நபிக்குத் தவறாத வித்ருத் தொழுகை | பகுதி 02 || Sheikh M.Ahmedh (Abbasi,Riyadhi) M.A Reading


வித்ரில் குனூத் உண்டா? 

வித்ரில் ஓதப்படும் குனூத்தைப் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன : 

1. வருடம் முழுவதும் வித்ரிலே குனூத் ஓதுவது அவசியமென்ற கருத்தை இமாம் அபூ ஹனீபா (ரஹ்) கொண்டுள்ளார்கள். ஆனால் அவரது மாணவர்களாகிய அபூ யூஸுப், முஹம்மத் பின் ஹஸன் ஆகியோர் இது ஸுன்னா என்ற கருத்திலே உள்ளனர். 

2. வித்ரிலே குனூத் இல்லை, அது பற்றி வந்துள்ள செய்திகள் ஆதாரமற்றவை என்ற கருத்திலே மாலிகிய்யாக்கள் உள்ளனர். 

3. ரமழானில் 15க்குப் பின் குனூத் ஓத வேண்டுமென்ற கருத்தை ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் கொண்டுள்ளனர். முழு ரமழானிலும் ஓத வேண்டும், வருடம் முழுவதும் ஓத வேண்டும் என வேறு இரு கருத்துக்களும் இவர்களிடம் உள்ளன. 

4. வருடம் முழுவதும் குனூத் ஓதுவது ஸுன்னா என்ற கருத்தில் ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தவர்கள் உள்ளனர். 

மேற்கண்ட அனைத்துக் கருத்துக்களுக்கும் பிரதான அடிப்படையாகத் திகழ்வது இரண்டு நபிமொழிகளும் மற்றும் சில நபித்தோழர்களது செயற்பாடுகளும்தான். 

1. "நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுது, ருகூஃவுக்கு முன்னால் குனூத் ஓதுவார்கள்" என்று உபைய் பின் கஃப் (ரலி) அறிவிக்கின்றார்கள். (நஸாஈ 1699, இப்னுமாஜாஃ 1182). 

2. நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களுக்கு வித்ரிலே ஓதும்படி கூறிய குனூத். (அஹ்மத் 1718, அபூதாவூத் 1425, திர்மிதீ 464, நஸாஈ 1745,). 

இங்கு நாம் சில விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். 

1. நபி (ஸல்) அவர்கள் அவர்களுடைய இரவுத்தொழுகையை அதிகமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர். குறிப்பாக ஆஇஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்றோர் நபியவர்களின் இரவுத்தொழகை பற்றி எத்தனை ரக்அத்கள்? அதனை எவ்வாறு தொழுவார்கள்? போன்ற அனைத்தையும் கூர்மையாக அவதானித்து அறிவித்தவர்கள். இவர்களில் யாரும் நபியவர்கள் வித்ரில் குனூத் ஓதியதாக அறிவிக்கவில்லை. அவ்வாறு நபியவர்கள் ஓதியதாக எந்தவொரு ஸஹீஹான அறிவிப்பும் இடம்பெறவில்லை என்று இமாம்களான அஹ்மத் பின் ஹன்பல், இப்னுஹுஸைமா, இப்னுல் கய்யிம் போன்றோர் கூறியுள்ளனர். மேற்கூறிய உபைய் பின் கஃப் (ரலி) அவர்களுடைய அறிவிப்பு மாத்திரம் தான் இவ்விடயத்தில் சில அறிஞர்களிடத்தில் ஸஹீஹானதாகப் பார்க்கப்படுகின்றது. இதிலும் கூட விமர்சனமுள்ளது. 

2. நபியவர்கள் ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகத்தான் மற்ற செய்தி இடம்பெற்றுள்ளது. இதிலும் கூட “வித்ருடைய குனூத்தில்” என்ற சொல் எல்லா அறிவிப்புக்களிலும் இடம்பெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் அறிவிப்பாளர் வரிசையிலுள்ள புரைத் பின் அபீ மர்யமிடமிருந்து பலர் இச்செய்தியை செவிமடுத்துள்ளனர். அதில் ஷுஃபா பின் ஹஜ்ஜாஜ் என்பவரே மிக வலுவான, நம்பகமான, நினைவாற்றலுள்ள அறிவிப்பாளராகத் திகழ்கின்றார். அவர் அறிவிக்கும் இச்செய்தியில் இந்த துஆ பொதுவாக கற்றுக் கொடுக்கப்பட்டதாகத் தான் உள்ளது. “வித்ருடைய குனூத்தில்” என்பது மேலதிகமாக சேர்த்தப்பட்ட வார்த்தை என்பது ஹதீஸ் விமர்சகர்களுடைய கருத்தாகும். 

3. ஒரு வாதத்திற்காக மேற்கண்ட இரு நபிமொழிகளையும் விமர்சனத்துக்கப்பாற் பட்டதாக எடுத்துக் கொண்டாலும், நபியவர்கள் தொடராக இவ்வாறு செய்து வந்ததாக இதனை எடுக்க முடியாது. சில சந்தர்ப்பங்களில்தான் ஓதியுள்ளார்கள். தொடராக ஓதியிருந்தால் ஆஇஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) போன்ற நபியவர்களின் இரவுத்தொழுகையை உன்னிப்பாக அவதானித்தவர் கள் இதனையும் கூறியிருப்பார்கள். 

4. உமர் (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), மற்றும் பல நபித்தோழர்கள் வித்ரில் குனூத் ஓதியதாகப் பல ஸஹீஹான அறிவிப்புக்கள் உள்ளன. 

5. ரமழானின் 15க்குப் பின் இப்னு உமர் (ரலி) அவர் குனூத் ஓதியதாக சில அறிவிப்புக்கள் உள்ளன. 

6. ரமழான் முழுவதுமோ, அல்லது பின்பகுதியிலோ தொடர்ச்சியாக வித்ரில் குனூத் ஓதுவதற்குப் பலமான சான்றுகள் போதாது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். ரமழான் மாத்திரமின்றி ஏனைய காலங்களிலும் இடையிடையே குனூத் ஓதினால் பரவாயில்லை. ஆனால் தொடர்ச்சியாக ஓத இன்னும் வலுவான ஆதாரங்கள் தேவை. 

7. குனூத் ஓதுவதாக இருந்தால் ருகூஃவிற்கு முன்னரும், பின்னரும் இரு விதமாகவும் ஓதலாம். பெரும்பான்மையான நபிமொழிகளில் ருகூஃவிற்குப் பின்னர் என்பதாகத் தான் இடம்பெற்றுள்ளது. 

8. இயன்றளவு அல்குர்ஆன், நபிமொழிகளில் வந்துள்ள துஆக்களைத் தான் கேட்கவேண்டும். மஃமூம்களுக்கு இடைஞ்சலாகும் வகையில் அதிக நேரம் நீட்டுவதும் கூடாது. இன்று அரபுநாடுகளில் பல பள்ளிவாயில்களில் இவ்வாறு நடைபெறுவது ஸுன்னாவுக்கு முழுமையான மாற்றம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். 

9. வித்ரின் இறுதியில் “அல்லுஹம்ம இன்னீ அஊது பிரிழாக்க மின் ஸகதிக, வபி முஆபாதிக மின் உகூபதிக, வபிக மின்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த கமா அஸ்னைத்த அலா நப்ஸிக்க” என்ற துஆவை நபியவர்கள் ஓதுவார்களென அலீ (ரலி) அறிவிக்கின்றார்கள். (அஹ்மத் 751, அபூதாவூத் 1427, திர்மிதீ 3566, நஸாஈ 1747, இப்னு மாஜாஃ 1179). இதனை எச்சந்தர்ப்பத்தில் ஓதுவார்கள் என்று இதில் இடம்பெறவில்லை. எனினும் முஸ்லிமில் (486) இடம்பெறும் ஆஇஷா (ரலி) அவர்களின் செய்தியில் ஸுஜுதிலாகத் தான் இருக்க வேண்டுமென்பதற்கான சான்றுள்ளது. 

வித்ருத் தொழுகைக்குப் பின் வேறு நபில் தொழலாமா? 

"உங்களது இரவுத்தொழுகையில் இறுதியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி 998, முஸ்லிம் 751), இந்நபிமொழியின் அடிப்படையில் எமது இரவுத்தொழுகையில் இறுதியாக வித்ர் தொழ வேண்டுமென்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. எனினும் நபியவர்களுடைய இந்த கட்டளை கடமையைக் குறிப்பதா? அல்லது விரும்பத்தக்கதா? என்று பார்க்கும் போது இது விரும்பத்தக்கது என்பதை பிற நபிமொழிகள் மூலம் புரிந்து கொள்ளலாம். வித்ரை இறுதியாகத் தொழுவதுதான் மிகச் சிறந்தது. எனினும் இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. ஒருவர் இரவின் ஆரம்பத்தில் வித்ரு தொழுதுவிட்டுத் தூங்கிப் பின் பஜ்ருக்கு முன் விழித்தால் அவருக்கு மேலதிகமாகத் தொழலாமா? என்பதுதான் அக்கேள்வி. நபியுடைய இந்த ஏவல் கடமையைக் குறிப்பதாக இருந்தால் வித்ருக்குப் பின் பஜ்ரு அதான் வரை வேறு எதுவும் தொழ முடியாது. விரும்பத்தக்கது என்று வைத்துக் கொண்டால் விழித்ததன் பின் இரட்டையாக பஜ்ரு வரை தொழலாம். இதுவே வலுவான கருத்தாகும். வித்ரு இரவின் கடைசிப் பகுதியில் தொழுவது சிறப்பாக இருந்தாலும் ஆரம்பத்தில் தொழுதவர் மீண்டும் இரட்டையாகத் தொழுவதில் தவறேதுமில்லை. அதற்கு ஆதாரமாகப் பின்வரும் நபிமொழிகளைக் கூறலாம் : 

1. "நபி (ஸல்) அவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுவார்கள். முதலில் 8 ரக்அத்கள் தொழுதுவிட்டு பின்னர் வித்ர் (5 ரக்அத்கள்) தொழுவார்கள். பின்னர் உட்கார்ந்து கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள், ருகூஃ செய்யும் போது எழுந்து ருகூஃ செய்வார்கள். பின்பு அதானுக்கும் இகாமத்திற்குமிடையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்" என்று ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள். (முஸ்லிம் 738) 

2. "நிச்சயமாக இந்தப் பிரயாணம் களைப்பும், சிரமமும் நிறைந்தது. உங்களில் ஒருவர் வித்ரு தொழுது விட்டால் இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளட்டும். அவர் விழித்தால் (மீண்டும் தொழுது கொள்ளலாம்), இல்லாவிடில் இவ்விரு ரக்அத்களும் ஈடாக அமையும்" என்று நபி (ஸல்) கூறிய செய்தி ஸெளபான் (ரலி) அவர்கள் வாயிலாக பலமான அறிவிப்பாளர் வரிசையுடன் இடம்பெற்றுள்ளது. (தாரிமீ 1635, பஸ்ஸார் 4193, இப்னு குஸைமா 1106, இப்னு ஹிப்பான் 2577, தப்ரானீ 1410, தாரகுத்னீ 1681). 

எனினும் நபியவர்கள் இவ்வாறு தொடராகத் தொழுததாக இடம்பெறவில்லை. இது போன்ற நிலைகளில் வித்ருக்குப் பின் தொழ அனுமதியுண்டு என்பதையே சுட்டிக் காட்டியுள்ளார்கள். அவ்வாறில்லாவிடில் "உங்களது இரவுத்தொழுகையில் இறுதியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்" என்ற நபிமொழிக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். எனவே இதனையே தொடர்ந்து கடைபிடிக்காமல், நாம் இதனை ஓர் அனுமதியாகவே எடுத்து, இரவின் இறுதிப்பகுதியிலேயே எமது வித்ரை ஆக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். 

அவ்வாறே வித்ரை தூங்க முன் தொழுத ஒருவருக்கு இரவின் பிற்பகுதியில் விழிப்பு ஏற்பட்டால் அவர் ஏதும் தொழுவது ஸுன்னாவுக்கு முரண் எனக் கருதுவதும் பிழையாகும். 

ஒரே இரவில் இரு வித்ருகள் இல்லை 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒரே இரவில் இரு வித்ருத் தொழுகைகள் இல்லை". (அஹ்மத் 16289, அபூ தாவூத் 1439, திர்மிதீ 470, நஸாஈ 1679). இதனடிப்படையில் ஒரே இரவில் இரு வித்ருத் தொழுகைகள் தொழ முடியாது. ஆரம்பத்தில் வித்ருத்தொழுத ஒருவர் மீண்டும் விழித்தால் இரட்டையாகத் தொழ வேண்டமென்பதுதான் பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. அதில் அபூ பக்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி), தல்க் பின் அலீ (ரலி), ஸஈத் பின் முஸய்யிப், இப்ராஹீம் அந்நகஈ மற்றும் நான்கு இமாம்கள் பிரதானமானவர்கள். உஸ்மான் (ரலி), அலீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), முஹம்மத் பின் ஸீரீன் போன்றோர் "உங்களது இரவுத்தொழுகையில் இறுதியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்" என்ற நபிமொழிக்கமைய வித்ரை முறித்து விட்டு இரண்டிரண்டாகத் தொழுதுவிட்டு இறுதியில் மீண்டும் வித்ருத் தொழலாம் என்ற கருத்திலுள்ளனர். வித்ரை முறிப்பதென்பது ஏற்கனவே தொழுத ஒரு ரக்அத்தை இரட்டையாக்குவதற்காக மீண்டும் தனியாக ஒரு ரக்அத் தொழுவதைக் குறிக்கும். நாம் மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் இரு முறை வித்ருத் தொழவும் முடியாது. முன்னர் தொழுத வித்ரை முறிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. விரும்பியவாரு இரட்டையாகத் தொழுது கொள்ளலாம். இவ்வாறு வித்ரை முறிப்பவர்களை ஆஇஷா (ரலி வித்ருடன் விளையாடுபவர் என்று விமர்சித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

வித்ருத் தொழுகை தவறியவர் என்ன செய்ய வேண்டும்? 

வித்ருத் தொழ மறந்தவர் அல்லது தூங்கியவர் நினைவு வந்ததும் அல்லது விழித்ததும் ஸுபஹுத் தொழ முன்னர் தொழுது கொள்ள வேண்டும். நபி (ஸல்) கூறினார்கள் : "தனது வித்ரைத் தொழாமல் தூங்கியவர், அல்லது மறந்தவர் நினைவு வந்ததும் அதனைத் தொழுது கொள்ளட்டும்" (அபூதாவூத் 1431, அஹ்மத் 11265), அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி வலுவானதெனப் பல ஹதீஸ்கலை விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதே கருத்தை இப்னு அப்பாஸ் (ரலி), அதாஃ பின் அபீ ரபாஹ், மஸ்ரூக், ஹஸனுல் பஸரீ, இப்ராஹீம் அந்நகஈ போன்ற நபித்தோழர்களும், தாபிஈன்களில் சிலரும் ஆதரித்துள்ளனர். அத்துடன் இக்கருத்தை இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் ஆகியோரும் கொண்டுள்ளனர். இதில் வேறு சில கருத்துக்களுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனினும் சூரியன் உதயமாகி விட்டால் இரட்டையாக அதனைக் கழாச்செய்வதே நபிவழியாகும். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "நபியவர்களுக்கு தூக்கமோ, களைப்போ மிகைத்து இரவுத் தொழுகை நிறைவேற்ற முடியாமல் போனால் அதனைப் பகலில் 12 ரக்அத்களாக நிறை வேற்றுவார்கள்". (முஸ்லிம் 746). ஒருவர் வேண்டுமென்றே பஜ்ரு உதயமாகும் வரை வித்ரு தொழாமலிருந்தால் அவருக்குக் கழாச் செய்ய முடியாதென்பதே அநேகமான அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில் முன்னர் குறிப்பிட்ட நபிமொழியில் மறதியும், தூக்கமும் தான் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன. 

எனவே நபியவர்கள் விடாமல் தொழுது வந்த இத்தொழுகையை நாமும் ரமழானில் மாத்திரமன்றி ஏனைய காலங்களிலும் கடைபிடித்து அதற்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ள நன்மைகளைப் பெற முயற்சிப்போமாக.

முற்றும் 

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget