இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்)
குத்பா நிகழ்த்தியவர்: அஷ்ஷைக் கலாநிதி சுஊத் இப்னு இப்ராஹீம் அஷ்ஷுரைம்
தலைப்பு : சேர்ந்து கூட்டாக இருத்தல்
அன்றைய குத்பாவிலிருந்து...
தனது குத்பா பிரசங்கத்தின் முன்னுரையைத் தொடர்ந்து பின்வருமாறு உபேதசம் செய்தார்,
நிச்சயமாக கூட்டாக செயற்படுவது நலவு மிக்கதாகும். பிரிந்து செயற்படுவது வேதனை மிக்கதாகும். தனித்து ஒதுங்கி இருப்பதை விட கூட்டாக இருப்பது மிகவும் நல்லதாகும். ஒரு கூட்டத்தை விட்டும் பிரிந்து தனித்து செயற்படுவது அதனை புறக்கணிப்பதாகும். ஈட்டிகள் ஒன்றாக இருக்கும் போது அதனை உடைப்பது மிகவும் கடினமாகும். எனினும் அது ஒவ்வொன்றும் தனியாக இருப்பின் அதை இலகுவாக உடைக்க முடியும். ஒரு மனிதன் தனியாக இருக்கும் போது பலவீனமானவனாகவும் தனது சகோதரர்களோடு சேர்ந்து இருக்கும் போது பலமிக்கவனாகவும் மாறிவிடுகிறான். இதுதான் அறிவாளிகளின் பண்பாகும். இவ்வாறான கூட்டுபலம் மூலம்தான் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு ஏற்ப, மனிதனுக்கு உகந்ததாக இப்பூமியை கட்டியெழுப்ப முடியும்.
அல்லாஹ் கூறுகிறான், “எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்”. (அல்குர்ஆன் 4:115).
நிச்சயமாக அல்லாஹ் அனைத்து நபிமார்களையும் மார்க்கத்தை நிலைநாட்டவும், அன்பாகவும் கூட்டாகவும் இருக்குமாறும், பிரிந்து செயற்படுவதை தவிர்ந்து கொள்ளுமாறும் ஏவி, அவர்களை இவ்வுலகுக்கு அனுப்பி வைத்தான்.
அல்லாஹ் கூறுகிறான், “ இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்”. (அல்குர்ஆன் 3:103).
சிறந்த முன்னுதாரணமிக்க சமூகம் என்பது, அதிலிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக சேர்ந்து நடந்து, தனது சமூகத்தை பாதுகாத்துக்கொள்ளுவார்கள். அந்த சமூகத்தை விட்டும் தனித்து செயற்படுபவர்கள் தனிமையானவர்களாக கருதப்படுவார்கள்.
தனிமை என்பது ஒரு பெரும் கூட்டத்தை விட்டும் ஏதேனும் சிந்தனை, சொல், செயல், அமைப்பு என்ற அடிப்படையில் சத்தியத்திற்கு மாற்றமாக அல்லது ஜமாஅத்திற்கு எதிராக, அவர்களின் பண்புகளுக்கு மாற்றமாக பிரிந்து செயற்படுவதனை குறிக்கும்.
இவ்வாறு பிரிந்து தனித்து செயற்படுவது இரண்டு விதங்களில் இடம்பெறும். ஒன்று கொள்கை அளவில் உள்ளத்தால் இடம்பெறுவது. இரண்டாவது செயல் அளவில் நடைபெறுவது.
கொள்கை அளவில் பிரிந்து தனித்து செயற்படுவது என்பது கெட்ட, பிழையான சிந்தனைகளை மையமாக வைத்து சத்தியத்திற்கு எதிராக செயற்படுவதாகும். செயல் அளவில் பிரிந்து செயற்படுவது இரண்டு விதங்களில் நடைபெறும். ஒன்று, செய்ய வேண்டியதை விட்டு விடுவது. இரண்டாவது, செய்யக்கூடாததை செய்வது.
செய்ய வேண்டியதை விட்டு விட்டு பிரிந்து செயற்படுவதானது, தன் மீது அதிகாரம் செலுத்த வேண்டியவர்களின் கருத்துகளை உதாசீனம் செய்து, தனது சமூகத்தை விட்டும் ஒதுங்கி தனித்து செயற்படுவதை குறித்து நிற்கிறது. இது மிகவும் பாரதூரமான கெட்ட காரியமாகும். அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் இவ்வாறான காரியத்தை செய்வதை ஒருபோதும் இலகுவாக கருத முடியாது என்று அழுத்தமாக கூறுகின்றனர்.
நபியவர்கள் கூறினார்கள், “யார் ஆட்சியாளருக்கு கட்டுப்படுவதை தவிர்த்து செயற்படுகிறாரோ அவர் மறுமை நாளில் தனக்கு சார்பான எதுவித ஆதாரமுமின்றி இறைவனை சந்திப்பார். யார் ஆட்சியாளருக்கு கட்டுப்படாமல் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலியா கால மக்களில் மரணித்தவரை போலவராவார்”. (முஸ்லிம்: 1851)
செய்யக்கூடாததை செய்து தனித்து பிரிந்து செயற்படுவது என்பது யாதெனில் இஸ்லாமிய சட்டதிட்டங்களில் அனைத்து இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மாற்றமாக, சரியான ஏதேனும் ஆதாரங்கள் இல்லாமல் காணப்படும் நலிவடைந்த பத்வாக்களை, கருத்துகளை எடுத்து நடப்பதனை குறிக்கும். இது பழங்காலம் தொடக்கம் இன்றுவரை நடந்து வருகிறது.
இது போன்றுதான் அமைப்புகளை விட்டும் பிரிந்து செயற்படுவதும், வித்தியாசமான ஆடை, அணிகலன்களின் மூலம் சமூகத்தில் ஏனைய பொதுவானவர்களை விட்டும் தனித்து காணப்படுவதும் இதில் உள்ளடங்கும்.
நபியவர்கள் கூறினார்கள், “யார் உலகத்தில் (பொதுவான அவரவர் சமூக அமைப்பிற்கு மாற்றமாக) பிரபல்யமான ஆடைகளை அணிகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் இழிவான ஆடையை அணிவிப்பான்”. (அபூதாவுத்: 4029 நஸாயி: 9560 இப்னுமாஜா: 3607)
பிரபல்யமான ஆடை என்பது வழமைக்கு மாற்றமாக பெருமைக்காக அணியும் ஆடையாகும். அதேபோன்றுதான் தான் கடும் பணிவானவன் என்பதை காட்டுவதற்காக வழமைக்கு மாற்றமாக அணியும் மிக விலை குறைந்த அற்பமான ஆடையும் இதில் உள்ளடங்கும். இவ்விரண்டு ஆடைகளையும் நமது முன்னோர்களான அறிஞர்கள் வெறுத்திருக்கிறார்கள். இவ்வாறான காரியம் மனித இயல்பிற்கு, இஸ்லாம் காட்டிய ஒழுக்க விழுமியங்களுக்கு மாற்றமானதாகும்.
இவ்வாறாக பிரிந்து தனித்து செயற்படுவது போன்ற அனைத்து காரியங்களும் கெட்ட பண்பாகும். இந்தப் பாதையை தனது வாழ்வில் எடுத்துக்கொண்டால் ஒரே தடவையில் பெருமையும், தடம்புரழ்வும் ஏற்பட்டுவிடும். இவ்வாறு செயற்படுவதை விட்டுவிட்டு ஜமாஅத்தோடு ஒரே அணியாக செயற்படுவதுதான் புத்தியான காரியமாகும்.
பிரிந்து தனித்து செயற்படுவது ஒரு வித நோயாகும். இதற்கு பல காரணங்களும் காணப்படுகின்றன. அதேபோன்று அதனை சரிசெய்வதற்கும் பல வழிகள் உள்ளன. அவற்றில் தனி மனிதன் சார்ந்த காரணிகளும், சமூகம் சார்ந்த பின்னணிகளும் உள்ளடங்குகின்றன. தனி மனிதன் சார்ந்த காரணி யாதெனில் மார்க்க அறிவில் குறைவு இருத்தல், தன்னை ஒரு பெரிய மனிதனாக கணக்கிடுதல், பெருமையை மையமாகக்கொண்டு பிரிந்து செயற்படுவதை விரும்புதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சமூகம் சார்ந்த காரணி யாதெனில் கெட்ட நண்பர்களோடும், இவ்வாறான சிந்தனை போக்கு உள்ளவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதைக் குறிக்கும். அதேபோன்று இன்றைய சமூக ஊடகங்களும் இவ்வாறன கெட்ட சிந்தனை போக்கை மக்கள் மனதில் விதைத்து விடுகிறது.
இதற்கு விதிவிலக்காக அனைத்து மக்களும் தனக்கு மாற்றமாக பாவங்களில் திளைத்திருக்க இஸ்லாம் கூறிய பிரகாரம் தான் வாழும் போது சில காரணங்களால் அவர்களை விட்டும் பிரிந்து தனித்து செயற்பட வேண்டியுள்ளது. அது இஸ்லாத்தில் குற்றமாக கணிக்கப்படாது.
நபியவர்கள் கூறினார்கள், “(ஒரு காலம் வரும் அதில்) ஒரு மனிதனின் உயர்ந்த சொத்தாக ஆடு காணப்படும். அதனை மழை கிடைக்கக்கூடிய இடமான உயர்ந்த மலை உச்சிக்கு கொண்டுசென்று (அங்கு வாழ்ந்து) குழப்பங்களில் (பித்னா) இருந்து அவனது மார்க்கத்தை (தனித்திருந்து) பாதுகாப்பான். (புஹாரி: 7088)
முற்றும்...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.