அறிவை உலக அறிவு, இஸ்லாமிய அறிவு என வேறுபடுத்திப் பார்த்திட முடியாது. ஏனெனில் எம்மைச் சூழவுள்ள பிரம்மாண்ட படைப்புக்களை ஆய்வு செய்து, அதனூடாக நம்மையும், இப் பிரபஞ்சத்தையும் படைத்து, நிர்வாகம் செய்துகொண்டிருக்கும் அல்லாஹ்வை அறிந்து அவனை வழிபடுவதே உண்மையான அறிவாகும்.
விஞ்ஞானத் துறையில் கல்விபயிலும் ஒருவர் அதனூடாக அல்லாஹ்வை அறிந்திட முனைய வேண்டும். புவியியல் துறையில் கல்வி பயிலும் ஒருவர் அதன் அத்தாட்சிகளின் மூலம் அல்லாஹ்வை அறிந்திட முனைந்திட வேண்டும். வானவியல் துறையில் கல்விபயிலும் ஒருவர் அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து படைப்பாளன் அல்லாஹ்வை அறிந்திட முனைந்திட வேண்டும்.
ஆக, கல்வியின் அனைத்துத் துறைகளும் இப்பிரபஞ்சத்தின் அத்தாட்சிகளை எமக்கு விரிவாக ஆய்வு செய்ய சந்தர்ப்பம் வழங்குகிறது என்பதை எம்மால் உணர முடிகிறது. அத்தகைய அறிவைத் தேடும் புதிய கல்வியாண்டிலே நாம் இப்போது கால்தடம் பதிக்க இருக்கிறோம் என்பதையிட்டு முதலில் நாம் சந்தோசப்பட வேண்டும்.
இத்தருணம் பாடசாலை மட்டத்திலும், இஸ்லாமிய கலாசாலை மட்டத்திலும் கல்வியின் பல கட்டங்களில் இருப்போருக்கு அடுத்த கட்ட நகர்வினை வழங்க இருப்பதனால், அந்நகர்வை நாம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான சில ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதே அக்கட்டுரையின் நோக்கமாகும்.
1. இஹ்லாஸ் (தூய எண்ணம்):
கல்வித் தேடலில் அதி முக்கிய பங்கு வகிப்பது தூய எண்ணமாகும். இஸ்லாம் அத்தூய எண்ணத்தை அல்லாஹ்வுக்காக ஆக்கிக் கொள்ளுமாறு எமக்கு கட்டளை பிறப்பித்துள்ளது. நாம் கற்கும் கல்வியின் மூலம் எமது செயற்பாடுகளை அமைத்திட வேண்டுமென திடவுறுதி பூண்டுவதோடு, அது அல்லாஹ்வுக்கும், இஸ்லாத்திற்கும் உரியதாக மாத்திரமே இருக்க வேண்டுமென நாம் முடிவெடுத்திட வேண்டும்.
எமது சமூகத்தில் தூய எண்ணம் இல்லாத கல்வியின் மூலம் பெருமை, பொறாமை, ஊழல் போன்ற நடைமுறைக்கு சாராத அம்சங்கள் மலிந்து காணப்படுவதை நாம் நம் கண்ணெதிரே பார்த்த வண்ணமிருக்கிறோம்.
எண்ணம் தூய்மையாகும் போதே ஆசிரியரால் சிறந்த கல்வியை மாணவனுக்கு வழங்கிடவும், பெற்றோரால் சிறந்த வழிகாட்டல்களை தம் பிள்ளைகளுக்கு வழங்கிடவும், மாணவனால் சிறந்த பாதையைத் தேர்வு செய்யவும் முடிகின்றது.
நபி r அவர்கள் கூறினார்கள், “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவனும் தான் எண்ணியதன் பயனையே அடைகிறான்.” (புஹாரி 6689).
