ஆக்கம்: J.M. ஹிஸ்புல்லாஹ் (அன்வாரி), BCom Reading.
நத்தார் பண்டிகை ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான ஜனவரி 7ஆம் நாள் இப் பண்டிகையைக் கொண்டாடுகின்றன.
இப் பண்டிகையின் போது திருப்பலி, குடில்கள், கிறிஸ்மஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்மஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்மஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன சடங்குளாக நிறைவேற்றப்டுகின்றன. அவை நத்தார் பண்டிகையின் அடையாளங்களாகவும் திகழ்கின்றன.
இப்பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது? இது கொண்டாடப்படும் திகதி சரிதானா? முஸ்லிம்கள் இப்பண்டிகையின் போது எவ்வாறு இருக்க வேண்டும்? கிறிஸ்தவர்கள் இது பற்றி அறியவேண்டியது என்ன? என்பவற்றை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கிறிஸ்மஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று என்பதை கட்டுரையினுள் செல்லுமும் நாம் அறிந்திட வேண்டும்.
நத்தார் பண்டிகையின் வரலாறு
நத்தார் பண்டிகை பல பண்டைய கால பண்டிகைகளின் தொகுப்பாகவே காணப்படுகின்றது. அப்பண்டிகைகளும், நத்தார் பண்டிகையில் அதன் தாக்கமும் வருமாறு:
சடுர்நலியா பண்டிகை
உரோமப் பேரரசின் நாட்களில், சடுர்நலியா, இத்தாலி முழுவதும் நன்கறியப்பட்ட குளிர்கால கொண்டாட்டமாகும். இது சனிக் கடவுளை மதிப்பதற்காக நடைபெற்ற பண்டிகையாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும், கேளிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன் போது பரிசு பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தது. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும், சிறுவர்களுக்கு பொம்மைகள் வழங்குவதும் வழக்கமாக காணப்பட்டது. இப்பண்டிகையின் போது மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அரங்கேரின. இது ஆண்டுதோறும் டிசம்பர் 17- டிசம்பர் 24 வரை நடைபெற்றது.
நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (Natalia Solis invicti) பண்டிகை.
உரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி என்ற பண்டிகையை கொண்டாடினர். இது கி.மு. 218-222 இல் உரோம அரசனான எலகாபலுஸ் காலத்தில் உரோமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 270-275 இல் அவுரேலியன் காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. சோல் இன்விக்டுஸ் ("வெற்றிவீரன் சூரியன்", "தோல்வியடையாத சூரியன்") சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுளாவார். இதுவும் டிசம்பர் 25லே கொண்டாடப்பட்டு வந்தது. ஏனெனில் இத்தினம் குளிர்கால சம இராப்பகல் கொண்ட நாளாக ஜூலியஸ் சீசர் கி.மு. 45 இல் அறிமுகப்படுத்திய ஜூலியன் நாட்காட்டியில் இடம்பெற்றது. எனினும் தற்காலத்தில் அது டிசம்பர் 21 அல்லது 22 இல் வருகின்றது. சோல் இன்விக்டுஸ் கிறிஸ்துமசின் தொடக்கத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளதாக கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. ஏனெனில் சில ஆரம்ப கிறிஸ்தவ எழுத்தாளர்களான சிப்ரியன் போன்றோர் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம்.
யூல் பண்டிகை
ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் கடைசி தொடக்கம் ஜனவரி ஆரம்பம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது இடியின் கடவுளை மகிமைப் படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். இதன் போது அந்நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு எரிதங்களும் புதுவருடத்தில் பிறக்கப் போகும் கால்நடைகளை குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியுமளவும் பண்டிகை தொடரும். இது சுமார் 12 நாட்கள் வரை எடுக்கலாம். ஜெர்மனியில் இதையொத்த பண்டிகை மிட்விண்டனெச் (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது.
நத்தாருக்கும் இப்பண்டிகைகளுக்குமான தொடர்பு
மார்ச்சு மாதம் 25ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவி வந்தது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாவைக் கொண்டாடலாயினர்.
இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்.
இத்தாலி உட்பட தென் ஐரோப்பாவில் கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த போது, அம்மக்கள் சடுர்நலியா விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்பு விழாவை அமைத்தனர்.
ஸ்கென்டினேவியா உட்பட வடக்கு ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகளான யூல் பண்டிகை கிறிஸ்மஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு பல பண்டிகைகளினதும், வணக்க வழிபாட்டு முறைகளினதும் தொகுப்பாகவே நத்தார் பண்டிகை இடம்பெறுகிறது.
எனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.
இயேசு எப்போது பிறந்தார்?
இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நாள் இயேசு கருவில் உருவாகியதாக கருதப்படும் மார்ச் 25இலிருந்து ஒன்பது மாதங்கள் கடந்த நாளாகும்.
இது போன்ற பல ஆதாரங்களை கிறிஸ்தவத் திருச்சபையும், இன்னும் பல கிறிஸ்தவ அமைப்புக்கள் கூறி இப்பண்டிகையை வழுப்பெறச் செய்தாலும், 1800 களில் கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபைகள், கிறிஸ்தவ தூய்மைவாதிகள், அங்கிலிக்கன் திருச்சபையினர் போன்றோர் இயேசு டிசம்பர் 25 ல் பிறக்கவில்லை என்றும், அத்தினத்தை கொண்டாடுவது கூடாது என்றும் பிரச்சாரம் செய்து வெற்றியும் கண்டார்கள்.
எனினும் 18, 19ம் நூற்றாண்டுகளில் சிலர் கிறிஸ்மஸ் பண்டிகையை சமூக களியாட்டம் வீண்விரயம் செய்யும் காலமாக அல்லாமல் குடும்பம், நல்லெண்ணம், கருணை போன்றவற்றில் மையப்படுத்தி கொண்டாடும் பழக்கத்தை முன் கொணர்வதில் முக்கிய பங்காற்றினர். இதற்காக பல நூற்களையும், சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதி விநியோகித்து, மங்கிப் போன கொண்டாட்டத்தை உயிர்ப்பித்தனர்.
முதலாம், இரண்டாம் உலகப்போரின் போது அநேக நாடுகள் கிறிஸ்தவர்களின் கைவசமானதால் இப்பண்டிகை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த இவர்களுக்கு இலகுவானதாய் அமைந்தது. 20 ஆம் நூற்றண்டில் அமெரிக்காவில் கிறிஸ்மஸ், மத சார்பானதா? சார்பற்றதா? என்பதைப் பற்றிய சர்ச்சைக்கு முகம் கொடுத்தது. இறுதியில் அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி இது எவ்வித மதச் சார்பும் இன்றிய கொண்டாட்டம் என உலகம் முழுதும் பரவியது.
அதுவே இன்றைய முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தினரும் கொண்டாடும் ஓர் பொது விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.
ஆக, இயேசு டிஸம்பர் 25ல் பிறந்தார் என்பது திட்டமிடப்பட்ட வரலாற்றுச் செருகல் என்பது நிரூபனமாகிறது.
இதனை மேலும் வலியுருத்த பைபிளும், அல்குர்ஆனும் இயேசுவின் பிறப்புத் தினம் குறித்து என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.
பைபிளில் இயேசுவின் பிறப்பு நாள்.
1. இயேசு பிறந்த நாள் குறித்து லூக்கா அதிகாரம்: 02.
அகுஸ்து சீசரின் கட்டளைப்படி மக்கள் தொகையைக் கணக்கில் தன் குடும்பத்தை பதிவு செய்ய தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், அவருக்கு மண ஒப்பந்தமான மரியாவும் நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர். அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்து, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.[1] இதன்பின் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் தோன்றி அவர்களிடம், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.' எனக்கூறி இயேசுவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தனர். அவர்கள் சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டு வணங்கினர்.
மேற்படி பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனி உறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வணிகக்கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.
2. இயேசு பிறந்த நாள் குறித்து லூக்கா சுவிசேஷம் 2:8 .
"அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்"
பனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின் பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி, மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளை நிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.
எனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக, குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.
இது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது ‘Shocked by the Bible’ எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.
lord.activeboard.com என்ற வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.
பைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை. மாறாக, பைபிள் வசனங்களை ஆய்வுக்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.
அல்குர்ஆனில் இயேசுவின் பிறப்பு நாள்.
இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் இயேசுவின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பின்வருமாறு பேசுகின்றது.
அல்லாஹ் கூறுகிறான், "பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். "பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்) நீர், உண்டு பருகி மனநிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் "நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவீராக! " (19:22-26)
இறைவேதம் திருக்குர்ஆன் குறிப்பிடும் பேரீச்சை பழம் காய்க்கும் காலம் கோடைக் காலமாகும். எனவே அல்குர்ஆனிலும் இயேசுவின் பிறப்பு கோடைகாலத்தில் தான் அமையப் பெற்றது என்பது நிரூபனமாகின்றது.
அல்குர்ஆன் மற்றும் பைபிளின் ஆதாரங்கள் அடிப்படையில் இயேசு டிஸம்பர் 25ல் பிறக்கவில்லை எனவும், அத்தினத்தில் இயேசுவின் பிறப்பாகக் கொண்டாடப்படும் விழா புறஜாதியினரின் விழா எனவும், இப் பிறப்புக் கொண்டாட்டம் பின்னால் வந்த சில கிறிஸ்தவ அமைப்புக்களாலும், யூதர்களாலும் திட்டமிட்ட முறையில் வரலாற்றுக் குறிப்பாக மாறியதையும் இதனூடாக எம்மால் அறியமுடிகின்றது.
ஆக இவ்விழாவை தூய கிறிஸ்தவர்கள் எப்போதும் கொண்டாட மாட்டார்கள்.
முஸ்லிம்களும், கிறிஸ்மஸ் தினமும்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் கிறிஸ்மஸ் தினம் குறித்து பின்வரும் கூற்றுக்களும், வழக்கங்களும் இருந்து வருகின்றன.
1. இயேசுவை கிறிஸ்த்தவர்களை விடவும் முஸ்லிம்களே மதித்து நடப்பதற்கு தகுதியானவர்கள்.
மேற்கூறப்பட்ட கூற்றின் பிரகாரம் முஸ்லிம்களில் சிலர் இயேசுவை மதிக்க வேண்டும் எனும் பெயரில் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
இது இஸ்லாம் தடுத்துள்ள மாபெரும் குற்றச்செயலாகும். ஏனெனில் நாம் பின்பற்ற வேண்டிய முஹம்மத் நபிக்கே பிறந்த நாள் விழா எடுக்க முடியாது என இஸ்லாம் தடைவிதிக்கும் போது, ஏனைய நபிமார்களுக்கு எவ்வாறு பிறந்த நாள் விழாவை எடுக்க முடியும்
கிறிஸ்தவர்களில் பலர் இயேசுவை இறைவனாகவும், இறைவனின் மகனாகவும் ஏற்று இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை எனவும், அவன் யாரையும் பெறவுமில்லை, எவராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை என்ற கொள்கையை ஏற்ற முஸ்லிம்கள் இவ்விழாவில் பங்கேற்பது இறைவனாக, அல்லது இறைவனின் புதல்வனாக இயேசுவை ஏற்பது போன்றதாகும். இது முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் அம்சம் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. இப் பண்டிகை நல்லெண்ணம், சமாதானம் போன்றவற்றை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது.
மேற்கூறப்பட்ட கூற்றின் பிரகாரம் சடுர்நலியா பண்டிகையைத் தழுவி கொண்டாடப்படும் இவ்விழாவில் பரிசில்களைப் பரிமாறல், வாழ்த்துக்கள் கூறல், வாழ்த்துத் தெரிவித்து குறுந்தகவல் மற்றும் அட்டை விநியோகம், சமூக வலையத்தளங்களில் வாழ்த்துச் செய்திகளைக் கூறல் போன்ற பல விடயங்களை முஸ்லிம்களும் செய்து வருகின்றனர்.
இதுவும் இஸ்லாம் தடுத்துள்ள விடயமாகும். 20ம் நூற்றாண்டில் பிரகடணப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் மதச்சார்பற்ற விழா என்ற கூற்றும் திட்டமிடப்பட்ட சதியாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, நல்லெண்ணம் வளர்க்க வேண்டும், சமாதானமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பது ஆதிக்கவாதிகளின் மாயையில் நாம் விழுந்துவிட்டதை உணர்த்தி நிற்கிறது.
இமாம் இப்னுல் கையில் ரஹிமஹுல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
“வேற்று மதத்தினரின் அடையாளங்களான அவர்களின் பெருநாள் தினம், அவர்களின் நோன்பு போன்றவற்றை வைத்து வாழ்த்துத் தெரிவிப்பது இஸ்லாம் முற்றாகத் தடைசெய்துள்ளது. அவ்வாறு வாழ்த்துக் கூறுவது அவர்களின் கொண்டாட்டத்தையும், அவர்களின் கொள்கைகளையும் ஏற்பதற்கு சமன். அல்லாஹ்விடத்தில் இது மது அருந்தல், கொலை செய்தல் போன்ற தடைசெய்யப்பட்ட காரியங்களை செய்த அளவுக்கான தண்டனையைப் பெற்றுத் தரும்.” (அஹ்காமுத் திம்மா 1:441-442)
கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் முகமாக எக்காரியம் செய்தாலும் அது இஸ்லாத்திற்கு முரணான அம்சமாகவே மாறிவிடும். அது கிறிஸ்தவ மத நண்பர்களின் உறவு வேண்டும் எனும் அடிப்படையில் செய்தாலும் சரியே. அல்லாஹ்வுக்காக வேண்டி இஸ்லாம் அனுமதித்த நல்ல விடயங்களில் கிறிஸ்லதவர்களோடு நாம் நட்பு பாராட்ட முடியும். இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களில் நாம் அவர்களுடன் நட்பு பாராட்டக் கூடாது. இதுவே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.
அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே!” (58:22)
ஆக டிஸம்பர் 25ல் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் விழா உண்மையில் இயேசு பிறந்த தினம் கிடையாது. இக்கருத்திலே தூய கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர். மாறாக இது பல பண்டைய பண்டிகைகளின் தொகுப்பாகவும், அப்பண்டிகைகளைக் கொண்டாடி வந்த மக்களின் கிறிஸ்தவத்திற்கான மத மாற்றத்தின் விளைவாகவும், தூய கிறிஸ்தவத்தை சிதைக்கும் நோக்கில் செயல்பட்ட சில கிறிஸ்தவ அமைப்பினரால் சொருகப்பட்ட சிந்தனையின் வடிவமாகவும் இக் கிறிஸ்மஸ் பண்டிகை காணப்படுகின்றது.
இது விடயத்தில் தூய கிறிஸ்தவர்களும் குறிப்பாக முஸ்லிம்களும் விழிப்பாக இருந்திட வேண்டும். அல்லாஹ்வே போதுமானவன்.
துணை நின்றவை
1. விக்கிபீடியா மற்றும் இதர வலைத்தளங்கள்.
2. கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள். ஆக்கம் – முஹம்மத் அர்ஷாத்.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.