தான் நாடியதை செய்பவனும், தான் விரும்பியவாறு தீர்ப்பளிப்பவனுமாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். அவனைத் தவிர உண்மையில் வணங்கப்படுவதற்கு தகுதியான வேறு இறைவன் கிடையாது. அவன் தனித்தவன், இணைதுணை அற்றவன் எனும் ஏகத்துவச் சாட்சியை முதலில் கூறிக்கொள்கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும், தூதருமாவார்கள். அவர்களுக்கும், அவரின் குடும்பத்தினர், தோழர்கள், அனைத்து முஸ்லிம்கள் மீதும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாக வேண்டுமென பிரார்த்தித்தவனாக ஆரம்பிக்கிறேன்.
ஒரு இறைவிசுவாசி அல்லாஹ்விடம் மீள்வதானது, அவனுக்கான அவசியமான ஓர் பண்பாகும். அல்லாஹ் கூறுகிறான், “மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வோ (யாதொரு) தேவையுமற்றவனும், புகழுக்குரியவனுமாவான்” (அல்குர்ஆன் 35:15).
பொதுவாக மனிதனுக்கு கஷ்டம், துன்பம், பேராபத்துக்கள் போன்றவை வரும் போது அல்லாஹ்வின் பக்கம் அவன் தேவையுள்ளவனாக இருப்பதன் அவசியத்தை உணர முடிகிறது. இதன் போது அல்லாஹ்வின் பக்கம் மீண்டு, அவனிடம்
தமக்கு ஏற்பட்டுள்ள சோதனையை நீக்குமாறு பிரார்த்திக்கும் இயல்பும் அவனை அறியாமலே
அவனிடம் ஏற்படுகிறது. முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின்
பக்கம் திரும்பக் கூடியவர்களாகவே இருக்க வேண்டும். அவ்வாறு அல்லாஹ்வின் பக்கம்
திரும்பும் போது, குறிப்பாக துன்பங்களும், சோதனைகளும் ஏற்படும் போது சில சமயங்களில் சரியான முறையிலும், பல
சமயங்களில் தவறான முறையிலும் அல்லாஹ்விடம் திரும்புபவர்களாக இருக்கின்றனர். இதனாலே ஒரு முஸ்லிம், சரியான முறையில் அல்லாஹ்வின் பக்கம்
திரும்புவதற்கான ஆறு அடிப்படைகளை இங்கு பார்க்க இருக்கிறோம். அவை வருமாறு:
முதலாம் அடிப்படை: அல்லாஹ் ஏற்படுத்திய விதியை நம்புவது.
அல்லாஹ் கூறுகிறான், “அவனே அனைத்தையும் படைத்து, பின்னர் அதனை முறைப்படி நிர்ணயித்தான்” (அல்குர்ஆன் 25:02).
மேலும், “நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவோடு படைத்துள்ளோம்” (அல்குர்ஆன் 54:49).
ஒவ்வொரு அடியாரும் அல்லாஹ் தமக்கு விதித்துள்ள அளவையும், விதியையும் அவசியம் நம்ப வேண்டும். அவற்றை பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஓர் இறைவிசுவாசியின் விடயம் ஆச்சரியத்தைத் தருகிறது. அவனின் அனைத்து விடயங்களும் அவனுக்கு நலவாகவே அமைகிறது. இது ஓர் இறைவிசுவாசியைத் தவிர வேறு யாருக்கும் ஏற்படாது. அவனுக்கு ஏதேனும் நலவு நிகழும் போது, அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கிறான். அது அவனுக்கு நலவாக அமைகிறது. அவனுக்கு ஏதேனும் தீங்கு நிகழும் போது பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நலவாக அமைகிறது” (அறிவிப்பவர்: ஸுஹைப் இப்னு ஸினான் அர்ரூமீ (ரழி), நூல்: முஸ்லிம் 2999).
எனவே ஒரு இறைவிசுவாசி அல்லாஹ் தனக்கு நிர்ணயித்து, அளவிட்டுள்ள விதியை நம்பி, தன் உள்ளத்தை அதன் அடிப்படையில் கட்டிக்காப்பது அவசியமான ஒன்றாகும். தனக்கு எந்த நலவு நடந்தாலும் அது அல்லாஹ்வின் நாட்டத்தாலே நடைபெறுகிறது எனவும், தனக்கு எந்த தீங்கு ஏற்பட்டாலும் அதுவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது எனவும் அல்லாஹ் தனக்கு ஏற்படுத்தியுள்ள விதியை நம்பிக்கை கொள்ள வேண்டும். தீயவை நடக்கும் போது அது எமக்கு தீங்காக விளங்கினாலும், அதில் அல்லாஹ் எமக்கான ஓர் நலவை ஏற்படுத்திவிட்டே அத்தீயதை எமக்கு தருகிறான். அத் தீங்கு எம்மை விட்டும் நீங்கிவிடும் போது, அல்லாஹ் அதனால் எமக்கு ஏற்படுத்திய நலவை எம்மால் உணர முடியுமாக இருக்கும்.
இரண்டாம் அடிப்படை:
அல்லாஹ்வின் பக்கம் மீளுதல்.
தனது அனைத்து பிரச்சினைகளையும் அல்லாஹ்வின் பக்கம் பொறுப்புச் சாட்டிவிட்டு, அவன் மீது முழு நம்பிக்கை வைத்து, அவன் பக்கமே மீள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான், “எவர் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைக்கின்றாரோ, அவருக்கு அவனே போதுமானவன்” (அல்குர்ஆன் 65:03).
மேலும், “அல்லாஹ் எமக்கு விதித்ததைத் தவிர வேறு எதுவும் எம்மைப் பீடிக்காது. அவனே எங்கள் பாதுகாவலன். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் முழுமையாக பொறுப்புச் சாட்டட்டும் என (நபியே) நீர் கூறுவீராக!” (அல்குர்ஆன் 09:51).
எனவே ஓர் இறைவிசுவாசி அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்து, தனது அனைத்து விடயங்களையும் அவன் மீதே பொறுப்புச் சாட்ட வேண்டும். இந்நேரத்தில் தீய சிந்தனைகள் பக்கம் சோரம் போகக்கூடாது. அல்லாஹ் அல்லாத ஏனைய பொருட்களின் மீதோ, மருந்து மாத்திரைகள் மீதோ, வைத்தியர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற எவ்வித பௌதீக பொருட்களின் மீதோ தனது நம்பிக்கையை வைத்து, தம்மை பலவீனமான மனிதனாக மாற்றிவிடக் கூடாது. இந்நேரத்தில் தான் ஷைத்தானின் விளையாட்டு ஆரம்பமாகிறது. அல்லாஹ்வின் மீது எமது அனைத்து பாரத்தையும் பொறுப்புச் சாட்ட விடாமல், ஜோதிடர்கள், மந்திரவாதிகள், மூடநம்பிக்கைகள், பிற மத வழிபாடுகள் என அல்லாஹ் அல்லாத ஏனையவற்றின் மீது தமது பாரத்தை பொறுப்புச் சாட்டி விட்டு, அவர்களிடமோ, அல்லது அவர்கள் மூலமாக அல்லாஹ்விடமோ தீர்வைப் பெறுவதற்கு அவன் வழிகாட்டுவான். தான் கேள்விபட்ட அனைத்தையும் செய்துபார்க்கும் மனோநிலைக்கு அவனை ஆளாக்கிவிடுவான். இதன் போது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை மாத்திரமே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அனைத்து விடயங்களிலும், பலவீனமான இறைவிசுவாசியை விட பலமுள்ள இறைவிசுவாசியே அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறந்தவரும், அவனுக்கு அதிக விருப்பத்தற்குரியவருமாவார்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 2664).
மூன்றாம் அடிப்படை: அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரல்.
அல்லாஹ் கூறுகிறான், “மனிதர்களின் கைகள் சம்பாதித்தவற்றின் காரணமாக தரையிலும், கடலிலும் குழப்பம் தோன்றிவிட்டது. அவர்கள் மீளும் பொருட்டு அவர்கள் செய்தவற்றில் சிலதை அவர்களுக்கு சுவைக்கச் செய்வதற்காக (இவ்விதம் சோதிக்கிறான்).” (அல்குர்ஆன் 30:41).
மனிதர்களின் உணவு, குடிபானம், ஆரோக்கியம், பலம் போன்ற அவர்களின் அனைத்து விடயங்களிலும் கடல், தரை என இரு மார்க்கமாகவும் குழப்பங்கள் தோன்றிவிட்டன. தாம் செய்து வந்த பாவங்களிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வின் பக்கம் மீண்டு வர வேண்டும் என்பதற்காக அக்குழப்பங்களில் சிலதை அவர்களுக்கு ருசித்துப் பார்ப்பதற்காய் அல்லாஹ் வழங்கியுள்ளான்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், “மக்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு, பாவமன்னிப்புக் கோருவதற்காகவே இவ்வாறு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” எனக் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அத்துர்ருல் மன்ஸூர் ஃபீ தப்ஸீரில் மஃஸூர் 06/497).
அல்லாஹ், ஒருவனுக்கு ஆயுளை நீடித்து, இவ்வாறான சோதனைகளை ஏற்படுத்துவதன் முக்கிய காரணமே, தனது மரணத்தின் முன், தான் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வை நினைவுபடுத்தி, அவனிடம் மீள வேண்டும் என்பதுதான். அதனால் ஒவ்வொருவரும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோர முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான், “உமக்கு முன்னரும் பல சமூகங்களுக்கு நிச்சயமாக நாம் தூதர்களை அனுப்பினோம். அ(ச்சமூகத்த)வர்கள் அடிபணியும் பொருட்டு வறுமையாலும், துன்பத்தாலும் அவர்களை நாம் பிடித்தோம். எமது வேதனை அவர்களிடம் வந்த போது அவர்கள் அடிபணிந்திருக்க வேண்டாமா? என்றாலும் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. இன்னும் அவர்கள் செய்து கொணடிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டினான். அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்து விட்டபோது, சகலவற்றின் வாயில்களையும் அவர்களுக்கு நாம் திறந்து விட்டோம். தமக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த போது திடீரென அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் (அனைத்து நலன்களிலிருந்தும்) நிராசையடைந்து விட்டனர்” (அல்குர்ஆன் 06:42-44).
அல்லாஹ் மனிதர்களுக்கு சோதனைகளை வழங்கும் போது, அவற்றை
சாதனைகளாக மாற்றுவதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். தாம் செய்து வரும் அனைத்து பாவச்செயல்களையும் விட்டுவிட்டு, அல்லாஹ்விடம் மீண்டு, பாவமன்னிப்புக் கோர வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யாமல், அல்லாஹ்வின் பலத்தையும் புறக்கணித்து, பாவமன்னிப்பையும் புறக்கணித்தால், அவர்களின் உள்ளம் கல்நெஞ்சமாக மாறிவிடும். ஷைத்தான் அவர்களுக்கு ஹலாலை விடவும் ஹராத்தை அலங்கரித்துக் காட்டுவான். அல்லாஹ்வும் அவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைத்து விட வேண்டுமென்பதற்காக, தன்னை மறக்கும் அளவுக்கு தனது ரஹ்மத்தின் வாயில்களை அவர்களுக்காக திறந்துவிடுவான். அவர்களும் அல்லாஹ்வை மறந்து, தமக்கு கிடைத்தவற்றில் ஆனந்தமாய் வாழ்வார்கள். அப்போது திடீரென பயங்கரமாக அல்லாஹ் அவர்களைப் பிடிப்பான். அவர்கள் அதிலிருந்து தப்பிக்கவே முடியாமல் போய்விடும்.
நான்காம் அடிப்படை: தன்னை பௌதீக முறையில் தயார்படுத்திக் கொள்ளல்.
அல்லாஹ் கூறுகிறான், “அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்” (அல்குர்ஆன் 02:195).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்.” (அறிவிப்பவர்: ஸுஹைப் அர்ரூமீ (ரழி), நூல்: முஸ்லிம் 6115).
மேலும் கூறினார்கள், “நீ சிங்கத்திடமிருந்து விரண்டு ஓடுவதைப் போல் தொழுநோயாளியிடமிருந்தும் விரண்டோடு” (அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரழி), நூல்: அஹ்மத் 9853).
மேலும் கூறினார்கள், “ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து விரண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: புஹாரி 5729).
எனவே ஒரு முஸ்லிம் ஓர் ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, அதிலிருந்து பாதுகாப்பாய் இருக்க தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இது விடயத்தில் எமக்கு பொறுப்பாக இருப்பவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னால் எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் அதற்குக் கட்டுபட வேண்டும். இதில் இரு நலவுகள் நடைபெறுகின்றன. நாமும் ஆபத்திலிருந்து பாதுகாப்புப் பெறுகிறோம். ஏனையோரையும் ஆபத்திலருந்து பாதுகாக்கிறோம். எனவே பாதுகாப்பு நிமிர்த்தம் கல்வி நிலையங்கள், வணக்கஸ்தலங்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றை மூடுமாறு அறிவுருத்தப்பட்டால், அல்லது பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு கூறப்பட்டால் அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே ஒரு முஸ்லிமின் பண்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் விசுவாசியாகமாட்டார்.” (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: புஹாரி 13, முஸ்லிம் 45)
ஐந்தாம் அடிப்படை: தமக்கு கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்தல், வதந்திகளை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
அல்லாஹ் கூறுகிறான், “மேலும் பாதுகாப்பு, அல்லது பீதியை ஏற்படுத்தும் ஒரு செய்தி அவர்களிடம் வந்துவிட்டால் அதை அவர்கள் பரப்பிவிடுகின்றனர். அதை அவர்கள் இத்தூதரிடமும், அவர்களின் அதிகாரம் உள்ளோரிடமும் கொண்டு சென்றிருப்பார்களாயின், அவர்களில் ஆய்வு செய்வோர் அதை அறிந்து (தக்க நவடிக்கைகளை மேற்)கொள்வார்கள்” (அல்குர்ஆன் 04:83).
ஒரு முஸ்லிம் தன்னிடம் வரும் அனைத்து செய்திகளையும், அதை உறுதிப்படுத்துவதற்கு முன்னர் அதை உடனே நம்பிடவோ, செயற்படுத்திடவோ, ஏனையோருக்கு பகிரவோ கூடாது. ஆபத்துகளின் போது வைத்தியத்துறையின் பெயராலான செய்திகளோ, மார்க்கத்தின் பெயராலான செய்திகளோ, அரசாங்கத்தின் பெயராலான செய்திகளோ தமக்குக் கிடைக்கப்பெறுமாயின், சம்பந்தப்பட்டவர்களிடம் அதைப் பற்றி விசாரித்து, அதன் உறுதித் தன்மையை அறிந்திட வேண்டும். மக்களை குழப்புவதற்காக ஷைத்தானுடன் சேர்ந்து சில விசமிகள் இக்காலங்களில் இவ்வாறான செய்திகளைப் பரப்புவார்கள். நாம் எப்போதும் அதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஆறாம் அடிப்படை: அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிதல்.
“பிரார்த்தனை என்பது ஓர் வணக்கமாகும்” (அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர் (ரழி), நூல்: திர்மிதீ 2969, இப்னுமாஜா 3828)
என்ற நபியவர்களின் கூற்றிற்கிணங்க நபியவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களுக்கும் கற்றுத் தந்த, சரியான துஆக்களை மாத்திரமே கூறி, அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும். அது தவிர வதந்திகளாக பரப்பப்படும் துஆக்களையோ, அல்குர்ஆன் வசனங்களையோ ஓதி, அதன் மூலம் எமது ஈமானை இழந்துவிடக் கூடாது.
இத்தகைய பிரார்தனை (துஆ) இரு வகைப்படும்:
01. பொதுவான பிரார்த்தனை: இத்தகைய பிரார்த்தனையின் போது தனக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களைப் பற்றி அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். தனக்கு அவனின் அருளையும், அபிவிருத்தியையும் வழங்குமாறு கேட்க வேண்டும். நோய்கள், தொற்றுநோய்கள், கஷ்டங்கள், வறுமை, பஞ்சம் போன்றவற்றிலிருந்து தம்மையும், முஸ்லிம்கள், தமது ஊர்மக்கள், நாட்டு மக்கள் என அனைவரையும் பாதுகாக்குமாறும், தாம் அனைவருக்கும் அருள் புரியுமாறும் பொதுவாகவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியலாம். இதற்கென பிரத்தியேகமான வசனங்களோ, வார்த்தைகளோ, சந்தர்ப்பங்களோ கிடையாது.
நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! மக்கா நகரை எங்கள் நேசத்திற்குரியதாக நீ ஆக்கியதைப் போன்று மதீனாவையும் எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை 'ஜுஹ்ஃபா' எனும் பகுதிக்கு நீ இடம்பெயரச் செய்திடுவாயாக! இறைவா! (எங்களுடைய அளவைகளான) ஸாஉ, முத்(து) ஆகியவற்றில் (அதாவது எங்கள் உணவில்) எங்களுக்கு நீ செழிப்பை (பரக்கத்) ஏற்படுத்துவாயாக' என்று பிரார்த்தித்தார்கள். (அறிவிப்பவர்: ஆஇஷா (ரழி), நூல்: புஹாரி 6372, நஸஈ 7477).
இது நபியவர்களின் பொதுவான பிரார்த்தனையாகும்.
02. பிரத்தியேகமான பிரார்த்தனை: இது பாதுகாப்புத் தேடலுடன் தொடர்பான பிரத்தியேகமான பிரார்த்தனையாகும். இது மூன்று பிரிவுகளாக இருக்கின்றன:
அ. ஸூரதுல் பலக், ஸூரதுன் நாஸ் ஆகிய இரு ஸூராக்களையும் ஓதிக்கொள்ளல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “பாதுகாப்புத் தேடுவதற்கு இவை இரண்டையும் போல் வேறு எதுவும் கிடையாது” (அறிவிப்பவர்:
உக்பா இப்னு ஆமிர் (ரழி), நூல்: அபூதாவுத் 1463, நஸஈ 5430).
ஒரு மனிதன் ஏதேனும் ஒன்றுக்குப் பயந்தால், தன்னை அச்சப்படுத்திய விடயத்தை விட்டும் பாதுகாப்புத் தேடியவனாக இவ் இரு ஸூராக்களையும் ஓதிக்கொள்ள வேண்டும். குறிப்பாக தற்போதைய கொரோனா தொற்று நோயிலிருந்து இவ்வாறு பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.
ஆ. ஆபத்துக்களின் பெயர்கள் குறிப்பிட்டு வந்துள்ள பிரார்த்தனைகள். இதற்கு உதாரணமாக பின்வரும் துஆவைக் குறிப்பிடலாம். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்துள்ளார்கள், “இறைவா! வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய், மற்றும் மோசமான நோய்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்”. (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி), நூல்: அபூதாவுத் 1554).
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மோசமான நோய்கள் என்பது தற்போதைய உலகத்தில் மக்கள் அதிகம் பயப்படும் அனைத்து நோய்களையும் குறிக்கும். அவை அனைத்திலிருந்தும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.
இ. காலை மாலை துஆக்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் ஒரு அடியான் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும்
بِسْمِ
اللهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْاَرْضِ وَلاَ فِي
السَّمَآءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன். அவன் எத்தகையவன் என்றால், அவனுடைய திருப் பெயருடன் பூமியிலுவும் வானத்திலும் உள்ள எப்பொருளும் எந்த இடையூறும் செய்யாது. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், முற்றும் அறிந்தவன்
என மூன்று முறை கூறிவருவாரேயானால் அவனுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது.
(அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அப்பான் (ரழி), நூல்: அபூதாவுத் 5088, திர்மிதீ 3388, இப்னுமாஜா 3869).
இது போன்ற இன்னும் அநேகமான துஆக்கள் காலை, மாலையில் ஓதுவதற்காய் நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அவை அனைத்தையும் நாம் சரிவர ஓத வேண்டும்.
இதுவே ஓர் அடியான் அல்லாஹ்வின் பக்கம் மீள்வதற்கான முறைகளின் சரியான ஆறு அடிப்படைகளாகும். இவ் அடிப்படைகளை நாம் சரியாகப் புரிந்து, எமது ஈமானைப் பலப்படுத்திட வேண்டும். அப்போதே இத்தகு பயங்கரமான நோய் பரவியுள்ள காலத்தில் அல்லாஹ் நமக்கு விதித்துள்ளவற்றை முழுமையாக நம்பிக்கை கொண்டு, அவன் மீதே எமது அனைத்து விடயங்களையும் பொறுப்புச்சாட்டி, நாம் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு, அவனிடமே பாவமன்னிப்புக் கோரி, சரியான தகவல்களை அறிந்து, அதன்படி ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கான பௌதிக காரணிகளைச் செய்து அல்லாஹ்வின் பக்கம் மீள்வதற்கான ஓர் சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் ஷைத்தானின் ஆதிக்கம் மேலோங்கி, அல்லாஹ்வை விட்டும் தூரமாகி, அவனின் அருட்கொடைகளில் அவனை மறந்து வாழ்ந்துவிட்டு, அவனிடமிருந்து வரும் கடுமையான தண்டையிலிருந்து பாதுகாப்புப் பெற முடியாமல் அவனின் கோபத்திற்கு ஆலாக நேரிடும். அல்லாஹ்வே போதுமானவன்.
இக்கொடிய நோயை விட்டும் முஸ்லிம் சமூகத்தையும், அவர்களின் உறவுகள், ஊர்மக்கள், நாட்டுமக்கள் என அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக. இஸ்லாத்துடனே எம்மை தூங்க வைத்து, இஸ்லாத்துடனே எம்மை எழ வைத்து, எமது உடல் ஆரோக்கியத்தையும், உள ஆரோக்கியத்தையும் பாதுகாத்து, எமது உணவை விசாலமாக்கி, எமது ஈமானையும், அவன் மீதான எமது பயத்தையும் உறுதிப்படுத்தி, ஷைத்தானின் சதி வலைகளை விட்டும் எம்மைப் பாதுகாப்பானாக! அவனே என்றென்றும் எமது பாதுகாவலன்.
இது 09/03/2020 ம் திகதி சுபஹ் தொழுகைக்குப் பின் ஆற்றப்பட்ட உரையாகும்.
உரையாற்றியவர்:
கலாநிதி அஷ்ஷேக் ஸாலிஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஹமத் அல்உஸைமீ
(இஸ்லாமிய அறிஞர்கள் பேரவையின் உறுப்பினர், போதனாசிரியர்,
இரு புனிதஸ்தலங்கள்)
இடம்:
முஸ்அப் இப்னு உமைர் ஜும்ஆப் பள்ளிவாயல், அல்ஜஸீரா, ரியாத், சவூதி அரேபியா.
தமிழில்:
ஹிஸ்புல்லாஹ் (அன்வாரி)
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.