இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்)
நிகழ்த்தியவர்: அஷ்ஷைக் கலாநிதி ஸுஊத் இப்னு இப்றாஹிம் அஷ்ஷுரைம்
தமிழ் மொழி மூலம் (சிறு மாற்றத்துடன்)
தனது குத்பாவின் முன்னுரையைத் தொடர்ந்து, அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உபதேசம் செய்தார். அவனை விட்டும் யாரும் தேவையற்று இருக்க முடியாது. அவன் மூலமே நாம் சுவனம் செல்ல முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: “மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்”. (அல்குர்ஆன் 19:71)
அதனைத் தொடர்ந்து ரமழானுடையை மாதம் உங்களிடம் விருந்தாளியாக வந்திருக்கிறது. அது இதற்கு முந்தைய காலங்களை போலல்லாது இவ்வருடம் கொரோனா என்ற கோரப்பிடிக்குள் வந்திருக்கிறது. இதனால் மனிதன் கவலைக்குள்ளாகி அவனின் முழு சிந்தனையும் இதிலே காணப்படுகின்றது. எந்தளவுக்கெனில் தன் தலையில் பறவை ஒன்று இருப்பது போன்று உணர்கிறான்.
இதற்கு முன் இப்படியான ஒரு நிலைமையை சிறியவரும் பெரியவரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். பொருளாதரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அவர்கள் இழந்ததைக் கொடுத்து, எம்மால் முடியுமான எல்லா வகையிலும் நாம் உதவி புரிய வேண்டும். அவர்களுக்காக வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவனுக்கு (முஃமின்) ஏதும் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடியவை அவனை அடைந்து கொண்டால் நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாக இருக்கிறது. அவனுக்கு ஏதும் துன்பம் ஏற்படுத்தக்கூடியவை அவனை அடைந்து கொண்டால் பொறுமை அடைகிறான். அது அவனுக்கு நலவாக இருக்கிறது”. (முஸ்லிம் 2999).
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்”. (அல்குர்ஆன் 02:155-157)
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக). (அல்குர்ஆன் 51:50)
இன்றைய காலத்தில் ஏற்பட்டிருக்கும் சோதனை நமது அன்றாட வாழ்வைப் பாதித்துள்ளது. நம்முடைய மார்க்க விடயங்களை எவ்வகையிலும் அது பாதிக்கவில்லை. இதற்கு நாம் அல்லாஹ்வை புகழ வேண்டும். நமது வாழ்வில் எத்தனை சோதனைகளை சந்தித்தாலும், மார்க்கத்தில் ஏற்படும் சோதனையை சந்திப்பது மிகவும் அபாயகரமானது.
நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்கள்: “எங்களுக்கான சோதனையை எமது மார்க்கத்தில் ஏற்படுத்தி விடாதே”. (தபரானி 1911).
இந்த கொரோனா எனும் சோதனை நமது மார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில், நமது பண்பாடுகளில் வரவில்லை. எமது பொருளாதாரத்தில் வந்துள்ளது. பணம் என்பது வரும், போய் விடும்.
அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பாத்தியத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான். (அல்குர்ஆன் 13:26)
இந்த கொரோனா எனும் சோதனை எமது ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருக்கிறது. உலகில் வாழும் போது இப்படியான சோதனைகளும் குளறுபடிகளும் ஏற்படும். இதிலிருந்து விடுபடுபவர்கள் மிகவும் குறைவானவர்களே.
நபியவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதனுக்கு ஏற்படும் களைப்பு, வலி, கவலை, நோவினை, மனக்குலைவு, குத்திவிடும் முள் என்பவற்றின் மூலம் அல்லாஹ் அவனுடைய பாவங்கள் மன்னிக்கின்றான்”. (புஹாரி 5641, முஸ்லிம் 2573).
கொரோனா எனும் நோய்த்தொற்று அல்லாஹ் தமக்கு ஏற்படுத்திய முழுமையான கெடுதி என்று எண்ணிவிடக் கூடாது. அவன் நமக்கு அதிகமானவற்றை தந்துள்ளான், நம்மிடம் இருந்து குறைவாகவே எடுத்துள்ளான். இதன் மூலம் அது நமக்கு பல படிப்பினைகளை கற்றுத்தந்திருக்கிறது. இப்படியான சோதனைகளில் சமூகத்தின் பாதுகாப்பை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்த வேண்டும். எதுவாக இருந்தாலும் வருமுன் காக்க வேண்டும். வந்த பின் காப்பதை விட அதுவே சிறந்ததாகும். இவ்வாறான முன்னெச்சரிக்கைகளை யார் அறிகிறாரோ, அவர் இப்படியான சோதனைகளில் எளிதில் விழமாட்டார். தனது திட்டத்தில் வெற்றி பெறுவார். அதனால் அவருக்கு ஏற்படும் இழப்பு குறைவானதாக இருக்கும்.
இப்படியான முன்னெச்சரிக்கைகளில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று பார்த்து எச்சரிக்கையடைதல், அடுத்தது கேட்டு எச்சரிக்கையாக நடந்து கொள்ளல். அதன் பாரதூரங்களைப் பார்க்கின்ற அனைவரும் எச்சரிக்கையாக நடந்து கொள்வார்கள். ஆனால் அதனை கேட்கின்ற அனைவரும் எச்சரிக்கையாக நடந்து கொள்வார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது.
அதேபோன்று இந்த கொரோனா கற்றுத்தந்த படங்களில் சேமிப்பும் ஒன்றாகும். இப்படியான நிலமைகள் தமது வாழ்வில் ஏற்படும். அதற்கான தயார்படுத்தல்கள் நம்மிடம் இருக்க வேண்டும். அடிப்படை தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்து வாழ்ந்தாலும், எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, தமது உழைப்பின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். எனவே இது சேமிப்பை விழிப்பூட்டி இருக்கிறது. இதில் பலர் பொடுபோக்காக இருக்கிறார்கள். நமது பொருளாதாரத்தை நன்கு திட்டமிட வேண்டும். அதற்கு இந்த கொரோனா நல்ல முன்னுதாரணமாகும். ஒரு மனிதன் உழைத்தல், செலவழித்தல், சேமித்தல் என்பற்றில் நடுநிலையோடு செயற்பட வேண்டும்.
நபியவர்கள் கூறினார்கள்: “உண்ணுங்கள், அடுத்தவர்களுக்கு உணவளியுங்கள், சேமியுங்கள்”. (புஹாரி 5569, முஸ்லிம் 1973).
அடியார்களே! இந்த கொரோனா, வரலாற்றில் இடம்பெற்ற வெறும் ஒரு சோதனையாக மாத்திரம் கருதக்கூடாது, மாறாக அதிலிருந்து தமது வாழ்வின் அனைத்து பகுதிகளுக்கும் படிப்பினைகளை பெற வேண்டும். முன்னரைவிட அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட வேண்டும். இது எமது பலத்தை முறியடித்து விடக்கூடாது. கவலை, நிராசை, பிளவுகளை ஏற்படுத்தக் கூடாது. ஏனெனில் நாம் ஈமானின் ஆறு அடிப்படைகளையும் நம்பிக்கை கொண்டவர்கள்.
முஸ்லிம்களை அல்லாஹ் இப்படியான சோதனைகளில் எப்பொழுதும் பலமுள்ளவர்களாக ஆக்கியிருக்கிறான். இந்தக்காலத்தில் அல்லாஹ் மனிதர்களை சோதிக்கிறான். இந்த சோதனை அவனின் வல்லமையை உணர்த்துகிறது. வரம்பு மீறி நடப்பவர்கள் அதை விட்டு விடுமாறும், பாவிகள் அல்லாஹ்வின்பால் மீளுமாறும், நோவினை செய்பவர்கள் நற்காரியங்கள் செய்யுமாறும், வீண்விரயம் செய்பவர்கள் சிக்கனமாக நடந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுகிறது.
இப்படியான படிப்பினைகளைப் பெறாதவர்கள் யாரெனில் அவர்களின் உள்ளம் நல்லவற்றை சிந்திக்காமல் திரையிடப்பட்டிருக்கும். அவர்கள் பேராசையோடும், இறைவனை வழிப்படாமல் பெருமையோடும் வாழ்பவர்கள்.
நாம் அதிகம் அதிகமாக அல்லாஹ்வை புகழ வேண்டும், ஏனெனில் நமது நாட்டில் கொரோனா கூடுதலாக பரவி விடாமல், அதனை தடுத்து, கண்ணியப்படுத்தி இருக்கிறான். அதேபோன்று இந்த நோய்த்தொற்றை தடுப்பதில் கடமை புரிந்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள் சென்றடைய வேண்டும். நாம் அவர்களுக்காக பிரார்த்தனைகள் புரிய வேண்டும்.
இரண்டாம் குத்பா
முன்னுரையை தொடர்ந்து...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமழான் மாதம் வந்தால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்”. (புஹாரி 3277, முஸ்லிம் 1079).
இந்த மாதத்தை நன்கு உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். எமது எதிரியான ஷைத்தானின் பலம் இம்மாதத்தில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 35:06).
அநேகமான மனிதர்கள் ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகிறார்கள், ஆனால் அவர்கள் ஷைத்தானை எதிரியாக பார்ப்பது கிடையாது. இது அவர்கள் மேற்கொள்ளும் வெளிப்படையான பொடுபோக்காகும். ஆனால் அவனின் விரோதம் பரந்து விரிந்து காணப்படுகிறது. அதற்கு எல்லை கிடையாது. அவர்களை விட்டும் அவன் ஒரு போதும் தூரமாக மாட்டான்.
அல்லாஹ் கூறுகிறான்: “(ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்”
வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்” (என்றும் கூறினான்)”. (அல்குர்ஆன் 07:16-17).
ஷைத்தான் மனித உடலில் ஓடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கும், மனிதனுக்கும் இடையில் போராட்டம் நடைபெறுகின்றது. ஆனால் இந்த மாதத்தில் அவன் பலவீனமானவாக காணப்படுகின்றான். ஆகவே எவன் இம்மாதத்தை நன்கு பயன்படுத்தவில்லையோ அவன் நஷ்டவாளியாவான்.
நபியவர்கள் கூறினார்கள்: “ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து, ‘யார் ரமழான் மாதத்தை அடைந்தும் அவரின் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவர் நரகம் நுழைவார். அல்லாஹ் அவரை தூரமாக்கி விடுகிறான்’ என்று கூறினார்கள். அதற்கு ‘ஆமீன்’ என்று சொல்லுமாறு கூறினார்கள். நான் ஆமீன் கூறினேன்”. (இப்னு ஹிப்பான் 907).
இந்த சோதனையால் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் யாரும் வீட்டில் நல்லமல் செய்வதில் இருந்து விடுபட முடியாது.
அல்லாஹ்வை ரமழான் மாதத்தில் மாத்திரம் அறிந்து கொள்பவர்கள் கெட்ட கூட்டத்தினர். அதேபோல் பள்ளிவாசல்களில் மாத்திரம்தான் அல்லாஹ்வை அறிந்து கொள்பவர்களும் கெட்ட கூட்டத்தினர். அவர்கள் தன் வீடுகளில், தமது ஒன்றுகூடல்களில், தனக்கு முன்னால், பின்னால், இருக்கும் போது, எழும்பும் போது, எங்கு சென்றாலும் அவன் தம்மோடு அல்லாஹ் இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்.
அதேபோன்று இந்த கொரோனா கற்றுத்தந்த பாடம், யார் இறைவனை வணங்க தமது வீடுகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்? இந்த மாதத்தில் முன்னைய காலங்களை விட அதிகமான ஒய்வு நேரம் காணப்படுகிறது. நேரம் நன்கு விசாலத்தன்மையுடையதாக காணப்படுகிறது. யாரும் இக்காலத்தில் எனக்கு பல வேலைகள் இருக்கிறது என்று வாதிட முடியாது. இது தங்கத் தட்டைப் போன்று பெறுமதி வாய்ந்த ஓர் சந்தர்ப்பம். ஆனால் யார் அதனை வீணடிக்கிறாரோ அவர் பெரும் நஷ்டவாளியாவார். யாரையும் இந்த சோதனை இம்மாதத்தில் நல்லமல்கள் செய்யவிடாமல் தடுக்கவில்லை. உண்மையில் நல்லமல்கள் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
வீட்டில் இருந்துகொண்டு இம்மாதத்தை வணக்கங்களால் உயிர்ப்பிக்க முடியும். யார் அல்லாஹ்வை பள்ளிவாசல்களில் மாத்திரம்தான் வணங்க வேண்டும் என்று எண்ணுகிறாரோ அவர் அல்லாஹ்வின் விடயத்தில் தப்பெண்ணம் கொண்டு விட்டார். மாறாக சுன்னத்தான நல்லமல்கள் செய்ய பொருத்தமான இடம் வீடாகும். அதற்கு பல நன்மைகளும், தாக்கங்களும் உண்டு.
நபியவர்கள் கூறினார்கள்: “பூமி எனக்கு பள்ளியாகவும் தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. எனது உம்மத்தில் யாராவது தொழுகையின் நேரத்தை அடைந்தால் அவர் தொழுதுகொள்ளட்டும்”. (புஹாரி 438, முஸ்லிம் 521).
நபியவர்கள் கூறினார்கள்: “உங்களின் தொழுகையில் சிலதை உங்களின் வீடுகளில் ஆக்கிக்கொள்ளுங்கள். அதனை அடக்கஸ்தலமாக ஆக்கிக்கொள்ள வேண்டாம்”. (புஹாரி 432, முஸ்லிம் 777).
முற்றும்...
அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.