குத்பா பிரசங்கம் – 2020/04/17
இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்)
நிகழ்த்தியவர்: அஷ்ஷைக் கலாநிதி மாஹிர் அல்முஅய்கலி
தமிழ் மொழி மூலம் (சிறு மாற்றத்துடன்)
ஆரம்பமாக “புத்தியுள்ளவன் தன்னைப் பற்றி சுயவிசாரணை செய்து கொள்வான், மரணத்திற்கு பின்னால் உள்ளதை எண்ணி நல்லமல்கள் செய்வான்” (திர்மிதி) என்ற நபிமொழியை நினைவுபடுத்தி ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களுக்கு கற்றுக்கொடுத்த ஈமானின் அடிப்படை அம்சங்களை நினைவுகூர்ந்து அதில் இறுதியாக இடம்பெறும் நலவும் கெடுதியும் அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டே நடைபெறுகிறது என்பதை ஈமான் கொள்ள வேண்டும் என்று கூறி இன்றைய காலகட்டத்தினுடைய சோதனைகளை பற்றியும் அதில் மனிதன் அறியாத பல நலவுகள் உண்டு என்றும் அறிவுரை கூறினார்.
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை தனது கையால் படைத்து அவனது மலக்குமார்களை அவருக்கு சிரம்பணிய வைத்து இறுதியில் சுவர்கத்தின் கனியை சாப்பிட வைத்து அவரை சோதித்தான். அதன் பின்னர் அல்லாஹ் அவனுடைய சந்ததியினரை சோதிக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அன்பு கொண்டவன் இவ்வாறான சோதனைகள் மூலம் மனிதர்களிடமிருந்து பல நலவுகளை எதிர்பார்க்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:216)
இறைவன் நபி (ஸல்) அவர்களை ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது சோதித்தான். அதில் நபியவர்களுக்கும் உமர் (ரலி) இடையே கருத்துப்பரிமாற்றம் இடம்பற்றது. அதில் நபியவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அல்லாஹ் தூதரை வீணாக்கி விடமாட்டான் என்று உமர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதன் பின் உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் சென்று நபியவர்களிடம் சொன்னதை போன்று அவர்களிடமும் சொல்கிறார்கள் அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் நபியவர்கள் பதிலளித்ததை போன்று உமர் (ரலி) அவர்களுக்கு பதில் அளிக்கிறார்கள். அதன் பின்னர் அல்லாஹ் பின்வரும் திருமறை வசனத்தை இறக்கினான்.
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (அல்குர்ஆன் 48:01)
உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் இது தமக்கு வெற்றியா என்று கேட்கிறார்கள் அதற்கு நபியவர்கள் ஆம் என்று பதிலளிக்கிறார்கள். (புஹாரி, முஸ்லிம்)
இவ்வுலகம் சோதனைகளால் சூழ்ந்துள்ளது, அதன் பின்புலங்களை இறைவன் மாத்திரமே அறிந்துள்ளான். அல்லாஹ் மனிதர்களுக்கு நலவுகளை மாத்திரமே நாடக்கூடியவன்.
அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூறுகிறார்கள்: இறைவன் அவனோடு இருக்கும் தன் அடியார்களின் எண்ணங்களோடு இருக்கிறான். (முஸ்லிம்: 48)
விதியை ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் பயன்கள்:
அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியும் மனநிலை.
மனிதனில் ஏற்படும் கவலை, நிராசை அடைதலுக்கு தீர்வு கிடைத்தல்.
மன அமைதி கிடைத்தல்.
இவ்வாறான சோதனைகளால் மனிதன் நல்லமல் செய்வதை விட்டுவிடக்கூடாது. அல்லாஹ்வின் நாட்டத்தை மனதார ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விடுபடுவதற்கான காரண காரியங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னால் முடியுமானவரை நற்காரியங்களில் ஈடுபட வேண்டும்.
நபியவர்கள் கூறினார்கள்: பலமிக்க நம்பிக்கையாளன் சிறந்தவனாவான். பலவீனமான நம்பிக்கையாளனைவிட அவன் அல்லாஹ்விடத்தில் விருப்பத்திற்குரியவனாவான். (முஸ்லிம்: 2664)
உனக்கு பயன் உள்ள விடயங்களின்பால் கரிசனை காட்டு. அல்லாஹ்விடத்தில் தேவை உள்ளவனாக இரு. நபியவர்கள் பத்ர் யுத்தத்தில் கிப்லாவை முன்னோக்கி அழுதழுது தன்னுடைய சால்வை அவிழுமளவுக்கு அல்லாஹ்விடத்திலே பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தான். (முஸ்லிம்)
அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் உங்கள் இரட்சகனிடம் உதவி தேடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (அல்குர்ஆன் 8:9)
ஹுனைன் யுத்தத்தில் அல்லாஹ் சஹாபாக்களை சோத்தித்தான். அவர்கள் எதிரிகளை விட ஆள் பலத்தாலும் ஆயுதத்தாலும் பலவீனமானவர்களாக இருந்தார்கள். நபியவர்கள் கண்டிக்கும் அளவுக்கு சஹாபாக்களில் சிலர் நாம் தோற்றுவிடுவோம் என்று கூறினார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கினான்.
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்; (நினைவு கூறுங்கள்:) ஆனால் ஹுனைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகிவிட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள். (அல்குர்ஆன் 9:25)
பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான்; நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும். (அல்குர்ஆன் 9:26)
இமாம் இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; ஒரு அடியான் தன் இறைவனிடம் வலிந்து தன் தேவையை கேட்கும் போது அல்லாஹ்விடத்தில் அவன் நெருக்கமானவனாக மாறுகிறான். அவனிடத்தில் கண்ணியமானவனாக ஆகிறான். அல்லாஹ் அவனின் அந்தஸ்தை உயர்த்துகிறான்.
குறிப்பாக இந்த சோதனை கால சந்தர்ப்பங்களில் நாம் அதிகம் அதிகமாக இறைவனிடம் கையேந்த வேண்டும். அதேபோன்று இந்த சோதனைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். உதவி செய்வதற்கான வழிகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
நபியவர்கள் கூறினார்கள்: நலவு செய்த காரியங்கள் அழிவில் விழுவதிலிருந்து தம்மை பாதுகாக்கும். (அல்முஃஜமுல் அவ்ஸத் லித்தபராணி: 6086)
உதவி செய்ய முடியவில்லை என்றால் அவர்களுடன் நல்ல முறையில் பேசுவதும் தர்மம் ஆகும். இந்த சந்தர்ப்பத்தில் அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் வீட்டில் இருந்து கொள்வதும் நன்மையான காரியமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன் (அல்குர்ஆன் 35:15)
அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான். இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல. (அல்குர்ஆன் 14:19-20)
இரண்டாம் குத்பா
இஸ்லாமிய மார்க்கம் மனிதனை அனைத்து விதமான இழப்புகளில் இருந்து அதிலும் குறிப்பாக அவனின் உயிர் அநாவசியமான முறையில் பறிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இந்த சோதனை காலத்தில் பட்டினியால் யாரும் மரணிக்கக்கூடாது என்பதில் இந்த நாட்டு மன்னர் கவனம் செலுத்தி இருக்கிறார். அதேபோன்று சுகாதார துறையும் கடும் விழிப்புடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது, அவர்கள் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இரண்டு வகையினர் இருக்கிறார்கள் யாரும் அவர்களை விட்டும் தேவை அற்றவர்களாக இருக்க முடியாது அவர்கள் யாரெனில் ஒன்று உலமாக்கள், அடுத்தது மருத்துவர்கள்.
இமாம் ராஸி (ரஹ்) கூறும் போது மருத்துவர்கள் நோயாளியின் மனதில் சந்தோசத்தை விதைக்கிறார்கள். நோயாளியை மனமுவந்து சிகிச்சை செய்து இன்பமடைகிறார்கள். நோயாளியும் அவர்களை கண்டவுடன் மகிழ்வுருகிறான் என்று மருத்துவர்களின் சிறப்புகளை கூறுகிறார்கள்.
யார் உலகில் நம்பிக்கையாளின் கஷ்டத்தை போக்கி விடுகிறாரோ அல்லாஹ் அவரின் மறுமையின் கஷ்டத்தை போக்கி விடுகிறான். (முஸ்லிம்: 2699)
ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவனோடு இருக்கிறான். (முஸ்லிம்: 2699)
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. (அல்குர்ஆன் 7:56)
அல்லாஹ் கூறுகிறான்: இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 2:195)
பத்ர் யுத்தத்துக்கு முன்னால் நபிகளாரின் மகளான ருகையா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது நபியவர்கள் அவர்களின் கணவன் உஸ்மான் (ரலி) அவர்களை அவர்களது மனைவியுடன் இருந்து சிகிச்சையளிக்குமாறு கூறினார்கள். அதனால் அவர்கள் யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நபியவர்கள் அவர்களுக்கும் யுத்தத்தில் கலந்துகொண்ட நன்மை உண்டு எனக்கூறி யுத்தத்தில் கிடைத்த பொருட்களில் ஒரு பங்கு கொடுத்தார்கள். (புஹாரி)
நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் விரும்பியதை செய்துகொள்ளுங்கள், நான் உங்களை மன்னித்து விட்டேன். (புஹாரி: 4890) இதன் மூலம் உஸ்மான் (ரழி) அவர்களும் யுத்தத்தில் கலந்துகொண்டவர்களாக கணிக்கப்படுகிறார்கள்.
அதேபோன்று பாதுகாப்புப் படையினரின் பணியை மறந்து விட முடியாது அவர்களும் இரவு பகலாக எல்லைப்பகுதியில் வீதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுகொண்டிருக்கிறார்கள்.
நபியவர்கள் கூறினார்கள்: இரண்டு கண்களை நரகம் தீண்டாது ஒன்று அல்லாஹ்வை பயந்து அழுதவரின் கண், அடுத்தது அல்லாஹ்வின் பாதையில் காவல் கடமையில் ஈடுபட்டு விழித்திருந்தவரின் கண். (திர்மிதி)
இவர்களுக்காக நாம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்வோம்.
தமிழில் (சிறு மாற்றத்துடன்)
நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.