2. இஸ்லாமிய அறிவு
பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் சென்றவுடன் பெற்றோரின் கண்கானிப்பை இழக்கின்றனர். வெளிச் சூழலில் ஆண்கள், அல்லது பெண்களின் காதல் வலை, போதை வஸ்துப் பாவனை, திருட்டுத் தொழில், பாலியல் சமாச்சாரங்கள் போன்றன இவர்களை தமது வலைக்கு இழுப்பதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொள்கின்றன. யாருடைய கண்கானிப்பும் இன்றி இவ்வாறான விடயங்களில் ஈடுபடும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் எப்படி பயனுள்ளதாக அமையும்..? சமூகம் ஏற்றுக்கொள்ளும் ஓர் சிறந்த பிரஜையாக எவ்வாறு அவர்களால் மாற முடியும்..? தமது குற்றங்கள் நிரூபனமாகாமல் இருக்க தடயங்களை அழிக்க வேண்டி ஏற்படுகிறது. தமது குறைகளை மறைக்க வீட்டில் பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தாம் தப்பித்திட பலரை மாட்டிவிட வேண்டிய சூழ்நிலை பாடசாலையில் ஏற்படுகின்றது. அதையும் மீறி தாம் தண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது. இவ்வாறான பிரஜைகளாலே சமூகத்தில் பாரிய குற்றச்செயல்களும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மதிக்காத நிலமையும் காணப்படுகின்றது.
இறையச்சமும், சிறந்த இஸ்லாமிய விழுமியங்களும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வழிகாட்டல்களாக செல்லுமானால் இவ்வாறான குற்றச்செயல்களும், தீய பண்புகளும் சமூகத்தில் தோன்றாமல் பாதுகாத்திடலாம். அவ்வாறே இஸ்லாமிய வகுப்புக்களுக்கும், பகுதி நேர அல்குர்ஆன் மணன வகுப்புக்களுக்கும் பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதும், இஸ்லாமிய அறிவை சிறுவயதிலிருந்து அவர்களுக்கு ஊட்டுவதிலும் அதிக கரிசனை காட்டிட வேண்டும்.
பாடசாலையில் கற்பிக்க வேண்டிய கடமையை மறந்து, அல்லது உதாசீனம் செய்து பகுதி நேர வகுப்புக்களில் அதிக கவனம் செலுத்தும் ஆசிரியர்களும் இது விடயத்தில் இறைவனைப் பயந்திட வேண்டும். அவர்களிடம் ஹராம், ஹலால் பற்றிய அறிவு அவசியம் இருந்தாக வேண்டும். தாம் எடுக்கும் சம்பளத்துக்காக மாத்திரம் வேலை பார்க்காது சிறந்த பயனுள்ள சமூகத்தை உருவாக்குவதில் அவர்களும் பாரிய கவனத்தை செலுத்திட வேண்டும். ஏனைய பணம் சம்பாதிக்கும் பொருளாதார துறைகளைப் போன்று கல்வித் துறையை அவர்கள் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து, தன்னை நம்பி வரும் மாணவ சமூகத்தை அவர்கள் திறன்பட மேம்படுத்திட வேண்டும்.
“அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவன் உங்களுக்கு கல்வியை வழங்குவான்”. (அல்குர்ஆன் 02:282) என அல்குர்ஆன் குறிப்பிடுவதிலிருந்து இறையச்சம் இருப்போனுக்கு கல்வியை அல்லாஹ் பயனுள்ளதாக மாற்றிவிடுவான் என்பது தெளிவாகின்றது.
3. நண்பர் தெரிவு
மாணவர்கள் தமக்கான சிறந்த நண்பர்களைத் தேர்வு செய்வது மிகவும் அவசியமாகிறது. இஸ்லாமிய அறிவு பெற்ற, சிறந்த நற்பண்புள்ள, கல்வியில் அதிக ஆர்வமுள்ள நண்பர்களைத் தேர்வு செய்வது தலையாயக் கடமையாகும். சிலர் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதை இழிவாகவும், மரியாதைக்கு தூரமானதாகவும் கருதுகின்றனர். அதை நாகரிகம் எனவும் எண்ணி பெருமைப்படுகின்றனர். தான் எவ்வளவு மடமையில் இருக்கிறோம் என்பதை சிறிதும் எண்ணிப்பார்ப்பதில்லை.
தமது வகுப்பு நண்பர்களை தரம் பிரித்து, தாம் அதில் கடைசி தரம் எனவும், முதலாம் தரத்தினர் புத்தகப் பூச்சிகள், எம்மைப் போன்று வெளி அறிவு இல்லாதவர்கள் எனவும் மட்டம் தட்டி பேசும் கலாச்சாரம் எப்போது நம் சமூகத்தை விட்டும் ஒழியுமோ அப்போதே கல்வியில் போட்டி போடும் சமூகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
நபி r அவர்கள் கூறினார்கள், 'நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்: அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!' (புஹாரி 2101).
04. பொறுப்புணர்ச்சி பெறுதல்.
சிறந்த கல்வியைப் பெறுவதை மாணவர்களும், அதை சிறந்த முறையில் வழங்குவதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உணர்ந்திட வேண்டும். பிள்ளை வீட்டில் இருக்கக்கூடாது. அவன் பாடசாலை, பகுதி நேர வகுப்பு என காலையில் சென்று இரவில் தான் வர வேண்டுமென கடமை பேசும் பெற்றோர்களும், வீட்டில் இருந்தால் ஒரே வேலையும், ஏச்சுப் பேச்சும் தான் என எண்ணும் மாணவர்களும், இவன் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி நமது வாழ்வு செழிப்பாக வேண்டும் என நினைத்திடும் ஆசிரியர்களும் ஒரு போதும் கல்வி மீதான தமது பொறுப்புக்களை உணர்ந்திட முடியாது.
பாடசாலையில் கற்கும் பாடங்கள் ஸ்திரத் தன்மையடைவது வீட்டுப் படிப்பில் தான். பெற்றோர் புதிய கல்வி முறைகளுக்கு பழக்கப்படாமல் இருப்பதும், அல்லது தமது பிள்ளை படிக்கிறானா? என்பதை பரிசீலனை செய்யாமல் தமது வேலைகளைக் கவனிப்பதிலும் இருப்பது வீட்டுப் படிப்பில் பின்னடைவை ஏற்படுத்திடும்.
வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கஷ்டங்களை மறைத்திட சொகுசு வாழ்வைத் தருவதானது 80 வீதமான பிள்ளைகளின் வாழ்வில் கல்விப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதை அநேக பாடசாலை அதிபர்கள் குறிப்பிட்டுள்ளனர். படித்து முன்னேர வேண்டும் என்பதற்காக கேட்பதையெல்லாம் தமது பிள்ளைகளுக்கு செய்து தருவது பிள்ளைகளிடம் கல்வியை வளர்க்காமல் சொகுசையும், பணத்தின் மீதான எதிர்பார்ப்பையுமே ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பெற்றோர் தமது பிள்ளை கல்வியில் பின்னடைவை சந்தித்ததும் செலவு செய்த பணங்களை எண்ணி கவலைப்படுவதில் எவ்விதப் பயனும் இல்லை. பிள்ளைகளுக்கு தமது தொழிலின், குடும்பத்தின் நிலையை உணர்த்தி கல்வியை வழங்குவதே அவர்களிடம் தூய நிலையான கல்வியை ஏற்படுத்துவதில் அதிக பங்கு வகிப்பதோடு, பொறுப்புணர்ச்சியும் ஏற்பட வழிவகுக்கின்றது.
பிறரின் வசதிகளையும், அவர்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் முறைகளைப் பார்த்தும் நம்மில் பலர் தமது பிள்ளைகளும் அவ்வாறு இருக்க வேண்டுமென ஆசைப்படுவது தோல்வியிலே முடிவடையும். ஒரு பிள்ளை மருத்துவம் செய்வதால் எனது பிள்ளையும் மருத்துவம் செய்ய வேண்டுமென எண்ணுவதும், ஒரு பிள்ளை சொந்த வாகனத்தில் பாடசாலை செல்கிறது என்பதற்காக தானும் வாகனத்தை வாங்க எண்ணுவதும், ஒரு பிள்ளை சொகுசாக வாழ்கிறது என்பதற்காக அவை அனைத்தும் என் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டுமென எண்ணுவதும் பிள்ளையின் கல்வியிலும், தமது பொருளாதாரத்திலும் அதிக பாதிப்பை செலுத்துகின்றது. முடிவில் தனது பிள்ளை தெரிவு செய்ய இருந்த கல்வித் துறையும் பாதிப்படைந்து, தான் சேகரிக்க இருந்த செல்வமும் இழந்து கைசேதமே எனக்கு வந்த சோதனை என திண்டாடும் நிலையே இன்று சில பெற்றோருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
தமது பொறுப்புக்களை உணர்ந்து கடமையாற்றும் எந்தத் தரப்பினரும் தோல்வியை சந்திப்பது அரிது. அப்படி சந்தித்தாலும் மறு தடவை அதில் விழுவதும் அரிது. மாணவர்கள் தமது பொறுப்புக்களை முதலில் உணர்ந்திட வேண்டும். தாம் எதை படிக்க வேண்டும், எந்தத் துறையில் தமது உயர் கல்வியைத் தொடர வேண்டும் என்பதை தமது சக்திக்கு உட்பட்ட எல்லையில் வைத்து, சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். பிறரை மிஞ்சிட வேணடுமென்ற கர்வத்தினால் எதையும் தீர்மானிக்கக் கூடாது. அதேபோல் நாம் எப்படியோ தேர்ச்சி பெற்றால் போதும் என்ற எண்ணமும் கல்வியைத் தொடரும் போது அவர்களிடத்தில் வந்துவிடக் கூடாது. அவ் எண்ணம் பரீட்சைக்கு மாத்திரம் தன்னை தயார்படத்தும் கல்வி போதும் எனும் எண்ணத்தை வளர்த்திடுமே தவிர, வாழ்கையில் வெற்றி பெற கல்வி வேண்டும் எனும் எண்ணத்தை குழிதோண்டிப் புதைக்கிறது.
அவ்வாறே பெற்றோரும் தமது பிள்ளை எதில் சிறந்து விளங்க வேண்டுமென அவனது சக்திக்கு உட்பட்ட எல்லையில் நின்று சிந்திக்க வேண்டும். தான் விட்டதை இவன் தொடர வேண்டும், ஒருவனை கல்வியில் பழிவாங்க இவனைத் தயார்படுத்த வேண்டும், பிறரை விட எனது குடும்பம் உயர் அந்தஸ்த்தில் இருக்க இவனை சொகுசாக படிக்க வைக்க வேண்டும் போன்ற சிந்தனைகளைக் கலைந்து பிள்ளை மீதான தனது சுயபொறுப்பையும், சமூகப் பொறுப்பையும் சிறந்து சிந்தித்து செயற்பட வேண்டும்.
தனது பிள்ளை பெரிய பாடசாலையில் படிக்கிறது என்பதற்காகவோ, அதி திறமை சாலி என்பதற்காகவோ, அல்லது பணம் மட்டுமே குறிக்கோல் என்பதற்காகவோ மற்ற பிள்ளைகளின் கல்வியில் சில ஆசிரியர்கள் சிரத்தை எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். பொறுப்பை உணராத ஆசிரியர்கள் தமது பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைப்பாடுகளை பிற பிள்ளைகளின் பெற்றோர் நிலையில் நின்று சிந்தித்திட வேண்டும்.
நபி r அவர்கள் கூறினார்கள், 'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.' புஹாரி 893
ஆக மாணவனும், பெற்றோரும், ஆசிரியர்களும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படல் அவசியமாகும்.
5. அறிவுத் தாகத்தை உணர்தல்.
வகுப்பறையை மூன்றாகப் பிரித்து, முதல் பகுதியில் அமர்பவர்கள் படிப்பாளிகள் என்றும், நடுப்பகுதியில் அமர்பவர்கள் படிப்பும்-கேலிக்கையும் கொண்டவர்கள் என்றும், இறுதியில் இருப்பவர்கள் கேலிக்கை மாத்திரம் புரிபவர்கள் என்றும் இன்று திரைப்படங்கள் மூலமாகவும், கல்வியில் அதிக சிரத்தை எடுக்காமல் இருக்கும் மாணவர்கள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு தரப்பினர் மற்றைய இரு தரப்பினரையும் வில்லனாகவும், தனது நட்புக்கு தகுதியற்றவர்கள் எனவும் கருத வைப்பதையும் அவ் விளம்பரங்கள் செய்த வண்ணமே இருக்கின்றன.
முன் வரிசையில் இருப்பவன் மாத்திரம் தான் அறிவாளன் எனக் கருதுவது முட்டாள் தனமான எண்ணமாகும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான திறமையைப் பெற்றிருப்பர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதைத் தவிர்த்து தன்னை உயர்த்தியும், மற்றவர்களைத் தாழ்த்தியும் பார்ப்பது கல்வியில் உள்ள தனது தாகத்தைக் குறைக்க வழிசெய்கிறது.
சமூகத்தில் படித்தவனை விட படிக்காதவனே இன்று உயர்வாக இருக்கிறான் என்ற மாயை பலராலும் பரப்பப்பட்டு வருகின்றது. அது திறமை அடிப்படையில் யதார்த்தமானது என வைத்துக்கொண்டாலும் படிக்கும் மாணவர்களிடம் இவ்வாறான எண்ணங்கள் தலைதூக்குவது மிகவும் ஆபத்தானது. தன்னிடமுள்ள திறமையை அறியாத எத்தனையோ மாணவர்கள் இன்னும் இருக்கின்றர். அவ்வாறானவர்கள் இந்த மாயையில் விழுந்தால் அறிவின் மீதான தனது தாகம் குறைந்து இறுதியில் சமூகத்தில் கல்வியால் தாழ்த்தப்பட்ட நிலைக்கு செல்லும் அபாயமே இவர்களுக்கு ஏற்படும்.
நாம் யாருடன் என்ன பேச வேண்டும் என்பதை உணராமல் பிறரிடம் அறிந்தோ அறியாமலோ பல விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம். கேட்போரிடம் அது என்ன தாக்கத்தை உண்டுபன்னும் என்பதை அணுவளவும் சிந்திப்பதில்லை. எனவே நாம் கல்வி சம்பந்தமாகவும், சமூகத்தின் சாதனையாளர்கள் சம்பந்தமாகவும் பேசும் போது நிதானமாகவும், எதிரில் இருப்பவரின் நிலை அறிந்தும் பேசிட வேண்டும். அல்லது மௌனமாக இருந்திட வேண்டும். இதுவே இஸ்லாம் காட்டித் தந்த வழியாகும். பல கேள்விகளைக் கேட்டு தன்னிடம் வருவோருக்கு அவர்களின் தேவையையும், நிலைமைகளையும், திறமைகளையும் அவதானித்தே நபியவர்கள் பதில்களை வழங்கியுள்ளார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் ஹதீஸ் நூட்களில் காணப்படுகின்றன.
சிலர் வெட்க சுபாவத்துடன் இருப்பதால் வகுப்பறையில் கற்றலின் போது தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டறிவதில் தாழ்வுத் தன்மையை உணர்கின்றனர். அறிவைத் தேடும் ஒருவன் குறித்த பாடத்தில் அதிக கேள்விகளைக் கேட்பதால் சிறந்த அறிவை அடைகிறான். அது அவனின் அறிவுத்தாகத்தை பிரதிபலித்துக் காட்டுகிறது. இப்னு அப்பாஸ் y அவர்கள் இஸ்லாமிய உலகின் சிறந்த அறிஞர்களில் ஒருவராக இருக்கிறார்கள். அவர்களிடம் இவ் அடைவு பற்றி கேட்கப்பட்டபோது, கேள்வி கேட்கும் நாவும், புத்திசாலியான சிந்தனையுமே என்னை உயர்த்தியது எனக் குறிப்பிட்டார்கள்.
சில மாணவர்கள் எப்போதும் ஆசிரியர்களுக்கு மரியாதையை வழங்குவது கிடையாது. இதனால் தனது ஆசிரியரை கொலை செய்த வரலாறுகள் கூட பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் பார்த்திருக்கிறோம். தனக்கு கல்வியைத் தரும் ஆசானை மதிக்காமல் இருக்கும் எம் மாணவனுக்கும் அறிவின் தாகம் என்பது எப்போதும் எட்டாக் கனியாகும்.
அறிஞர் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள், எனது ஆசிரியர் மாலிகின் முன் நான் புத்தகத்தின் தால்களை அவருக்குக் கேட்காதவாறு மெதுவாகவே பிரட்டுவேன்.
அறிஞர் ரபீஃ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள், எனது ஆசிரியர் ஷாபிஈ வகுப்பில் இருக்கும் போது தண்ணீர் குடிக்கவும் நான் துணிந்திடமாட்டேன்.
தமது ஆசிரியர்களை நேசித்து அவர்களுக்கு மரியாதையும் செலுத்தியுள்ள இவர்கள் தான் இறுதியில் இஸ்லாமிய உலகு தலையில் வைத்துக்கொண்டாடும் அளவுக்கு மாபெரும் மேதையாக மாறினார்கள். வயதில் குறைந்தவர் தனக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டாலும் அறிவு என்ற ஒரே காரணத்திற்காக அவருடன் நல்ல முறையில் நடந்தால் தான் தான் பெறும் அறிவு தனக்கு பயனுள்ளதாகவும், மென்மேலும் அறிவில் தாகம் ஏற்படுவதற்கும் உறுதுணையாய் அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.
6. நீதமாக நடத்தல்.
மாணவர்கள் தமது கல்வியை சிறந்த முறையில் தொடர வேண்டுமாக இருந்தால் பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்களுடன் நீதமாக நடந்திட வேண்டும்.
ஒரு பிள்ளையை விட மற்ற பிள்ளை மீது அதிக கரிசனை காட்டுவதானதும், அன்பை வெளிப்படுத்துவதும், மற்ற பிள்ளைக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்த விடயமே.. குறிப்பாக இது கல்வியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர்வதே இல்லை. நான் எவ்வளவு படித்தாலும் எனது பெற்றோர் என்னை மேற்படிப்பைத் தொடர விடமாட்டார்கள்... எனது மற்ற சகோதர சகோதரிகள் மீது தான் அதிக அக்கரை காட்டுகிறார்கள் என புலம்பும் பலரை நாம் சந்தித்திருக்கிறோம். இதுவிடயத்தில் பெற்றோர் சற்று சிந்திக்க வேண்டும்.
அவ்வாறே பணவசதி, ஊர் கௌரவம், அழகு, சிறந்த படிப்பு போன்ற எத்தனையோ விடயங்களை வைத்து மாணவர்களை எடைபோடும் ஆசிரியர்களும் இது விடயத்தில் கவனமெடுக்க வேண்டும். அனைவரையும் ஒரே பார்வையால் பார்த்திட வேண்டும். தமது கடமை அடிமட்ட மாணவனை முன்கொணர்வது தான் என்பதை உணர்ந்திட வேண்டும். பரீட்சையில் இறுதியாக வரும் மாணவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் தனது கற்பித்தலை அமைத்திட வேண்டும். அப்போது தான் கல்வியில் முன்நிற்கும் எதிர்கால சமூகத்தை தைரியமாக அமைத்திடலாம்.
அல்லாஹ் கூறுகிறான், நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். அல்குர்ஆன் 05 08
ஆக புதிய கல்வியாண்டை முன்னோக்க இருக்கும் மாணவ சகோதரர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சிறந்த ஆழுமையை உருவாக்குவதில் அதிக கரிசனை எடுதிதிட வேண்டும். தமது பிள்ளைகளை எதிர்கால சமூகத்திற்கு அறிவாளிகளாக வழங்கிட பாரிய முயற்சிகளை எவ்விதப் பாகுபாடின்றியும், கல்வியில் பெருமை, பொறாமை போன்ற போட்டிகளைத் தவிர்த்து தூய சிந்தனையுடனும் வழங்கிட ஒன்று சேர்ந்திட வேண்டும். நேர முகாமைத்துவத்தையும், தமது கஷ்ட நஷ்டங்களையும், சமூகத்தின் தேவையையும் பிள்ளைகளுக்கு உணர்த்தி, அவர்களுக்குப் பொறுத்தமான கல்வித் துறையைத் தேர்வு செய்திட முன்வர வேண்டும்.
ஆக்கம்: J.M. Hizbullah (Anvary, Riyady) B.Com Reading
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.