ஆக்கம்
JM. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி
மேற்பார்வை
மேற்பார்வை
M. அஹ்மத் அப்பாஸி MA
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பெண்களின் நிலை.
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் பெண்களின் நிலை.
அநீதத்திற்கும், அட்டூழியங்களுக்கும் ஆளான பெண்களைப் பாதுகாத்து, அவர்களை விட்டும் வன்கொடுமைகளை நீக்கிட அந்நேரம் புது வித தோற்றத்தில் இஸ்லாமிய மார்க்கம் உருப்பெற்றது. ஆண், பெண் என இருபாலாருக்கும் மத்தியில் நீதத்தை அது கடைபிடித்தது. பெண்களுக்கு தடுக்கப்பட்ட பல அடிப்படை உரிமைகளை மீட்டுக்கொடுத்தது. கௌரவமற்றவர்களாக வாழ்ந்து வந்தவர்களை கௌரவனமானவர்களாய் மாற்றியது. அவர்கள் அமைதியாகவும், மன நிம்மதியுடனும் வாழ்ந்திட சிறந்த சட்ட திட்டங்களை வகுத்தது. அவைகளில் சில வருமாறு:
01. மனிதன் என்ற வகையில் பெண்கள் ஆண்களைப் போலவே எவ்வித மாறுபாடுகளும் இன்றி பூரணமாக படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அல்லாஹ்விடத்தில் நன்மைகளைப் பெறுவதிலும், தண்டனைகளைப் பெறுவதிலும் சமமானவர்கள். குலம், கோத்திரம், ஊர், நாடு, தொழில் போன்றவற்றை வைத்து இருவரில் ஒருவரையொருவர் மிகைத்திட முடியாது. ஏனெனில் அல்லாஹ் இயல்பாகவே அவ்வாறு தான் இருசாராரரையும் சமமாக படைத்துள்ளான். இதில் ஆண்கள் தலையிட்டு தாமே உயர்ந்தவர்கள் என கருத்துக்கள் கூறுவதற்கு எவ்வித இடமும் கிடையாது. அல்லாஹ் கூறுகிறான், “மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.” (அல்குர்ஆன் 04:01).
02. ஏனைய மதங்களிலுள்ள மதப்போதகர்கள் கூறிவருவதைப் போல் பெண் என்பவள் சாபத்திற்குரியவள் அல்ல என்பதை இஸ்லாம் தெளிவாகவே குறிப்பிடுகிறது. ஆதம் அவர்கள் தடுக்கப்பட்ட மரத்தின் பழத்தை உண்டு, சுவனத்திலிருந்து வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர் அவரது மனைவி ஹவ்வா எனக் கூறி பெண்களை அவர்கள் சபித்து வருகின்றனர். இது ஹவ்வா அவர்களிடம் மாத்திரம் ஏற்பட்ட தவறு கிடையாது. மாறாக இருவரிடத்திலுமே ஏற்பட்ட தவறு. இருவரும் ஷைத்தான் சொல்வதைக் கேட்டதாலே சுவனத்திலுருந்து வெளியேற்றப்பட்டனர். அல்லாஹ் கூறுகிறான், “அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான்.” (அல்குர்ஆன் 02:36). இன்னும் சில அல்குர்ஆன் வசனங்களின் படி தவறு ஆதம் அவர்களிடமே ஏற்பட்டது என்பதைக் காண முடிகிறது. அல்லாஹ் கூறுகிறான், “ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.” (அல்குர்ஆன் 20:121). இன்னும் சில வசனங்கள் மனித குலத்தின் தாய் செய்த குற்றத்திற்கும், அவர்களை அடுத்து வந்த பெண்களுக்கும் எவ்வித சம்பதமும் கிடையாது எனக் குறிப்பிடுகின்றன. அல்லாஹ் கூறுகிறான், “அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்” (அல்குஆன் 02:134).
03. பெண்களும் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கு தகுதியானவர்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றி, அவர்களின் முடிவு நல்லதாய் அமைந்தால் அவர்களும் சுனவத்தில் நுழைவார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறுசெய்தால் ஆண்களைப் போலவே நரகிலும் நுழைவார்கள். இதில் இருதரப்பினருமே சமமானவர்கள். அல்லாஹ் கூறுகிறான், “ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.” (அல்குர்ஆன் 16:97).
