பகுதி 01
அறபு மூலம்: கலாநிதி, யூஸுப் பின் அப்தில்லாஹ்
தமிழ் மூலம்: இல்ஹாம் அபால்தீன் (ரியாதி) BA Hons, MA Reading
துல்ஹஜ் மாதம் குறிப்பிட்ட சில கிரியைகளை நிறைவற்றுவதற்காக, அல்லாஹ்வின் புனித இல்லத்திற்குச் செல்வது ஹஜ் எனப்படும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றாகும்.
ஹஜ் கடமையாவதற்கான நிபந்தனைகள்: முஸ்லிமாயிருத்தல், புத்தியுள்ளவராக இருத்தல், பருவ வயதை அடைந்தவராக இருத்தல், சுதந்திரமாக சுற்றித் திரிபவராக இருத்தல், ஹஜ் செய்வதற்கு உடல் ரீதியாகவும், பணம், பொருள் ரீதியாகவும் முடியுமானவராக இருத்தல்.
மேற்கூறப்பட்ட நிபந்தனைகள் ஒருவரிடம் பூர்த்தியாகும் போது ஹஜ் செய்வது அவருக்கு கடமையாகின்றது. அதை எவ்விதக் காரணமுமின்றி பிற்படுத்துவது பாவமாகும். சிறுவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்தால், அது சுன்னத்தாகக் கருதப்படும். பகுத்தறியும் நிலைக்கு வராத குழந்தையாக இருப்பின், அக்குழந்தைக்குப் பொறுப்பாக செல்பவர் குழந்தைக்காக நிய்யத் வைக்க வேண்டும். ஹஜ்ஜை முறிக்கும் காரியங்களை விட்டும் அக்குழந்தையைத் தடுக்க வேண்டும், சஃயி மற்றும் தவாஃப் செய்யும் நேரத்தில் அதை சுமந்து செல்ல வேண்டும், அரபா மற்றும் முஸ்தலிபாவுக்குக் கூட்டிச் செல்ல வேண்டும். ஜமராத்தில் கல்லெறியும் போது அதற்குப் பதிலாக இவர் கல்லெறிய வேண்டும்.
அக்குழந்தை பகுத்தறியும் நிலையில் இருந்தால் ஹஜ் மற்றும் உம்ராவின் போது அக்குழந்தை பொறுப்புதாரியின் அனுமதியோடு தானாகவே நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். ஹஜ் கிரியைகளில் தனக்கு முடியுமானதை செய்ய, முடியாதவற்றை பொறுப்புதாரி நிவர்த்தி செய்ய வேண்டும். சஃயி மற்றும் தவாஃப் செய்யும் போது அதைக் கால்நடையாகவே கூட்டிச்செல்ல வேண்டும். நடக்க முடியாத பட்சத்தில் சுமந்து செல்வது ஆகுமானது.
பகுத்தறியும் நிலையை அடைந்த, அடைய இருக்கின்ற குழந்தைகள் அரபாவில் தரித்து நிற்றலையும், முஸ்தலிபாவில் தங்குவதையும் சுயமாகவே செய்ய வேண்டும். ஹஜ்ஜை முறிக்கும் காரியங்களை விட்டும் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
ஹஜ் செய்வதற்கு சக்திபெற்றவர் என்போர், சட ரீதியாகும், உடல் ரீதியாகவும் சக்தி பெற்றிருக்க வேண்டும். பயணம் செய்தல், பயணத்தின் இன்னல்களைப் பொறுப்பேற்றல், தான் ஹஜ்ஜிற்கு வந்து செல்வதற்கான போதுமான பணத்தொகையைப் பெற்றிருத்தல், ஹஜ்ஜிலிருந்து மீளும் வரை கடனின்றி தனது குடும்பம், தேவையான அனைத்து வாழ்வாதாரத்தையும் பெற்றிருத்தல் போன்றவைகள் பூர்த்தியாக இருக்க வேண்டும். தான் ஹஜ்ஜிற்கு வரும் பாதை தனக்கும், தனது பணத்திற்கும் எந்த வித தீங்கையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதும் இதன் நிபந்தனையாகும்.
ஒருவருக்கு பணமிருந்து, சுகமாக்க முடியாத நோயோ, அல்லது வயோதிபமோ ஏற்பட்டு, உடல்ரீதியாக முடியாமல் இருப்பின் உலகில் எங்கிருந்தாவது தனக்காக ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றும் ஒருவரை நியமிப்பது கட்டாயமாகும். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் ஹஜ் செய்வபராக இருப்பின் ஏற்கனவே தனக்காக ஹஜ்ஜையும், உம்ரா செய்பவராக இருப்பின் ஏற்கனவே தனக்காக உம்ராவை நிறைவேற்றியவராகவும் இருத்தல் வேண்டும். அவருக்கு அக்கடமையை நிறைவேற்றத் தேவையான அனைத்துச் செலவீனங்களையும் பணம் இருப்பவர் பொறுப்பேற்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட நிபந்தனைகளில் பெண்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா கடமையாவதற்கு மேலும் சில நிபந்தனைகள் இருக்கினறன. அவையாவன: தன்னோடு பயணிப்பதற்கு மஹ்ரம் என யாராவது இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணின் மஹ்ரமாக அவரின் கனவரே இருப்படுவார். கனவர் இல்லாத பட்சத்தில் தனது வம்சாவழியில் தனக்குத் திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்டோர் உள்வாங்கப்படுவர். (தனது தந்தை, மகன், சகோதரன், சகோதரனின் மகன், சாச்சாமார், சகோதரியின் மகன், மாமா போன்றோர்), அல்லது ஆகுமான காரணங்களுக்காகத் திருமணம் முடிக்கத் தடுக்கப்பட்டோர் (பால்குடிச் சகோதரன், பால்குடி சாச்சா போன்றோர்) அல்லது திருமண உறவின் மூலம் தடுக்கப்படுவோர் (தாயின் கனவர், கனவரின் மகன், கனவரின் தந்தை, மகளின் கனவர் போன்றோர்) ஆகியோர் உள்வாங்கப்படுவர்.
அவ்வாறே தான் கூட்டிச் செல்லும் மஹ்ரமிற்கும் செலவு செய்யப் போதுமான பணவசதி உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். ஒருவர் தனக்கென ஒரு மஹ்ரமைப் பெற்று அவர் தாமதிக்கும் தருணத்தில், அவர் வரத் தயாராகும் வரை எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். மஹ்ரம் விடயத்தில் இவர் நிராசையடைந்தால் தனக்காக ஹஜ் அல்லது உம்ராக் கடமையை நிரைவேற்றிட, வேறு ஒருவரைப் பணிக்க வேண்டும்.
ஹஜ்ஜை நிறைவேற்ற சக்திபெற்ற பின்னர் ஒருவர் மரணித்தால், தான் விட்டுச் செல்லும் சொத்தில் ஹஜ்ஜுக்கான தொகையை ஒதுக்கி, அவருக்காக ஹஜ் செய்ய, இன்னொருவரைப் பணித்து, அவரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். மரணித்தவருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றும் ஒருவர், தனக்குறிய ஹஜ் கடமை நீங்கிவிட்டதாகக் கருதிவிடக் கூடாது. மாறாக இதன் மூலம் மரணித்தவரின் கடமை தான் நீங்கிவிடும். இன்னொருவருக்குப் பகரமாக ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் அவருக்காக நிய்யத்து வைத்து, அவர் பெயரில் தல்பியாவையும் கூற வேண்டும். அவரின் பெயர் தெரியாமல் இருந்தாலோ, அல்லது மறந்துவிட்டாலோ, தனக்கு யார் பணம் தந்து, இன்னாருக்காக ஹஜ் செய்யுங்கள் எனக் கூறினார்களோ, அவ்வாறே நிய்யத்தையும் வைத்து, “யாருக்காக ஹஜ் செய்யுமாறு எனக்குப் பணம் கிடைத்ததோ அவருக்காக தல்பியா கூறுகிறேன்” எனக் கூறிக்கொள்ள வேண்டும்.
ஹஜ்ஜின் எல்லைகள்:
ஹஜ்ஜுக்கென கால எல்லை, பிரதேச எல்லை என இரு எல்லைகள் இருக்கின்றன.
கால எல்லைகள்:
ஷவ்வால் மாத முதலாம் பிறையிலிருந்து துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்கள் வரை உள்ள இடைவெளி ஹஜ்ஜின் கால எல்லையாகக் கணிக்கப்படுகின்றது.
பிரதேச எல்லைகள்:
இவ் எல்லைகளைத் தாண்டி, இஹ்ராம் இல்லாமல் ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் மக்காவினுள் நுழைய முடியாது. அவையாவன:
மதீனாவிலிருந்து வருவோருக்கு துல் ஹுலைபா எனும் இடமும், ஷாம், எகிப்து, மொரோக்கோ பகுதியிலிருந்து வருவோருக்கு ஜுஹ்பா எனும் இடமும், நஜ்த் பிரதேசத்திலிருந்து வருவோருக்கு கர்னுல் மனாஸில் எனும் இடமும், யமன் பகுதியிலிருந்து வருவோருக்கு யலம்லம் எனும் இடமும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான இஹ்ராத்தின் பிரதேச எல்லைகளாகக் கணிக்கப்படுகின்றன.
இவ் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிக்குள் யாராவது வசித்து வந்தால் அவர் வசிக்கும் இடத்திலிருந்தே ஹஜ் மற்றும் உம்ராவுக்காக நிய்யத் வைத்து, வெள்ளை ஆடையையும் அணிந்துகொள்வார். மக்காவினுள் வசிப்போர் ஹஜ் செய்ய விரும்பினால், அவர்கள் தத்தமது வீடுகளிலிருந்தே நிய்யத் வைத்துக்கொள்ள முடியும். இதற்காக எல்லை வரை சென்று வரத் தேவையில்லை. அவ்வாறே அவர் உம்ரா செய்ய நாடினால் ஹரத்தின் எல்லையை மாத்திரம் தாண்டிச் சென்று, உம்ராவுக்கான நிய்யத்தை வைத்துக்கொண்டு வரவேண்டும்.
தான் மக்காவுக்கு வரும் பாதையில் தனக்குறிய எல்லையை ஒருவர் கண்டுகொள்ளாவிட்டால், எல்லையை நெருங்கிவிட்டோம் என்பதை அறிந்து, அங்கேயே நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறே விமானத்தில் வருபவரும் எல்லையை நெருங்கும் போது நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். விமானத்தில் வருபவர் அதில் பயணிப்பதற்கு முன்னரே குளித்து, சுத்தமாகிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். விமான நிலையத்தை வந்தடையும் வரை நிய்யத் வைக்காமல் தாமதப்படுத்துவது கூடாது.
இஹ்ராம்:
இஹ்ராம் என்பது ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றுவதை மனதால் எண்ணுவதை (நிய்யத்தை)க் குறிக்கின்றது. இந் நிய்யத்தை வைப்பதற்கு முன்னர் குளித்து, சுத்தமாகிக் கொள்ள வேண்டும். வாசனைத் திரவியங்களை தனது தலையிலும், முகத்திலும் பூசிக்கொள்ள வேண்டும். ஆண்கள், நிய்யத் வைப்பதற்கு முன்னர், தைத்த ஆடைகளை அணியாமல் வெள்ளை நிற மேலாடையையும், வெள்ளை நிற வேட்டியொன்றையும் அணிந்துகொள்ள வேண்டும். ஆண்களிடம் வழமையில் வெள்ளை நிறம் அல்லாத வேறு நிறங்களில் இத்தகு ஆடை அணியும் வழக்கம் இருப்பின் அதையும் அணிந்துகொள்ள முடியும்.
தான் தைத்த ஆடையுடன் இருக்கும் போது ஹஜ் அல்லது உம்ராவுக்காக நிய்யத் வைத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் தைத்த ஆடையைக் கலைவது அவருக்குக் கடமையாகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.