புனித மஸ்ஜிதுல் ஹராமின் நோன்புப் பெருநாள் குத்பாவின் தமிழாக்கம் 2020/05/24 - Hizbullah Jamaldeen Anwari, (B.com reading)



நோன்புப் பெருநாள் குத்பாவின் தமிழாக்கம் 2020/05/24 

மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா 

உரையாற்றியவர் – அஷ்ஷேக் ஸாலிஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஹுமைத் 

முதலாம் குத்பா 

அனைத்துப் புகழும் படைப்பாளன் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் தனது களஞ்சியத்திலிருந்து மக்களுக்கு வாழ்வாதாரங்களை அள்ளிக் கொடுப்பவன். அவன் கொடுத்தவற்றை யாராலும் தடுத்திட முடியாது. அவன் தடுத்தவற்றை யாராலும் கொடுக்கவும் முடியாது. யாருக்கு நலவுகள் ஏற்பட்டனவோ அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டவையாகும். யாரை விட்டும் தீங்குகள் தடுக்கப்பட்டனவோ அதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டவையாகும். அவன் எமக்கு வழங்கிய நலவுகளுக்காக அவனைப் போற்றிப் புகழ வேண்டும். அவன் வழங்கிய சோதனைகளை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனால் ஏற்படுத்தப்பட்ட விதியானது எப்போதும் நீதியும், நியாயமும் கொண்டது. அவனது மன்னிப்பானது எமக்கான அருளை அள்ளித் தரக்கூடியது. 

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என சாட்சியம் கூறுகிறேன். அவருடன் நபித்துவம் நிறைவுபெற்றுவிட்டது. அவர் காட்டிய அற்புதங்களினாலும், ஆதாரங்களினாலும் புத்திகளும், உள்ளங்களும் அமைதியடைகின்றன. அவரது அழைப்புப் பணியினால் இஸ்லாம் மார்க்கம் உயர்வடைந்துள்ளது. அவர் முன்சென்ற மார்க்கங்களையும், அடிச்சுவடுகளையும் மாற்றியமைத்து, புதியதோர் மார்க்கத்தை மக்களுக்கு காட்டிச் சென்றுள்ளார். அதுவே நேரான, நேர்த்தியான மார்க்கமாகும். அவருக்கும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள், உலக முடிவு வரை அவரை சரியான முறையில் பின்பற்றும் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் என்றென்றும் உண்டாவதாக. 

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து. அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்துலில்லாஹி கஸீரா, வஸுப்ஹானல்லாஹி புக்ரதன் வஅஸீலா. 

மக்களே!, அல்லாஹ் ஏவியவைகளை வாழ்வில் எடுத்து நடக்குமாறும், அவன் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து இருக்குமாறும் உங்கள் அனைவருக்கும் வஸிய்யத் செய்கிறேன். அதுவே எமது சரியான சேமிப்பும், மறுமைக்கான லாபகரமான வியாபாரமுமாகும். யார் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான மந்திர சக்தி மிக்க மாதமாக மாத்திரம் ரமழானைக் கருதினாரோ அவர் ரமழானின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை. யார் ரமழானின் அதிக பொழுதுகளை தூக்கத்தில் கழித்தாரோ ஏனையோர் அவரை முந்திச் சென்றுவிட்டனர். நாட்கள் யாருக்காகவும் எப்போதும் காத்திருக்காது. பாவங்கள் கடன் சுமைகளாக கணத்துவிடும். மரணமும் எமக்கு சம்பவிக்கும். பாவமன்னிப்பைப் பெற மறந்தவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் கிடைத்துவிடும். நாம் செய்யும் ஒவ்வொன்றும் அல்லாஹ்விடம் பதியப்படும். அதற்காக விசாரணை நடாத்தப்படும். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் அல்லாஹ்விடம் மீளச் செல்வீர்கள். அல்லாஹ் கூறுகிறான், “நாம் அவர்களைப் பல வருடங்கள் சுகமனுபவிக்க விட்டு வைத்து, பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து அவர்களிடம் வந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு அவர்களுக்கு யாதொரு பயனையும் தராது என்பதை (நபியே) நீர் அறிவீரா?” (அல்குர்ஆன் 26:205-207). அல்லாஹ்வே மிகப் பெரியவன். அமைதியாக நல்லமல்களில் ஈடுபட்டவர்களின் நன்மைகள் வீண்போகாது. நன்மையை அடையும் ஆசையோடு செயற்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றில் எவ்வித குறையும் இடம்பெறாது. 

