November 2017


சஊதி அரேபியாவில் அமைந்துள்ள அல் மஜ்மஃ பல்கலைக்கழகத்திற்கு 1439/1440 ம் ஹிஜ்ரி ஆண்டிற்கான புலமைப் பரிசில் மூலம் உயர் கல்வியைத் தொடர்வதற்கு சஊதி அரேபியா தவிர்ந்த உள்நாட்டு வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த விண்ணப்பங்களை * http://edugate.mu.edu.sa/mu/ui/home.faces * எனும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தினூடாக  2017/12/09 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது கீழ்க்காணும் விடயங்களைக் கருத்திற் கொள்வது அவசியம்.
📍விண்ணப்பிக்கும் முன்னர் நிபந்தனைகள், தேவையான ஆவணங்களை அறிந்து கொள்ளல்.
📍உள்நாட்டு அல்லது வெளிநாட்டு புலமைப் பரிசில் என தெளிவாகக் குறித்தல்.
📍தெளிவில்லாத , நிபந்தனைக்குட்படாத அல்லது பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
📍குறித்த பல்கலைக்கழக இணையத்தள பக்கம் மூலம் அனுப்பப்படாத எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தகவல்- முஹம்மத் அவ்ன் சமூன்
அல்-இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகம்
ரியாத்.
28/11/2017

வஸீம் ஹுஸைன்
மனித குலத்திற்கு ஏற்றதான வாழ்க்கை நெறியை இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே நூறு வீதம் போதிப்பதை பார்க்கலாம். இஸ்லாமிய விழுமியங்களை அறிந்து இன்று மக்கள் சாரை சாரையாக தங்களை முஸ்லிமாக மாற்றி இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக கடைப்பிடிப்பதை காணக்கிடைக்கின்றது. இப்படி உலகில் பலரால் (பிற மதத்தவர்களால்) விரும்பி தம்மை இஸ்லாத்தின் பால் நுழைவிப்போரின் எண்ணிக்கையே அதிகம் என்பது தான் உலகை வியப்பிலார்த்தும் விடயமாகும்.

இப்படி சிறப்பியல் கொண்ட இஸ்லாத்தில் இணைபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளனர். இதற்கு தக்க சான்றாக எமது நாளாந்த பத்திரிகைகளில் பெயர் மாற்றம் என்ற பகுதியினூடாக ஒவ்வொரு நாளும் அறிவுறுத்தல் வருதே போதுமானது. இப்படியான நிலையில் தூய இஸ்லாத்தை விட்டும் அற்ப காதலுக்காவும் சாதாரண உடலாசைக்காகவும் வேண்டி சில முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் மதமாறி பின்னர் சீரழிவதை பார்க்கின்றோம். இப்படியானவர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை திறன்பட கற்று, அறிந்த பின்னர் தனது மார்க்கமாக ஏற்றுக் கொண்ட (அகீலா) ஹாதியா என்ற இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சகோதரி இன்று அனைவரது கண்களிலும் விழுந்த கந்தலாக மாறியிருப்பது நாம் அறிந்த விடயமாகும்.

யார் இந்த சகோதரி ஹாதியா?
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ் உத்தியோகத்தர் அசோக மணியின் மகள் தான் சகோதரி அகிலா. 2011 ம் ஆண்டு மருத்துவ பீடத்தில் கற்பதற்காக சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கற்கலானார். பின்னர் கல்லூரியில் சக முஸ்லிம்களுடைய நடைமுறைகளை கண்காணித்து அதன் பால் ஈர்க்கப்பட்டு சுயமாகவே அவர் இஸ்லாத்திற்குள் நுழைகிறார். 

தன்னுடைய மகள் அகிலாவை கேரள மாநில பெருந்தல் மன்னாவை சேர்ந்த அபூபக்கர் என்பவரும் அவருடைய மகள்கள் ஜெசீனா மற்றும் பஸீனா ஆகியோரும் கடத்தி, கட்டாய மதம் மாற்றி , சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத்தரும்படியும் அகீலாவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

2015 ஆகட்ஸ் முதல் 2016 வரை தான் பெற்றோர் வீட்டில் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு பேசும் உரிமை கூட அற்ற நிலையில் தடுக்கப்பட்டு சுதந்திரம் பறிக்கப்பட்ட பொம்மையாக வழிநாடாத்தப்பட்டுள்ளதாக ஹாதியா குறிப்பிடுகின்றார்.

இந்தியாவின் முன்னனி நாளிதழ்கள் பலவும் ஹாதியா சுயமாகத்தான் இஸ்லாத்தை ஏற்றார் என்று செய்திகள் வெளியிட்டுள்ளன. ஹாதியாவின் தந்தை கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர், தாய் இந்து மதத்தை சார்ந்தவர். இதற்கிடையிலேயே தான், எனது பிறப்பு மதத்திலிருந்து புனித இஸ்லாத்தை எனது சுயவிருப்பத்தின் பெயரில் பின்பற்றுவதாக வழக்கறிஞர் ஒருவர் முன்னிலையில் வைத்து ஒப்புதல் அளித்தது மாத்திரமன்றி அதற்கான பதிவு ஒன்றையும் தன்னகத்தே வைத்துள்ளார். 

இந்நிலைiயில் ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் அவர் சுயமாகத்தான் இஸ்லாத்தை ஏற்றார் என்ற பொலிஸாரின் அறிக்கையின் பிரகாரம் வழக்கை தள்ளுபடி செய்கின்றனர். இதன் பின்னரான காலப்பகுதியிலேயே அகீலா என்ற பெயரை ஹாதியா என மாற்றுகின்றார். 

கடந்த 2016.12.19 அகீலாவிற்கும் கேரளாவை சேர்ந்த ஸபீன் ஜஹான் என்பவருக்கும் இடையில் திருமணம் நடக்கிறது. பின்னர் ஹாதியாவின் தந்தை மீண்டும் கேரளா நீதிமன்றில் தனது மகளை லவ் ஜிஹாத் மூலம் தீவிரவாதியாக மாற்றி சிரியாவிற்கு அனுப்ப முஸ்லிம்கள் செய்யும் சதி எனவும் தன் மகளை மீட்டுத் தரும் படியும் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகளான திரு. சுரேந்திர மோகன். திரு.ஆப்ரஹாம் மேத்தீவ் ஆகியோர் விசாரணைக்கு வந்த கணவன் மனைவிகளை பிரித்து வைத்தது மாத்திரமன்றி முஸ்லிம் சட்டத்தின் கீழ் விவாகமானதாக ஆவணம் இருக்கத்தக்க மேற்படி நீதிபதிகள் இவர்களை பிரித்து ஹாதியாவை தன் தந்தையுடன் அனுப்புமாறு விசாரணை நடாத்தி தீர்ப்பளித்தனர்.

பின்னர் மேஜரான ஒருவர் தன்னுடைய சுய விருப்பத்தின்படி ஒரு மதத்தை தழுவ அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைக்கு மாறாகவும், இரண்டு பேர் மனம் விரும்பி செய்துகொண்ட திருமணத்தை செல்லாது என்று தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஸபீன் ஜஹான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் , இந்த வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறாக நீதிமன்றங்கள் செயற்பட்டு டாக்டர் ஹாதியாவிற்கு இழைத்துள்ள அநீதியை கண்டித்து மனித உரிமை அமைப்புகள் போராடி வருகிறது. 

24 வயதாகும் ஓர் பெண் தனது சுய விருப்பத்தின் பெயரில் திருமணம் செய்யவோ, இந்திய அரசியல் சாசனத்தின் பிரகாரம் மதமாற்றம் மேற்கொள்ளலாம் என்ற சட்டங்கள் சாதாரண மக்கள் மத்தியில் மத்திய அரசு மேற்கொள்ளும் பயங்கரவாத குற்றச்சாட்டின் வெளிப்பாடுகளை பல சமூக ஆர்வலர்கள் கண்டித்திருப்பது மனிதம் மடியவில்லை என்பதை காட்டுகின்றது.

குறிப்பாக இந்து மதத்தை சேர்ந்த சகோதரிகள் பலரும் ஹாதியாவிற்கான எனது குரல் என்ற தொனியில் ஆர்ப்பாட்டங்களும் சமூகவலைத்தளங்களில் ஆதரவாக குரலெழுப்புவதையும் காணலாம். 

தமுமுக கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருள்ளா அவர்களும் தனது கண்டனத்தை தெரிவித்தது மட்டுமல்லாது. போலியான சித்தரிப்பு மூலம் அரசியல் சானத்திற்கு அமைவான இச்செயற்பாட்டிற்கெதிரான முன்னெடுப்புக்களை மேற் கொள்பவர்களை சட்டத்தை பேணும்படி தனது கண்டன உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கல்லூரி மாணவிகள் பலரும் வீதியில் இறங்கி ஹாதியாவிற்கு ஆதரவாக அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் மாணவிகள் மாத்திரம் அல்லாது ஏனைய இந்து மத சகோதரிகளும் வீதிக்கிறங்கி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

வழக்கறிஞர் அஜிதா அவர்களும் இந்திய சாசனத்திற்கு ஏதுவான இச்சம்வத்தை வைத்து காவிகள் நடாத்தும் கபட நாடகத்தை கண்டித்து அறிக்கைவிட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் பரவலாக காணலாம். 

இந்துத்துவா அமைப்பினர் ஹவுன்ஸிலிங் என்ற பெயரில் துன்புறுத்தலை மேற்கொள்வதும் தான் வீட்டுக்காவலில் துன்புறுத்தப்படுவதாகவும். நான் கொலை செய்யப்படலாம் என்ற ஹாதியாவின் வீடியோ பதிவு இன்று சமூகவலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவுவதை காணலாம்.
மதச்சார்பற்ற தேசம் பாரத தேசம் என மார்பு தட்டுபவர்கள் ஹாதியா விடயத்தில் எங்கே போனீர்கள்.?

வலுக்கட்டாய அற்ப காதலுக்காக எத்தனையோ முஸ்லிம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, தான் விரும்பிய மதத்தில் வாழ்கின்ற போது ஹாதியா மீது மட்டும் பாரத மாத்தே ஜே என்பது எந்த வகையில் நியாயம்?

மகளே! ரெஜினா என்னை வீட்டு போகாதே என்று நீதிமன்ற வாயிலில் நின்று ஒரு முஸ்லிம் தந்தை தனது மகள் மதம் மாறி காதலனோடு காமம் தேடிப் போன போது, அழுது புலம்பியது ஞாபகம் உள்ளதா? அப்போது இந்திய சட்டமும் இந்துத்துவாவின் ஹவுன்ஸிலிங்கும் எங்கே போனது?

ஒரு இனத்தை மாத்திரம் குறி வைத்து மேற்கொள்ளப்படும் இப்படியான இனச்சுத்திகரிப்பு இந்தியாவின் பகற்கனவாய் இருக்கும் வல்லரசு நாடு என்பது விஜயகாந்தின் படத்தில் மாத்திரமே நிகழும் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

பெண்களுக்கான விடுதலை, பெண்ணியம் பற்றி பேசும் பாரதி பிறந்த மண்ணில் பருவ வயதை அடைந்த ஒரு பெண்ணின் வாழ்வுரிமை நசுக்கப்படுவது கேவலமாக இருக்கின்றது. 

முஸ்லிமாக பிறந்ததால் இந்திய காவிகள் சிலர் முன்னெடுக்கும் சில காட்டுமிராண்டித்தனமாக செயலுக்கு நீதிதேவதை கண்மூடியிருப்பது எதிர்கால அரசியல் சானத்திற்கு கேள்விக்குறியாக அமையலாம்.

மத்திய அரசின் சில அற்ப வாக்கு வங்கிகளுக்காக முஸ்லிம்கள் நசுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஹாதியாவாக இருந்தாலும் காவேரியாக இருந்தாலும் அரச சட்டத்திற்கு உட்பட்டு செய்கின்ற போது அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்ககுவதென்பது மக்கள் இன்னும் இருளில் இருக்கின்றனர் என்பதையே காட்டுகின்றது.

ஹாதியாவுக்கு பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு....!!
நாடே பரபரப்போடு எதிர்பார்க்கப்பட்ட ஹாதியா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஹாதியா தம்முடைய கணவரின் பாதுகாப்பிலேயே இருப்பதாக கூறியுள்ளார்.

வழக்கின் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில்...

ஹாதியா வீட்டு காவலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஹாதியா தம்முடைய கல்வியை தொடரலாம் என்றும், ஹாதியாவுக்கான பாதுகாப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஹாதியாவின் கல்லூரி முதல்வரே ஹாதியாவின் பாதுகாவலராக இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

ஹாதியாவை பார்க்க பெற்றோரோ கணவரோ வந்தால் அவர்களை கல்லூரி முதல்வர் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழக அரசின் செலவில் படிப்பை மேற்கொள்கிறாயா என்ற நீதிபதியின் கேள்விக்கு தம்முடைய கல்விக்கான செலவை செய்ய கணவர் இருக்கும்போது தமிழக அரசின் கல்வி உதவி வேண்டாம் என்று கூறியுள்ளார்.

11 மாதங்களாக சட்டத்திற்கு புறம்பாக தந்தையின் கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்பட்ட ஹாதியாவுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முதற்கட்ட மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது.

இறுதியாக அரசியல் சட்டத்திற்கு அமைவாக நடக்கும் ஹாதியாவிற்கு தக்க நீதி வழங்கப்பட வேண்டும். ஹாதியாவிற்கான சுதந்திரத்தை பாரத சட்டம் நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி அவருடைய கணவனோடு வாழ்வதற்கான உரிமையை பெறுவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும். ஹாதியா செய்தது தவறு என்றால் மதம் மாறி சென்ற முஸ்லிம்கள் தொடர்பில் ஏன் நீதி மன்றங்கள் பராமுகமாக இருக்கின்றது போன்ற விடயங்களை நீதியரசர்கள் ஆராய்வதோடு, அது தொடர்பில் அதிகாரமுள்ளவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹாதியாவின் செயலை முஸ்லிம்கள் மாத்திரம் ஆதரிக்கவில்லை. ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஆதரிக்கின்ற நிலையில் வழக்கறிஞர்களும், சட்ட வல்லுனர்களும் ஹாதியா நிரபராதி என்று முழங்கும் நேரத்தில் அதிகாரம் பொருந்திய நீதித்துறையும் பாதுகாப்பு துறையும் சட்டத்தை நடைமுறைப்படுத்த முன் வரவேண்டும். நாளை விடியும் பொழுது ஓர் அபலையை வாழ வைக்கும் விடியலாக இருக்க வேண்டும். குரல்வளைகள் நசுக்கப்பட்டு ஓர் அப்பாவியின் மன வேதனைக்கு கருணையுள்ளம் கொண்ட மிருகமும், கல்லும் அசையும் போது, பண்பட்ட உள்ளம் நாளை தீர்பை எப்படி எழுதும்?? 

ஆவலுடன் இறைவனை பிரார்த்தித்தவனாக...
வஸீம் ஹுஸைன்




 “குழப்பங்களின் போது ஒரு முஸ்லிம் எப்படி நடந்த நடந்து கொள்ள வேண்டும்” என்ற தலைப்பில் நேற்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் மாநகரில் அமைந்துள்ள அல் இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மிகப் பெரும் மாநாடு ஒன்று இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சவூதி அரேபியாவின் மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகிய கலாநிதி ஸாலிஹ் பின் பவ்ஸான் அல் பவ்ஸான் சிறப்புரையாற்றினார்.

படங்கள் :










அது மீலாத் விழாவுக்கு ஆதாரமாகுமா ?

ரபீஉனில் அவ்வல் மாதம் ஹிஜ்ரி நாட்காட்டியின் படி மூன்றாவது மாதம். இம்மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 1. நபி (ஸல்) அவர்களின் பிறப்பு. 2. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத் பயணம். 3. நபியவர்களின் வபாத்.
இவற்றில் ஏனைய இரு நிகழ்வுகளையும் விட்டுவிட்டு முதல் நிகழ்வாகிய நபியவர்களின் பிறந்த தின நிகழ்வை மாத்திரம் உலகளாவிய மட்டத்தில் விமர்சையாக் கொண்டாடப்படுவதை அவதானிக்கலாம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்ற பெயரில் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய பிறந்த தினத்தை மீலாத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. 
நபியவர்களோ, நபித்தோழர்களோ, அவர்களைத் துயர்ந்தோரோ, முதல் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அறிஞர்ப் பெருந்தகைகளோ, இமாம்களோ நபியவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடியதற்கான எவ்விதமான சான்றுகளும் கிடைக்காத பட்சத்தில், ஒரு சிலர் நபியவர்கள் பிறந்ததையொட்டி அவர்களது பெரிய தந்தை அபூலஹப் மகிழ்ந்ததாகவும், அதன் பலனாக அவருக்குக்குத் தண்டனை குறைக்கப்பட்டதாகவும் புஹாரியில் இடம்பெற்றுள்ள ஒரு செய்தியில் தொங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். 
இச்செய்தி நபியவர்களின் கூற்றா? இது வருடாவருடம் மீலாத் விழா கொண்டாட ஆதாரமாகுமா? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் அபூலஹப், நபியவர்கள் பிறந்த செய்தி கேட்டவுடனே செய்த ஒரு செயலை, வருடாவருடம் மேடை போட்டு மீலாத்விழா கொண்டாட ஆதாரமாகக் கொள்ளலாமா ? 
அவன் அதன் நினைவாக வருடாவருடம் நபியவர்கள் பிறந்த தினத்தன்று ஒவ்வோர் அடிமையை விடுவித்திருந்தால் அதனை ஆதாரமாக எடுக்கலாமா? கூடாதா? என்று ஓரளவுக்கு சிந்திக்கலாம். அதுவும் அவன் காபிராகவே வாழ்ந்து, சபிக்கப்பட்டு, காபிராகவே மரணித்தவன் எனும் போது அதுவும் தவிடுபொடியாகின்றது. 
பொதுவாக எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் தனது உடன்பிறப்பில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததென்றால் மகிழ்வது இயற்கைதான். அதற்காக அவர் செய்த ஒரு நற்பணியை இஸ்லாத்தில் நன்மை ஈட்டித்தரும் செயலென்று ஒன்றை நிருவ ஆதாரமாகக் கொள்ள முடியாது. 
காபிர்களுக்குத் தண்டனை குறைக்கப்படுமா?
பொதுவாக காபிர்களுக்கு ஒரு போதும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது என பல அல்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் இடம்பெற்றுள்ளன. "அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்". (பகரா 162), "(நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்பட மாட்டாது. (அப்படியாயின்) அவர்கள் மரணித்து விடுவார்கள். அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது". (பாதிர் 36). 
அவர்கள் செய்த நற்செயல்களுக்கும் அல்லாஹ்விடம் எவ்வித மதிப்புமில்லை என்பதை பின்வரும் ஆதாரங்களின் மூலம் அறியலாம் 
"அவர்கள் செய்து வந்த செயல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம்". (புர்கான் 23).
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவருக்குப் பயனளிக்காது; அவர் ஒரு நாள் கூட "இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!' என்று கேட்டதேயில்லை'' என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 214)
அபூ தாலிப் விதிவிலக்களிக்கப்பட்டவர் :
மேற்கூறிய பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் காபிர்கள் இவ்வுலகில் செய்த நற்காரியங்கள் அவர்களுக்கு மறுமையில் பயனளிக்க மாட்டாது. அதன் மூலம் அவர்களின் தண்டனைகள் குறைக்கப்படவும் மாட்டாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 
எனினும் வேறு வசனங்கள் மூலமோ, ஸஹீஹான ஹதீஸ்கள் மூலமோ சிலர் விதிவிலக்கு அளிக்கப்பட்டால் அதனையும் எற்றுக் கொள்வது அவசியமாகும். அந்த வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்தான் நபியவர்களை சிறு வயது முதல் பராமரித்து, வளர்த்த அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப். அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!'' என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "ஆம்; அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத் திற்குச் சென்றிருப்பார்'' என்று கூறினார்கள் (முஸ்லிம் 209)
அபூலஹபும் விதிவிலக்களிக்கப் பட்டவனா?
பொதுவாக நாம் சிந்திக்கும் பட்சத்தில் அபூ தாலிபுக்குத் தண்டனை குறைப்பதற்கு நியாயமான ஒரு காரணமுள்ளது. அவர் நபியவர்களை 8வது வயது முதல் 40க்கும் மேற்பட்ட வருடங்கள் பராமரித்து வந்தார். அதற்குரிய பிரதியுபகாரமாக இத்தண்டனைக் குறைப்பை எடுத்துக் கொள்ளலாம். 
ஆனால் இதேபோன்று தண்டனை குறைக்கப்பட அபூலஹப் என்ன செய்தான்? நபியவர்களின் அழைப்புப் பணிக்கு பகிரங்க முட்டுக்கட்டையாக இருந்ததைத் தவிர வேறு என்னதான் செய்தான்? நபியவர்கள் பிறந்த அன்று சந்தோசப் பட்டான், அடிமையை உரிமையிட்டான் என்பதெல்லாம் அவன் காட்டிய பலத்த எதிர்ப்புகளுக்கு ஈடு கொடுக்குமா? 
சரி அவ்வாறுதான் விதிவிலக்கப்படுவதென்றால் அது ஸஹீஹான ஆதாரம் மூலம் நிரூபணமானால் அதனையும் நாம் ஏற்கத்தான் வேண்டும். அபூ லஹபின் தண்டனைக் குறைப்புச் சம்பவம் புஹாரியில் இடம்பெற்றுள்ளதே? அப்படியாயின் அவனும் ஆதாரபூர்வமாக விதிவிலக்களிக்கப்பட்டவர் தானே என்று சிந்திக்கலாம். அதனை நபியவர்கள் தான் கூறினார்களா? என்பதனை அறிந்தால் அபூலஹபின் நிலை தெளிவாகும்.
அபூலஹபின் தண்டனைக் குறைப்பு நபியின் கூற்றா?
அபூலஹபுக்கு தண்டனை குறைக்கப்படுகின்றது என்ற செய்தி புஹாரியில் (5101) இலக்கத்தில் பதிவாகியுள்ளது. அதன் அரபு வாசகம் இதோ :
حَدَّثَنَا الحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ: أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ، أَخْبَرَتْهَا: أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ، فَقَالَ: «أَوَتُحِبِّينَ ذَلِكِ»، فَقُلْتُ: نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ذَلِكِ لاَ يَحِلُّ لِي». قُلْتُ: فَإِنَّا نُحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ بِنْتَ أَبِي سَلَمَةَ؟ قَالَ: «بِنْتَ أُمِّ سَلَمَةَ»، قُلْتُ: نَعَمْ، فَقَالَ: «لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي، إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ، فَلاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ»، 

قَالَ عُرْوَةُ، وثُوَيْبَةُ مَوْلاَةٌ لِأَبِي لَهَبٍ: كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا، فَأَرْضَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ، قَالَ لَهُ: مَاذَا لَقِيتَ؟ قَالَ أَبُو لَهَبٍ: لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ (البخاري 5101 ، مسلم 1449 ، تفرد البخاري بقصة الرؤيا)
பொருள் : 
உம்மு ஹபீபா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலி) கூறுகின்றார்கள் : நான் (என் கணவர்) நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ ஸுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இதை நீயே விரும்புகிறாயா?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், 'ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) நற்பாக்கியத்தில் என்னுடன் இணைவதற்கு நான் மிகவும் விரும்புபவள் என் சகோதரிதான் என்றேன். 
அதற்கு அவர்கள், 'என்னை அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று'' என்றார்கள். நான் 'தாங்கள் அபூ ஸலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!'' என்று கேட்டேன். '(அதாவது என் துணைவியார்) உம்முஸலமாவிற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?' என நபியவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அவள் (-உம்முஸலமாவின் மகள்-) என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவுக்கும் ஸுவைபா பாலூட்டினார். எனவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) கூறுகின்றார்கள் : 
ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூ லஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூ லஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், '(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?' என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார். (புஹாரி 5101, முஸ்லிம் 1449). 
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களின் மேலதிகமான கூற்று புஹாரியில் மாத்திரமே இடம்பெறுகன்றது.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் :
1. அபூ லஹபின் தண்டனைக் குறைப்பு நபி (ஸல்) அவர்களின் கூற்றல்ல. மாறாக அது உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களின் மேலதிகமான கூற்று. உர்வா தாபிஈன்களைச் சேர்ந்தவர். அவர் நபியவர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நேரடியக அறிந்திருக்க முடியாது. எனவே உர்வாவின் மேலதிகமான வார்த்தை தான் யாரிடம் கேட்டேனென்று தெளிவு படுத்தவில்லை. இவ்வகை அறிவிப்பு ஏற்க முடியாத "முர்ஸல்" வகையைச் சேர்ந்ததாகும். புஹாரியில் இடம்பெறும் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்களும், அறிவிப்பாளர் வரிசைத் தொடர் அறுபடாத செய்திகளும் தான் ஆதாரபூர்வமானவை என்பதே இமாம் புஹாரி உட்பட ஏனைய அறிஞர்களின் அபிப்பிராயம். இது அறிவிப்பாளர் வரிசை அறுபட்ட ஒரு தாபிஈயுடைய செய்தி.
2. இவ்வாறான ஒரு செய்தியைக் கூறும் போது நபியவர்களின் ஒரு செய்தி புஹாரியில் இடம்பெறுவதைப் போல் பொதுவாகக் கூறாமல் "உர்வா (ரஹ்) அவர்களின் செய்தி" என்பதைக் குறிப்பிட வேண்டும். அதுதான் நாம் ஹதீஸ்க்கலைக்குச் செய்யும் அமானிதம். ஏனெனில் புஹாரியில் இடம்பெறும் செய்தி என்றால் மக்கள் முதலில் நினைப்பது அது நபியவர்கள் கூறிய செய்தி என்பதாககத் தான். 
3. இச்சம்பவத்தில் அபூ லஹபுக்குத் தண்டனை குறைக்கப்பட்டதாக நபியவர்கள் கூறவில்லை. மாறாக அபூலஹபின் குடும்பத்தில் ஒருவர் கனவு கண்டதாகத் தான் கூறப்பட்டுள்ளது. அது யார் என்றும் புஹாரியில் இடம்பெறவில்லை. 

4. அபுல் காஸிம் அஸ்ஸுஹைலி என்பவர் தனது "அர்ரௌழுல் உனுப்" எனும் நூலில் 5/122 அறிவிப்பாளர் வரிசையின்றி : கனவு கண்டவர் அப்பாஸ் (ரலி) என்பதாகவும், அபூ லஹப் மரணித்து ஒரு வருடத்திற்குப் பின் இக்கனவு கண்டதாகவும், ஒவ்வொரு திங்கட்கிழமையும் நபியவர்கள் பிறந்ததையொட்டி ஸுவைபாவை விடுவித்ததால் தனது விரலிடையால் நீர் புகட்டப்படுவதாகவும் இடம்பெற்றுள்ளது.
الروض الأنف ت السلامي (5/ 122)

وَفِي صَحِيحِ الْبُخَارِيّ أَنّ بَعْضَ أَهْلِهِ رَآهُ فِي الْمَنَامِ فِي شَرّ رَحِيبَةٍ وَهِيَ الْحَالَةُ فَقَالَ مَا لَقِيت بَعْدَكُمْ يَعْنِي: رَاحَةً غَيْرَ أَنّي سُقِيت فِي مِثْلِ هَذِهِ بِعِتْقِي ثُوَيْبَةَ، هَكَذَا فِي رِوَايَةِ الْأُصَيْلِيّ عَنْ أَبِي زَيْدٍ وَفِي رِوَايَةِ غَيْرِهِ قَالَ مَا لَقِيت بَعْدَكُمْ رَاحَةً غَيْرَ أَنّي سُقِيت فِي مِثْلِ هَذِهِ وَأَشَارَ إلَى النّقْرَةِ بَيْنَ السّبّابَةِ وَالْإِبْهَامِ بِعِتْقِي ثُوَيْبَةَ، وَفِي غَيْرِ الْبُخَارِيّ أَنّ الّذِي رَآهُ مِنْ أَهْلِهِ هُوَ أَخُوهُ الْعَبّاسُ قَالَ مَكَثْت حَوْلًا بَعْدَ مَوْتِ أَبِي لَهَبٍ لَا أَرَاهُ فِي نَوْمٍ ثُمّ رَأَيْته فِي شَرّ حَالٍ فَقَالَ مَا لَقِيت بَعْدَكُمْ رَاحَةً إلّا أَنّ الْعَذَابَ يُخَفّفُ عَنّي كُلّ يَوْمِ اثْنَيْنِ وَذَلِكَ أَنّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وُلِدَ يَوْمَ الِاثْنَيْنِ وَكَانَتْ ثُوَيْبَةُ قَدْ بَشّرَتْهُ بِمَوْلِدِهِ فَقَالَتْ لَهُ أَشَعَرْت أَنّ آمِنَةَ وَلَدَتْ غُلَامًا لِأَخِيك عَبْدِ اللهِ؟ فَقُلْ لَهَا: اذْهَبِي، فَأَنْتِ حُرّةٌ فَنَفَعَهُ ذَلِكَ وَفِي النّارِ كَمَا نَفَعَ أَخَاهُ أَبَا طَالِبٍ ذَبّهُ عَنْ رَسُولِ اللهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَهُوَ أَهْوَنُ أَهْلِ النّارِ عَذَابًا،

எனவே இது வெறும் கனவு, அது ஆதாரமாகமாட்டதென ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) தனது பத்ஹுல் பாரீ 11/382ல் கூறியுள்ளார்கள்.
5. நபி (ஸல்) அவர்களாகவே ஷஃபான் இறுதியில் ஒருவரின் கனவில் வந்து இன்றிரவு முதல் நோன்பு ஆரம்பம் என்று கூறி, நோன்பு பிடித்தால் அந்நோன்பு செல்லுபடியாகாதென இமாம் நவவீ (ரஹ்) தனது "அல்மஜ்மூஃ ஷரஹுல் முஹzத்தப்" எனும் நூலில் (6/281)ல் கூறியுள்ளார்கள். இது, நபியவர்களைக் கனவு கண்டால். அப்படியாயின் அபூலஹப் கனவில் வந்து சொன்னால்? அதுவும் கனவு கண்ட அப்பாஸ் (ரலி) அதுவரை இஸ்லாத்திற்கே வராத நிலையில்?
6. இச்சம்பவம் நாம் மேற்கூறிய காபிர்களின் நற்செயல்கள் பயனளிக்காது என்பது பற்றிய அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிக்கு முரணாக இருக்கின்றது. அறிவிப்பாளர் வரிசையே இல்லாத, அல்லது ஒரு தாபஈயின் முர்ஸல் வகைச் செய்திக்காக இறைவசனங்களையும், ஸஹீஹான நபிமொழிகளையும் புறக்கணிக்கலாமா?
7. புஹாரியில் இடம்பெறும் செய்தியில் நபியவர்கள் பிறந்த தினத்தன்றுதான் ஸுவைபா விடுவிக்கப்பட்டார் என்று கிடையாது. ஹிஜ்ரத்துக்கு சில காலம் முன்னர், அல்லது ஹிஜ்ரதுக்கு பின்பு விடுவிக்கப்பட்டதாகவும் சில அறிவிப்புக்கள் உள்ளன. இதனை இமாம் இப்னு இப்தில் பர், இமாம் அபுல் பரஜ் இப்னுல் ஜௌஸீ, இமாம் இப்னு ஹஜர் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். (இஸ்தீஆப் 1/28, அல்வபா bபிஅஹ்வாலில் முஸ்தபா 1/106, அல் இஸாபாஃ 8/60/ இல : 10970, பத்ஹுல் பாரீ 11/380)
8. சரி, காபிர்களின் நற்செயல்கள் பயனளிக்குமென ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் இஸ்லாத்தில் அடிமைகளை உரிமையிடுவது வணக்கமா? அல்லது குழந்தை பிறந்தால் மகிழ்வது வணக்கமா? என்று பார்த்தால் அடிமையை உரிமையிடுவது பற்றித்தான் நிறைய சிறப்புக்கள் வந்துள்ளன. குழந்தை பிறந்தால் மகிழ்வது இயல்பான ஒன்று. அதற்காக ஒரு நபியை எதிர்ப்பதையே வாழ்கையாகக் கொண்ட ஒரு காபிருக்குத் தண்டனை குறைக்கப்படுமா? அல்லது இஸ்லாம் தூண்டிய அடிமை உரிமையிட்டதற்காக குறைக்கப்படுமா? எது பொருத்தமானதென உங்களுக்கே புரிந்திருக்கும். மேலும் அபூ லஹப் தனது சகோதரன் மகன் முஹம்மத் என்பதற்காக மகிழ்தானே தவிர, எதிர்காலத்தில் நபியாக அனுப்பப்படவிருக்கின்ற முஹம்மத் பிறந்ததற்காக அல்ல. 
சுருக்கம் :
· புஹாரியில் இடம்பெற்றுள்ள அபூலஹபின் தண்டனைக் குறைப்பு சம்பவம் உர்வா (ரஹ்) அவர்களின் செய்தியே தவிர அதாரமாகக் கொள்ள முடியுமான நபியவர்களின் கூற்றல்ல. 
· கனவு கண்டது நபியுமல்ல, நபியையுமல்ல. மாறாக அப்பாஸ் (ரலி) என்பதாகத்தான், அதுவும் அவர் இஸ்லாத்தில் இணைய முன்னதாக என்றுதான் கூறப்பட்டுள்ளது. இச்செய்தி கூட அறிவிப்பாளர் வரிசையற்ற ஏற்க முடியாத செய்தி.
· இவ்வாறான ஒரு மிகவும் பலவீனமான, அல்லது தாபிஈயின் செய்தியை நன்மைதரும் செயலென்று ஒன்றை நிரூபிக்க அறவே எடுக்க முடியாது. ஆக, இச்சம்பவத்தில் மீலாத்விழாவுக்கு ஆதாரமில்லை.
அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைபெறச் செய்வானாக.
M.Ahmed (Abbasi, Riyady)
B.A (Hons), M.A Reading
Al-Imam Muhammad Bin Saud Islamic University

ஹதீஸியல் ஆய்வு
அல்லாஹ்வால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நபிமார்களில் இறுதியானவர் எம் உயிரிலும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதரென ஏற்று, ஏவியதை எடுத்து நடப்பதும், தடுத்ததைத் தவிர்ந்து கொள்வதும், அவர்கள் அறிவித்த தகவல்களை உண்மைப்படுத்துவதும் நாம் அவர்களை ஈமான் கொள்வதில் உள்ளடங்குகின்றது. அத்துடன் அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் சொல்வதும், அவர்களை நேசிப்பதும் பிரதான அம்சங்களில் உள்ளவை.

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதன் பிரதான அறிகுறி அவர்களைப் பின்பற்றுவதாகும். "நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான்"என (நபியே) நீர் கூறுவீராக.(ஆல இம்ரான் 31) அன்னாரை நேசிப்பது கடமையென்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. (பார்க்க : தௌபா 24). எனினும் அவர்களை நேசிப்பதென்பதன் பேரில் அவர்கள் கூறாத, அவர்களில் வாழ்க்கையில் நடைபெறாத நிகழ்வுகளை அன்னார் பக்கம் சேர்க்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்களை நேசித்து, கண்ணியப்படுத்தும் நோக்கில் அவர்களைப் பற்றிக் கூறப்படும் செய்திகளில் அவர்களுடைய பிறப்புடன் தொடர்பான பல அற்புதங்கள் முதன்மை வகிக்கின்றன. அவற்றில் பிரதானமானது முஹம்மத் (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டு, தொப்புள்குடி வெட்டப்பட்ட நிலையில் பிறந்தார்கள் என்பதாகும்.

இக்கட்டுரையில் அதுபற்றி வந்துள்ள அறிவிப்புக்களை சற்று ஆராய்ந்து அச்செய்திகள் ஆதாரபூர்வமானவையா என்பதை விளங்க முயற்சிப்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு கத்னாச் செய்யப்பட்ட விடயத்தில் 3 கருத்துக்கள் உள்ளன :

1. நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டவராகப் பிறந்தார்கள்.
2. நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் அவர்கள் கத்னாச் செய்துவிட்டார்கள்.
3. நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது பாட்டனார் அப்துல்முத்தலிப் அக்கால வழக்கப்பிரகாரம் கத்னாச் செய்து விட்டார்கள்.

இவை பற்றி இடம்பெற்றுள்ள சில அறிவிப்புக்களை சற்று விரிவாக நோக்குவோம்.

1. நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டவராகப் பிறந்தார்கள் என்பதாகக் குறிப்பிடும் அறிவிப்புக்கள் :
நபி (ஸல்) அவர்கள் பிறக்கும் போதே கத்னாச் செய்யப்பட்டுத்தான் பிறந்தார்கள் என்பது பற்றி 5 நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் : அனஸ் பின் மாலிக் (ரலி), அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), அபூ ஹரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி). இந்த ஐந்து அறிவிப்புக்கள் பற்றியும் சற்று நோக்குவோம்.

1. அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) கூறினார்கள் : நான் கத்னாச் செய்யப்பட்டவனாகப் பிறந்தது அல்லாஹ்விடத்தில் எனக்குள்ள மரியாதையிலுள்ளது. என்னுடைய மறைவிடத்தை யாரும் காணவில்லை.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இச்செய்தி பின்வரும் நூல்களில் இடம்பெறுகின்றது : இமாம் தபரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் (6148), அபூ நுஐமின் ஹில்யதுல் அவ்லியா 3/24, அதே அறிஞரின் தலாஇலுந்நுபுவ்வத் (91), அல்கதீபுல் பஃதாதியின் தாரீகு பஃக்தாத் 2/179 (187) இப்னு அஸாகிரின் தாரீகு திமஷ்க் (762, 763, 764)இப்னுல் ஜௌஸியின் அல்இலலுல் முதனாஹியாஃ (264) அழ்ழியாஉல் மக்திஸீயின் அல் அஹாதீஸுல் முஃக்தாரா (1864).
மேற்கண்ட நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் ஸுப்யான் பின் முஹம்மத் அல் ஃபிஸாரீ அல் மிஸ்ஸீஸீ என்றொருவர் இடம் பெறுகிறார். அவர் பொய்யரெனச் சந்தேகிக்கப்பட்டவர் எனப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். அவர்களில் அபூ ஹாதம், இப்னு ஹிப்பான், இப்னு அதிய், அபூ நுஐம் போன்றோர் பிரதானமானவர்கள். (பார்க்க : இப்னு அபீ ஹாதமின் அல்ஜர்ஹு வத்தஃதீல் 990, இப்னு ஹிப்பானின் அல்மஜ்ரூஹீன் 471, இப்னு அதீயீன் அல்காமில் 845).

இதே செய்தி நூஹ் பின் முஹம்மத் அல்அய்லீ, மற்றும் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் ஜாரூத் ஆகியோர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நூஹ் பின் முஹம்மத் அல்அய்லீயைப் பற்றி இமாம் தஹபீ (ரஹ்) "இவர் பொய்க்கு ஒப்பகும் ஒரு செய்தியை ஹஸன் பின் அரஃபா என்பவரைத் தொட்டும் அறிவித்துள்ளார்" (மீஸானுல் இஃதிதால் இல 9141, அல்முஃக்னீ பிள்ளுஅஃபா 6682). ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) இதனைத் தனது லிஸானுல் மீஸானில் (இல 8183) பதிவு செய்து விட்டு மேற்கண்ட நபிமொழியைக் கூறியுள்ளார்கள். முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் ஜாரூத் பற்றி அவர் வாயிலாக அறிவித்த ஹாபிழ் இப்னு அஸாகிரே அவர் பொய்யரெனக் கூறியுள்ளார்கள். (தாரீகு திமஷ்க் 764).
எனவே பல அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருந்தாலும் இச்செய்தி மிகவும் பலவீனமானது. இதனை இமாம்களான இப்னு அஸாகிர், இப்னுல் ஜௌஸீ, இப்னுல் கைய்யிம், தஹபீ மற்றும் அல்பானீ பலர் மிகவும் பலவீனமானதாகக் கூறியுள்ளனர்.

2. அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டு, தொப்புள்குடி வெட்டப்பட்ட நிலையில் பிறந்தார்கள். இது அப்துல் முத்தலிபைக் கவர்ந்து, அவர்களிடம் இடம்பிடித்துக் கொண்டது. எனது இப்புதல்வருக்கு நிச்சயம் எதிர்காலத்தில் முக்கியத்துவம் உண்டு என்று கூறினார். அதே போன்று அவருக்கு முக்கியத்துவமிருந்தது.

அப்பாஸ் (ரலி) அறிவித்துள்ள இச்செய்தி பின்வரும் நூல்களில் இடம்பெறுகின்றது : இப்னு ஸஃதின் அத்தபகாதுல் குப்ரா (1/ 82), அபூ நுஐமின் தலாஇலுந் நுபுவ்வாஃ (92), பைஹகீயின் தலாஇலுந் நுபுவ்வாஃ (1/ 114), இப்னு அஸாகிரின் தாரீகு திமஷ்க் (3/ 79).
இச்செய்தியின் அனைத்து அறிவிப்பாளர் வரிசையிலும் யூனுஸ் பின் அதாஃ என்பவர் இடம்பெறுகின்றார். அவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர். இமாம் இப்னு ஹிப்பான் இவரைப் பற்றி "ஆச்சரியமான செய்திகளை அறிவிப்பவர், இவரை ஆதாரத்திற் கொள்ள முடியாது" எனக் கூறியுள்ளார்கள். இமாம்களான ஹாகிம், அபூ நுஐம் ஆகியோர் இவரைப்பற்றி "ஹுமைதுத் தவீல் என்பவரைத் தொட்டும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பர்" எனக் கூறியுள்ளனர். (பார்க்க : அல்மஜ்ரூஹீன் 1243, ழுஅபாஉ அபீ நுஐம் 166, மீஸானுல் இஃதிதால் 9914, லிஸானுல் மீஸான் 8723).
எனவே இச்செய்தியும் மிகவும் பலவீனமானது.

3. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டு, தொப்புள்குடி வெட்டப்பட்ட நிலையில் பிறந்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இச்செய்தியை ஹாபிழ் இப்னு அதிய் (ரஹ்)அவர்கள் தனது அல்காமிலிலும் (2/ 399, இல 347) அவரின் வாயிலாக ஹாபிழ் இப்னு அஸாகிர் (ரஹ்) தனது தாரீகு திமஷ்கிலும் (3/ 411) பதிந்துள்ளனர்.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் ஜஃபர் பின் அப்தில் வாஹித் அல்ஹாஷிமீ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர். இமாம்களான இப்னு ஹிப்பான், அப்னு அதிய், தாரகுத்னீ, இப்னு அஸாகிர், தஹபீ மற்றும் பலர் இவரைப் பொய்யர் என்றும், பொய்யரெனச் சந்தேகிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர். அத்துடன் அநேகமானோர் அதற்கு சான்றாக மேற்கண்ட நபிமொழியைக் கூறியுள்ளனர். (பார்க்க: அல்மஜ்ரூஹீன் 185, அல்காமில் 347, அழ்ழுஅஃபாஉ வல்மத்ரூகூன் 142, தாரீகு திமஷ்க் 9806, மீஸானுல் இஃதிதால் 1511, அல்முஃனீ ஃபிழ்ழுஅஃபா 1150.) மஸ்லமா பின் காஸிம் என்பவர் மாத்திரம்தான் இந்த ஜஃபர் பின் அப்தில் வாஹித் நம்பகமானவர் என்று கூறியுள்ளார். பல அறிஞர்தளின் கூற்றுக்களுக்கு மாற்றமாக உள்ள இக்கருத்தை ஏற்க முடியாது. அது மாத்திரமின்றி இந்த ஜஃபரை வலுப்படுத்திய மஸ்லமாவே விமர்சனத்திற்குரியவர். ஹதீஸ்கலை அறிஞர்களின் விதிமுறைப் பிரகாரம் விமர்சிக்கப்படும் ஒருவர் இன்னொருவரைப் பற்றி பெரும்பான்மையினருக்கு மாற்றமாகத் தீர்ப்புச் செய்தால் அது ஏற்கப்பட மாட்டாது. எனவே இவரது கூற்று செல்லுபடியாக மாட்டாது. அதனடிப்படையில் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இச்செய்தியும் இட்டுக்கட்டப்பட்டது. அல்லது அதற்கு நெருங்கிய மிகவும் பலவீனமானது.

4. அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்ட நிலையில் பிறந்தார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இச்செய்தி தாரீகு திமஷ்கில் (3/ 411) பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்த் தொடரில் பல குறைகளுள்ளன. இஸ்மாஈல் பின் முஸ்லிம் அல்மக்கீ என்பவர் பெரும்பான்மையான அறிஞர்களால் மிகவும் பலவீனமானவர் அல்லது பலவீனமானவர் என விமர்சிக்கப்பட்டவர். (பார்க்க: அல்ஜர்ஹ் வத்தஃதீல் 669, அல் மஜ்ரூஹீன் 36, அல்காமில் 120, மீஸானுல் இஃதிதால் 945, தஹ்தீபுத் தஹ்தீப் 1/ 331).
அவரிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் கஸீர் அல்கூஃபீ என்பவரும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர். மிகவும் பலவீனமானவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் "முன்கருல் ஹதீஸ்" எனும் வார்த்தையை இமாம் புஹாரி மற்றும் இப்னு அதிய் ஆகியோரும், "மத்ரூக்" எனும் வார்த்தையை ஸகரிய்யா அஸ்ஸாஜீயும் இவருக்குப் பயன்படுத்தியுள்ளனர். மற்றும் இமாம்களான அலீ பின் மதீனீ, அஹ்மத் பின் ஹன்பல், இஜ்லீ, அபூ ஹாதம் அர்ராஸீ, உகைலீ, இப்னு ஹிப்பான், அபூ அஹ்மத் அல்ஹாகிம், இப்னு ஹஜர் போன்றோர் இவர் பலவீனமானவர் என்பதை உணர்த்தும் பலதரப்பட்ட வார்த்தைகளை இவரது விடயத்தில் கூறியுள்ளனர். அது மாத்திரமின்றி இவர் ஷீஆக் கொள்கையைச் சார்ந்தவர் என்பதையும் பலர் கூறியுள்ளனர். இமாம் யஹ்யா பின் மஈன் மாத்திரம் அவர் பரவாயில்லை என்று கூறியுள்ளார். அதையும் அவரிடம் சுட்டிக்காட்டப்பட்ட போது எனக்கு முஹம்மத் பின் கஸீரிடமிருந்து நல்ல ஹதீஸ்கள்தான் கிடைத்தன என்று இப்னு மஈன் கூறியுள்ளார். பெரும்பான்மையினருக்கு மாற்றமாகக் கூறிய இப்னு மஈனின் இவ்வார்த்தை ஏற்கப்பட மாட்டாது. அதுவும் முஹம்மத் பின் கஸீர் அறிவிப்பாளர் வரிசைகளைக் குழப்பக்கூடியவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் தவறை விபரித்துள்ளார். அதற்குப் பல உதாரணங்களை இமாம்களான இப்னு அதிய் மற்றும் தஹபீ தமது நூல்களில் கூறியுள்ளனர். எனவே குற்றச்சாட்டு தெளிவாக விபரிக்கப்பட்டிருக்கும் போது வலுப்படுத்துவோரின் கூற்றைக்கான பலவீனப் படுத்துவோரின் கூற்றுக்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுவது ஹதீஸ்கலை அறிஞர்களின் பொதுவிதி. (الجرحالمفسر مقدمعلى التعديل). அந்த அடிப்படையில் முஹம்மத் பின் கஸீர் என்பவரும் பலவீனமானவர் என்பதே வலுவான கருத்தாகும். (பார்க்க : அல்ஜர்ஹ் வத்தஃதீல் 308, அல் மஜ்ரூஹீன் 985, அல்காமில் 1731, மீஸானுல் இஃதிதால் 8098, தஹ்தீபுத் தஹ்தீப் 9/ 418, லிஸானுல் மீஸான் 1154).

அவரிடமிருந்து அறிவிக்கும் அலீ பின் முஹம்மத் அல்ஃபாரிஸீ யாரென அறியப்படாதவர். இவ்வாறு இவ்வறிவிப்பாளர் வரிசையில் தொடராக மூன்று குறைகள் காணப்படுவதால் இதுவும் மிகவும் பலவீனமான செய்தியாகவே கணிக்கப்படுகின்றது. அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இச்செய்தியை இப்னு அஸாகிர் மாத்திரமே அறிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

5. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் தொப்புள்குடி வெட்டப்பட்டு, கத்னாச் செய்யப்பட்டவராகப் பிறந்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் இச்செய்தி அபூ நுஐமின் தாரீகு அஸ்பஹானிலும் (1/ 192), இப்னு அஸாகிரின் தாரீகு திமஷ்கிலும் (3/ 414, இல 765) இடம்பெறுகின்றது. இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துர்ரஹ்மான் பின் அய்யூப் அல்ஹிம்ஸீ என்பவர் பலவீனமானவரென இமாம்களான உகைலீ, தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர். (பார்க்க : அழ்ழுஅஃபாஉல் கபீர் 914, மீஸானுல் இஃதிதால் 4819). அத்துடன் அவரிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் முஹம்மத் பின் ஸுலைமான் அல்பாகன்தீ என்பவர் ஹதீஸில் தத்லீஸ் எனும் இருட்டடிப்புச் செய்யக்கூடியவரெனவும், தவறுவிடக்கூடியவர் என்றும் அறிஞர்களால் விமர்சிக்கப் பட்டவர். (பார்க்க : அல்காமில் 1788, மீஸானுல் இஃதிதால் 8130, லிஸானுல் மீஸான் 7356, ). அவரிடமிருந்து அறிவிக்கும் அபுல் ஹஸன் அஹ்மத் பின் முஹம்மத் அல்கதீப் அல்மல்ஹமீ என்பவர் தரம் அறியப்படாதவர். எனவே இவ்வறிவிப்பிலும் மூன்று அறிவிப்பாளர்கள் தொடராக விமர்சிக்கப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இச்செய்தியும்  மிக பலவீனமானது.

சுருக்கமாகக் கூறுவதாயின் நபி (ஸல்)அவர்கள் கத்னாச் செய்யப்பட்டு, தொப்புள் கொடியும் வெட்டப்பட்ட நிலையில் தான் பிறந்தார்கள் என்று குறிப்பிட்டு வந்திருக்கும் ஐந்து நபிமொழிகளில் ஒன்று இட்டுக்கட்டப்பட்டதாகவும், ஏனைய நான்கும் மிகவும் பலவீனமானதாகவும் உள்ளதை அவதானிக்கலாம். மேலும் முதலாவது ஹதீஸாகிய அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தியில் மாத்திரம்தான் நபி (ஸல்) அவர்களது கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்தும் ஸஹாபாக்கள் நபியைப் பற்றிக் கூறிய அறிவிப்புக்களாகவே உள்ளன.

இமாம் ஹாகிம் (ரஹ்) தனது முஸ்தத்ரகில் (4177) நபியவர்கள் கத்னாச் செய்யப்பட்டுப் பிறந்தது முதவாதிர் எனும் அதிகம் பேரால் அறிவிக்கப்பட்ட செய்தியெனக் கூறியுள்ளார்கள். அதனை ஆட்சேபித்து ஹாபிழ் தஹபீ அவர்கள் "இது ஆதாரபூர்வமானதென்பதையே நான் அறியமாட்டேன். அவ்வாறிருக்க எவ்வாது இது முதவாதிர் ஆகும்" என்று கூறியுள்ளார்கள். (ஹாபிழ் இப்னுல் முலக்கினின் முக்தஸர் இஸ்தித்ராகிஸ் தஹபீ அலா முஸ்தத்ரகில் ஹாகிம் இல 446). அதே போன்று ஹாபிழ் இப்னுல் ஜௌஸீ தனது அல்இலலுல் முதனாஹியாஃவில் (264) அனஸ் (ரலி) அவர்களின் செய்தியை அறிவித்து விட்டு "நபியவர்கள் கத்னாச் செய்யப்பட்டுத் தான் பிறந்தார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை, எனினும் இச்செய்தி ஆதாரபூர்வமானதல்ல" என்று கூறியுள்ளார்கள். எனினும் தனது கருத்தை வலுப்படுத்தும் எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இமாம் இப்னு கஸீர் (ரஹ்) தனது அல்பிதாயாவில் (3/ 388) "இச்செய்தி பல அறிவிப்புக்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதனைப் பலர் ஸஹீஹான செய்தியென்றும், இன்னும் சிலர் முதவாதிர் என்றும் கருதுகின்றனர். இவ்வனைத்திலும் ஆட்சேபனையுண்டு." என்று கூறியுள்ளார்கள்.

2. நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கத்னாச் செய்துவிட்டார்கள் என்று குறிப்பிடும் அறிவிப்புக்கள்.
நபி (ஸல்)அவர்களது இதயம் பிளக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜிப்ரீல் (அலை) நபிக்கு கத்னாச் செய்து விட்டார்கள் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர். அபூ பக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தியையே இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இச்செய்தியை இமாம் தபரானி தனது அல்முஃஜமுல் அவ்ஸத்திலும் (5821), அபூ நுஐம் தனது தலாஇலுந் நுபுவ்வத்திலும் (93), இப்னு அஸாகிர் தனது தாரீகு திமஷ்கிலும் (3/ 410) பதிந்துள்ளனர்.
இச்செய்தியும் மிகவும் பலவீனமானது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் பல குறைகளுள்ளன. முஹாரிப் பின் ஸுல்லம் அஸ்ஸியாதீ அவர்கள் தரம் அறியப்படாதவர். அவரிடமிருந்து அவரது மகன் மாத்திரம் தான் ஹதீஸ்கள் அறிவித்துள்ளார். மஸ்லமா பின் முஹாரிப் ஆகிய அவரது மகனும் தரம் அறியப்படாதவர். மேலும் இதிலுள்ள அப்துர்ரஹ்மான் பின் உயைனா என்பவர் யாரென்றே அறியப்படாதவர். இவர் மாத்திரம்தான் இச்செய்தியை அறிவித்துள்ளதாக இமாம் தபரானீ அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அறிவித்து விட்டுக் கூறியுள்ளார்கள்.
ஹாபிழ் அல்ஹைஸமீ அவர்கள் தனது மஜ்மஉஸ் ஸவாஇத்தில் (13853)இச்செய்திக் கூறிவிட்டு "இதில் அப்துர்ரஹ்மான் பின் உயைனா மற்றும் மஸ்லமா பின் முஹாரிப் ஆகியோர் உள்ளனர். அவர்கள் யாரென எனக்குத் தெரியாது, ஏனையோர் வலுவானவர்கள்" என்று கூறியுள்ளார்.
ஒரு புறம் அறிவிப்பாளர் வரிசை அடிப்படையில் இச்செய்தி மிவும் பலவீனமானதாக உள்ளதுடன் இதில் கூறப்பட்டுள்ள செய்தியும் பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்படுகின்றது. நபி (ஸல்) அவர்களுடைய இதயம் பிளக்கப்பட்ட செய்தி பற்றி பல ஸஹீஹான ஹதீஸ்கள் பிரபலமான நூல்களில் பதியப்பட்டுள்ளன. அதில் எந்தவொரு அறிவிப்பிலும் அச்சந்தர்ப்பத்தில் ஜிப்ரீல் (அலை) நபியவர்களுக்கு கத்னாச் செய்து விட்டதாக இடம்பெறவில்லை. எனவே இச்செய்தி அறிவிப்பாளர் தொடர், கருப்பொருள் இரு அடிப்படைகளிலும் பலவீனமானதே.

3. நபி (ஸல்) அவர்களுக்கு பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் கத்னாச் செய்துவிட்டார்கள் என்று குறிப்பிடும் அறிவிப்புக்கள்.
நபி (ஸல்) அவர்கள் பிறந்து ஏழாவது தினத்தில் அவர்களது பாட்டன் அப்துல் முத்தலிப் நபியவர்களுக்கு கத்னாச் செய்து விட்டு, அதற்காக விருந்தொன்றையும் ஏற்பாடு செய்தார்கள். அத்துடன் அவர்களுக்கு முஹம்மத் எனப் பெயரிட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கும் இச்செய்தியை இமாம் இப்னு அப்தில் பர்ர் (ரஹ்) தனது அத்தம்ஹீத் எனும் நூலிலும் (23/ 140), அல்இஸ்தீஆப் எனும் நூலிலும் 1/ 51 பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையும் ஏற்கமுடியுமானதல்ல. இதன் அறிவிப்பாளர் வரிசையிலுள்ள முஹம்மத் பின் அபிஸ்ஸிர்ரீ என்பவர் நம்பகமானவராக இருந்தாலும், அதிக நபிமொழிகளை அறிவித்ததால் அதிகம் தவறிழைக்கக் கூடியவரென இமாம்களான அபூ ஹாதம், இப்னு அதிய், இப்னு வழ்ழாஹ், தஹபீ, இப்னு ஹஜர் போன்றோர் கூறியுள்ளனர். (பார்க்க : அல்ஜர்ஹ் வத்தஃதீல் 452, தஹ்தீபுல் கமால் 5578, மீஸானுல் இஃதிதால் 8114, தஹ்தீபுத் தஹ்தீப் 9/ 424). அவர் வாயிலாக மாத்திரம்தான் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆசிரியர் அல் வலீத் பின் முஸ்லிம் பிரபலமான நம்பகமான ஒருவர். எனினும் அவர் தனது ஆசானிடமிருந்து தான் நேரடியாகக் கேட்டதை உணர்த்தும் 'ஸமிஃது", 'ஹத்தஸனா", 'ஹத்தஸனீ" போன்ற சொற்களைப் பயன்படுத்திக் கூறாமல் அவரது அறிவிப்புக்கள் ஏற்கப்பட மாட்டாது. ஏனெனில் இவர், அறிவிப்பாளர் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தும் 'தத்லீஸ்" எனும் மோசடி வகையில் பிரபலமானவர். அவ்வாறானோர் தாம் தமது ஆசானிடமிருந்து நேரடியாகக் கேட்டதை உணர்த்தும் சொற்களைப் பயன்படுத்திக் கூறாமல் அவர்களது அறிவிப்புக்கள் ஏற்கப்பட மாட்டாது. இங்கு வலீத் பின் முஸ்லிம் தாம் நேரடியாகக் கேட்டதை உணர்த்தாமல் 'அன்" என்ற எழுத்தைப் பயன்படுத்தித் தான் அறிவித்துள்ளார்கள். அதேபோன்றவர் தான் இக்ரிமாவிடமிருந்து அறிவிக்கும் அதாஃ அல் குராஸானீ என்பவரும் தத்லீஸில் பிரபலமானவர். அவரும் இங்கு தான் நேரடியாகக் கேட்டதை உணர்த்தாமல் 'அன்" என்ற எழுத்தைப் பயன்படுத்தித் தான் அறிவித்துள்ளார். எனவே இம்மூன்று குறைகளையும் கொண்டுள்ள இவ்வறிவிப்பாளர் வரிசையையும் ஏற்க முடியாது.

மேற்கூறப்பட்ட மூன்று கருத்துக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத் தக்க வலுவான ஆதாரங்கள் இல்லையென்பதை இங்கு நாம் கவனிக்கலாம்.

வலுவான கருத்து :
மேற்கூறப்பட்ட மூன்று கருத்துக்களிலும் வலுவான கருத்து எதுவென்பதை நேரடியான ஸஹீஹான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியாது. அது பற்றி வந்திருக்கும் அனைத்து நபிமொழிகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப் பட்டவை என்பதை மேலே தெளிவுபடுத்தினோம். எனினும் நபியவர்கள் அக்கால முறைப்படி பிறந்த பின்னர்தான் கத்னாச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதே வலுவானதாக இருக்கின்றது. அதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம் :

1. ஒருவர் கத்னாச் செய்யப்பட்டுப் பிறப்பதென்பது அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வு. அது ஒருவருக்கு நிகழ்ந்ததாகக் கூறுவதாயின் அது பல நபித்தோழர்களால் வலுவான ஆதார அடிப்படையில் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

2. நபியவர்களுக்கு அப்துல் முத்தலிப்தான் கத்னாச் செய்து விட்டார்கள் என்பதற்கு மேலதிகமான ஆதாரங்கள் தேவையில்லை. ஏனெனில் கத்னா என்பது நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய முன்மாதிரிகளில் ஒன்று. அதனை மக்கத்து குரைஷிகளும் பின்பற்றி வந்தனர். அவர்களது வழமைப் பிரகாரம் குழந்தைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆண்தான் இதனையும் நிறைவேற்றுவார். தந்தையை இழந்து பிறந்த நபியவர்களுக்கு அப்துல் முத்தலிபே பொறுப்பாக இருந்தார்கள்.

3. கத்னாச் செய்வது மக்கத்து குரைஷிகளின் வழமை. அதனை புஹாரியில் இடம்பெறும் அபூ ஸுஃப்யான் – ரோம் மன்னர் ஹிரெக்லயிஸ் இருவருக்கிடையில் நடைபெற்ற உரையாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம். (புஹாரி 07).

4. ஒரு வாதத்திற்காக நபியவர்கள் கத்னாச் செய்யப்பட்டுத் தான் பிறந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதனை நபியவர்களுக்குப் பிரத்தியேகமாக வழங்கப்பட்ட ஒரு சிறப்பாகக் கருத முடியாது. ஏனெனில் அவர்களுக்கு முன்னரும் பின்னரும் கத்னாச் செய்யப்பட்டுப் பிறந்தவர்கள் சிலர் உள்ளனர். உதாரணத்திற்காக இப்னு ஸய்யாத் என்பவன் கத்னாச் செய்யப்பட்ட நிலையில் பிறந்ததாக இப்னு ஸுபைர் (ரலி), உம்முஸலமா (ரலி) ஆகியோரைத் தொட்டும் வலுவான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டு பதிவாகியுள்ளது. (முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக் 20831, முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா 38683, இமாம் இப்னுல் அஸீரின் உஸுதுல் காபாஃ 3023, இமாம் தஹபீயின் தஜ்ரீது அஸ்மாஇஸ் ஸஹாபா 3366)இதே விடயம் ஆஇஷா (ரலி) அவர்களைத் தொட்டும் நபியவர்கள் கூறியதாகவே ஓர் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அது மிகவும் பலவீனமானது. அதேபோன்று இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்களுடைய காலத்திலும் பைத்துல் மக்திஸில் போதித்துக் கொண்டிருந்த அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் உஸ்மான் அல்கலீலீ என்பவரும் இவ்வாறு கத்னாச் செய்யப்பட்ட நிலையில் பிறந்ததாக தனது ஸாதுல் மஆத் எனும் நூலில் (பாகம் 1, பக் 80) குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோன்று ஹிரெக்லயிஸ் மன்னர் கூட அவ்வாறு பிறந்ததாகவும், அதனைக் கிண்டலடித்து இம்ரஉல் கைஸ் எனும் ஜாஹிலிய்யாக் காலத்து கவிஞன் கவிதைகள் மூலம் வசைபாடியதாக சில அறிவிப்புக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அதே இப்னுல் கைய்யிம் (ரஹ்) தனது துஹ்பதுல் மௌலூத் எனும் நூலில் (பக் 340) கூறியுள்ளார்கள்.

5. கத்னா என்பது குரைஷிகளிடத்தில் உன்னதமாகப் பார்க்கப்பட்ட ஒரு விடயம். பிறந்த பின் கத்னாச் செய்வதைத் தான் அவர்கள் பெருமையாகப் பார்ப்பார்கள். கத்னாச் செய்யப்பட்டுப் பிறப்பதை இழிவாகக் கருதும் ஒரு நிலை அக்காலத்தில் இருந்து வந்தது. அதனால்தான் இம்ரஉல் கைஸ் கூட கத்னாச் செய்யப்பட்டுப் பிறந்த ஹிரெக்லயிஸ் மன்னரை வசைபாடினான். எனவே நபித்துவத்துக்கு முன்னாலே அம்மக்களிடத்தில் மதிக்கப்பட்டு வந்த நபியவர்கள் உண்மையிலேயே கத்னாச் செய்யப்பட்டுப் பிறந்திருந்தால் அவர்களை அம்மக்கள் மதித்திருக்க மாட்டார்கள்.

முடிவுரை :
சுருக்கமாகக் கூறுவதாயின் நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்தின் வழமைப் படி பிறந்த பின்னாலேயே கத்னாச் செய்யப்பட்டார்கள். அவர்களுக்குப் பொறுப்பாயிருந்த அப்துல் முத்தலிப் தான் நபியவர்களுக்கு கத்னாச் செய்து விட்டுள்ளார்கள் என்பதற்கு தனிப்பட்ட ஆதாரங்கள் தேவையில்லை. கத்னாச் செய்வது அரபுகளின் வழமை என்பதற்கு ஆதாரமிருக்கும் போது ஒவ்வொருவருக்கும் கத்னாச் செய்யப்பட்டதற்கான ஆதாரம் அவசியமில்லை. மாறாக கத்னாச் செய்யப்படா விட்டால், அல்லது பிறக்கும் போதே கத்னாச் செய்யப்பட்டிருந்தால் அதற்குத்தான் பிரத்தியேகமான ஆதாரம் தேவை. ஏனெனில் அதுதான் வழமைக்கு மாற்றமான புது நிகழ்வு. அதனை உறுதிப்படுத்தத் தான் ஆதாரங்கள் தேவை. அவ்வாறு இடம்பெற்றுள்ள அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமானவையே என்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்னு நதீம் என்பவர் நபியவர்கள் கத்னாச் செய்யப் பட்டுத்தான் பிறந்தார்களென ஒரு நூல் எழுதியுள்ளார்கள். அதற்கு மறுப்பாக ஹிஜ்ரி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்னுல் அதீம் என்பவர் நபியவர்கள் பிறந்த பின்னர்தான் கத்னாச் செய்யப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி ஒரு நூல் எழுதியுள்ளார்கள். எனினும் இவ்விரு நூட்களும் எழுத்துப் பிரதிகளாகவே உள்ளன. அவற்றை மேற்கோல்காட்டி இமாம் இப்னுல் கய்யிம் அவர்கள் தனது நூட்களில் இதுபற்றிப் பல கருத்துக்களைப் பதிந்துள்ளார்கள்.
எனவே நபியவர்களை கண்ணியப்படுத்த, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார பூர்வமான பல அற்புதங்கள் உள்ளன, ஆதாரபூர்வமற்ற விடயங்களை அவர்களுக்குக் கூறி கண்ணியப்படுத்த வேண்டிய எத்தேவையும் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் காட்டிய பிரகாரம் எமது வாழ்கையை அமைத்துக் கொள்வதுதான் அவர்களை கண்ணியப்படுத்தி மதிப்பதன் அதி உச்சகட்டம். அதனைத் தான் அல்லாஹ்வும் விரும்புகின்றான் என்று கூறி இக்கட்டுரையை நிறைவுக்குக் கொண்டு வருகிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நேரான பாதையில் செலுத்துவானாக.

M.Ahmed (Abbasi, Riyady)
B.A (Hons), M.A Reading
Al-Imam Muhammad Bin Saud Islamic University


தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget