عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ: إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ، وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ، وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ، وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللهَ فَسَمِّتْهُ، وَإِذَا مَرِضَ فَعُدْهُ وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ" ( أخرجه مسلم 282 )
ஹதீஸின் பொருள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு கடமைகள் உள்ளன. நீ அவனைச் சந்திக்கும் போது ஸலாம் சொல்வது, அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது), அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது, அவன் தும்மி அல்ஹம்து லில்லாஹ் என்று கூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதிலளிப்பது, அவன் நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது, அவன் மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது போன்றனவாகும்.
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
ஆதாரம் : முஸ்லிம் 282
ஹதீஸின் சாராம்சம்
இஸ்லாம்; நேசம், விருப்பம், சகோதரத்துவம் போன்றவற்றை ஆர்வமூட்டக் கூடிய மார்க்கமாகும். எனவே இக்குறிக்கோளுக்கான சகல வழிகளையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை முஸ்லிம் சமுகத்திலுள்ள தனிநபர்களுடைய கடமைகளை நிறைவேற்றுவதாகும்.
அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது, அவர்கள் அழைக்கும் (அனுமதிக்கப்பட்ட) விருந்துகளுக்கு பதிலளிப்பது, ஆலோசனை கேட்கும் போது சரியான ஆலோசனை வழங்குவது, தும்மிவிட்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அதற்கு பதில் பிரார்த்தனை செய்வது, நோய்வாய்ப்பட்டால் அவரை நோய் விசாரிக்க செல்வது, மரணித்தால் ஜனாஸாவைப் பின்தொடர்வது போன்றன முக்கியமான கடமைகளாகும். மேற்கண்ட நபிமொழி இக்கடமைகளை எமக்கு போதிக்கின்றது.
ஹதீஸின் படிப்பினைகள்
1. ஸலாம் என்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களுள் ஒன்று. ஆதம் (அலை) அவர்களைப் படைத்த போது அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த முதலம்சம் ஸலாமாகும். இரு முஸ்லிம்களுக்கிடையே, இரு உள்ளங்களுக்கிடையே நேசம், பிணைப்பு, சகோதரத்துவம் உருவாகுவதற்குரிய பாலமாக அல்லாஹ் ஸலாத்தை வைத்துள்ளான். அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ என்பதே முழுமையான ஸலாமாகும்.
2. ஸலாத்தை முதலில் ஆரம்பிப்பது ஸூன்னாவாகும். அதற்கு பதிலளிப்பது தனிநபர் மீது கட்டாயக் கடமையாகும். கூட்டமாக இருக்கும் போது பர்ழு கிபாயாவாகும். எனினும் காபிர்களுக்கு நாம் முதலில் ஸலாம் சொல்லக் கூடாது.
3. விருந்துக்கு அழைத்தல் என்பது பொதுவான ஒரு சொல். அது வலீமாவாக இருந்தால் பதிலளிப்பது அவசியமாகும். ஏனைய விருந்துகளுக்கு செல்வது சுன்னாவாகும். இவற்றில் மார்க்கத்திற்கு முரணாக எதும் நடைபெறுகின்ற போது அவற்றுக்கு செல்வது கூடாது.
4. உங்களிடத்தில் ஒருவர் ஆலோசனை கேட்டு வந்தால் அவருக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவது கடமையாகும். அது வழங்குபவரின் சக்தியைப் பொறுத்து அமையும். முஸ்லிம்களின் ஈருலக நலன்களுக்காக வழிகாட்டுவதும், அதற்காக உதவுவதும், அவர்களுடைய குறைகளை மறைப்பதும், அவர்களோடு கணிவாக நடந்து கொள்வதும், சிறியோருக்கு இரக்கம் காட்டுவதும், பெரியோரை மதிப்பதும் அவர்களுக்கு நாம் செய்யும் நலவுகளிலடங்குகின்றன.
5. தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொன்னால் அதனைக் கேட்பவர் 'யர்ஹமுகல்லாஹ்' என்று சொல்வது கடமையாகும். தும்மியவர் அவ்வாறு கூறவில்லையெனில் நாமும் அதற்கு பதில் கூறலாகாது. சிறார்களுக்கு அதனை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். இரண்டாம் மூன்றாம் தடவைகள் தும்மினாலும் அதே பதிலை நாம் சொல்ல வேண்டும். நான்காவது தடவை தும்மினால் அவருடைய ஆரோக்கியத்திற்காகப் பிரார்த்திக்க வேண்டும்.
6. ஒரு முஸ்லிம்; நோயாளியை நோய் விசாரிப்பது ஸூன்னாவாகும். அது கடமை என்று கூறும் அறிஞர்களும் உள்ளனர். காபிரை நோய் விசாரிப்பதும் அனுமதிக்கப்பட்ட ஒன்று. எனினும் அதன் மூலம் இஸ்லாத்தில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அவரைச் சென்று விசாரிப்பது மிகச் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதச் சிறுவன் மற்றும் அபூ தாலிப் ஆகியோரை நோய் விசாரிக்கச் சென்றுள்ளார்கள்.
7. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது ஸுன்னாவாகும், அது மரணித்தவருக்கு ஏனையோர் செய்ய வேண்டிய கடமையாகும், இச்சந்தர்ப்பத்தில் மறுமை பற்றிய சிந்தனையுடன் மௌனமாகவே செல்ல வேண்டும். சத்தமிட்டுக் கலிமாக்கள் சொல்வதோ, ஏனைய திக்ருகள் கூட்டாகச் செய்வதோ நபிவழியல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஜனாஸாவைப் பின்தொடர்வதானது ஆண்களுக்கு மட்டுமான ஒரு ஸுன்னா என்பதும் குறிப்பிடத்தக்கது.
வினா இல - 17
ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமைகள் ஆறையும் குறிப்பிடுக?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.