உள்ளது.

5. தவறிழைப்பதையும், தவறிழைப்பதைத் தடுக்கும் போக்கும் இதனிடமே உள்ளது.

கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் பேராசிரியர் கீத் எல். மூர் என்பவர் முன்நெற்றியின் செயற்பாடுகள் குறித்த முதல் ஆய்வைப் பற்றிக் குறிப்பிடுகையில், 1842ம் ஆண்டு அமெரிக்காவில் ஓர் மாநிலத்தில் ரயில்வே தொழிலில் ஈடுபட்டிருந்த ஓர் தொழிலாளிக்கு தலையில் அடிபட்டது. அவ் அடி அவரின் முன்நெற்றியிலே பலமாக பட்டது. இதனால் அவரின் நடத்தையிலும், பண்பிலும் சற்று மாற்றம் தெறிய ஆரம்பித்தது. ஆனால் அவரது உடலின் ஏனைய பகுதிகள் நல்ல முறையில் எவ்வித பாதிப்புகளும் இன்றி செயற்பட்டதைக் கவனித்து வியந்து போன வைத்தியர்கள் அதன் பின்னே முன்நெற்றி பற்றிய ஆய்வில் ஈடுபட்டனர். அதன் போது முன்நெற்றியின் பணிகளைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

இச்செயற்பாடுகள் சீரிய முறையில் நடைபெற்று தீர்க்கமான முடிவுகளைப் பெற வேண்டுமாக இருந்தால் நாம் முன்நெற்றிக்கு அதிகம் இரத்த அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும். அதுவே அதை வழுப்பொருந்தியதாக மாற்றிவிடும். இதற்காகவே இஸ்லாம் எமக்கு அதிகம் ஸுஜூத் செய்யுமாறு கற்றுத் தந்துள்ளது. ஸுஜூதின் போது முன்நெற்றிக்கு அதிக இரத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இதன் போது இரத்தம் செல்ல முடியாமல் இருக்கும் நாலங்களுக்குள்ளும் இரத்தம் பீரிட்டுப் பாய்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாம் ஏதாவது முடிவு எடுக்கும் போது கூட அதை முன்நெற்றியுடன் தொடர்பு படுத்தி இஸ்திஹாரா தொழுகையை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர் 'இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி), நூல்: புஹாரி 1162,6382).

பொய் கூறி, தவறிழைக்கும் முன்நெற்றி.

குற்றவாளிகள் உண்மை பேசுகின்றனரா? பொய் பேசுகின்றனரா? என்பதைக் கண்டுபிடிக்க பல மின்னியல் சாதனங்களையும், மருத்துவத் திரவங்களையும் உலகில் உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அனைவரும் பயன்படுத்தி வந்ததனர். ஆனால் அவற்றிலிருந்தும் அதிக குற்றவாளிகள் தப்பித்த வண்ணமே இருந்தனர். அதன் பின் மனித மூளையில் பொய்பேசும் திறன் எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அது முன்நெற்றியிலிருந்து உதிப்பதை அறிந்து, அதை பரிசோதிப்பதற்காக 2003ம் ஆண்டு காந்த அதிர்வு ஸ்கேனிங் (FMRI) முறையைக் கண்டுபிடித்தனர். இதன் மூலம் குற்றவாளிகள் உண்மையாளர்களா?, பொய்யர்களா? என்பதை துள்ளியமாக அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

அடிப்படையில் உண்மைக்கும், குற்றமிழைக்காத பண்புக்கும், நேர்த்தியான முடிவெடுத்தல் பண்புக்கும் ஏற்ற அமைப்பிலே முன்நெற்றி படைக்கப்பட்டுள்ளது. உண்மை பேசி, உண்மையாக இருந்து, நேர்த்தியாக முடிவுகளை எடுக்கும் காலமெல்லாம் அதன் செயற்பாடு சீரான முறையிலே இயங்கிக் கொண்டிருக்கும். எப்போது பொய் பேசி, பொய்யாக செயற்பட்டு, பல தவறுகளையும், தவறான முடிவுகளையும் எடுக்க நேர்கிறதோ அப்போது அதன் செயற்பாட்டில் அதிக அதிர்வலைகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.



