இஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் - பார்வை 07
இத்தா இருக்கும் பெண்களின் நிலைகள்
கணவனை இழந்த பெண், கணவனின் பொறுப்பில் இருத்தல் எனும் வட்டத்திற்குள் உள்ளடங்க மாட்டாள் என்பதால் இங்கு விவாகரத்துப் பெற்று, இத்தா இருக்கும் பெண்கள் பற்றியே நாம் பார்க்க இருக்கிறோம். இப் பெண்களுக்கான கொடுப்பனவுகள் எப்போது அவசியமாகிறது?, எப்போது அவசியமற்று போகிறது? என்பதை அறிவதற்கு முன்னர் விவாகரத்துப் பெற்று இத்தா இருக்கும் பெண்களின் நிலைகள் யாவை? என்பதைப் பற்றி அறிவது அவசியமாகிறது.
01. தலாக் ரஜ்ஈ (மீட்டெடுக்க முடியுமான விவாகரத்து): இது ஒருவர் தன் மனைவியை முதல் தடவை விவாகரத்து சொன்ன பின்னர் அல்லது இரண்டாம் தடவை விவாகரத்து சொன்ன பின்னர் இத்தாக் காலம் முடிவதற்குள் அவளை திரும்பவும் தனது மனைவியாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இதன் போது மஹ்ர் கொடுக்காமலும், புதிய திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளாமலும் அப்பெண்ணுடன் வாழ முடியும்.
02. தலாக் பைனூனதுஸ் ஸுஹ்ரா (மீட்டெடுப்பது சிறிது கடினமான விவாகரத்து): இது ஒருவர் தன் மனைவியை முதல் தடவையோ, இரண்டாம் தடவையோ விவாகரத்து சொன்ன பின்னர் இத்தாக் காலம் முடிந்த பிறகு அவளை மனைவியாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இதன் போது கணவன் அவசியம் மனைவியின் விருப்பத்தைப் பெற வேண்டும். அவளுக்கு மஹ்ர் கொடுத்து, புதிய திருமண ஒப்பந்தம் ஒன்றை செய்தே அப்பெண்ணுடன் வாழ வேண்டும்.
03. தலாக் பைனூனதுல் குப்ரா (மீட்டெடுப்பது கடினமான விவாகரத்து): இது ஒருவர் தன் மனைவியை மூன்றாம் தடவையாக விவாகரத்து சொல்லிவிட்டு, திரும்பவும் அப்பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. மூன்றாம் தடவையாகவும் ஒரு பெண் விவாகரத்து சொல்லப்பட்டால் அவளை திரும்பவும் மீட்டெடுப்பது கடினமானது. அவ்வாறு மீட்டெடுக்க விரும்பினால் விவாகரத்து சொல்லப்பட்ட பெண் இன்னொரு திருமணம் செய்து, அக்கணவருடன் உடலுறவும் கொண்டு, பின்னர் அவரின் சுயவிருப்பத்துடன் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று, இத்தா இருந்து, முற்றாக பிரந்த பின்னரே தனது முதல் கணவருடன் சேர முடியும். இதன் போது முதல் கணவன் இவளுக்கு மஹர் வழங்கி, புதிய திருமண ஒப்பந்தம் ஒன்றை செய்தே அப்பெண்ணுடன் வாழ வேண்டும்.
இவைகளே விவாகரத்து சொல்லப்பட்ட பெண்கள் இத்தா இருக்கும் நிலைகள்.
விவாகரத்து சொல்லப்பட்டு இத்தா இருக்கும் பெண்களுக்கான கொடுப்பனவுகள்
01. திருமணம் முடித்து, உடலுறவு கொள்வதற்கு முன் விவாகரத்து சொல்லப்பட்ட பெண்கள்: அடிப்படையில் இவர்கள் இத்தா அனுஷ்டிக்க வேண்டிய தேவை கிடையாது. ஆகையால் இவர்களுக்கு கனவனின் கொடுப்பனவுகள் எதுவும் கிடையாது. அல்லாஹ் கூறுகிறான், “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை” (அல்குர்ஆன் 33:49).
02. தலாக் ரஜ்ஈ (மீட்டெடுக்க முடியுமான விவாகரத்து) சொல்லப்பட்ட பெண்கள்: இப்பெண்கள் கர்ப்பிணிகளாக இருந்தாலும் சரி, அல்லது கர்ப்பம் தரிக்காதவர்களாக இருந்தாலும் சரி இவர்களுக்கான கொடுப்பனவுகளை பூரணமாக வழங்க வேண்டுமென இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவர்கள் இத்தா காலம் முடிவடைவதற்குள் திரும்பவும் கணவனுடன் சேர்ந்து வாழ அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதால் இவர்கள் மனைவி எனும் அந்தஸ்த்திலே இருக்கிறார்கள். ஆகையால் இவர்களுக்கான கொடுப்பனவுகள் முழுமையாக கிடைத்திட வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்.” (அல்குர்ஆன் 02:228), மேலும் கூறுகிறான், “அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்!” (அல்குர்ஆன் 65:02). மேற்குறிப்பிட்ட வசனங்களில், குறிப்பிட்ட தவனைக்குள் மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதி இருப்பதால் அவர்கள் விவாகரத்து சொல்லப்பட்ட பின்னரும் மனைவி எனும் அந்தஸ்த்திலே உள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
03. தலாக் பாஇன் (மீட்டெடுப்பது சிறிது கடினமான அல்லது ஆகவே கடினமான விவாகரத்து) சொல்லப்பட்ட பெண்கள்: இப்பெண்கள் கர்ப்பிணிகளாக, அல்லது பாலூட்டும் தாயாக இருந்தால் இத்தா இருக்கும் காலத்திலும், இத்தா காலம் முடிந்த பின்னும் இவர்களுக்கு கொடுப்பனவுகளை அவசியம் கொடுத்திட வேண்டுமென இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுகின்றனர். அல்லாஹ் கூறுகிறான், “அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்!” (அல்குர்ஆன் 65:06).
04. தலாக் பாஇன் (மீட்டெடுப்பது சிறிது கடினமான அல்லது ஆகவே கடினமான விவாகரத்து) சொல்லப்பட்ட பெண்கள்: இப்பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு எவ்விதக் கொடுப்பனவுகளும் கொடுக்க வேண்டியதில்லை என இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பாதிமா பின்த் கைஸ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் நபியவர்களிடம் வந்து தனது கணவன் தன்னை மூன்று முறை விவாகரத்து செய்துவிட்டதாகவும், அவரிடமிருந்து தனக்கு வரவேண்டிய கொடுப்பனவுகள் பற்றியும் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "அவர் உனக்கு (கொடுப்பனவுகள், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை" எனக் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம் 1480).
05. கணவனை இழந்ததற்காக இத்தா இருக்கும் பெண்கள்: கொடுப்பனவுகள் கணவனே மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்பதால் இவர்கள் அவற்றைப் பெறமாட்டார்கள்.
06. சரியான முறையில் திருமணம் ஆகாமல் விவாகரத்து சொல்லப்பட்டு, இத்தா இருக்கும் பெண்கள்: இஸ்லாமிய விதிமுறைகளுக்கு உட்பட்டு திருமணம் நடைபெறவில்லையாயின் கணவனும் மனைவியும் அவசியம் பிரிந்திட வேண்டும். இத்தருணத்தில் இத்தா இருக்கும் பெண்ணுக்கு கணவன் எவ்வித கொடுப்பனவுகளையும் கொடுக்க வேண்டியதில்லை என இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் இஸ்லாம் அனுமதித்த முறையில் இவர்களுக்கு மத்தியில் திருமணம் நடைபெறாததால் கணவன், மனைவி எனும் பந்தம் இவர்களுக்கு மத்தியில் கிடையாது.
கொடுப்பனவுகள் பெறாத பெண்கள்
இத்தா இருக்கும் பெண்களில் மூன்று தரப்பினருக்கு கொடுப்பனவுகள் கணவனால் வழங்கப்படமாட்டாது.
01. இஸ்லாம் அனுமதிக்காத முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள்.
02. கணவனை இழந்ததற்காக வேண்டி இத்தா இருக்கும் பெண்கள்.
03. மனைவியிடம் காணப்படும் பாவகாரியங்களுக்காக திருமண ஒப்பந்தம் முறிக்கப்பட்ட பெண்கள்.
பார்வைகள் தொடரும்............ இன்ஷா அல்லாஹ்
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.