ஆக்கம்
JM. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி
மேற்பார்வை
மேற்பார்வை
M. அஹ்மத் அப்பாஸி MA
பெண்கள் பொருளாதாரத்தில் ஈடுபடலாம் என்பதற்கான ஆதாரங்கள்
பெண்கள் சொத்துக்களை சேர்ப்பதற்கும், அவற்றை செலவு செய்வதற்கும், அதை வியாபாரத்தில் உபயோகப்படுத்தவும் அவர்களுக்கு இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. தனது சொத்திலிருந்து நன்கொடைகள், தான தர்மங்கள் போன்றவற்றையும் அவள் வழங்கலாம். அவ்வாறே தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை அனந்தரக்காரர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு வசிய்யத்தின் மூலமும் வழங்கிடலாம்.
இஸ்ஸாலம் மனித உரிமைகள் எனும் விடயத்தில் ஆண்களுக்கு வேறாகவும், பெண்களுக்கு வேறாகவும் என உரிமைகளைப் பகிர்ந்தளிக்கவில்லை. இரு தரப்பினருக்கும் சரிசமமான உரிமைகளைத் தான் வழங்கியுள்ளது, இது விடயத்தில் முஸ்லிமான பெண்களுக்கு வேறாகவும், முஸ்லிம் இல்லாத பெண்களுக்கு வேறாகவும் என்றும் உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. பெண்கள் எனும் பொதுவான வட்டத்தினுள் இரு தரப்பினரையும் இணைக்கும் வகையில் அவர்களுக்கான உரிமைகளை இஸ்லாம் பூரணமாகவே வழங்கியுள்ளது.
பெண்கள் சொத்துக்களை வைத்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள்
அல்குர்ஆனிய ஆதாரங்கள்
01. அல்லாஹ் கூறுகிறான், “பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!” (அல்குர்ஆன் 04:04). இங்கு அல்லாஹ் பெண்களுக்கு வழங்க வேண்டிய மஹ்ரைக் குறிப்பிடுகிறான். இதில் குறிப்பிட வேண்டியது யாதெனில் அவர்களாக முன்வந்து கணவனுக்கு எதையேனும் நன்கொடையாக அளித்தால் அதனை கணவன் பயன்படுத்தலாம். இது பெண்கள் நன்கொடைகளை அளிக்கலாம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.
02. அல்லாஹ் கூறுகிறான், “அனாதைகளைச் சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் பொறுப்புணர்வையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்!” (அல்குர்ஆன 04:06). இவ்வசனத்தில் பெண்கள் திருமண வயதை அடைந்து அவர்களுக்கு சொத்தை நிர்வகிக்கும் ஆற்றலும் இருந்தால் திருமணம் முடித்தாலோ, முடிக்காவிட்டாலோ குறித்த சொத்தை அவர்களிடம் கொடுத்துவிடுமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கிறான்.
03. அல்லாஹ் கூறுகிறான், “உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” (அல்குர்ஆன் 33:33). இவ்வசனத்தில் பெண்களே ஸகாத் கொடுக்க வேண்டுமெனவும், பெண்ணின் சொத்தை வைத்து கணவனோ, அல்லது குறித்த பெண்ணின் பொறுப்பாளரோ ஸகாத் கொடுக்கக் கூடாது எனவும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
04. அல்லாஹ் கூறுகிறான், “முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.” (அல்குர்ஆன் 33:35). இவ்வசனத்தில் தர்மம் செய்யும் பெண்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிட்டு அவர்களுக்கும் அவனின் மன்னிப்பும், மகத்தான கூலியும் இருப்பதாகக் குறிப்பிடுகிறான்.
ஹதீஸ் ஆதாரங்கள்
01. நபி r அவர்கள் கூறினார்கள், “பெண்களே, நீங்கள் அணியும் ஆபரணமாக இருப்பினும் அவற்றையும் தர்மம் செய்யுங்கள்”.(அறிவிப்பவர்: அப்துலாஹ் இப்னு மஸ்ஊதின் t மனைவி ஸைனப் y, ஆதாரம்: முஸ்லிம் 1000). இங்கு நபியவர்கள் உங்கள் கணவனின் அனுமதிக்குப் பின்னர் எனும் வாசகத்தைப் பிரயோகிக்காததால் பெண் தனது விருப்பப்படி தனது சொத்தில் ஈடுபடலாம் என்பதைக் குறிக்கிறது.
02. மைமூனா பின்த்து ஹாரிஸ் y அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி r அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி r அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி r அவர்கள், நீ (விடுதலை) செய்து விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், (விடுதலை செய்து விட்டேன்) என்று கூறினேன். நபி r அவர்கள், நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி 2592). இங்கு நபியவர்களின் மனைவி தனது அடிமையை விடுதலை செய்வது பற்றி தனது கணவன் நபியவர்களிடம் கூட அனுமதி பெற்றிருக்கவில்லை. நபியவர்களும் இது குறித்து ஏன் அப்படி செய்தாய் எனக் கேட்கவுமில்லை.
தனது சொத்தை அனுபவிப்பதற்கான பூரண சுதந்திரம் பெண்களுக்கு உண்டா?
பொருளாதாரத்தில் பெண்கள் ஈடுபடலாம் என்பதற்கு இன்னும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் பெண்கள் பொருளியலில் ஈடுபடுவதற்கான பூரண சுதந்திரம் பெற்றவர்கள் என்பதை தெளிவாகவே விளக்குகின்றன. ஆயினும் பெண்கள் எப்போது தனது சொத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள்? அவர்களது சொத்தை பொருளாதாரத்தில் பயன்படுத்துவதாக இருந்தால் யாருடைய அனுமதியைப் பெற வேண்டும் என்பவற்றில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனை இரு வகையாகப் பிரித்து நோக்கலாம்.
முதலாவது: பெண்ணுக்கு அவளது சொத்தைக் கொடுக்கும் நேரமும், அதில் அவளுக்குரிய சுதந்திரமும்.
இதில் மூன்று கருத்துக்கள் இருக்கின்றன:
01. ஹன்பலி மத்ஹபினர்: ஒரு பெண் பருவ வயதை அடைந்து, திருமணம் முடித்து, குழந்தையைப் பெற்றடுக்கும் வரை அல்லது திருமணம் முடித்து, கணவனின் வீட்டில் ஒரு வருடம் இருக்கும் வரை அவளுக்கான சொத்தை அவளிடம் ஒப்படைக்க முடியாது என இவர்கள் கூறுகின்றனர். இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் முஃஹ்னி எனும் நூலில் (6/601) குறிப்பிடப்பட்டுள்ள ஓர் செய்தியை இதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர். ஷுரைஹ் y அவர்கள் குறிப்பிடுகிறார்கள், “(அடிமைப்) பெண்ணுக்கு அவள் தனது கணவன் வீட்டில் ஒரு வருடம் இருக்கும் வரை அல்லது குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவளது சொத்துக்கள் எதையும் அவளிடம் ஒப்படைக்கக்கூடாது என உமர் y அவர்கள் என்னிடம் உடன்படிக்கை செய்துள்ளார்கள்”. இதுவே அச்செய்தியாகும்.
02. மாலிக் மத்ஹபினர்: ஒரு பெண்ணின் சொத்துக்களுக்குப் பொறுப்பாக அவள் திருமணம் முடிக்கும் வரை அவளின் தந்தையே இருப்பார். அவள் தனக்கான கணவனை தேர்ந்தெடுக்கும் ஆற்றலைப் பெறுவது அவளிடம் சொத்துக்களை தைரியமாக கையாழ முடியும் எனும் தன்மையை உண்டுபன்னுகிறது என இவர்கள் கூறுகின்றனர். இச்செய்தி இப்னு ருஷ்த் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுதிய பிதாயதுல் முஜ்தஹித் (2/280) எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
03. ஹனபீ மற்றும் ஷாபிஈ மத்ஹபினர்: ஒரு பெண் பருவ வயதை அடைந்து, தெளிவான புத்திசுயாதீனமாக இருந்தால் அவளுக்கு அவளின் சொத்துக்களை ஒப்படைத்திட முடியும். அவள் திருமணம் ஆகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவ்வாறே அவள் விரும்பியவாறு வியாபாரத்தில் ஈடுபடலாம். தனது சொத்துக்களில் தான தர்மங்களை கொடுத்திடலாம். கணவனுக்கு தேவையான உதவிகளை செய்திடலாம் எனக் கூறுகின்றனர். இதற்கு நாம் முன்னர் குறிப்பிட்ட ஆதாரங்களை முன்வைக்கின்றனர். இதுவே ஏற்றமான கருத்தாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இரண்டாவது: வியாபாரம் தவிர்ந்த ஏனையவற்றில் பெண்கள் தமது சொத்துக்களைப் பயன்படுத்தல்.
தாம் பெற்ற சொத்துக்களில் வியாபாரம் தவிர்ந்த நன்கொடைகள், தானதர்மங்கள், ஸகாத் போன்வற்றை வழங்கும் போது கணவனின் அனுமதியைப் பெற வேண்டுமா என்பதையே இத்தலைப்பு கூற விளைகிறது. இதில் அறிஞர்களுக்கு மத்தியில் இரு கருத்துக்கள் இருக்கின்றன.
01. மாலிக் மற்றும் ஹன்பலி (இரண்டாம் கருத்து) மத்ஹபினர்: மனைவி தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை கணவனின் அனுமதியின்றி தானதர்மம் செய்திடலாம். அதை விட கூடுதலாக செய்யும் போது கணவனின் அனுமதியைப் பெற வேண்டும். கணவன் விரும்பினால் கொடுக்குமாறு அனுமதி வழங்கலாம். அல்லது தடுத்திடலாம்.
02. ஹனபி, ஷாபிஈ மற்றும் ஹன்பலி (முதலாம் கருத்து) மத்ஹபினர்: புத்திசுயாதீனமுள்ள பருவ வயதை அடைந்த எந்தப் பெண்ணும் தனது சொத்தில் விரும்பியவாறு தானதர்மம் செய்திடவும், வக்ப் செய்வதற்கும், வியாபாரம் செய்தல், அடகு வைத்தல், வஸிய்யத் செய்தல், இரவல் கொடுத்தல், கூலி கொடுத்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ளலாம். இவை அனைத்திற்கும் தந்தையினதோ, கணவனினதோ அனுமதி தேவையில்லை. எனக் கூறுகின்றனர். இதுவே ஏற்றமான கருத்தாக இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
எனவே பருவ வயதை அடைந்த, புத்தி சுயாதீனமுள்ள ஒரு பெண் பொருளாதார நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபடலாம் என்பதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது. மனிதன் எனும் அடிப்படையில் ஆணோ, பெண்ணோ புத்தி சுயாதீனத்தை அடைந்தால் அவர்கள் தமது செயற்பாடுகள் அனைத்திலும் சுதந்திரமாக ஈடுபட ஆரம்பிக்கின்றனர். தொழில் புரிதல், வியாபாரத்தில் ஈடுபடல், குடும்பத்தை வழிநடாத்திச் செல்லல், சமூகப் பணிகளில் ஈடுபடல், தனது எதிர்காலத்தை திட்டமிடல் போன்ற அனைத்திலும் தனித்து செயற்பட ஆரம்பிக்கின்றனர். பெண்கள் பயந்த சுபாவம் கொண்டவர்கள், இலகுவாக ஏமாற்றம் அடையும் குணம் கொண்டவர்கள் என சமூகம் அதிகமான உரிமைகளை பெண்களுக்கு தர மறுக்கிறது. இஸ்லாம் அவை அனைத்திற்கும் குறிப்பிட்ட வரையறை ஒன்றை வைத்து உரிமைகளை வழங்கியுள்ளது.
இஸ்லாம் வருவதற்கு முன்னர் கூட பல பெண்கள் தமது சொத்துக்களை வைத்து வியாபாரம் செய்துள்ளனர். கணவனுக்கு முடியாமல் போகும் போது குடும்பத்தை வழிநடாத்திச் சென்றிருக்கிறார்கள். இஸ்லாம் வந்த பின்னரும் தமது இப்பணிகளை தொடரந்தும் செய்திருக்கின்றனர். இதற்கு மிக முக்கிய உதாரணமாக நபியர்களின் மனைவி ஹதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைக் குறிப்பிடலாம்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.