முஸ்லிம்களே!, உங்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். உங்களிடமிருந்தும், எம்மிடமிருந்தும் நல்லமல்களையும், நோன்பையும், இரவுத் தொழுகைகளையும், ஏனைய வணக்கங்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக!. இது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட அருள் பொருந்திய நாட்களில் ஒன்றாகும். இது முஸ்லிம்களின் பெருநாள் தினமாகும். இத்தினத்தில் நற்செயல்களில் ஈடுபடுவதாலும், பிறருக்கு உபகாரம் செய்வதாலும், உதவி புரிவதாலும் அல்லாஹ்வின் வெகுமதிகள் அதிகம் கிடைக்கப் பெறுகின்றன. எனவே தான் இதற்கு ஈத் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அது தவிர அல்லாஹ்வின் கொடைகளும், அவனது அன்பும், பாவமன்னிப்புகளும் எல்லாக் காலத்திலும் பொதுவாகவே எமக்குக் கிடைக்கிறது. கஷ்டங்கள் என்பது எமது வாழ்வில் நீடிக்காது. அவற்றில் பொறுமையாக இருப்பது வணக்கமாகும். அவற்றைப் பொருந்திக் கொள்வது இறை நம்பிக்கையாகும். இதன் போது அவனிடம் அதிகம் பிரார்த்தனை புரிவது, கவலைகளை நீக்கிவிடும். அவன் இரகசியங்களைப் பாதுகாப்பவன். கஷ்டங்களைப் போக்குகின்றவன். 

முஸ்லிம்களே!, மனிதன் எதற்கும் அவசரப்படும் வகையில் படைக்கப்பட்டுள்ளான். எதிலும் அதிகமாக தர்க்கம் புரிபவனாகவே இருக்கிறான். மனிதனாக குறிப்பிடப்படும் எப்பொருளும் இல்லாத ஓர் காலம் அவனுக்கு இருந்தது. அப்படியிருந்தும் தனது சாக்குப் போக்குகளை முன்வைத்து தனது பலவீனத்தை மறைக்க முனைந்தாலும் தன்னைப் பற்றி அவன் நன்கு அறிந்தே இருக்கிறான். புழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு மனிதன் நல்ல நிலையில் இருக்கும் போது அவனின் உள்ளத்தில் இருப்பவைகள் அனைத்தும் மறைக்கப்பட்டே இருக்கும். அவனுக்கு துன்பங்கள் வரும் போது அவனின் உண்மை நிலைக்கு செல்ல ஆரம்பிப்பான். துன்பத்தின் போது ஓர் இறைவிசுவாசி தனது ஈமானின் பக்கம் திரும்பிவிடுவான். ஓர் நயவஞ்சகன் தனது நயவஞ்சக குணத்தின் பக்கம் திரும்பிவிடுவான். 

அல்லாஹ் கூறுகிறான், “விளிம்பில் நின்று அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் உள்ளான். எனவே, அவனுக்கு ஏதேனுமொரு நன்மை ஏற்பட்டால் அதனால் அமைதி அடைகின்றான். அவனுக்கு ஏதேனுமொரு சோதனை நேர்ந்து விட்டால் (நிராகரிப்பு எனும்) தன் திசையில் திரும்பி விடுகிறான். அவன் இம்மையிலும், மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டான். இது தான் மிகத் தெளிவான நஷ்டமாகும்” (அல்குர்ஆன் 22:11). 

சோதனை ஏற்படும் போது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுபவரையும், மனோ இச்சைக்குக் கட்டுப்படுபவரையும் அறிந்துகொள்ள முடியும். சோதனைகளின் போதே இறை விசுவாசிகளுக்கும், நயவஞ்சகர்களுக்கும் வரிசைகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் தென்படுகின்றன. அல்லாஹ்வே மிகப் பெரியவன். அவனே புகழுக்கும், நன்றிக்கும், அருள்புரிவதற்கும் தகுதியானவன். 

அல்லாஹ்வின் அடியார்களே!, தற்போது முழு உலகிலும் பரவியிருக்கும் இத்தொற்று நோயானது செல்லக்கூடாது என தடைபோடப்பட்ட எல்லைகளையும் தாண்டி, மீறிச் சென்றால் சட்டநடவடிக்கை எடுக்கும் அதிகாரவர்க்கத்தையும் கடந்து அனைத்துத் தரப்பினரையும் தாக்கியுள்ளது. பணக்காரன், ஏழை என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் தாக்கி, மனிதனுக்கு இருக்கும் பலவீனத்தையும், அவனது அறிவியலிலும், ஆய்விலும் இருக்கும் குறைபாடுகளையும் இது வெளிக் கொண்டுவந்து விட்டது. அப்றஹாவும், அவனது படையினரும் அபாபீல் எனும் அற்பப் பறவைகளால் அழிக்கப்பட்டனர். அசைக்க முடியாத அரசனாக இருந்த நும்ரூத் ஓர் கொசுவினால் அழிக்கப்பட்டான். அவ்வாறே வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத இச்சிறிய பலவீனமான படைப்பு இலட்சக் கணக்கான மக்களை அழித்துவிட்டது. மற்றும் பலரை தனிமைப்படுத்தலில் வைத்துள்ளது. இதனால் தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டு, எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு, அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

எத்தனை விமானங்கள் விமான நிலையங்களில் முழங்காலிட்டுள்ளன. எத்தனை புகையிரத நிலையங்கள் புகையிரதங்களால் நிரம்பி வழிகின்றன. இச் சிறு படைப்பு வல்லரசு நாடுகளையும் ஆட்டம் காணச் செய்துள்ளது. அவர்களால் கூட இதை கட்டுப்படுத்த முடியவில்லை. தும்முபவரைக் கண்டால் பயந்து நடுங்குகின்றனர். இருமுபவரைக் கண்டால் பயந்து ஓடுகின்றனர். ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றனர். வெற்றுக் கண்களுக்குத் தெரியாத இச்சிறிய பலவீனமான படைப்பு அல்லாஹ்வை மறந்து வாழ்பவர்களை விழிக்கச் செய்வதற்காக வந்துள்ளது. மனிதனின் பலவீனத்தையும், அவனது இயலாமையையும் அவனுக்கே எடுத்துக் காட்டி, பலம் பொருந்திய, ஒரே இறைவனின் பக்கம் திரும்புவதற்கான ஓர் வாய்ப்பை வழங்க வந்துள்ளது. உலகை அமர விடாமல் எழுந்து நிற்க வைத்துள்ளது. சர்வதேச சட்டங்களை உடைத்தெறிந்துள்ளது. பலசாலிகளை அதன் முன்னே மண்டியிட வைத்துள்ளது. முழு உலகமே பெரும் திண்டாட்டத்திற்கு மத்தியில் இருக்கிறது. பெரும் எழுத்தாளர்களும், தத்துவவியல் அறிஞர்களும், ஆய்வாளர்களும் இதற்கான தீர்வு சக்தி மிக்க ஒரே இறைவனான அல்லாஹ்விடம் மாத்திரமே இருக்கிறது எனக் கூறுவதை இன்று எம் செவிகளால் கேட்க முடியுமாக இருக்கிறது. ஒரு நாட்டின், சமூகத்தின், குடும்பத்தின் அன்றாட நடைமுறைகளைக் கூட இது மாற்றியமைத்துள்ளது. பாடசாலைகள், பள்ளிவாயில்கள், வணக்கஸ்தளங்கள், பல்கலைக்கழகங்கள், வியாபார நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்தும் மூடப்பட்டு, உலகின் பொருளாதாரமே தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கௌரவமானவர்கள் கீழ்த்தரமானவர்களாகவும், கீழ் நிலையில் இருந்தவர்கள் கௌரவமானவர்களாகவும் இன்றைய தினம் மாறியிருக்கின்றனர். இச்சிறிய படைப்பு மரணத்தை கண்முன்னே காண்பித்த வண்ணம் நாளுக்கு நாள் எமக்கு மரணிப்போரின் எண்ணிக்கையை பட்டியலிட்டுக் கூறிக்கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சியான நிகழ்வுகளை முடக்கிவிட்டு, துக்க நிகழ்வுகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. இதுவே சோதனையாக வந்துள்ள தொற்று நோயின் யதார்த்தமாகும். இதில் வெற்றியடைந்தவர்கள் மறுமையிலும் வெற்றியடைந்தவர்களாவர். அல்லாஹ்வே மிகப் பெரியவன். 

