அன்பின் இஸ்லாமிய உறவுகளே!
சென்ற வாரம் நமது முஸ்லிம் உறவுகள் சிங்கள பேரினவாதிகளால் அநியாயமான முறையில் தாக்கப்பட்டு, தமது சொத்து செல்வங்களை எல்லாம் இழந்து, இன்று அனாதரவாக்கப்பட்டுள்ள நிலைமையை நாம் அனைவரும் அறிந்ததே. பாதிக்கப்பட்டுள்ள நம் உறவுகளை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப கொண்டு வருவது நம் அனைவரதும் கட்டாய கடமையாகும். அன்று, மக்கா முஸ்லிம்கள் இஸ்லாத்துக்காக தமது சொத்து செல்வங்களை எல்லாம் இழந்து, வெறுங்கையோடு மதீனா நகர் நோக்கி (ஹிஜ்ரத்) வந்த போது அன்சாரிகளால் (மதீனா முஸ்லிம்களால்) தமது செல்வங்களிலிருந்து ஒரு பகுதி எவ்வாறு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதோ, அதே போல் நாமும் நமது சொத்து செல்வங்களிலிருந்து ஒரு சிறு பகுதியையேனும் பாதிக்கப்பட்ட நமது சகோதர உறவுகளுக்கு கொடுத்து உதவ முன்வர வேண்டும். இதுவே இஸ்லாம் நமக்கு காட்டித் தந்துள்ள அழகிய வழி முறையாகும்.
அந்த வகையில் நாம் இங்கு இஸ்லாத்தின் பார்வையில் தர்மம் (சதகா) செய்வதன் சிறப்புக்களையும், ஒழுங்கு முறைகளையும் சுருக்கமாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்!
ஸதகா (தர்மம்) செய்வதன் சிறப்பு
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பேரீச்சம் பழத்தின் சிறிய துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” நூல் : [புஹாரி : 6539]
ஸதகா செய்பவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான் : “அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது : உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான். (2:265)
அபு மஸ்வூத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
தர்மம் பற்றிய இறைவசனம் அருளப்பட்டதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அப்போது ஒருவர் அதிகப் பொருளைத் தர்மம் செய்தார். மக்கள், 'அவர் பிறர் பாராட்ட வேண்டுமென்று செய்கிறார் ' எனக் கூறினார்கள். பிறகு இன்னொருவர் ஒரு ஸாவு தானியங்களைத் தர்மம் செய்தார். அப்போது மக்கள் 'இவரின் ஸாவு (குறைந்த அளவு தானியம்) அல்லாஹ்வுக்குத் தேவையில்லை' எனக் கூறலானார்கள். அப்போது இறைவன் அல்லாஹ் தஆலா பின்வரும் வசனத்தை இறக்கி வைத்தான்; “ இவர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.” [குர்ஆன் 9:79] நூல்: [புஹாரி: 1415]
ஏழ்மையில் வாழ்ந்த சஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தொழில் தேடி சம்பாதித்து தர்மம் செய்கின்ற அளவுகுக்கு ஈமானை பலப் படுத்தியுள்ளார்கள். தங்கள் வறுமைக்கு காரணம் கூறி வீட்டில் முடங்கி விட வில்லை. செல்வத்தால் தரமம் செய்ய முடியாவிட்டால் உடல் உழைப்பின் மூலமாவது ஒத்து ழைப்புகள் வழங்கி உதவி செய்வதும் தர்மமாகும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
பகிரங்கமாகத் ஸதகா (தர்மம்) செய்தல் :
அல்லாஹ் கூறுகிறான்: “யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” [குர்ஆன் 2:274]
அல்லாஹ் கூறுகிறான்: தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். [குர்ஆன் 2:271]
இரகசியமாக ஸதகா (தர்மம்) செய்தல் :
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலின் கீழ் ஏழுபேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள் :
1) நீதிமிக்க அரசன்.
2) அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
3) பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
4) அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்,
5) அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்’ எனக் கூறியவன்.
6) தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்,
7) தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), [நூல் புஹாரி :1423]
ஸதகா (தர்மம்) செய்யத் தூண்டுவதும் அதற்காகப் பரிந்துரைப்பதும் :
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும் படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக்கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்' எனக் கூறினார்கள். [நூல் புஹாரி :1432]
இயன்றளவு ஸதகா (தர்மம்) செய்தல்:
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக் கொள்வான். (எனவே,) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி), [நூல் புஹாரி :1434]
இருப்பவற்றில் நல்லதையே ஸதகா (தர்மம்) செய்ய வேண்டும்
அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.” [குர்ஆன் 3:92
மேலே கூறிய வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் (ரழி) பின்வருமாறு கூறுகிறார்கள்.
பேரீச்ச மரத்திலிருந்து பேரீச்சம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்துக் கொண்டு வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்க விடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள். ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்ட மான காய்ந்த பேரீச்சம் குலையைத் தொங்க விட முற்பட்டார். அது அனுமதிக் கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார். (அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு) அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.
(நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).
(நூல்: இப்னு மாஜா தப்ஸீர் இப்னு கஸீர்).
செய்த தர்மத்தை சொல்லிக் காட்டல் நன்மைகளை அழித்து விடும் :
அல்லாஹ் கூறுகிறான்: “நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அப்படிச் செய்பவனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த தானத்திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.”
[குர்ஆன் 2:264]
Asshaik Muhammadh Abu Khalidh (Noori, Riyadhi) B.Com Reading
Al-Imam Muhammad Ibn Saud Islamic University - Riyadh
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.