தொகுப்பு : Muhammad Abu Khalidh
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"#சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக் கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்று தான் யுக முடிவு நிகழும்".
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள். நூல் : முஸ்லிம் 1548
வெள்ளிக்கிழமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜும்ஆ நடக்கும் நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது என்ற தடையை அல்லாஹ் தஆலா பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் எச்சரிக்கிறான்.
"இறை நம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்! "
(அல்-குரான் 62:09)
வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) நேர காலத்துடன் செல்வதன் சிறப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது, ஓர் #ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு #மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் #ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு #கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு #முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1554
வெள்ளிக்கிழமை உரையை மௌனமாகச் செவியேற்பவரின் சிறப்பு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(வெள்ளிக்கிழமை) யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) #மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க் கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1557
இமாம் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் "#தஹிய்யத்துல்_மஸ்ஜித்" தொழுகை தொழுவது :
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரே, தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை" என்றார். "எழுந்து, தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : முஸ்லிம் 1584
துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்
"நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.
- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது".
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 1543
ஜுமுஆத் தொழுகையைக் கைவிடுவதற்கு வந்துள்ள கண்டனம்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள் மீது நின்றபடி "மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்" என்று கூறியதை நாங்கள் கேட்டோம். நூல் : முஸ்லிம் 1571
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.