அன்பின் சகோதர, சகோதரிகளே!, இத்தொற்று நோயிலிருந்து நாம் பல பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அதில் சோதனை என்பது மிக முக்கியமான ஓர் பாடமாகும். பொறுமையுடன் எதிர்கொள்ளும் சோதனையில் உள்ளம் பலமடைகிறது. பாவங்கள் அழிக்கப்பட்டு, உள்ளத்தை விட்டும் பெருமை நீங்கிவிடுகிறது. அல்லாஹ்வை மறந்த நிலை மாறி, எப்போதும் அல்லாஹ்வை நினைக்கும் நிலை ஏற்படுகிறது. ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு எப்போதும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலைக்கு ஒருவனை கொண்டு செல்கிறது. சோதனையின் போது தான் அல்லாஹ்வுடனான தொடர்பு உறுதியடைகிறது. அல்லாஹ் அல்லாதவற்றை துண்டித்து, அல்லாஹ்வின் மீது சரியான தவக்குல் வைத்து, அவன் பக்கம் உண்மையாக ஒதுங்கியிருப்பதற்கான வழியைக் காட்டுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினாரகள், “ஒரு இறைவிசுவாசியான ஆணோ அல்லது பெண்ணோ அல்லாஹ்வை சந்திக்கும் வரைக்கும் அவர்களின் உடலாலும், சொத்துக்களாலும், பிள்ளைகளாலும் சோதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு (இறுதியில்) எவ்வித பாவங்களும் இருக்காது. (அல்லாஹ் அனைத்தையும் மன்னித்துவிடுவான்)” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி 2399). 

இமாம் இப்னுல் கையில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், ‘அல்லாஹ் தனது அடியான சோதனைகள் மூலம் ஒத்தடம் வைக்கவில்லையாயின் அவர்கள் தவறுகள் செய்து, அநீதமிழைத்து, பெருமையுடன் திரிவார்கள்’ (ஸாதுல் மஆத் 04/195). 

இதிலிருந்து நாம் வணக்கத்தில் திழைத்து இருத்தல் எனும் பாடத்தையும் கற்றுக்கொள்கிறோம். இதன் போது நாம் அல்லாஹ்வின் முன்னிலையில் சிறந்த முறையில் காட்சி தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறோம். இமாம் மஸ்ரூக் இப்னு அல்அஜ்தஃ (ரஹ்) அவர்கள் தனது காலத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆலானார்கள். அப்போது அவர்கள், ‘இவை அதிகம் ஈடுபாடோடு இருக்க வேண்டிய நாட்கள். இந்நாட்களை வணக்கத்தில் கழிக்க ஆசைப்படுகிறேன்’ எனக் கூறினார்கள். (இமாம் இப்னு ஸஃத் (ரஹ்) அவர்களின் கிதாபுத் தபகாதில் குப்ரா நூல் 06/81). 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “குழப்ப காலத்தில் இறைவனை வழிபடுவது, (நற்பலனில்) என்னிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வருவதைப் போன்றதாகும்” (அறிவிப்பவர்: மஃகல் இப்னு யஸார் (ரழி), நூல்: முஸ்லிம் 2948). 

அல்லாஹ்வின் அடியார்களே!, சோதனைக் காலத்தில் வாழ்கிறோம், வீட்டில் இருக்கும் காலத்தை உள்ளத்தால் அல்லாஹ்வின் பக்கமும், அவனது தூதரின் பக்கமும் பாவங்களை விட்டும் துறந்து செல்லுங்கள். அவனை துதித்துக்கொண்டே இருங்கள். தொழுங்கள், தான தர்மம் செய்யுங்கள், நல்ல விடயங்களில் ஈடுபடுங்கள், வீட்டில் இருங்கள், உங்களையும், பிறரையும் பாதுகாத்திடுங்கள். சோதனைகள் பற்றிய அல்குர்ஆன் வசனங்களை ஒருவர் இஸ்லாத்தின் ஒளியில் கற்றுக்கொண்டால் அவரின் உள்ளம் அமைதியடைந்து, ஈமான் அதிகரிக்கும். நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்கள் கூறினார்கள், ‘சோதனைக் காலத்தில் பாவங்களில் ஈடுபடுவது மென்மேலும் அழிவுகளைக் கொண்டுவரும்’. (இப்னு அபுத்துன்யா (ரஹ்) அவர்களின் அல்உகூபாத் நூல் 327). 

இத்தொற்று நோயினால் நாம் பெறும் இன்னொரு பாடம் தான் சமூக இடைவெளியாகும். இது இடைவெளி போல் தென்பட்டாலும் உண்மையில் நெருக்கத்தையே உண்டுபன்னியுள்ளது. பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதர சகோதரிகள் போன்றோருடன் நெருங்கி உறவாடும் ஓர் சந்தரப்பத்தை இது அமைத்துத் தந்துள்ளது. வேலைப் பழுக்களாளும், பிரயாணங்களாலும் தூரமாகியிருந்தவர்கள் இப்போது நெருக்கமாக இருக்கின்றனர். பொருட்களை வாங்குவதிலும், ஆசைகளையும் நிறைவேற்றுவதிலும் மாத்திரமே சந்தோசம் இருக்கிறது என நினைத்தவர்கள் குடும்ப நெருக்கத்தில் உண்மையான சந்தோசத்தை உணர்கின்றனர். குடும்ப ஒன்று கூடலில் சமூக மேம்பாட்டையும், உளவியல் ஆரோக்கியத்தையும் உணரும் பல தொடர் நோயாளிகள் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருக்கின்றனர். வீட்டில் இருந்தவாறே தொழில் புரிகின்றனர், வீட்டில் இருந்தவாறே கல்வி கற்கின்றனர், வீட்டில் இருந்தவாறே தொழுகையில் ஈடுபடுகின்றனர். வீட்டில் இருந்தவாறு பொருட்களை கொள்வனவு செய்யவும், கல்வியைத் தேடவும், நீதிமன்றங்களில் வாதாடவும், கூட்டங்கள் நடாத்தவும், இன்னும் பல விடயங்களை செய்வதற்கும் கற்றுக்கொண்டுள்ளனர். இவை தூரத்தையும், நேரத்தையும் சுருக்கித் தந்துள்ளது. ஒரு குடும்பம் தனக்கான சரியான பொருளாதாரத்தைக் கையாள்வதற்கும், சரியான சேமிப்பில் ஈடுபவதற்கும், வீண் செலவுகளில் ஈடுபடாமல் இருப்பதற்கும், விழாக்கள், விஷேட நிகழ்வுகள் போன்றவற்றில் ஆடம்பரத்தை குறைப்பதற்குமான அனைத்து முறைகளையும் கற்றுத் தந்துள்ளது. அதையும் தாண்டி பாதுகாப்பு, ஆரோக்கியம், ஓய்வு நேரம், சுதந்திர நடமாட்டம், ஒன்றுகூடல்கள் என அனைத்தினதும் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள வைத்துள்ளது. 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!, இதனால் நாம் பெறும் இன்னொரு பாடம் தான் ‘ஸல்லூ ஃபீ ரிஹாலிகும் - வீடுகளில் தொழுதுகொள்ளுங்கள்’ எனும் அதான் கூறும் போது இடம்பெறும் வாசகமாகும். வழமையான நாட்களில் ‘ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் ஃபலாஹ் – தொழுகைக்கு விரைந்து வாருங்கள், வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்’ என பள்ளிவாயிலுக்கு வருமாறு அழைக்கும் முறை இத் தொற்று நோயின் காலத்தில் வீட்டில் தொழுதுகொள்ளுங்கள் என மாறியுள்ளது. இதன் போது பள்ளியில் கூட்டாக நிறைவேற்றப்படும் ஐவேளைத் தொழுகைகளும், ஜும்ஆத் தொழுகையும், பெருநாள் தொழுகையும் வீட்டில் தனித்தனியாக நடாத்தப்படுகின்றன. இது இஸ்லாத்தின் மனிதநேயப் பணியைக் குறிப்பிடுகிறது. பிறரின் ஆரோக்கியத்திலும், வாழ்விலும் இஸ்லாம் எந்தளவு கவனம் செலுத்துகிறது என்பதை பள்ளியில் செய்ய வேண்டியவற்றை வீட்டில் செய்துகொள்ளுமாறு கூறியதன் மூலம் எம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. அல்லாஹ்வே மிகப் பெரியவன். 

முஸ்லிம்களே!, இது வரை காலமும் மனிதன் வெறுமனே பொருளாதார சக்கரத்தை ஓட்டுகின்ற ஓர் அடிமையாகவே நடாத்தப்பட்டு வந்துள்ளான் என்பதை இவ் அற்பப் படைப்பினால் நாம் கற்றுக்கொள்கிறோம். உடல் ஆரோக்கியம் குன்றிவிட்டால் அவன் அப்புறப்படுத்தப்படுகிறான். இது வரை காலமும் தான் முதலீடு செய்த உழைப்பிற்கு எந்த மதிப்பும் வழங்கப்படுவதில்லை. உடல் பலமாக இருந்தால் மாத்திரமே அச்சகரத்தை ஓட்டுவதற்கு மீண்டும் அழைக்கப்படுகிறான். பிரச்சினையானது தொற்று நோயிலோ, யுத்தங்களிலோ, நேரங்களிலோ கிடையாது. மனிதனிடம் இருக்கும் பண்புகளிலே அதிகளவில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. சிறந்த நற்குணங்களும், மனித உரிமைகளுக்கான மதிப்பும் இல்லாத இடத்தில் பலவீனமானவர்கள் ஒதுக்கப்படும் நிலையே அதிகம் காணப்படுகின்றது. ஆரோக்கியத்தாலோ, வயோதிபத்தாலோ பலவீனமாக இருக்கும் மக்கள் விடயத்தில் நீதமாகவும், மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். இஸ்லாமிய மார்க்கம் மாத்திரமே இதற்கான சரியான தீர்வைத் தருகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நிச்சயமாக உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கப்படுவதும், வெற்றிகள் கிடைப்பதும் உங்களுக்கு மத்தியில் உள்ள பலவீனமானவர்களைக் கொண்டேயாகும்.” (அறிவிப்பவர்: முஸ்அப் இப்னு ஸஃத் (ரழி), நூல்: புஹாரி 2896). பலவீனமானவர்கள் விடயத்தில் அநீதமாக நடந்துகொண்ட கடும்போக்கு நாடுகளில் இந்நோய்தொற்று பரவி அதிக உயிர்கள் காவுகொள்ளப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். அந்நாடுகள் பாரிய பொருளாதார, சுகாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அல்லாஹ்வே மிகப் பெரியவன். தொழில் வழங்குனர்களாக இருக்கும் முஸ்லிம்கள் இது விடயத்தில் கவனமாக செயற்பட வேண்டும். ரமழான் மாத இறைவன் தான் ஏனைய மாதங்களினதும் இறைவனாவான். 

அன்பானவர்களே!, சவூதி அரேபிய அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் வரலாற்றில் கால்தடம் பதிக்கும் அளவுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. அல்லாஹ் இந்நாட்டிற்கு மதிநுட்பத்தையும், சிறந்த நன்னடத்தையையும் வழங்கியுள்ளான். இந்நாட்டில் இருக்கும் பாதுகாப்புப் படையினரும், வைத்தியர்களும், சமூக சேவகர்களும், இஸ்லாமிய அறிஞர்களும், இவர்கள் அனைவருக்கும் துணையாய் இருப்போரும் இஸ்லாத்தின் வழிகாட்டுதலோடு மனிதநேயப் பணிகளில் 24 மணி நேரமும் ஈடுபடுகின்றனர். இவர்கள் சமூகத்திற்காகவே தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்றனர். யாரையும் எவ்வித பாரபட்சமும் பார்க்காது அனைவருக்கும் வைத்திய ரீதியாகவும், பொருள் ரீதியாகவும், மனநிம்மதி அடையும் வகையிலும் தம்மால் இயன்ற உதவிகளையும், பாதுகாப்புக்களையும் வழங்குகின்றனர். 

இந்நோயிலிருந்து நாம் பெறும் இன்னொரு படிப்பினையாக அரசாங்கத்திற்கு கட்டுப்படுவதைக் குறிப்பிடலாம். பல தனவந்தர்களும், செல்வந்தர்களும் அரசாங்கத்திற்காக தமது சொத்துக்களை கொடையாக வழங்கியுள்ளனர். பல நட்சத்திர ஹோட்டல்களும், வைத்தியசாலைகளும், குடியிருப்புப் பகுதிகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரையும், அவர்களோடு அண்டியிருந்தோரையும் மேற்கூறப்பட்ட இடங்களில் கௌரவத்துடன் தனிமைப்படுத்துகின்றனர். மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசாங்கமும், அரசாங்கத்துடன் இணைந்து மனிதநேய உள்ளங்களும் அயராது பாடுபடுகின்றனர். உங்கள் பெருநாள் தினத்தில் அவர்களையும் வாழ்த்துங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளை எண்ணிப்பாருங்கள். அல்லாஹ் கூறுகிறான், “(இது) அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனது கருணையினாலும் உள்ளதாகும். எனவே, அவர்கள் இதைக் கொண்டு மகிழ்வடையட்டும். இது இவர்கள் சேகரிப்பதை விட சிறந்ததாகும் என (நபியே) நீர் கூறுவீராக” (அல்குர்ஆன் 10:58). 

