விளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari



விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு அம்சங்களுக்கான இஸ்லாத்தின் வரையறை 

இஸ்லாத்தில் அடிப்படை வணக்கத்தைத் தவிர, மற்ற அனைத்து விடயங்களும் அதன் துவக்கமே ஆகுமாக்கப்பட்டே இருக்கின்றன. அதில் எவைகள் செய்யக்கூடாது என தடை வந்துள்ளனவோ அவற்றை மாத்திரமே நாம் தவிர்ந்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில் அனைத்து விதமான விளையாட்டுக்களையும் இஸ்லாம் அனுமதித்தே இருக்கிறது. ஆனால் ஓர் சில விதிகளை வைத்து, சில விளையாட்டுக்களை தடுக்கிறது. இஸ்லாம் ஓர் விளையாட்டை எமக்குத் தடுத்தால் அதில் பல காரணங்கள் அடங்கியிருக்கும். அவையாவன: 

1. இஸ்லாமிய கொள்கை எம்மை விட்டும் நீங்கி விடக்கூடாது. 

2. எமது தூய இஸ்லாமிய கொள்கையினுள் மோசமான சிந்தனைகள் நுழைந்துவிடக் கூடாது. 

3. பிறரின் மானத்துக்கும், உயிருக்கும், உடைமைகளுக்கும் எவ்விதத்திலும் தீங்கு ஏற்படக் கூடாது. 

4. இவ்வுலகில் சொற்பமாக வழங்கப்பட்டுள்ள நேரம், வீணாக செலவழியக் கூடாது. 

5. இஸ்லாமிய வணக்க வழிபாடுகளுக்கு இடையூறாக அமையக்கூடாது. 

6. சூதாட்டத்துடன் அறவே தொடர்பிருக்கக் கூடாது. 

நாம் இங்கு ஆகுமாக்கப்பட்ட விளையாட்டுக்கள் என்ன என்பதைப் பார்ப்பது இயலாத காரியமாகும். ஏனெனில் அவ்வளவு ஆயிரக்கணக்கான விளையாட்டுக்கள் இருக்கின்றன. அவற்றில் எமக்கு தடுக்கப்பட்ட விளையாட்டுக்கள் ஓர் சிலது தான். அவற்றை மாத்திரம் இங்கு பார்ப்போம். 

உலகில் உள்ள அனைத்து பொழுது போக்கு விளையாட்டுக்களையும் இஸ்லாம் இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. 

அ. உடற்திறன் விளையாட்டுக்கள். 

இப்பகுதியில் உள்ளடங்கும் விளையாட்டுகள் ஆரோக்கியம் சார்ந்ததாக இருக்கும் வரை இஸ்லாம் அவற்றை ஆகுமாக்கியுள்ளது. இதில் குதிரை ஓட்டம், நீச்சல், அம்பெய்தல், தடகளம், ஓட்டப்போட்டி, சைக்கில் ஓட்டம், மல்யுத்தம், கால்பந்து, கூடைப் பந்து போன்ற விளையாட்டுக்களும், பாடசாலைகளில் இல்ல விளையாட்டின் போது நடாத்தப்படும் விளையாட்டுக்களும், மெய்வல்லுனர் போட்டியில் விளையாடப்படும் விளையாட்டுக்களும் இதில் அடங்கும். 

இவ் விளையாட்டுக்களை நாம் விளையாடுவதன் மூலம் அனுகூல நிலையை அடைகின்றோம். எமது உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் இருக்க இத்தகு விளையாட்டுகள் எமக்கு உதவுகின்றன. இவ் விளையாட்டுகள் சிறந்த மானிடப்பண்புகளை வளர்க்கின்றன. உதாரணமாக, தலைமைத்துவம், ஒற்றுமை, சமாதானம், வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு என்பனவாகும். இவை ஒரு மனிதனுக்கு இவ்வுலக வாழ்வில் பயனுள்ளதாக இருப்பதோடு, விளையாட்டினால் கிடைத்த நல்ல பண்புகளுக்காகவும், ஆரோக்கியத்துடன் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதற்காகவும் மறுமையில் அவனுக்கு வெற்றியைக் கொடுக்கும். 

ஆ. உடற்திறனுடன் தொடர்புபடாத விளையாட்டுக்கள். 

உடல் திறனைப் பயன்படுத்தாமல் முன்னெடுக்கப்படும் விளையாட்டுகளை இது குறிக்கும். இவற்றுக்கு மன விளையாட்டுகள் எனவும் கூறப்படும். இதில் தாயக்கட்டையுடன் தொடர்பான விளையாட்டுக்கள், சதுரங்கம், சீட்டுக்கட்டு, வீடியோ கேம் போன்றவை அடங்கும். இதை இரு பிரிவுகளாக நோக்கலாம். 

முதல் பிரிவு: இது தடை என்பதற்கு இஸ்லாத்தில் நேரடியாகவே ஆதாரம் இடம்பெற்ற விளையாட்டுக்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் தாயக்கட்டை விளையாட்டை விளையாடுகிறாரோ அவர் பன்றியின் இறைச்சியிலும், அதன் இரத்தத்திலும் தனது கையை நுழைத்தவராவார்” (அறிவிப்பவர்: புரைதா இப்னு அல்ஹஸீப் அல்அஸ்லமீ (ரழி), நூல்: முஸ்லிம் 2260) 

இவ் ஹதீஸில் குறிப்பிடப்பட்டதைப் போன்று தாயக்கட்டையுடன் தொடர்புபட்ட பர்சீஸி, லூடோ, பேக்காமன், மான்கலா, மேல்பிஸ், ஏணி பாம்பு, சவுபர், நைன் மென்ஸ் மொரிஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவது கூடாது. 

இமாம் அல்முனாவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள், ‘நர்தஷீர் என்பது பாரசீக சொல்லாகும். இது அரபியிலும் அவ்வாறே பயன்படுத்தப்படுகிறது. இது தடை செய்யப்பட்டதற்கு பின்வருமாறு காரணம் முன்வைக்கப்படுகிறது. பாரஸீகத்தின் கிளை அரசான சசானிய அரசின் மன்னரான ஸாபூர் இப்னு அஸ்தஷீரினால் நர்தஷீர் (பேக்காமன்) விளையாட்டு உருவாக்கப்பட்டது. இதற்காக பயன்படுத்தப்படும் அட்டை பூமி எனவும், அதில் உள்ள நான்கு பிரிவுகளும் 4 வாரங்களைக் குறிப்பதாகவும் இருந்தது. அதற்காகப் பயன்படுத்தப்பட்ட 30 காய்களில், 15 காய்கள் சிவப்பு நிறத்திலும், மற்றைய 15 கறுப்பு நிறத்திலும் காணப்பட்டது. சிவப்பு நிறம் பகல் கடவுளையும், கறுப்பு நிறம் இரவுக் கடவுளையும் குறிப்பதாக அடையாளப்படுத்தப்பட்டது. இதில் உள்ள 12 தங்குமிடங்கள் (ஹோம்) 12 மாதங்களைக் குறிப்பதாக அடையாளப்படுத்தப்பட்டது. இதற்காக பயன்படுத்தப்பட்ட தாயம் மனிதனின் ராசியைத் தீர்மானிக்கும் கிரகங்களைக் குறிப்பதாக இருந்தது. ஒருவர் தனது விதியை அறிய விரும்பினால் இவ்விளையாட்டை விளையாடலாம். இது நெருப்பு வணங்கிகளின் விளையாட்டாகும். இதை தற்போது விளையாடுவது அவர்களின் உருவாக்க நியதியை திரும்பவும் உயிர்ப்பிப்பதாக இருப்பதால் அதிகமான ஸலப் அறிஞர்கள் இதை தடைசெய்துள்ளனர்’. (நூல்: ஃபைழுல் கதீர் 06/219). 

இது இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கைக்கும், ஆறாம் நம்பிக்கையான விதிக்கும் முரணாக இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் இதை தடைசெய்தார்கள். தற்காலத்தில் விளையாடப்படும் தாயக்கட்டையுடன் தொடர்பான விளையாட்டுக்களில் அத்தகைய நடைமுறை கையாழப்படாவிட்டாலும், நெருப்பு வணங்கிகளது கொள்கையின் பிரதிபலிப்பு இவற்றில் இருப்பதால் தற்கால இஸ்லாமிய அறிஞர்களும் இவற்றை தடை செய்துள்ளனர். 

இரண்டாம் பிரிவு: இஸ்லாத்தில் விளையாட முடியும் எனும் அனுமதியோ, விளையாடக் கூடாது என தடையோ வராத விளையாட்டுக்கள். 

இப்பிரிவில் உள்ளடங்கும் விளையாட்டுக்களும் இரு வகையாக நோக்கப்படுகிறது. 

முதல் வகை: இஸ்லாம் தடுத்த ஏனைய விடயங்களுடன் தொடர்புபடும் விளையாட்டுக்கள். 

இதற்கு உதாரணமாக சிலவற்றைப் பார்க்கலாம். 

1. உருவச் சிலைகள் வைத்து விளையாடப்படுபவை. இதில் சதுரங்கம் போன்ற உருவச் சிலைகளுக்கு ஒப்பாக காய்களைப் பயன்படுத்தி விளையாடும் முறை தடுக்கப்படுகிறது. 

அலி (ரழி) அவர்கள் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்த ஓர் குழுவை கடந்து செல்லும் போது, ‘என்ன இது? சிலைகளிடம் இருக்கிறீர்களே!’ என்று கடிந்துகொண்டு சென்றார்கள். இது விடயத்தில் அலி (ரழி) அவர்கள் கூறியதே சரி என இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: மைஸரா இப்னு ஹபீப் (ரஹ்), நூல்: அல்மஹல்லி 09/63). 

அவ்வாறே குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள உருவ பொம்மைகளும் அதன் முழு வடிவத்தையும் கொண்டிருக்கும் பட்சத்தில் இதில் உள்ளடங்குமென பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். மிருகங்கள், பறவைகள், மனித உருவ பொம்மைகள் போன்றவற்றை அவை முழுவடிவத்தைப் பெற்றிராத பட்சத்தில் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லையென சில அறிஞர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக பெண்பிள்ளைகள் பிற்காலத்தில் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவதற்கு ஏதுவாக மனித உருவிலான பொம்மைகளை பயன்படுத்த அனுமதியளித்துள்ளனர். 

ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், “நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்”. (நூல்: புஹாரி 6130, முஸ்லிம் 2440). 

2. முகத்தில் அடித்து விளையாடுபவை: முகம் என்பது ஒரு மனிதனின் கௌரவமான பகுதியாகும். அதில் அடிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது. முகத்தில் அடித்து விளையாடும் குத்துச் சண்டை போன்ற சண்டை விளையாட்டுக்களை இஸ்லாம் இதன் மூலம் தடுக்கிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 2559, முஸ்லிம் 2616). 

3. இசையுடன் இணைந்த விளையாட்டுக்கள்: இஸ்லாம் இசையை தடை செய்துள்ளது. எனவே இசையுடன் தொடர்பான அனைத்து விளையாட்டுக்களும் இதன் மூலம் தடுக்கப்படுகிறது. 

அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: “என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்”. (நூல்: புஹாரி 5590). 

இதில் விதிவிலக்காக வீடியோ கேம் விளையாடும் போது மாத்திரம் அதில் இசையின் சப்தத்தை முடக்கும் வசதி இருப்பதால், இசையின் சப்தத்தை முடக்கி விளையாடுவதில் தவரில்லை என இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 

4. மக்களுக்கு மத்தயில் விரோதத்தையும், சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்தும் விளையாட்டுக்கள்: சில விளையாட்டுக்கள் பழி தீர்ப்பதற்காகவே ஆடப்படுகின்றன. அல்லது மக்களுக்கு மத்தியில் புதிய பிரச்சினைகளை வளர்ப்பதற்காகவும், இருக்கும் பிரச்சினையை பெரிது படுத்துவதற்காகவும் ஆடப்படுகின்றன. இத்தகைய எண்ணத்தில் எந்த விளையாட்டை விளையாடினாலும் அதை இஸ்லாம் தடை செய்கிறது. 

அவ்வாறே வீடியோ கேமில் பல விளையாட்டுக்கள் போர் பற்றியும், மற்றவர்களைக் கொலை செய்தல், அடித்து துவம்சம் செய்தல், உடைமைகளை அழித்தல் போன்றவாரு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை விளையாடுவதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ விளையாடுபவரின் உள்ளத்தில் இச் சிந்தனை பதியப்பட்டு, தமது வாழ்வில் ஏதோ ஓர் இடத்தில் இதனை தைரியமாக அமுல்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உளவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

அல்லாஹ் கூறுகிறான், “நம்பிக்கையாளர்களில் இரு சாரார் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டால், அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்.” (அல்குர்ஆன் 49:09). 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி), நூல்: புஹாரி 6065, முஸ்லிம் 2559). 

5. எறிந்து விளையாடுபவை: கற்கள், காய்கள், பந்து, கம்பு, பேனை, ஒரு வகை குண்டு போன்றவற்றை குறித்த இடத்திற்கோ, அல்லது குறித்த நபருக்கோ எறிந்து விளையாடும் அனைத்து விளையாட்டுக்களையும் இது குறிக்கிறது. இதை ஆட்காட்டி விரலால் சுண்டியும் விளையாடலாம். ஆட்காட்டி விரல், பெரு விரல் ஆகிய இரு விரலாலும் பிடித்து எறிந்தும் விளையாடலாம். அல்லது உண்டி கோல் பயன்படுத்தியும் விளையாடலாம். கிராமப்புரங்களில் இதுபோன்ற நிறைய விளையாட்டுக்கள் இன்றளவும் விளையாடப்படுகின்றது. இதை விளையாடுவது சில சமயம் உடலில் ஆபத்தையும் ஏற்படுத்திவிடும். ஆபத்து ஏற்படும் எனும் அச்சம் இருப்பதாலே இது போன்ற விளையாட்டுக்களை இஸ்லாம் தடை செய்கிறது. சில சமயங்களில் பறவைகள், சிறிய மிருகங்கள் போன்றவற்றை வேட்டையாடவும் இம் முறை பயன்படுத்தப்படுகிறது. 

அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரழி) கூறினார்கள், 

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், 'சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது 'சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் 'அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று கூறினார்கள்' எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது 'சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்' என்று சொன்னேன். (நூல்: புஹாரி 5479, முஸ்லிம் 1945). 

6. கெட்ட வார்த்தைகள் பேசுவதற்கும், பழகுவதற்கும் ஏதுவாக இருக்கும் விளையாட்டுக்கள்: இத்தகைய விளையாட்டுக்கள் உடல் ரீதியாக விளையாடினாலு சரி, அல்லது நிகழ்ச்சி அடைப்படையில் விளையாடினாலும் சரி கெட்ட வார்த்தைகள், அருவருக்கத்தக்க வார்த்தைகள் அதில் இடம்பெற்றால் அவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும். சில வீடியோ கேம் விளையாட்டுக்களிலும் கூட இத்தகைய கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் எமக்கு இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. 

அல்லாஹ் கூறுகிறான், “நம்பிக்கை கொண்டோரே, ஒரு கூட்டத்தினர், மற்றொரு கூட்டத்தினைப் பரிகாசம் செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்). இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். உங்களுக்கிடையே நீங்கள் குறை கூற வேண்டாம். மேலும், பட்டப் பெயர்களால் அழைக்க வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றை விட்டும்) மீளவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்” (அல்குர்ஆன் 49:11). 

7. சிலுவைகள் வைத்து விளையாடப்படுபவை: வீடியோ கேம்களிலே இது அதிகமாகக் காணப்படுகிறது. சிலுவை கிறிஸ்தவ மதத்தைப் பிரதிபலிப்பதால் அதை அடிப்படையாக வைத்து விளையாடும் போது இஸ்லாமிய சிந்தனைகள் ஒருவரிடமிருந்து களையப்படுகிறது. சில விளையாட்டுக்களில் சிலுவைப்போர்கள் இடம்பெறுகின்றன. அதில் சிலுவை உயர்ந்ததாகவும், இஸ்லாம் தாழ்ந்ததாகவும் சித்தரிக்கப்படுகிறது. சிலுவை வைத்திருப்பவருக்கு அதிக புள்ளிகளும், பலமும் வழங்கப்படுகிறது. எனவே இவை அனைத்தும் இஸ்லாமிய சிந்தனையை மழுங்கடிப்பதற்காக உருவாக்கப்பட்டவையாகும். இவற்றை விளையாடுவதையும் இஸ்லாம் தடைசெய்கிறது. 

அல்லாஹ் கூறுகிறான், “நன்மை செய்வதிலும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து கொள்ளுங்கள், மேலும், பாம் செய்வதிலும், வரம்பு மீறுவதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்காதீர்கள்” (அல்குர்ஆன் 05:02). 

ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை. (நூல்: புஹாரி 5952). 

8. தீங்கு ஏற்படும் வகையில் விளையாடப்படுபவை: நாம் எவ்வகையிலும் நமக்கும், பிறருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என இஸ்லாம் கட்டளையிடுகிறது. சாகச விளையாட்டுக்களை சிலர் விளையாடுவர். அதில் அவர்களின் உயிருக்கும், உடலுக்கும் எவ்வகையிலும் உத்தரவாதம் கிடையாது. 

அவ்வாறே விளையாட்டின் மூலமாக வீட்டில் இருப்பவர்களுக்கோ, அண்டை வீட்டினருக்கோ, ஊர் மக்களுக்கோ, ஏழை எளியவர்களுக்கோ ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுமாயின் அவ்விளையாட்டையும் இஸ்லாம் தடைசெய்கிறது. அல்லது விளையாடுவதற்காக இடத்தை பலவந்தமாகப் பெறுவதும், விளையாட்டு உபகரணங்களை பலவந்தமாகவோ, திருடியோ எடுப்பதும் இதில் உள்ளடங்கும். 

அல்லாஹ் கூறுகிறான், “அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்” (அல்குர்ஆன் 02:195). 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்கு பழிவாங்கவும் கூடாது” (அறிவிப்பவர்: அபூ ஸஃத் அல்ஹுத்ரி (ரழி), நூல்: இப்னு மாஜா. இதை இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள்). 

9. விளையாட்டிலே ஊரி இருத்தல்: விளையாட்டு என்பது குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் விளையாட வேண்டிய ஒன்றாகும். தனது ஏனைய விடையங்களில் கவனம் செலுத்தாது விளையாட்டை மாத்திரமே நம்பி இருப்பது முட்டாள் தனமான ஒன்றாகும். இன்று உடல் ரீதியான விளையாட்டை விளையாடும் சிலரும், வீடியோ கேம் விளையாடும் சிலரும் அவ் விளையாட்டுக்கு அடிமையாகிக் காணப்படுகின்றனர். இது காலப்போக்கில் உளவியல் ரீதியான பிரச்சினைகளை அவர்களிடத்தில் உண்டுபன்னுவதாக உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

10. தவறான சிந்தனைகளை ஊட்டும் விளையாட்டுக்கள்: இன்று அதிகமாக விளையாடப்படும் வீடியோ கேம்கள் ஓர் கதையை மையமாக வைத்தும், திரைக்கதை அமைப்பிலும் உருவாக்கப்படுகின்றன. அதில் விளையாடுவோர் மனதில் இஸ்லாமிய கொள்கை பற்றிய தவறான எண்ணங்களை விதைக்கும் விளையாட்டுக்களும் காணப்படுகின்றன. வானுலகில் உள்ளவர்களுக்கும் பூமியில் உள்ளவர்களுக்கும் யுத்தம் நடைபெறும் கதை அம்சத்தை உள்ளடக்கிய விளையாட்டுக்களில் வானுலகில் உள்ளவர்கள் கெட்டவர்களாகவும், பூமியில் உள்ளவர்கள் நல்லவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணமான அம்சமாகும். வானுலகில் இருக்கும் வானவர்கள் கெட்டவர்கள் கிடையாது. அவர்கள் அல்லாஹ் கூறியதை மாத்திரம் செய்பவர்கள் என்பதும், பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து படைப்பினங்களுக்கும் அவர்கள் உதவியாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் இஸ்லாத்தின் நம்பிக்கையாகும். 

அவ்வாறே ஏலியன்ஸ் படைப்பு வானில் இருப்பதாக நம்பவைக்கப்படுகிறது. பேய் பிசாசுகள் பற்றிய நம்பிக்கை விதைக்கப்படுகிறது. இறந்தவர்கள் ஸோம்பி போன்று மீண்டும் எழுந்து வருவதாக சித்தரிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சூனியத்துடன் தொடர்பான விளையாட்டுக்களும் வீடியோ கேமில் காணப்படுகின்றன. விளையாடுபவருக்கு சூனிய சக்தி கிடைப்பதாகவும், அதன் மூலம் காற்றையோ, நீரையோ வசப்படுத்தி தீயவர்களை அழிப்பதாகவும் சித்தரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்குப் புறம்பான கொள்கைகளாகும். விளையாட்டுக்காக அதை விளையாடினாலும் அதன் தாக்கம் எம் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கும். சில சமயம் நாம் பேசும் போது கூட அக்கதாபாத்திரத்தை ஆதரித்தவாறே பேசும் நிலை காணப்படும். இது அந்நம்பிக்கை நம்மில் மறைமுகமாக ஊடுறுவி விட்டதை எடுத்துக் காட்டும். எனவே இத்தகு விளையாட்டுக்களையும் இஸ்லாம் தடுக்கிறது. 

11. அல்லாஹ்வின் பண்புகளை சித்தரிக்கும் விளையாட்டுக்கள்: இத்தகைய விளையாட்டுக்கள் கிராமப் புரங்களில் பேச்சு வழக்கில் விளையாடப்பட்டாலும் இன்று பெரும் பாலும் வீடியோ கேம்களில் அதிகம் விளையாடப்படுகிறது. மழை பொழிய வைத்தல், இறந்தவர்களை உயிர்ப்பித்தல், நோயாளிகளை குணப்படுத்தல் போன்ற அல்லாஹ்வுக்கு மாத்திரம் இருக்கும் பண்புகள் குறித்த கதாபாத்திரத்திற்கு கொடுப்படுகிறது. நாளடைவில் இதை விளையாடுவோர் உள்ளத்தில் எமக்கும் உண்மையில் இப்படியான ஆற்றல் இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணத்தை உதிக்க வைக்கிறது. அல்லாஹ்வால் மாத்திரம் செய்ய முடியுமான காரியங்களை மனிதர்களால் ஒருபோதும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் உறுதியான நம்பிக்கையாகும். எனவே இவ்வாறான அர்த்தத்தில் விளையாடப்படும் விளையாட்டுக்களும் தடை செய்யப்படுகின்றன. 

12. ஆபாசத்துடன் தொடர்புடைய விளையாட்டுக்கள்: ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள், ஆபாசமான ஆடை அணிகலன்கள் போன்றன இருக்கும் அனைத்து விளையாட்டுக்களையும் இது குறிக்கிறது. ஆபாசத்தைத் தூண்டக் கூடிய முத்தமிடல், கட்டியணைத்தல், உடலுறவின் போது இருப்பதைப் போன்று செய்தல் போன்ற அனைத்தும் இதில் உள்ளடங்கும். சில டிவீ நிகழ்ச்சிகளிலும், கல்லூரிகளிலும், ஓர் சில நிகழ்வுகளிலும் இது போன்ற சில விளையாட்டுக்கள் இடம்பெறும். இவற்றை இஸ்லாம் தடை செய்கிறது. இதில் ஆண்பெண் கலப்புடன் தொடர்புபட்ட விளையாட்டுக்களும் உள்ளடங்கும். 

அவ்வாறே தான் விளையாடும் விளையாட்டில் ஆண்களும், பெண்களும் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகளை திறக்க வேண்டி நேர்ந்தால் அது கூடாத விளையாட்டாகும். அவ்வாறே வீடியோ கேம் விளையாடும் போது அதில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றாலோ, அல்லது தான் விளையாடும் கதாபாத்திரம் ஆடைகளைக் கலைந்து ஆபாசமாக இருக்க நேர்ந்தாலோ அவ்விளையாட்டுக்களையும் விளையாடுவது கூடாது. இன்னும் சில வீடியோ கேம் விளையாட்டுக்களில் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உடலுறவு வைத்துக்கொள்ளும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விளையாட்டுக்களை விளையாடுவதை இஸ்லாம் முற்றிலுமாக தடைசெய்கிறது. 

அல்லாஹ் கூறுகிறான், “நம்பிக்கையாளர்களான ஆண்களிடம், அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் (நபியே!) நீர் கூறுவீராக. இதுவே அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்” (அல்குர்ஆன் 24:30). 

அல்லாஹ் கூறுகிறான், “(நபியே!) நம்பிக்கையாளர்களான பெண்களிடமும் அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், அவர்களது அலங்காரத்தில் வெளிப்படுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் வெளிப்படுத்தக் கூடாது என்றும்... கூறுவீராக” (அல்குர்ஆன் 24:31). 

அல்லாஹ் கூறுகிறான், “மேலும் நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது” (அல்குர்ஆன் 17:32). 

13. சாஸ்திரத்துடன் தொடர்புபட்ட விளையாட்டுக்கள்: இது போன்ற விளையாட்டுக்களில் பெயர், வயது என்பன கேட்கப்படும். அதைக் கொடுத்தால் எமக்கு ஓர் இலக்கத்தைத் தேர்வு செய்யக் கூறி அதிலிருந்து எமது வருங்காலம் பற்றிக் கூறப்படும். அல்லது சில எழுத்துக்களை எழுதி அதன் மூலம் குறித்த நபருடன் எமது உறவு என்ன என்பது அறிவிக்கப்படும், இன்னும் சிலர் மனதில் ஒன்றை நினைக்கச் சொல்லி நாம் நினைத்ததைக் கூறுவர். இன்று அது நவீனத்துவம் பெற்று சமூக வலைத்தளங்களிலும் மென்பொருளாகவும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எம்மைப் பற்றி கூறுவதாகவும், எமது எதிர்கால சம்பாத்தியும், தொழில் பற்றிக் கூறுவதாகவும், என்னுள் இருக்கும் பண்புகளைக் கூறுவதாகவும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இது போன்று எமது எதிர்காலத்தைப் பற்றியோ, எம்மில் இருக்கும் பண்புகளைப் பற்றியோ, எமக்கான அறிவுரை கூறுவதாகவோ எந்த விளையாட்டுக்கள் இருப்பினும் அவற்றை இஸ்லாம் தடை செய்கிறது. நாம் இவற்றை சுத்தமாக நம்புவது கிடையாது. இதை விளையாட்டாகத் தான் எடுத்துக்கொள்வோம். என்றாலும் இவ் விளையாட்டுக்கள் நேரடியாக சாஸ்திரத்துடன் தொடர்புபடுவதால் இஸ்லாம் இவற்றைத் தடை செய்கிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் சாஸ்திரக்காரனிடம் செல்கிறாரோ, அவரிடம் ஏதாவது கேட்கிறாரோ, அவரின் நாட்பது நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது”. (நூல்: முஸ்லிம் 2230). 

இரண்டாம் வகை: இஸ்லாம் தடுத்த விடயங்களுடன் எவ்வகையிலும் தொடர்புபடாத விளையாட்டுக்கள். 

இவற்றுக்கு உதாரணமாக மெய்வல்லுனர் விளையாட்டுக்களையும், குறிப்பிட்ட சில மன விளையாட்டுக்களையும், சில வீடியோ கேம் களையும் குறிப்பிடலாம். ஆனாலும் அவை ஆகுமான விளையாட்டுக்களாக இருக்க வேண்டுமெனில் பின்வரும் நிபந்தனைக்குட்பட்டிருக்க வேண்டும். 

1. சூதாட்டத்துடன் எவ்வகையிலும் தொடர்புபடக் கூடாது. 

2. இஸ்லாம் கடமையாக்கிய வணக்க வழிபாடுகளுக்கு தடையாக இருக்கக் கூடாது. தொழுகை, பெற்றோருக்கு உபகாரம் செய்தல், மனைவி, குழந்தைகளைப் பராமறித்தல். 

3. அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் முஸ்லிம்களாகிய எமக்கு நேரம் என்பது பொன்னானது. நாம் இதற்காக அதிக நேரங்களை செலவிட்டால் அல்லாஹ்வின் எச்சரிக்கைக்கு ஆலாகிவிடுவோம். அல்லாஹ் கூறுகிறான், “அவர்கள் தமது மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொண்டார்கள். மேலும், இவ்வுலக வாழ்வு அவர்களை ஏமாற்றிவிட்டது. அவர்களது இந்நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நமது வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தது போன்று, இன்றைய தினம் அவர்களை நாம் மறந்துவிடுவோம்.” (அல்குர்ஆன் 07:51). 

எனவே இதற்காக என ஓர் குறிப்பிட்ட நேரத்தை மாத்திரமே ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

மிகுதி அடுத்த தொடரில்... (இன்ஷா அல்லாஹ்).

பகுதி 01:

பகுதி 03:

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget