புகழனைத்தும் படைத்தவன் அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களை அழகிய முறையில் துயரும் அனைவர் மீதும் உண்டாவதாக.
அறிமுகம் :
ரமழான் மாத இறுதியில் பெருநாள் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் தர்மமே ஸகாதுல் பித்ர் எனப்படுகின்றது. ஸகாதுல் பித்ர், ஸதகதுல் பித்ர், ஸகாது ரமழான் போன்ற பெயர்கள் நபிமொழிகளில் பிரயோகிப்பட்டுள்ளன. ஸகாதுல் பதன் (உடல் சம்பந்தப்பட்ட ஸகாத்) என்றும் இத்தர்மத்திற்குக் கூறப்படுகின்றது. ஏனெனில் ஆளை மையமாக வைத்தே இந்த ஸகாத் விதியாகின்றது. சொத்துக்களில் அல்ல. ஹிஜ்ரி 2ல் நோன்புடன் சேர்த்தே இதுவும் விதியாக்கப்பட்டது.
சட்டம் :
ஸகாதுல் பித்ர் ஒரு கடமையான வணக்கமாகும். ரமழானை அடைந்து ஷவ்வால் மாத தலைப்பிறையின் போது உயிருடன் இருக்கும் அனைவர் மீதும் இது கடமையாகும். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை,சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். (ஆதாரம் : புஹாரி 1503, முஸ்லிம் (983).
நோக்கம் :
இரண்டு பிரதான நோக்கங்களுக்காகவே இந்த ஸகாதுல் பித்ர் விதியாக்கப்பட்டுள்ளது :
1. நோன்பாளி சார்ந்
தது : நோன்பாளியை வீண் மற்றும் ஆபாசப் பேச்சுக்களிலிருந்து தூய்மைப் படுத்தல்.
2. சமூகம் சார்ந்தது : பெருநாள் தினத்தில் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதனால் ஏழைகளுக்கு உணவாகவும் இந்த தர்மம் விதியாக்கப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் ஸகாதுல் பித்ரைக் கடமையாக்கி, “நோன்பாளிகளின் வீண் மற்றும் ஆபாசப் பேச்சுகளைத் தூய்மைப்படுத்தும் முகமாகவும், ஏழைகளின் உணவாகவும் (ஸகாதுல் பித்ர்) உள்ளது. எவர் அதைப் பெருநாள் தொழுகைக்கு முன்பே செலுத்துகிறாரோ, அது (ஸகாதுல் பித்ராக) ஏற்றுக் கொள்ளப்பட்ட தர்மமாகும். எவர் அதைத் தொழுகைக்குப் பின்பு செலுத்துகிறாரோ, அது தர்மங்களில் ஒரு தர்மமாகும்” என்று கூறினார்கள். (ஆதாரம் : அபூ தாவூத் 1609, இப்னு மாஜஃ 1827).
விதியாகும் பொருட்கள் :
அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : நாங்கள் நபியவர்களின் காலத்தில் (ஸகாதுல் பித்ராக) ஒரு ஸாவு அளவு ஏதேனும் உணவையோ, ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாவு அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாவு அளவு உலர்ந்த திரட்சையையோ கொடுப்போம்.(ஆதாரம் : புஹாரி 1506, 1508, முஸ்லிம் 985).
மேற்கண்ட நபிமொழியில் ஸகாதுல் பித்ர் விதியாகும் பொருட்கள் சில கூறப்பட்டுள்ளன. இவற்றில் எதனைக் கொடுத்தாலும் நிறைவேறி விடும் என்பதே பல அறிஞர்களின் கருத்து. எனினும் மேற்கூறப்பட்ட பெருட்கள் நபியவர்களின் காலத்தில் பிரதான உணவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) கூறுகிறார்: “நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாவு உணவை தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும்தான் எங்களின் உணவாக இருந்தன”. (ஆதாரம் : புஹாரி 1510). எனவே எதைக் கொடுத்தால் ஸகாதுல் பித்ருடைய நோக்கம் நிறைவேறும் என்பதனைக் கவனித்தல் அவசியம். ஓர் ஊரின் பிரதான உணவைக் கொடுக்கும் போதே அதன் பயன்பாடு அதிகமாகும். அதனடிப்படையில் எமது நாட்டில் பெரும்பாலும் பிரதான உணவாக அரிசியே பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி வகைகளைத் தமது பிரதான உணவாகப் பயன்படுத்தும் வட துருவத்தில் வசிப்போர் அதிலிருந்தே அத்தர்மத்தை நிறைவேற்ற வேண்டும்.
சமைத்த உணவை வழங்கலாமா?
நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள ஸகாதுல் பித்ர் விதியாகும் பொருட்களை நோக்கினால் அவை அனைத்தும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு சேமித்து வைக்க முடியுமானவையாகவே உள்ளன. உணவை சமைத்து வழங்கும் போது அதிக நாட்கள் சேமிக்க முடியாத நிலையேற்படுகின்றது. எனவே தானியமாக வழங்குவதே ஏழைகளுக்கு அதிக பயனுள்ளதாக அமைகின்றது. மேலும் சமைத்த உணவைக் கொடுக்க முடியாதென்றோ, அல்லது நபியவர்களின் காலத்தில் அவ்வாறு கொடுத்ததாகவோ எவ்வித ஆதாரங்களும் வரவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் பயனாளிகளின் நலனைக் கருத்தில் கொள்வதே உகந்தது.
தானியத்துடன் வேறு பொருட்களையும் வழங்கலாமா?
ஸகாதுல் பித்ர் எமது பிரதான உணவாகிய அரிசி போன்றவற்றிலிருந்துதான் கொடுக்க வேண்டுமென்பதை நாம் முன்னர் கூறினோம். அதனுடன் சேர்த்து அன்றைய தினத்தில் பயன்படக்கூடிய ஏனைய உணவுப் பொருட்களையும் வழங்கலாமா? என்ற ஒரு கேள்வி எழலாம். அவ்வாறு வழங்குவது வரவேற்கத்தக்க விடயமாயினும் ஸகாதுல் பித்ருடைய அளவை விட மேலதிகமானதாகவே அவை இருக்க வேண்டும். ஸகாதுல் பித்ருக்குள் பிரதான உணவல்லாதவற்றை உட்படுத்த முடியாது. உதாரணமாக, ஸகாதுல் பித்ராக அரிசி வழங்கும் போது அதனுடன் சேர்த்து பருப்பு, பப்படம், கிழங்கு போன்றவற்றை வழங்குவதாக வைத்துக் கொள்வோம். இவற்றில் அரிசியுடைய அளவு ஸகாதுல் பித்ருடைய கடமையான அளவாகிய ஒரு ஸாவு இருக்க வேண்டும். அதற்கு மேலதிகமானதாகவே பருப்பு, கிழங்கு போன்றவை இருக்க வேண்டும். ஏனெனில் ஸகாதுல் பித்ராக பிரதான உணவைத்தான் வழங்க வேண்டுமென்பது மேற்கண்ட அபூ ஸஈத் அல்குத்ரீ (ரல) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
பணமாகக் கொடுக்கலாமா?
நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள பிரகாரம் ஸகாதுல் பித்ரைப் பொருளாக வழங்குவதே அடிப்படையாகும். இதுதான் சிறந்தது என்பதில் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்தில்லை. எனினும் அதனைப் பணமாக வழங்கலாமா? என்பதில் கருத்து வேறுபாடுள்ளது.
1. பொருளாக மாத்திரமே வழங்க முடியும் : இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுமுல்லாஹ்) ஆகியோரும் மற்றும் பலரும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.
முன்னர் கூறப்பட்ட இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) போன்றோர் அறிவிக்கும் நபிமொழிகளில் நபி (ஸல்) அவர்கள் உணவுப் பொருட்களையே கூறினார்கள். திர்ஹம், தீனார் போன்ற நாணயங்களைக் கூறவில்லை. நாணயங்களையும் அவ்வாறு கொடுக்க முடியுமென்றிருந்தால் அதனையும் கூறியிருப்பார்கள் என்பதே இவர்கள் முன்வைக்கும் பிரதான ஆதாரங்களில் ஒன்று. மேலும் நபியவர்களோ நபித்தோழர்களோ தங்களிடம் நாணயங்கள் புழக்கத்திலிருந்தும் ஸகாதுல் பித்ரைப் பணமாகக் கொடுத்ததாக சான்றுகள் இல்லை என்பது பெரும்பான்மை அறிஞர்களின் மற்றோர் ஆதாரம்.
2. பொருளாகக் கொடுப்பது சிறந்ததாயினும் பணமாகவும் கொடுக்கலாம் : இமாம்களான அபூ ஹனீபா, அஸ்ஸெளரீ, அல்புஹாரீ, இப்னு தைமியா (ரஹிமஹுமுல்லாஹ்) போன்றோர் இக்கருத்தின்பால் சாய்ந்துள்ளனர். இவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களில் பிரதானமானவை :
· (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக (அத்தௌபா : 103). இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள செல்வம் என்பது அடிப்படையில் தங்க, வெள்ளி நாணயங்களைத்தான் குறிக்கின்றது. அத்துடன் நபியவர்கள் குறிப்பிட்ட உணவுவகைகள் இலகுபடுத்திக் கொடுக்கவே அன்றி வரையறுக்கவல்ல.
· ஸகாதுல் பித்ரின் பிரதான நோக்கம் ஏழைகள் அந்நாளில் ஏனையோரிடம் கையேந்தாமல் தேவையற்றுவைப்பதுதான். பணமாகக் கொடுப்பதன் மூலமே அவ்வாறு தேவையற்று வைக்க முடியும். ஸகாதுல் பித்ர் பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழயின் சில அறிவிப்புக்களில் இடம்பெற்றுள்ள “அவர்களை இது போன்ற நாட்களில் கையேந்துவதை விட்டும் தேவையற்று வையுங்கள்” என்ற மேலதிகமான வார்த்தை இதனை உறுதி செய்கின்றது. (தாரகுத்னீ 2ஃ252).
அவசியத் தேவையோ அல்லது நிர்ப்பந்தமோ இல்லாத பட்சத்தில் பணமாக வழங்க முடியாதென்பதே வலுவான மற்றும் பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகவுள்ளது. ஏனெனில் ஸகாதுல் பித்ரில் நாணயங்கள் கொடுக்க முடியுமென்றிருந்தால் சாதாரண ஸகாத்தில் தங்கம், வெள்ளி நாணயங்களைக் குறிப்பிட்டது போன்று நபியவர்கள் இங்கும் குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு கூறப்படாத போது அவசியமின்றி நாணயங்களை ஸகாதுல் பித்ரில் வழங்காமலிருப்பதே சிறந்தது.
பணமாக வழங்குவதை அனுமதிப்போர் முன்வைக்கும் அல்குர்ஆன் வசனத்தில் கூறப்பட்டுள்ள செல்வம் என்பது நாணயங்களைக் குறிப்பிடுவது போன்று தானியங்கள், பழவகைகள் உள்ளிட்ட மனிதன் சொந்தமாக்கிக் கொள்ளும் அனைத்தையும் குறிக்கும். எனவே அவ்வசனத்தில் பொதுவாகக் கூறப்பட்டுள்ள சொத்தில் நபியவர்கள் ஸகாதுல் பித்ருக்கு பொருளை மாத்திரம் வரையறுத்ததாகவே எடுத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் அவர்கள் ஆதாரமாக முன்வைக்கும் நபிமொழியின் மேலதிக வார்த்தை பலவீனமானதாகும். அறிஞர்களான பைஹகீ, நவவீ, இப்னு ஹஜர் (ரஹ்) போன்றேர் இந்த மேலதிக வார்த்தை பலவீனமானதெனக் கூறியுள்ளனர். அதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூ மஃஷர் என்பவர் பலவீனமானவர் என இப்னு மஈன், அஹ்மத் பின் ஹன்பல், புஹாரி (ரஹ்) போன்றோர் கூறியுள்ளனர்.
அதுமட்டுமன்றி பணத்தால் எவ்வாறு தேவையற்று வைக்க முடியுமோ அதுபோன்று பொருளாலும் தேவையற்று வைக்கலாம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
விதியாகும் அளவு :
ஸகாதுல் பித்ர் ஒரு ஸாவு அளவுதான் கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஒரு ஸாவு என்பது 4 முத்துக்கள் ஆகும். ஒரு முத்து என்பது நடுத்தரமான ஒருவருடைய இரு கைகளையும் சேர்த்து அள்ளும் அளவாகும். இவை பண்டைய காலத்து அரபுமக்கள் பயன்படுத்திய அளவை முறையாகும். இவை ஊருக்கு ஊர் வித்தியாசப்படக் கூடியது. எனவே இப்னு உமர் (ரலி) அவர்கள் நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கும் நபிமொழியின் பிரகாரம் மதீனாவாசிகள் பயன்படுத்திய அளவை முறையையே நாமும் பின்பற்றவேண்டும். “நிறுவை என்றால் அது மக்காவாசிகளின் நிறுவையாகும். அளவையென்றால் அது மதீனாவாசிகளின் அளவையாகும். (ஆதாரம் அபூ தாவூத் 3340, நஸாஈ 2520).
தற்காலத்தில் ஸாவு, முத்து அளவுகள் பாவணையில் இல்லாததால் அதனை நிறுவைக்கு மாற்றி அதன் பிரகாரம் அக்கடமையை நிறைவேற்ற வேண்டும். எனவே ஒரு ஸாவு என்பது எத்தனை கிலோ கிராம் என்பதைக் கண்டறிய ஒரு முத்தின் நிறையை அறிவது அவசியமாகும்.
ஒரு முத்தின் சரியான நிறையை மதிப்பிடுவதில் அறிஞர்கள் பல முறைகளைக் கையாண்டுள்ளனர். அதன் விளைவாக பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் பிரதான ஓரிரு கருத்துக்களை மாத்திரம் இங்கு முன்வைக்கிறேன்.
மதிப்பீடு : 01
1 முத்து = 1.333 இறாத்தல்.
1 இறாத்தல் = 128.571 வெள்ளிக்காசு.
1 வெள்ளிக்காசு = 2.97 கிராம்.
1 இறாத்தல் - 2.97 × 128.571 = 381.855 கிராம்..
1 முத்து - 381.855 × 1.333 = 509 கிராம்.
1 ஸாவு - 509 × 4 = 2036 கிராம். (சுமார் 2040கிராம்).
மதிப்பீடு : 02
1 முத்து = 1.333 இறாத்தல்.
1 இறாத்தல் = 128.571 வெள்ளிக்காசு.
1 வெள்ளிக்காசு = 3.17 கிராம்.
1 இறாத்தல் - 3.17 × 128.571 = 407.570 கிராம்.
1 முத்து - 407.570 × 1.333 = 543.290 கிராம். (சுமார் 545 கிராம்)
1 ஸாவு - 545 × 4 = 2180 கிராம். (சுமார் 2200 கிராம்).
யாருக்கு கடமை?
ரமழான் மாதம் இறுதிநாளில் சூரியன் மறையும் போது யாரெல்லாம் முஸ்லிமாக உயிருடன் இருந்தார்களோ அவர்கள் அனைவர் மீதும் கடமையாகும். எனவே சூரியன் மறைந்த பின் ஒரு குழந்தை பிறந்தால் அல்லது ஒருவர் இஸ்லாத்தில் நுழைந்தால் அவருக்கு ஸகாதுல் பித்ர் கடமையாகமாட்டாது. அந்தப் பெருநாளில் தனக்கும் தன் செலவினத்தில் இருப்போருக்கும் தேவையான வசதிகள் இருக்க மீதமுள்ளவை ஒரு ஸாவு அளவிற்கு மேல் இருந்தால் அவர் மீது ஸகாதுல் பித்ர் கடமையாகும். அவரின் அத்தியாவசியத் தேவைபோக மீதி அரை ஸாவு அளவுதான் இருந்தாலும், “உங்களால் முடியுமானவரை நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்” என்ற வசனத்திற்றே;ப அதனைக் கொடுப்பது அவசியமாகும்..
ஒருவர் தனக்கும் தனது செலவிற்குக் கீழிருக்கும் தனது மனைவி, பிள்ளைகள், தாய் தந்தையர் அனைவருக்காகவும் ஒவ்வொரு ஸாவு வீதம் கொடுப்பது மிகச் சிறந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது பிள்ளைகள் அடிமைகள் அனைவருக்காகவும் கொடுப்பார்கள். (புஹாரி 1511). சிறுபிள்ளைகளுக்கு சொத்துக்கள் இல்லாததால் அவர்களது பொறுப்பாளர் மீது கடமையாகும். ஏனைய அனைவர் மீதும் அது தனிப்பட்ட ரீதியில் கடமையாகும். கருவிலிருக்கும் சிசுவிற்காகவும் ஸகாதுல் பித்ர் கொடுப்பது விரும்பத்தக்கதென அறிஞர்கள் கூறியுள்ளனர். நபித்தோழர்கள் அவ்வாறு வழங்கியதாக அறிவிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. (இப்னு அபீ ஷைபா 10362).
கடனாளி ஸகாதுல் பித்ர் வழங்க வேண்டுமா?
ஒருவர் கடன் கொடுக்க இருந்தால், கடன்காரர் அக்கடனை கேட்காதவரை ஸகாதுல் பித்ர் கொடுக்க வேண்டும். அவ்வாறு கடனைத் திருப்பிக்கேட்டால் கடனைக் கொடுத்து விட்டு மீதமிருந்தால் ஸகாதுல் பித்ர் கொடுக்க வேண்டும். எனவே இந்த ஒரு நிலையைத் தவிர கடன் ஒருபோதும் ஸகாதுல் பித்ரைத் தளர்த்தாது.
எப்போது வழங்க வேண்டும்?
ரமழான் மாத இறுதிநாள் சூரியன் மறைந்ததும் ஸகாதுல் பித்ர் கடமையாகிவிடுகின்றது. பெருநாள் தொழுகைக்கு முன் அதனை நிறைவேற்ற வேண்டும். தொழுகைக்குப் பின் கொடுத்தால் அது ஸகாதுல் பித்ராக அமையாது சாதாரண தர்மமாக மாறிவிடும். இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் நபிமொழியில் “அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்”. என்று இடம்பெற்றுள்ளது (ஆதாரம் : புஹாரி 1503, முஸ்லிம் (983). இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் நபிமொழியில் “எவர் அதைப் பெருநாள் தொழுகைக்கு முன்பே செலுத்துகிறாரோ, அது (ஸகாதுல் பித்ராக) ஏற்றுக் கொள்ளப்பட்ட தர்மமாகும். எவர் அதைத் தொழுகைக்குப் பின்பு செலுத்துகிறாரோ, அது தர்மங்களில் ஒரு தர்மமாகும்” என்று கூறினார்கள்”. (ஆதாரம் : அபூ தாவூத் (1609), இப்னு மாஜஃ 1827). பெருநாளுக்கு ஓரிரு தினிங்கள் முன்னதாகவும் கொடுக்கலாம். இப்னு உமர் (ரலி) போன்ற சில நபித்தோழர்கள் அவ்வாறு வழங்கியுள்ளனர். (புஹாரி 1511). குறிப்பாக நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் போது அவ்வாறு ஓரிரு தினங்களுக்கு முன் வழங்கினால் அதனை விநியோகிக்கப் போதுமானளவு நேரம் கிடைக்கும்.
யாருக்கு வழங்க வேண்டும்?
சாதாரண ஸகாத் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள 8 கூட்டத்தினருக்குள் வழங்க வேண்டும். ஸகாதுல் பித்ரும் அவ்வாறுதான் வழங்க வேண்டுமா? அல்லது மிஸ்கீன், பகீர் எனப்படும் ஏழை எளியவர்களுக்கு மாத்திரம்தான் வழங்க வேண்டுமா? என்பதில் கருத்து வேறுபாடுள்ளது. “நோன்பாளிகளின் வீண் மற்றும் ஆபாசப் பேச்சுகளைத் தூய்மைப்படுத்தும் முகமாகவும், ஏழைகளின் உணவாகவும் (ஸகாதுல் பித்ர்) உள்ளது” என்ற நபிமொழிக்கிணங்க ஸகாதுல் பித்ரை ஏழைகளுக்குதான் வழங்க வேண்டும் என்று பல அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
வெளிநாட்டில் வசிப்போர் எங்கு வழங்க வேண்டும்?
ஸகாதுல் பித்ர் வழங்குபவர் அது கடமையாகும் நேரத்தில் எந்த ஊரிலே இருக்கிறாரோ அங்கு வழங்குவதுதான் அடிப்படை. நபி (ஸல்) அவர்கள் முஆஸ் (ரலி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பும் போது போதித்த விடயங்களில் பின்வருவனவும் உள்ளடங்குகின்றது : “நிச்சயமாக அல்லாஹ் அவர்களது சொத்திலிருந்து ஒரு தர்மத்தைக் கடமையாக்கியுள்ளான். அது அவர்களுடைய செல்வந்தர்களிலிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கப்படும் என நீர் அவர்களுக்கு அறிவித்துக் கொடுங்கள்”. (புஹாரி 1395, முஸ்லிம் 19). எனவே வெளிநாட்டிலுள்ளவர்கள் ரமழான் காலத்தில் அங்கிருந்தால் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்புவதை விட அவர்கள் இருக்கும் இடத்திலேயே வழங்குவதுதான் சிறந்தது என்பதில் அனைத்து அறிஞர்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனினும் தமது சொந்த நாட்டிற்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்பி விநியோக்கலாமா? என்பதில் கருத்து வேற்றுமையுள்ளது. பெரும்பான்மையான அறிஞர்கள் மேற்கண்ட நபிமொழிக்கிணங்க தாம் இருக்குமிடத்திலேயே விநியோகிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் ஸகாதுல் பித்ரை வேறு ஊர்களுக்கும் அனுப்பி விநியோகிக்கலாம் என்ற கருத்திலுள்ளனர். அதனடிப்படையில் வெளிநாட்டிலுள்ளோர் தாம் விரும்பினால் வெளிநாட்டிலும் வழங்கலாம். (அதுதான் சிறந்தது). அல்லது தமது சொந்த நாடுகளுக்கும் அனுப்பலாம். எனினும் ஸகாத் பெறத் தகுதியானவர்களுடைய நலனையே இங்கு நாம் கவனிக்கவேண்டியுள்ளது. தான் இருக்கும் இடத்திலுள்ள வறியவர்களை விட தனது சொந்த ஊரிலுள்ள வறியவர்கள் அதிக தேவையுடையோராக இருந்தால், குறிப்பாக தனது உறவினர்களில் இருந்தால் தனது நாட்டில் நிறைவேற்றுவது கூடும் என்ற தீர்ப்பை அஷ்ஷேஹ் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்), மற்றும் சில தற்கால அறிஞர்கள் வழங்கியுள்ளார்கள்.
வெளிநாட்டிலுள்ள ஒருவருக்காக இலங்கையில் ஸகாதுல் பித்ர் வழங்க விரும்பினால் வெளிநாட்டிலுள்ளவரின் பெருநாளையே கவனத்திற் கொள்ள வேண்டும். அவர் அங்கு பெருநாள் தொழுகைக்காகச் செல்லுமுன் நாம் இங்கு அதனை நிறைவேற்றிவிட வேண்டும். ஏனெனில் நாம் நிறைவேற்றுவது வெளிநாட்டிலுள்ளவரின் கடமையை. எனவே அவருடைய பெருநாள் தினத்தையே கவனத்திற்கொள்ள வேண்டும்.
நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாமா?
ஸகாதுல் பித்ரை நம்பிக்கையான ஒரு நிறுவனத்திடமும் ஒப்படைக்கலாம். பணமாகவோ அல்லது பொருளாகவோ நாம் அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆனால் பொருளாகவே விநியோகிக்கப்படல் வேண்டும். இஸ்லாமிய அரசாங்கத்தால் ஸகாத் வசூலிக்கவும் விநியோகிக்கவும் நியமிக்கப்பட்டுள்ள ஸ்தாபனங்கள் அரசாங்க விதிமுறைகளுக்கேற்ப மக்கள் நலனைக் கருதி பெருநாள் தொழுகைக்கு முன்னரோ அல்லது பின்னரோ அவற்றை விநியோகிக்கும். தனியார் நிறுவனங்கள் ஸகாதுல் பித்ரை பெருநாள் தொழுகைக்கு முன் விநியோகித்து விடவேண்டும். ஏனெனில் இஸ்லாமிய அரசாங்கம் ஸகாத் வழங்குவோர், பெறுவோர் இரு தரப்புக்கும் பகரமாக செயற்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனங்கள் ஸகாத் வழங்குவோருக்குப் பகரமாக மாத்திரமே செயற்படுகின்றன. அதனால் அவர்களுக்கு பெருநாள் தொழுகையைக்கான விநியோகிப்பதைத் தாமதப்படுத்த முடியாது.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் நாடுகளில் ஸகாத் அமைப்புக்கள் அல்லது நலன்புரிச் சங்கங்கள் ஸகாதுல் பித்ர் வசூலித்து விநியோகிப்பதில் ஈடுபட்டால் அவை நம்பிக்கையானதாக இருக்கும்பட்சத்தில் அவற்றிடம் எமது ஸகாதுல் பித்ரை ஒப்படைப்பது சிறந்தது. ஏனெனில் அவ்வமைப்புக்கள் சிறப்பாக செயற்படுமிடுத்து எமது ஸகாதுல் பித்ர் உரியவர்களுக்குத்தான் சென்றடைந்திருக்கின்றது என்ற திருப்தி ஏற்படுகின்றது.
நபியவர்களின் காலத்திலும் கூட்டு விநியோக முறை ஸகாதுல் பித்ரில் கடைபிடிக்கப்பட்டுள்ளதை நாம் அபூ ஹ{ரைரா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஸகாதுல் பித்ருக்குக் காவல் நிற்கும் பொறுப்பை சுமத்தியதன் மூலம் புரிந்து கொள்ளலாம். (புஹாரி2311).
எல்லாம் வல்ல இறைவன் எமது நோன்புகளையும் தர்மங்களையும் ஏற்பானாக.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.