பகுதி 02
அறபு மூலம்: கலாநிதி, யூஸுப் பின் அப்தில்லாஹ்
தமிழ் மூலம்: இல்ஹாம் அபால்தீன் (ரியாதி) BA Hons, MA Reading
ஹஜ்ஜின் வகைகள்:
ஹஜ் செய்பவர் தமத்துஃ, கிரான், இப்ராத் முதலிய மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றுக்கு நிய்யத் வைக்க வேண்டும்.
தமத்துஃ என்பது ஒருவர் ஹஜ்ஜின் கால எல்லைக்குள் உம்ராவுக்காக நிய்யத் வைத்து, அதை நிறைவேற்றி விட்டுப் பின்னர் இஹ்ராம் ஆடையைக் கலைந்து, தைத்த ஆடைகளை அணிந்துகொள்வார். ஹஜ்ஜுக்கான நேரம் வரும் போது திரும்பவும் இஹ்ராம் ஆடையை அணிந்து ஹஜ்ஜுக்கான நிய்யத்தை வைத்து, அதன் கடமைகளை நிறைவேற்றுவார்.
இப்ராத் என்பது தனக்கான எல்லையில் ஹஜ்ஜுக்காக மாத்திரம் நிய்யத் வைத்து, இஹ்ராம் ஆடையையும் அணிந்து, ஹஜ்ஜின் கடமைகள் முடியும் வரை அதே ஆடையுடன் இருப்பதைக் குறிக்கும். இதில் உம்ராவை நிறைவேற்ற முடியாது.
கிரான் என்பது உம்ராவுக்காகவும், ஹஜ்ஜுக்காகவும் ஒரே தடவையில் நிய்யத் வைத்தலைக் குறிக்கும். அல்லது உம்ராவுக்காக நிய்யத்தை வைத்து, உம்ராவின் தவாபில் ஹஜ் கடமையாகுவதற்கு முன்னர், அதை உம்ராவோடு சேர்த்தல், அல்லது ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்து, அதனோடு உம்ராவையும் சேர்த்துக்கொள்ளல் போன்ற அனைத்தையும் குறிக்கும்.
தமத்துஃ மற்றும் கிரான் செய்பவர்கள் மக்காவாசிகளாக இல்லாதிருப்பின் அவர்கள் ஓர் ஒட்டகத்தையோ, அல்லது மாட்டையோ, அல்லது ஆட்டையோ அறுத்துப் பலியிட வேண்டும். அவர்களால் இதை செய்ய முடியாமல் போனால் 10 நாட்கள் நோன்பிருக்க வேண்டும். (3 நாட்கள் ஹஜ்ஜிலும், 7 நாட்கள் தமது ஊருக்குத் திரும்பியதும் நோட்க வேண்டும்).
இம்மூன்று முறையில் அமைந்த ஹஜ் கடமைகளுள் மிகவும் சிறந்தது தமத்துஃ ஆகும். இதன் போது தான் அறுத்துப் பலியிடும் பிராணிகளை தம்மோடு கொண்டு வராமல் இருக்க வேண்டும். மாற்றமாக அப் பிராணிகளை தம்மோடு கொண்டு வந்திருந்தால் அவருக்கு கிரான் செய்வதே மிகச் சிறந்தது. ஹஜ்ஜின் கால எல்லை வருவதற்கு முன்னரே ஒருவர் உம்ராவுக்காக வந்து, ஹஜ் செய்யும் நோக்கில் மக்காவில் தங்கியிருந்தால், இப்ராத் செய்வதே அவருக்குச் சிறந்தது.
இம்மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றை நிறைவேற்றும் பொருட்டு ஒருவர் நிய்யத் வைத்தால், நிய்யத்திற்குப் பின்னர், அதிகமாக, தனது சப்தத்தை உயர்த்தி, (லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன் நிஃமத லக வல் முல்க், லா ஷரீக லக்) என தல்பியாவை முழங்க வேண்டும். இதோடு நபி அவர்கள் கற்றுத் தந்த மேலதிகமான துஆக்களையும் வேண்டுமானால் ஓதிக்கொள்ளலாம்.
நிய்யத் வைத்ததன் பின்னர் செய்யக்கூடாத விடயங்கள்:
ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்த ஒருவர் பின்வரும் விடயங்களை விட்டும் தவிரந்து நடக்கவேண்டும்.
1. தலையை வழித்தல்.
2. கை, கால் நகங்களை எவ்விதக் காரணங்களும் இல்லாமல் வெட்டுதல்.
3. ஆண்கள் தலையை மறைத்தல்.
4. ஆண்கள் தைத்த ஆடைகளை அணிதல், (பெண்களைப் பொருத்த வரை தனது உடலை, முழுவதும் மறைக்க வேண்டும் என்பதால் தான் விரும்பிய ஆடையை அணிந்துகொள்ளலாம். ஆனால் கண்களை மாத்திரம் திறந்து, முகத்தின் மற்றைய பாகங்களை மூடுதல் கூடாது. மற்றபடி முகத்தை முழுதும் மறைக்கும் திரையை அணிந்துகொள்ளலாம்.)
5. வாசனைத் திரவியங்களைப் பூசுதல்.
6. வேட்டையாடுதல்.
7. திருமண ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல்.
8. உடலுறவு கொள்ளல், (ஹஜ்ஜின் முதல் விடுவிப்புக்கு முன்னர் (கல்லெறியும் மூன்று இடங்களில் இறுதியாக எறியும் இடம் வருமுன்னர் –ஜம்ரதுல் அகபா-) உடலுறவு கொண்டால் அவரின் ஹஜ் கிரியை முறிந்து விடும். அதற்காக அவர் தவ்பா செய்ய வேண்டும். அதோடு நிறுத்திவிடாது ஹஜ்ஜை முழுமைப்படுத்தி விட்டு, அடுத்த வருடமும் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். தான் உடலுறவு கொண்டதற்காக ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட வேண்டும். முதல் விடுவிப்புக்குப் பின்னர் ஒருவர் உடலுறவு கொண்டால் அவரின் ஹஜ் முறிந்துவிடாது. மாறாக அதற்காகக் குற்றப்பரிகாரம் செய்ய வேண்டும். (ஆட்டை அறுத்துப் பலியிடல் அல்லது 6 ஏழைகளுக்கு உணவளித்தல், அல்லது மூன்று நாட்கள் நோன்பிருத்தல்)).
9. மருமஸ்தானம் அல்லாத ஏனைய இடங்களில் புணருதல்.
இவைகளில் ஏதாவது ஒன்றை ஒருவர் அறியாமலோ, அல்லது மறதியாகவோ, அல்லது நிர்ப்பந்தத்தினாலோ செய்துவிட்டால், அவருக்குப் பாவமோ, குற்றப்பரிகாரமோ கிடையாது. மாறாக தெரிந்துகொண்டு செய்தால் அவருக்குப் பாவம் கிடைப்பதோடு, குற்றப்பரிகாரமும் இருக்கின்றது.
ஹஜ்ஜுக்காக நிய்யத்து வைத்த ஒருவர், தல்பியாவை முழங்குவதும், அல்லாஹ்வை நினைவுபடுத்துவதும், குர்ஆனை ஓதுவதும், நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதும் விரும்பத்தக்க காரியங்களாகும்.
உம்ரா:
கஅபாவை ஏழு முறை வலம்வர வேண்டும்.
உம்ரா செய்பவர் நேராக ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை முத்தமிட செல்ல வேண்டும். அக்கல்லை முத்தமிட முடியாமல் போனால், அதன் பக்கம் திரும்பி கையைக் காட்டுவது போதுமானது. அச்சமயம் அங்கிருப்போருக்கு தொல்லை தரும் விதத்தில் நடந்து கொள்வது கூடாது.
ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட முடியவில்லையென்றால், தனது கையால் சைக்கினை மாத்திரம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் தவாஃப் செய்ய வேண்டும். தனது இடது பக்கமாக கஃபா இருக்கும் வகையில் தனது வலம் வருதலை “தவாஃப்”பை ஆரம்பிக்க வேண்டும். தவாஃப் என்பது அல்லாஹ்விற்கு வணக்கம் செய்யும் எண்ணத்தில் ஹஜருல் அஸ்வத் கல்லிலிருந்து ஆரம்பித்து இடது புறமாக கஃபாவை ஏழு முறை சுற்றி வருவதாகும். முடிக்கும் போது ஹஜருல் அஸ்வத் கல்லில் முடிக்க வேண்டும்
பின்னர் அவர் ஏழு தவாஃபுகள் (சுற்றுக்கள்) செய்ய வேண்டும். ருக்னுல் யமானியை அவர் வந்தடைந்ததும், முடிந்தால் அதைத் தொட்டு “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” எனக் கூறவேண்டும். ருக்னுல் யமானியைத் தொட முடியவில்லையென்றால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும்.
பின்னர் ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்கும் இடையில் அவர் இந்த துஆவை ஓத வேண்டும். அதாவது:
“ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்”
ஹஜருல் அஸ்வதை அடைந்து விட்டால் தனது வலது கையால் அதைத் தொட வேண்டும். முடியா விட்டால் “அல்லாஹு அக்பர்” எனக் கூறி தனது கையால் சுட்டிக் காட்ட வேண்டும். இவ்வாறு ஹஜருல் அஸ்வதிலிருந்து தொடங்கி மீண்டும் ஹஜருல் அஸ்வதில் வந்து முடிப்பது கொண்டு தவாஃபின் ஏழு சுற்றுக்களில் ஒரு சுற்று முடி வடைந்து விடுகின்றது. மீதமுள்ள ஆறு சுற்றுக்களையும் இவ்வாறே சுற்றி, தனது தவாஃபை பூரணப்படுத்த வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களிலும் சிறிது வேகமாக ஓடுவது ஸுன்னத்தாகும். இதற்கு அரபியில் “ரம்ல்” எனப்படும். மீதமுள்ள நான்கு சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும்.
“ரம்ல்” என்பது கால் எட்டுகளை சுருக்கி வைத்து சற்று வேகமாக நடப்பதாகும். இவ்வாறு செய்வது முதல் மூன்று சுற்றுக்களுக்கு மாத்திரம் தான். மேலும் இது ஆண்களுக்கு மாத்திரம் உரிய சட்டமாகும்.
முதல் மூன்று தவாஃபின் போதும் மேல் அங்கியின் (இஹ்ராம் துணியின்) நடுப்பகுதியைத் தனது வலது அக்குளுக்குக் கீழ் சுற்றிக் கொண்டு வந்து, இரு ஓரங்களையும் இடது தோள் புஜத்தின் மீது போட்டுக் கொள்ள வேண்டும். வலது தோள் புஜம் மட்டும் திறந்திருக்க வேண்டும். முதல் மூன்று சுற்றுக்களுக்கு மாத்திரம் இவ்வாறு செய்வது ஸுன்னத்தாகும். இதற்கு அரபியில் “இள்திபாஉ” எனப்படும். இதுவும் ஆண்களுக்கு மாத்திரம் விதியாக்கப்பட்டுள்ள சட்டமாகும்.
பின்னர் தவாஃபை முடித்து விட்டு ‘மகாம் இப்ராஹீம்’ எனும் இடத்திற்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுவது ஸுன்னத்தாகும். தொழுவதற்கு முன்னால் மேலங்கியை இரண்டு தோள் புஜங்கள் மீதும், நெஞ்சின் மீதும் போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொழும் போது முதல் ரக்அத்தில் சூரத்துல் ஃபாதிஹாவும், குல் யா அய்யுஹல் காஃபிரூன் எனும் சூராவும், இரண்டாவது ரக் அத்தில் சூரத்துல் ஃபாதிஹாவும் குல்ஹுவல்லாஹு அஹத் எனும் சூராவும் ஓத வேண்டும். இதுதான் ஸுன்னத்தான முறையாகும். கடுமையான நெருக்கடியினால் ‘மகாம் இப்ராஹீம்’ எனும் இடத்தில் தொழ முடியவில்லையென்றால் பள்ளியின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். பின்னர் ஸயீ செய்ய வேண்டும்.
ஸயீ செய்யும் முறை:
உம்ரா செய்பவர் ‘ஸயீ’ செய்ய ஸஃபா மலையின் பக்கமாகச் செல்ல வேண்டும். ஸஃபாவிலிருந்து ‘ஸயீ’ செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஸஃபாவிலிருந்து ‘ஸயீ’யை ஆரம்பிக்கும் போது பின்வருமாறு சொல்வது ஸுன்னத்தாகும். அதாவது:
“இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷ ஆ இரில்லாஹ்”.
கஃபாவைக் காணுமளவிற்கு ஸஃபா மலையில் ஏற வேண்டும். பிறகு கஃபாவை முன்னோக்கி தனது இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, தான் விரும்பிய துஆக்களைச் செய்ய வேண்டும். அத்துடன் பின்வரும் திக்ரை மூன்று முறை செய்ய வேண்டும்.அதாவது:
“லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்க் வலகுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர். லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ் அன் ஜஸ வஃதஹ் வநஸர அப்தஹ் வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்”
பின்னர் அவர் நீண்ட நேரம் துஆச் செய்து விட்டு, அதிலிருந்து இறங்கி மர்வா மலையை நோக்கிச் செல்ல வேண்டும். அச்சமயம் பச்சை தூணை அடைந்தால் அடுத்த பச்சை தூணை அடையும் வரை முடிந்த அளவு விரைந்து செல்வது சுன்னத்தாகும். இவ்வாறு செய்யும் போது யாருக்கும் இடைஞ்சல் கொடுக்கக் கூடாது. விரைந்து செல்வது ஆண்களுக்கு மாத்திரம் உரியதாகும். பெண்களுக்கு அல்ல.
மர்வா மலையை வந்தடைந்து விட்டால், அதில் ஏறி, கிப்லாவை முன்னோக்கி, கைகளை உயர்த்தி, ஸஃபாவில் கூறியது போலக் கூற வேண்டும். இவ்வாறு ஒருவர் செய்து விட்டால் ஏழு ஸயீக்களில் ஒன்றை அவர் முடித்து விட்டார். மர்வாவிலும் தூஆச் செய்து விட்டு பின்னர் அங்கிருந்து ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முந்திய தடவை ஸஃபாவில் இருந்து மர்வாவிற்கு வரும் போது செய்தது போலவே இங்கும் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஏழு தடவைகள் ஸயீ செய்ய வேண்டும். ஸயீயின் போது அதிகமாக துஆக்கள் செய்து கொள்வது ஸுன்னத்தாகும்.
ஸயீயை முடித்துக் கொண்ட பிறகு அவர் தனது தலை முடியை சிரைக்க வேண்டும். அவ்வாறு செய்வது தான் மிகமிக ஏற்றமானது. எனினும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது அருகில் இருக்குமாயின், அப்பொழுது சிரைத்தால் தலை முடி சீச்கிரம் வளராது என்பதனால், தலை முழுவதிலிருந்தும் முடியைக் கத்தரித்துக் கொள்ளலாம். பெண்கள் விரலளவு தமது தலை முடியை கத்தரித்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன் அவருடைய உம்ரா முடிவடைந்து விடுகின்றது. இதன் பிறகு அவர் தனது உடைகளை மாற்றிக் கொள்ளவும், நறுமணங்கள் பூசிக் கொள்ளவும், தன் மனைவியுடன் உடலுறவை வைத்துக் கொள்ளவும், இஹ்ராம் அணிந்ததிலிருந்து உம்ராச் செய்து முடிக்கும் வரை அவனுக்குத் தற்காலிகமாக தடுக்கப்பட்ட, இஸ்லாத்தில் அனுமதியுள்ள ஏனைய அனைத்து காரியங்களிலும் ஈடுபடவும் அனுமதியுண்டு.
கிரான் செய்பவரும், இப்ராத் செய்பவரும் (தவாபுல் குதூம்) மக்காவினுள் நுழைந்ததற்காக வேண்டி தவாப் செய்ய வேண்டும். அவர் விரும்பினால் அதனைத் தொடர்ந்து ஹஜ்ஜின் ஸயீயையும் நிறைவேற்றலாம். ஆனால் அவர் கட்டியுள்ள இஹ்ராம் ஆடையுடன் குர்பான் கொடுக்கும் நாள் வரை இருக்க வேண்டும். இது தொடர்பான விளக்கங்கள் பின்னர் கூறப்படும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.