04. பெண்களின் பிறப்பு பாதுகாப்பானது. முன் சென்ற சமூகங்களைப் போல் அவர்கள் உயிருடன் புதைக்கப்படவோ, கொல்லப்படவோ மாட்டார்கள். அவர்களின் வளர்ச்சிக் கட்டங்களில் பல பெயர்களை அவர்கள் பெறுவார்கள். அவர்கள் பெயர்கள் பெறும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாக கௌரவிக்கப்படுவார்கள். இவ்வாறு கௌரவிக்கப்படும் பெண்களை உயிருடன் புதைப்பதையோ, கருவில் இருக்கும் போதே கொல்வதையோ இஸ்லாம் தடைசெய்கிறது. அல்லாஹ் கூறுகிறான், “அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நட்டமடைந்தனர்; வழிகெட்டனர்; நேர்வழி பெறவில்லை.” (அல்குர்ஆன் 06:140). மறுமை நாளின் மிக முக்கிய விசாரணைகளில் ஒன்றாக இதுவும் இடம் பெறும். அல்லாஹ் கூறுகிறான், “என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது,” (அல்குர்ஆன் 81:08-09).
05. பெண்களின் வளர்ச்சிக் கட்டங்களில் அவர்கள் பெறும் பெயர்களும், அவற்றுக்கான கண்ணியமும்:
அ. மகள்: நபி அவர்கள் கூறினார்கள், “யார் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்து, அவர்களை திருமணம் செய்து கொடுக்கிறாரோ அவருக்கு சுவனம் கிடைக்கும்” (ஆதாரம்: அபூதாவுத் 5148). இந்த ஹதீஸை இமாம் ஸுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹஸன் எனும் சட்டத்தைப் பெறும் ஹதீஸ் எனக் குறிப்பிடுகிறார்கள். (அல்ஜாமிஉஸ் ஸகீர் 8828).
ஆ. மனைவி: அல்லாஹ் கூறுகிறான், “நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.” (அல்குர்ஆன் 30:21), மேலும் நபி அவர்கள் கூறினார்கள், “உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவிமாருக்கு சிறந்தவராக இருப்பவரே” (ஆதாரம்: திர்மிதி 1126).
இ. தாய்: அல்லாஹ் கூறுகிறான், “தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.” (அல்குர்ஆன் 46:15). மேலும் நபி அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். (ஆதாரம்: புஹாரி 5971).
ஈ. சகோதரி: நபி அவர்கள் கூறினார்கள், “யார் இரண்டு அல்லது மூன்று பெண்பிள்ளைகளைப் பெற்றெடுத்து, அல்லது இரண்டு அல்லது மூன்று சகோதரிகளை உறவாக பெற்று, அவர்களுடன் வாழ்கிறாரோ அல்லது அவர்களை விட்டும் மரணித்திருக்கிறாரோ நானும் அவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம். -இவ்வாறு கூறி தன ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் சேர்த்துக் காட்டினார்கள்-” (ஆதாரம்: இப்னுஹிப்பான் 447).
06. பெண்கள் கல்வி பயில வேண்டுமென்பதில் இஸ்லாம் அதிக ஆர்வம் காட்டுகிறது. தமது மனைவி, பிள்ளைகளுக்கும், தம்மிடம் இருக்கும் அடிமைப் பெண்களுக்கும் கல்வியைக் கற்றுக்கொடுக்குமாறு நபி அவர்கள் தனது தோழர்களுக்கு ஏவியுள்ளார்கள். அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறும் கட்டளையிட்டுள்ளார்கள். நபி அவர்கள் கூறினார்கள், “ஒரு மனிதரிடம் அடிமை(பணி)ப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் கல்லி கற்பித்து, அதையும் ஆழகுறக் கற்பித்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதையும் அழகுற (நவீனமாகக்) கற்பித்து, பிறகு அவளை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலையும் செய்து, திருமணமும் செய்தால் அவருக்கு (விடுதலை செய்தது மற்றும் மணந்ததற்காக) இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.” (ஆதாரம்: புஹாரி 5083).
07. மகள், மனைவி, தாய், சகோதரி, பாட்டி போன்ற பெண்ணின் அனைத்துக் கட்டங்களிலும் அவளுக்குரிய அனந்தரச் சொத்துக்களை முறைப்படி கொடுக்குமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
08. இஸ்லாம் பொருளாதாரத்தில் மனைவிக்கென சில சட்டங்களை வகுத்துள்ளது. மனைவி தன்னிடமுள்ள சொத்து செல்வங்களை சுதந்திரமாக கையாள முடியும். தனக்கான சிவில் உரிமைகளை முழுமையாகப் பெற்றிட முடியும். மனைவியின் அனுமதியின்றி அவளின் சொத்துக்களை கனவன் அனுபவிப்பதை இஸ்லாம் முற்றாக தடுக்கிறது.
09. முன் சென்ற சமூகங்களில் இடம்பெற்றதைப் போல் அல்லாமல் விவாகரத்துக்கென தனியான சட்டங்களை இஸ்லாம் வகுத்துள்ளது. அதன் மூலம் பெண்கள் அநீதத்தில் வீழ்வதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கிறது. அவ்வாறே ஆண்களுக்கு நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் முடிக்க முடியாது எனும் சட்டத்தை அமுல்படுத்தி, பெண்கள் முன்னைய சமூகங்களில் உதாசீனம் செய்யப்பட்டதைத் தடுக்கிறது.
10. பருவ வயதை அடைவதற்கு முன்பாக பெண்களுக்கும், அவர்களின் சொத்துக்களுக்கும் அவர்களின் பொறுப்பாளர்களை பாதுகாவலர்களாக இஸ்லாம் ஆக்குகிறது. அவர்கள் இப் பெண்களை பாதுகாத்து, சிறந்த ஒழுக்க விழுமியங்களைப் போதித்து, அவர்களின் சொத்துக்களையும் பாதுகாத்திட வேண்டும். பருவ வயதை அடைந்த பிறகு ஆண்களைப் போல் தமது சொத்துக்களை சுதந்திரமாக அனுபவிக்கும் உரிமைகளை அப் பெண்கள் பெறுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் சுருக்கமாக நோக்கும் போது, பெண்கள் விடயத்தில் இஸ்லாம் மூன்று துறைகளில் கவனம் செலுத்துவதைக் காண முடிகிறது.
அ. மனிதம்: இது முன்சென்ற சமூகங்களில் பெண்களிடம் இல்லாத ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது. அதை இஸ்லாம் மாற்றியமைத்து, ஆண்களுக்கு உள்ளது போன்ற மனிதம் பெண்களிடமும் காணப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ஆ. சமூகவியல்: சமூக அந்தஸ்து குறைந்தவளாக நடாத்தப்பட்டு வந்த பெண்கள் இஸ்லாத்தில் சிறந்த சமூக விற்பன்னர்களாய் திகழ வாய்ப்புக்களை இஸ்லாம் வழங்கியுள்ளது. அவர்களுக்கு சுதந்திரமாக கல்வி கற்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை, சமூகத்தை உருவாக்குவதில் பங்காற்றும் உரிமை போன்றவற்றை வழங்கியுள்ளது. குழந்தைப் பருவத்தில் அன்பு செலுத்தப்படுபவள். மனைவியான பிறகு அன்புடன் கூடிய பொறுப்புக்களைப் பெற்றவள். தாயான பிறகு அன்பும், அரவணைப்பும், சமூக பொறுப்பும் கொண்டவள். வயதாகிவிட்டால் திரும்பவும் அன்பு செலுத்துப்படுபவள் எனும் நிலைகளை கௌரவமாக கடந்து செல்வதற்கு இஸ்லாம் அழகிய வழிகாட்டல்களை அவர்களுக்காக உருவாக்கியுள்ளது.
இ. உரிமைகள்: பருவ வயதை அடைந்ததிலிருந்து தனக்குள்ள சொத்து செல்வங்களில் சுதந்திரமாக செயற்படும் அனைத்து உரிமைகளையும் இவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளது. இவ் வயதிற்குப் பிறகு ஏனைய முன் சென்ற சமூகங்களில் இருந்ததைப் போல், அல்லது இருப்பதைப் போல் தந்தை, கனவன், குடும்பத் தலைவன் போன்றோர் இவளின் சொத்துக்களில் தலையிடவோ, சொத்துக்களை மட்டுப்படுத்திடவோ, அல்லது அவை அனைத்தையும் ஆக்கிரமித்திடவோ எவ்வகையிலும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இம் மூன்றாம் வகையே எமது ஆய்வின் தலைப்பாக இங்கு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.