மேலுள்ள படத்தில் இடது பக்கத்தில் உள்ள மூளையின் வடிவம், ஒருவர் சாதாரனமாக உண்மையான நிலையில் இருக்கும் போதான அவரின் மூளையின் சாதாரன வடிவமாகும். அவரின் பொய் அதிகரிக்கும் போது முன்நெற்றியில் இடம்பெறும் அதிர்வினால் மூளையின் செயற்பாடு அதிகரிப்பதைக் காணமுடியும். மஞ்சல் நிறப்புள்ளி இவ் அதிர்வு எழும் இடத்தைக் குறிக்கிறது.

முன்நெற்றி பொய்சொல்வதாகவும், தவறிழைப்பதாகவும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்,

அல்லாஹ் கூறுகிறான், “ஓர் அடியான் தொழும் பொழுது (அவரை) தடுப்பவனை நீர் பார்த்தீரா! அவர் நேர்வழியில் இருந்தாலும், அல்லது பயபக்தியைக் கொண்டு ஏவினாலும் (அவரைத் தடுப்பவனை) நீர் பார்த்தீரா? அவன் (அவரைப்) பொய்ப்பித்துப் புறக்கணித்ததையும் நீர் பார்த்தீரா? நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) பார்த்துக்கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறன்று, அவன் இதைவிட்டும் விலகிக் கொள்ளவில்லையாயின் நிச்சயமாக அவனது முன் நெற்றியை நாம் பிடிப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் (அவனது) முன்நெற்றியாகும்.” (அல்குர்ன் 96:09-16).

பொய் பேசும் போதும், பொய்யாக செயற்படும் போதும், தவறான முடிவுகளை எடுத்து வழிதவறிப் போகும் போதும் எமது முன்நெற்றி அதிகம் களைப்படைவதை இன்னொரு உதாரணத்துடன் அல்லாஹ் விளக்குகிறான்.

அல்லாஹ் கூறுகிறான், நாம் நாடியிருந்தால் அவற்றின் மூலம் அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும் பூமியின் (சுகபோகத்தின்) பால் சாய்ந்து தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனது உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தைப் போன்றது. அதை நீ விரட்டினாலும் அது நாக்கைத் தொங்கப்போட்டுக் கொள்ளும். அதை விட்டு விட்டாலும் அது நாக்கைத் தொங்கப் போட்டுக்கொள்ளும். இதுவே நமது வசனங்களைப் பொய்ப்பித்த சமூகத்திற்கு உதாரணமாகும்” (அல்குர்ஆன் 07:176).

நாய் நாக்கைத் தொங்க போடுவதற்கு தன்னிடமுள்ள சக்தியை எவ்வாறு செலவழிக்கிறதோ அவ்வாறே பொய் பேசுபவர்களும், பொய்ப்பிப்பவர்களும், தவறான முடிவுகளை எடுத்து, தவறான வழிகளில் செல்வோரும் தமது மூளைக்கு அதிக சக்தியைக் கொடுத்து அதை களைப்படைய வைக்கின்றனர் என்பதை சூசகமாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இயல்பு நிலை

ஒரு மனிதனை அல்லாஹ் படைக்கும் போது அவனது மூளையை சீரான இயக்க நிலையிலே படைக்கிறான். அவ்வாறான சீரான இயக்க நிலையின் போது அவனது மூளையின் முன்பகுதியின் வீரியம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். உண்மை, உண்மைப்படுத்தல், சீரான முடிவை எடுத்தல், நேர்வழியை துள்ளியமாக அறிதல் போன்ற பண்புகள் அதில் குடிகொண்டிருப்பதே இச் சீரான இயக்க நிலைக்கு காரணமாகும்.

இதையே நபி (ஸல்) அவர்கள் எமக்கு பரிட்சயமான ஓர் ஹதீஸில் குறிப்பிட்டார்கள், “'எல்லாக் குழந்தைகளும் இயல்பான (சீரான இயக்க) முறையில் தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தாம் அவர்களை (சீரான இயக்க முறையை விட்டும் திருப்பி) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர். ஒரு விலங்கு (முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப்) பெற்றெடுப்பதைப் போன்றுதான் (இது). நீங்களே அதன் நாக்கு, மூக்கு போன்ற உறுப்புகளை வெட்டிச் சேதப்படுத்தாத வரை நாக்கு மற்றும் மூக்கு வெட்டப்பட்ட நிலையில் அது பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 6599, 6600, முஸ்லிம் 2685, 2659).

இயற்கையாகவே ஒரு மனிதனுக்கு இருக்கும் முன்நெற்றியின் சீரான இயக்கத்தினால் சீராகவும், நேர்த்தியாகவும் அவனால் சிந்திக்க முடிகிறது. அது உதாசீணப்படுத்தப்படும் போதே ஓரிறைக் கொள்கையை விட்டும் தடம்புரண்டு பல கடவுற்கோட்பாட்டின் பக்கமும், நாத்திகத்தின் பக்கமும் அவன் வழிதவறிச் செல்கிறான். மூட நம்பிக்கைகளையும், மனிதனால் உருவாக்கப்பட்ட மத அனுஷ்டானங்களையும் நல்லதாக நினைத்து பின்பற்ற ஆரம்பக்கிறான். படித்தவன் கூட இது விடயத்தில் தோற்றுப் போகின்றான். இதன் போது தனது சிந்திக்கும் திறனையும், நேர்த்தியாக உண்மையை விளங்கி முடிவெடுக்கும் திறனையும் தவறான வழியில் பயன்படுத்துகிறான்.

முன்னெற்றியை பாதிக்கும் அம்சங்கள்

சீரான இயக்க நிலையில் முன்நெற்றி இருக்கும் போது அதை யாராலும் நெறிபிறழ வைக்க முடியாது. அதில் எப்போது பின்வரும் பாதிப்புகள் தாக்கம் செலுத்துகின்றனவோ அப்போதே அது பாதிப்புக்குள்ளாகி, குறித்த நபரை பொய்யின் பக்கமும், துள்ளியமான முடிவுகளை எடுக்க முடியாத நிலைக்கும் தள்ளிவிடுகிறது. அவை வருமாறு:

1. குழந்தை வளர்ப்பில் தவறிழைத்தல். ஒரு மனிதனின் முன்நெற்றியை சீரான இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு முதலில் பெற்றோரையை சாரும். அதை மேற்கூறப்பட்ட நபி மொழி உணர்த்துகிறது. பெற்றோர்கள் நேரிய சிந்தனைகளையும், சீரான அறிவையும், ஆக்கத்திறன் மிக்க பண்புகளையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்காத போது அவர்கள் தானாகவே வழிகேட்டின் பக்கம் போய்விடுவர்.

2. நண்பர் தெறிவும், சூழல் தெறிவும். ஒருவரின் முன்நெற்றி சீராக இருக்க வேண்டுமானால் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும் மனிதர்களை தன் பக்கத்தில் வைத்திருக்க வேண்டும். அதன் பின் அதற்கு ஏற்றவாறு சூழலை மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி தீய நண்பர்களை தன் பக்கம் வைத்திருந்தால் வழிதவறிப் போக நேரிடும்.

3. முன்நெற்றியில் பௌதீக பாதிப்புகள் இடம்பெறல். ஒருவரின் நெற்றிப் பகுதியிலோ, அல்லது தலையிலோ அடிபடுவதனால், அல்லது உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்படுவதனால் மூளையின் முன்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, அவரது செயற்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். இது ஒருவரை வன்முறையாளராகக் கூற்ற மாற்றிவிடும் சந்தர்ப்பம் அதிகம் உண்டு.

4. ஆபாசங்கள் மற்றும் போதை வஸ்துக்கள். 2013ம் ஆண்டு கேம்ரிஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு பின்வருமாறு குறிப்பிடுகிறது.

(கனவன் மனைவி தவிர்ந்த) பிறரின் மர்ம உறுப்பைப் பார்த்தல், ஆபாசப் போட்டோக்கள், ஆபாசப் படங்கள், ஆபாச வீடியோக்கள் பார்த்து அதற்கு அடிமையாதல், ஆபாச கதைகளைப் படித்தல், போதை பொருட்களைப் பாவித்து அதற்கு அடிமையாதல் போன்றவற்றால் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன், டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற திரவங்கள் மூளையில் பரவி, குறிப்பாக மூளையின் முற்பகுதியைப் பாதிப்பதால் ஞாபக சக்தி, பகுத்தறிந்து சிறந்த முடிவைப் பெறும் திறன் போன்றவை சீர்குழைகின்றன.

இதனாலே ஆபாச காட்சிகளைப் பார்ப்பதையும், போதைவஸ்துக்களைப் பயன்படுத்துவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

அல்லாஹ் கூறுகிறான், “நம்பிக்கையாளர்களான ஆண்களிடம், அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் (நபியே!) நீர் கூறுவீராக! இதுவே அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். ” (அல்குர்ஆன் 24:30).

“(நபியே) நம்பிக்கையாளர்களான பெண்களிடம், அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், அவர்களது அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்தக் கூடாது என்றும், தமது முந்தானைகளை தமது மார்பகங்களில் மீது போட்டுக் கொள்ளுமாறும் (நபியே!) நீர் அவர்களுக்குக் கூறுவீராக!” (அல்குர்ஆன் 24:31).

நம்பிக்கை கொண்டோரே! மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டவைகளும், குறிபார்க்கும் அம்புகலும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலிலுள்ளவைகளாகும். எனவே, நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள். ஷைத்தான் விரும்புவதெல்லாம் மது, சூதாட்டம் என்பவற்றின் மூலம், உங்களுக்கிடையில் பகைமையையும், குரோதத்தையும் ஏற்படுத்தவும், உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், மற்றும் தொழுகையை விட்டும் தடுத்து விடவுமேயாகும். எனவே, நீங்கள் விலகிக்கொள்வீர்களா?” (அல்குர்ஆன் 05:90-91).

இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருப்போர் உண்மையாக இருப்பதிலும், பிறருக்கு அநீதமிழைக்காமல் இருப்பதிலும், நேர்த்தியான முடிவுகள் எடுப்பதிலும் தவறிழைப்பதால் சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். கடவுளை விளங்குவதில் தவறிழைத்து வழிதவறிப்போகின்றனர். ஏமாற்று, பொய் போன்றவற்றில் ஈடுபட்டு குடும்பத்தையும், சமூகத்தையும் சீர்குழைத்து, அனைவருக்கும் அநீதமிழைக்கின்றனர். பாவம் செய்வதும், குற்றம் செய்வதும் சர்வ சாதாரனமாக அவர்களுக்கு மாறிவிடுகிறது. நல்லவைகள் செய்பவர்களைத் தடுத்து சமூகத்தில் தீமையை அதிகம் பரப்புகின்றனர். சுய ஆழுமையை இழந்து, தமது நடவடிக்கைகளில் குழந்தைத் தனத்தை உட்புகுத்துகின்றனர்.

இவர்களை அவர்களின் மூளையின் முற்பகுதி அமைந்துள்ள முன்நெற்றியைப் பிடித்து இழுத்து தண்டிக்க இருப்பதாக அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான், “ஓர் அடியான் தொழும் பொழுது (அவரை) தடுப்பவனை நீர் பார்த்தீரா! அவர் நேர்வழியில் இருந்தாலும், அல்லது பயபக்தியைக் கொண்டு ஏவினாலும் (அவரைத் தடுப்பவனை) நீர் பார்த்தீரா? அவன் (அவரைப்) பொய்ப்பித்துப் புறக்கணித்ததையும் நீர் பார்த்தீரா? நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) பார்த்துக்கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறன்று, அவன் இதைவிட்டும் விலகிக் கொள்ளவில்லையாயின் நிச்சயமாக அவனது முன் நெற்றியை நாம் பிடிப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் (அவனது) முன்நெற்றியாகும்.” (அல்குர்ன் 96:09-16).

எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கும் இம் முன்நெற்றியை சீரான முறையில் பாதிப்படையாமல் பாதுகாத்துக்கொள்வது எமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அமானிதமாகும். அவன் ஏவியவைகளை எடுத்து நடப்பதாலும், அவன் தடுத்தவைகளை விட்டும் தவிர்ந்திருப்பதாலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும். அவனின் திருப்பொருத்தம் கிடைத்துவிட்டால் முன்நெற்றி விடயத்தில் நாம் பாதுகாப்புடன் இருக்க முடியும். ஏனெனில் அதை நல்ல வழியின் பக்கம் கொண்டு செல்வது அல்லாஹ்வின் பொறுப்பாக மாறிவிடுகிறது. எமது முன்னெற்றியின் சீரான இயக்க நிலையைப் பாதுகாத்து, உண்மையாகவும், உண்மைகளை உண்மைப்படுத்துவோராகவும், சீரான வழிகளையும், நேர்த்தியான முடிவுகளையும் தேர்ந்தெடுப்போராகவும் அல்லாஹ் எம்மை ஆக்க வேண்டும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget