இன்றை சூழலில் மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் என்ற போர்வையில் சில விடயங்கள் கட்டவிழ்த்தப்பட்டு அதனால் மக்களை சிக்கலுக்குள் தள்ளி விடுகின்ற மௌட்டீக வேலைகளை சிலர் மேற் கொள்வதை நாம் பார்க்கின்றோம். சமூகத்தில் மார்க்க அறிவில் பரந்து பட்ட தேர்ச்சியற்ற சிலரால் மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தவறாக வழிநடாத்தப்படுகின்றனர்.
அப்படியான விடயங்களுக்கு அவ்வப்போது உலமாக்கள் தெளிவுகளை வழங்கி வருகின்றனர். அப்படியான வகையில் மஸ்ஜித் அல்லாத இடங்களில் ஜூம்ஆ நடத்தாலாம். வீட்டில் கணவன் மனைவி எல்லோரையும் இணைத்து வீட்டில் தொழுதால் என்ன? என்ற வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இக்கட்டுரையினூடாக அவ்வாறான விமர்சனங்களில் உள்ள யதார்த்தம் என்ன என்பதை பொதுவாக அலசியுள்ளோம். எனவே இதனை படிப்பதன் மூலம் நல்ல சிந்தனைகளை எமக்குள் வளர்த்துக் கொள்வோமாக.
பொதுவாக மனிதன் தொழுகைகளை நிலைநாட்டவேண்டிய இடம் பள்ளிவாசல்களாகும். பள்ளிவாசல் என்று அழைப்பதாக இருந்தால் அதற்கு இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன: ஒன்று அந்த இடம் வக்பு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இரண்டாவது பள்ளிவாசல் என்பதற்கான கட்டிடம் அது கல்லால் கட்டப்பட்டதாகவோ அல்லது ஓலையால் வேயப்பட்டதாகவோ இருக்கலாம்.
சில அறிஞர்கள் ஜும்ஆ தொழுகைகள் பள்ளிவாசல்களில் மாத்திரம்தான் நடைபெற வேண்டும் என்று கூறுகிறார்கள். இன்னும் பலர் பள்ளிவாசல் அல்லாத இடங்களிலும் ஜும்ஆ தொழுகையை நடாத்தலாம் என்று கூறுகிறார்கள். (பார்க்க பதாயிஉஸ் ஸநாயிஃ 1/260 அல்முஃனி 2/246)
பள்ளிவாசல் அல்லாத வேறு இடங்கள் என்பது வீடுகளை குறிக்காது. மாறாக ஒரு ஊரில் பள்ளிவாசல் இல்லையெனில் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு இடத்தில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதேபோன்று ஜும்ஆ பள்ளிவாசல் இருக்கும் போது அலுவலகங்களில் அல்லது வைத்தியசாலைகளில் தொழுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட சிறிய அறைகளில் கூட ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற முடியாது.
ஏனனில் ஜும்ஆ தொழுகை என்பது மற்றைய தொழுகைகளை விட தனித்துவமான தொழுகையாகும். அதற்கென்று தனியான சிறப்புக்கள் காணப்படுகின்றன. அந்த நாளில் அனைவரும் ஒன்று சேருகிறார்கள், கூடி மகிழ்கிறார்கள். அந்த நாளில் மாத்திரம் தனித்து சுன்னத்தான நோன்புகள் நோற்பது கூட தடைசெய்யப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டம் சோதனைகளால் மலிந்து யாரும் வெளியேற முடியாதவாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கிப்போய் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வீடுகளில் நாம் ஐவேளை தொழுகையை குடும்பத்தோடு சேர்ந்து ஜமாஅத்தாக தொழுவது போன்று ஜும்ஆ தொழுகையை தொழமுடியாது. இரண்டும் ஒன்றாக முடியாது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நிபந்தனைகள் காணப்படுகிறன.
வெள்ளம், புயல், இயற்கை அழிவு, தொற்று நோய் பரவுதல், ஊரடங்கு என்று அன்று தொட்டு இன்று வரை பள்ளிவாசல்களில் தொழமுடியாமல்போன காலமெல்லாம் நீங்கள் வீடுகளிலே ஐவேளை தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுது கொள்ளுங்கள் என்று கூறிய நல்லறிஞர்கள் யாரும் ஜும்ஆ தொழுகையை தங்களின் வீடுகளில் நிறைவேற்றுங்கள் என்று கூறவில்லை.
நபியவர்களின் காலத்தில் மதீனாவில் மஸ்ஜிதுன் நபவியையும் சேர்த்து ஒன்பது பள்ளிவாசல்கள் இருந்தது ஸஹாபாக்கள் பிலால் (ரலி) அவர்களின் பாங்கு ஓசையை கேட்பார்கள் (ஐவேளை தொழுகைகளை ஜமாஅத்தாக) அவர்களின் பள்ளிகளில் தொழுது கொள்வார்கள். ஜும்ஆ தொழுகையை மஸ்ஜிதுன் நபவியில் மாத்திரமே நிறைவேற்றினார்கள். (தல்ஹீஸுள் கபீர் 1/112-113)
நபியவர்கள் மதீனாவுக்கு செல்லும் முன் அங்கு அஸ்அத் இப்னு ஸுராரா (ரலி) அவர்கள் மக்காவில் ஒரு வெட்டவெளியில் (நீர் தேங்கி நின்று வற்றிய இடம்) ஜும்ஆ தொழுகை நடாத்தினார்கள் அப்போது அந்த சந்தர்ப்பத்தில் நாற்பது சஹாபாக்கள் இருந்தார்கள். (ஆதாரம்: அபூதாவுத் 1080)
“இந்த ஹதீஸை வைத்து அதிகமான அறிஞர்கள் ஜும்ஆ தொழுகை நடாத்தப்பட வேண்டுமானால் நாற்பது பேர் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாற்பதை விட குறைவாக இருந்தாலும் ஜும்ஆ கூடும் என்பவர்களும் ஜூம்ஆத் தொழுகைளை அதனை வீட்டில் தொழுது கொள்ளலாம் என்று கூறவில்லை”.
இன்று நமது ஊர்களில் காளான்கள் போன்று பள்ளிகள் முளைத்தாலும் ஜும்ஆ பள்ளிவாசல்கள் எளிதில் முளைப்பதில்லை. ஏனெனில் அதற்கென்று பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. இடம் போதாமை, தூரம் போன்ற காரணங்களால் பல ஜும்ஆக்கள் ஒரு ஊரில் நடைபெறுகின்றன.
இமாம் சுப்கி அவர்கள் குறிப்பிடும் போது அறிஞர்கள் சரிகண்ட கருத்து யாதனில் “தேவை இருக்கிறது என்பதற்காகவே தவிர ஒன்று மேற்பட்ட ஜும்ஆக்கள் நடைபெற கூடாது. தேவை இல்லாமல் அதிகரிக்கப்படுமானால் அது இஸ்லாமிய மார்க்கத்தில் அவசியம் தடுக்கப்பட வேண்டியதாகும்”. (பதாவா சுப்கி 1/180) (பார்க்க: அத்தகீரா 2/354 அத்தாஜ் வல் இக்லீல் 2/237 அல்மஜ்மூஃ 4/492-493 கஷ்ஷாபுல் கினாஃ 2/39)
அசாதாரண சூழ்நிலைகளால் ஜும்ஆ தொழுகையை நிறேவேற்ற முடியாத போது அந்த வேளையில் லுஹர் தொழுகையை தொழ வேண்டுமே தவிர வீட்டில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற முடியாது. இவ்வாறு நிறைவேற்றுவது இஸ்லாமிய வழிமுறைக்கு மாற்றமானதாகும்.
இன்றைய சூழ்நிலையில் மார்க்க தீர்ப்பு வழங்க (சவூதி அரேபியா, ஜோர்டான், துபாய் போன்ற நாடுகளில்) அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், பிரபல்யமான மார்க்க அறிஞர்களிடம் வீட்டில் ஜும்ஆ தொழுகைகளை நிறைவேற்றலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் வீட்டில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற முடியாது. மாறாக நான்கு ரக்அத்துகள் லுஹர் தொழுகையை தொழுதுகொள்ள வேண்டும். அவ்வாறு யாராவது வீட்டில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினால் அவர்கள் அதனை லுஹர் தொழுகையாக மீட்டி தொழவேண்டும் என்றும் மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
தொடராக மூன்று ஜும்ஆக்களை விடுபவரும் அது பற்றிய தவறான புரிதல்களும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் மூன்று ஜும்ஆக்களை பொடுபோக்காக விட்டு விடுகிறாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான். (அபூதாவூத்: 1052 திர்மிதி: 500 நஸாயி: 1369 )
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தொடராக மூன்று தடவைகள் ஜும்ஆக்களை அவசியம் (தக்க காரணம்) இன்றி விட்டு விடுகிறாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான். (ஸஹீஹுல் ஜாமிஃ: 6140)
இறைவன் ஜும்ஆ தொழுகைகளை தக்க காரணமின்றி பொடுபோக்காக விடுபவர்களின் உள்ளத்தில் காணப்படும் அன்பை போக்கி அதில் மடமையை உட்செலுத்தி கல்நெஞ்சம் கொண்ட உள்ளமாக மாற்றுகிறான். அவர்களின் உள்ளங்களை நயவஞ்சகர்களின் உள்ளங்களைப் போன்று ஆக்கிவிடுகிறான்.
பொடுபோக்காக விடுவது என்பது தொழுகையை பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாது அது பற்றி எவ்வித கவலையும் இல்லாமால் அலட்சிய போக்கோடு நடந்து கொள்வதாகும், தொழுகையின் நேரம் வருவதும் தெரியாது அது நம்மை விட்டும் கடந்து செல்வதும் தெரியாது, இஸ்லாத்தில் தொழுகை இரண்டாது கடமை என்று தெரியாமல் இவ்வுலகில் வாழ்வதானது மிகுந்த வருத்தத்திற்குரிய விடயமாகும். அதே போன்று ஜூம்ஆ தொழுகை நேரங்களில் வியாபாரங்களில் மூழ்கியிருந்து தொழுகையில் அலட்சியம் செய்தல் இவ்வாறு பொடுபோக்காக, அலட்சியமாக இருப்பதைத்தான் இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் தக்க காரணங்களினால் ஜும்ஆ தொழுகையை விட சலுகை வழங்கப்பட்டவர்கள் இதனுள் அடங்கமாட்டார்கள். உதாரணமாக: தீராத நோயாளிகள், பிரயாணிகள் போன்றவர்கள்.
இதே போன்றுதான் இன்றைய சூழ்நிலையில் வீடுகளில் முடங்கியிருப்போர் அவர்கள் தக்க காரணங்களினால் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறார்கள். இவர்கள் பொடுபோக்கிற்காக தொழுகையை விடவில்லை மாறாக தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையினால் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறானவர்கள் வீட்டில் நான்கு ரக்அத்துகள் லுஹர் தொழுகையை தொழுதுகொள்ள வேண்டும்.
உண்மையில் சிலர் இவ்வளவு நாளும் நாம் அதனை சரியாக, தொடராக தொழுதுகொண்டு வந்திருந்தோம். இன்று அவ்வாறு தொழ முடியாமல் பல ஜும்ஆவை தவற விட்டிருக்கிறோம் என்று மனக்கவலை கொள்கிறார்கள். யதார்த்தம் அவ்வாறல்ல நாம் தகுந்த காரணங்களினால் தொழ முடியாதவர்களாக இருக்கிறோம். அடுத்தவருக்கு தீங்கு இழைக்கக்கூடாது என்பதற்காக தமது வீடுகளில் முடங்கி இருக்கிறோம். இதுவும் நன்மையான காரியமாகும். தமது எண்ணம் சரியாக இருக்குமானால் அல்லாஹ் அதற்கு கூலி வழங்குகிறான்.
நபியவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டால் அல்லது பிரயாணம் செய்தால் அவன் ஊரிலே சுகதேகியாக இருக்கும் போது செய்த அமல்களுக்கு கூலி கொடுக்கப்பட்டதை போன்று கூலி கொடுக்கப்படுகிறான். (புஹாரி: 90)
மேற்கூறப்பட்ட ஹதீஸின் விளக்கம் யாதெனில் ஒருவர் தனது வாழ்நாளில் தஹஜ்ஜுத் தொழுகையை தொடராக தொழுது வருகிறார் எனின் அவர் நோய்வாய்ப்படும் போது அவ்வாறு அவரால் தொழ முடியாமல் போனால் அவர் முன்னர் செய்த அமலுக்கு கூலி கொடுக்கப்பட்டவர் போன்று இப்பொழுதும் நன்மை செய்து கொண்டிருப்பவராக கருதப்படுகிறார். அவர் தொழாமல் இருந்ததற்கான காரணம் அவருக்கு ஏற்பட்ட நோய். அவர் குணமடையும் போது மீண்டும் தஹஜ்ஜுத் தொழுகையை தொழுது கொள்வார்.
அது போன்றுதான் பிரயாணி ஒருவர் பயணம் செய்யும் போது அதன் சிரமத்தினால் சுன்னத்தான வணக்கங்கள் செய்ய கஷ்டமாக இருக்கும். இதற்கு முன் அவர் தொடராக சுன்னத்தான காரியங்களில் ஈடுபட்டு வந்திருப்பாரானால் அவர் பிரயாணத்தில் இருந்து கொண்டிருந்தாலும் நன்மைகளை கொள்ளையடித்த மனிதராக மாறுவார். இவ்வாறு அல்லாஹ் தன் அடியார்களுக்கு கூலி வழங்குகிறான். அவன் தன் அடியார்களோடு மிகுந்த அன்பு கொண்டவன்.
இந்த சோதனை காலத்திற்கு முன் நாம் தொடராக ஜும்ஆ தொழுகைகளை தொழுதுவந்திருந்தால் இந்த காலத்திலும் நாம் ஜும்ஆ தொழுத மக்களாக கணக்கிடப்பட்டு அதற்கு கூலி வழங்கப்பட்ட மக்களாக மாறுவோம். அல்லாஹ் அந்த நல்லடியார்களில் நம் அனைவரையும் சேர்ப்பானாக. ஆமீன்...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.