இச்சோதனையிலிருந்து நாம் வெற்றிபெற வேண்டுமாக இருந்தால் இரு விடயங்களை நாம் செய்தாக வேண்டி இருக்கிறது. அல்லாஹ்வுடன் தொடர்பான ஒன்றை நாம் முதலில் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் இச்சோதனையை மனதாற பொருந்திக் கொண்டு, அதில் பொறுமையைக் கையாண்டு, அவன் மீது சரியான தவக்குலை வைத்து, அவனுடனான தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “அவர்கள் யாரெனில் தமக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறுவார்கள். அத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிடமிருந்து அருள்களும், கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (அல்குர்ஆன் 02:156). 

இரண்டாவதாக நாம் முஸ்லிம் என்ற வகையில் எமது கலாச்சாரம், நன்னடத்தை, ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்படுதல் எனும் அடிப்படையில் அரசாங்கத்தின் அறிவுருத்தல்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். வதந்திகளை நம்பவோ, அதை பிறருக்கு பரப்பவோ கூடாது. இவ்வாறான இரு முறையிலும் நாம் செயற்பட்டால் அல்லாஹ்வின் நாட்டத்துடன் இக்கொடிய நோய் நம்மை விட்டும் நீங்கிவிடும். அது நீங்கிய பிறகு என்ன செய்ய வேண்டும்? இந்நோயிலிருந்து தப்பித்துக் கொண்டவர், அல்லாஹ் தனக்குக் கூற வந்த செய்தியை விளங்கி, பாவமன்னிப்புக் கேட்டு, தனது வாழ்வை புதியதோர் கோணத்தில் கொண்டு செல்வார். அவ்வாறே தான் சேர்த்து வைத்த செல்வங்களோ, தான் பெற்ற பதவிகளோ தன்னைக் காப்பாற்றவில்லை. அல்லாஹ்வின் திருப்பிதியும், இறுதி முடிவும், அதற்காக தான் தயாரித்து வைத்த நல்ல செயல்களுமே காப்பாற்றியது என்பதை உணர்வார். இச்சோதனை தனது தீய செயல்களை சரிசெய்ய வந்தது என்பதையும், அறிவுருத்தலுக்காக வந்ததே தவிர வேதனையாக வரவில்லை என்பதையும் உறுதியாகவே நம்பிக்கை கொள்வார். 

இறைவா!, மக்களின் சோதனையை இல்லாமல் செய்வாயாக, அனைவரும் உன் பக்கம் மீள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவாயாக, அனைவரின் நற்செயலையும் அங்கீகரிப்பாயாக. 

இரண்டாம் குத்பா. 

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், இறுதித் தூதருமாவார்கள் என சாட்சியம் கூறியதன் பின்னால்... 

அல்லாஹ்வின் அடியார்களே!, மக்களிடம் இருக்கும் ஓர் ஆச்சரியமான விடயம் யாதெனில் அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதை விரும்புவதேயாகும். சோதனை ஏற்பட்டதே வாழ்க்கை மாற வேண்டும் என்பதற்காக என்பதை அவர்கள் புரியாமல் இருக்கின்றனர். முன்னர் வாழ்ந்த வாழ்க்கையின் அழகும், அலங்காரங்களும் அவர்களை அல்லாஹ்வை விட்டும் திசைதிருப்பிவிட்டன. அல்லாஹ்வின் மீது முழுமையாக தவக்குல் வைத்து புதிய வாழ்வை ஆரம்பிப்பவரே சிறந்த வெற்றியாளராவார். அவர் பின்வரும் நபிமொழியை நன்கு அறிந்தவராக உள்ளார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் தனது வீட்டில் பாதுகாப்பாகவும், உடல் ஆரோக்கியத்துடனும், அன்றைய நாளுக்குரிய உணவுடனும் காலைப் பொழுதை அடைகிறாரோ அவர் முழு உலகையும் அடைந்தவர் போலாவார்”. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முஹ்ஸின் (ரழி), நூல்: திர்மிதி 2346). 

இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், ‘துன்பத்துடன் இன்பம் இணைந்திருப்பதும், கஷ்டத்துடன் இலகு இணைந்திருப்பதும் அல்லாஹ்வின் இரக்கத் தன்மையைக் குறிக்கிறது. துன்பம் என்பது அதிகரித்து, பெரிதாகிப் போனால் படைப்பினங்களிடம் அதற்கான தீர்வைத் தேடி ஓர் மனிதன் சோர்வடைந்து போவான். இறுதியில் அவனின் உள்ளம் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனிடம் சரணடைந்து விடும். இது அல்லாஹ்வின் மீது ஒருவர் வைக்கும் உண்மையான தவக்குல் ஆகும். மனிதன் தனது தேவைகளை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். தன்னிடம் ஒதுங்குபவனுக்கு அல்லாஹ்வே போதுமானவன். அல்லாஹ் கூறுகிறான், “மேலும், எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுபவன். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை ஏற்படுத்தியுள்ளான்” (அல்குர்ஆன் 65:04).’ (ஜாமிஉல் உலூம் வல்ஹிகம் பக் 220). 

அல்லாஹ்வின் அடியார்களே!, உங்கள் ஆன்மாவையும், நேரத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்கள் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். காலையிலும், மாலையிலும் அவனை தஸ்பீஹ் செய்யுங்கள். தனக்குக் கிடைக்கும் செய்திகளை பிறருக்குக் கடத்த வேண்டுமென்ற எண்ணத்தில் உங்கள் நேரங்களை வீணடிக்காதீர்கள். சமூகவலைத்தளங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்கள் வாழ்நாள் அதனால் சீ(ரழி)கிறது. மக்களில் இரு வகையினர் இருக்கின்றனர். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்கள், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்காதவர்கள். எனவே உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்கள். உங்களுக்காக அல்லும் பகலும் பாடுபடும் மனிதர்களைப் பற்றியும் அறிந்து கொண்டீர்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வெற்றிப் பாதையில் பயணியுங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்காது, பிறர் மீது நம்பிக்கையை வைத்து நஷ்டமடைந்தோராக மாறிவிடாதீர்கள். 

இப்பெருநாள் தினத்தை சந்தோசமாக கொண்டாடுங்கள். அல்லாஹ்வை அதிகம் நினைவுபடுத்துங்கள். அதிகமாக தக்பீர் கூறுங்கள். அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வையுங்கள். அல்லாஹ் உங்களினதும், எங்களினதும் வணக்க வழிபாடுகளை ஏற்றுக்கொள்வானாக. உங்களது குடும்ப உறுப்பினர்களின் உள்ளங்களில் சந்தோசத்தை விதைத்திடுங்கள். இன்றைய பெருநாள் என்பது தேவையுடையோரை அரவணைப்பதும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆறுதலாய் இருப்பதுமாகும். 

இத்தினம் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தும் தினமாகும். உள்ளத்தில் உள்ள பொறாமை, வஞ்சகம், குரோதம் போன்றவற்றை நீக்கிவிட்டு, சந்தோசம், சகோதரத்துவம் போன்றவற்றை விதைக்க வேண்டும். குடும்ப உறவுகளுடன் சேர்ந்து நடக்க வேண்டும். ஏழை எளியோருக்கு உதவிகள் செய்ய வேண்டும். அநாதைகளை பராமரிக்க வேண்டும். ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறான சமூக சேவை சார்ந்த விடயங்களில் நாம் அதிகம் கவனமெடுக்க வேண்டும். 

இதன் மூலம் நாம் அல்லாஹ்விடம் நெருங்கி, எமது பாவங்களுக்கான மன்னிப்பை அவனிடம் பெற்று, அவனின் திருப்பொருத்தத்தை அடைந்துகொள்ள வேண்டும். ரமழானுக்குப் பின்னாலும் வணக்க வழிபாடுகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டிய கடமைகளுள் ஒன்றாகும். ரமழானுக்குப் பின் ஷவ்வால் மாத ஆறு நோன்புகளை நோற்பதும் நபிவழியாகும். அவ் ஆறு நோன்புகளையும் நோற்றவர் காலம் முழுதும் நோன்பு நோற்ற நன்மைகளைப் பெறுவார். 

நீண்ட துஆப் பிரார்த்தனை... 

முற்றும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget