இலக்கண மாமேதை இமாம் இப்னு மாலிக் (ரஹ்)

எம்.ஐ.எம்.சபியுல்லாஹ்
BA (Hons)
உதவி விரிவுரையாளர்
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகம்

ஒரு மொழியை செம்மைப்படுத்துவதற்கும் அழகு படுத்துவதற்கும் இலக்கணம் இன்றியமையாததாகும். அறபு மொழியில்  சொல்வார்கள் “உணவுக்கு எப்படி உப்பு முக்கியமோ அதே போன்று பேச்சிற்கு இலக்கணம் முக்கியம்". அந்த வகையில் அறபு மொழி  இலக்கணத்தில் விற்பன்னர்களாக பல அறிஞர்கள் உருவாகி தங்களுடைய புதுமையான படைப்புக்களை இவ்வுலகிற்கு தந்துவிட்டு சென்றிருக்கின்றனர். அவர்களில் மிக முக்கியமான ஓர் இலக்கண அறிஞர்தான் "இமாம் இப்னு மாலிக்".

அறபு மொழியை கற்றோர் கற்றுக்கொண்டிருப்போர் யாவருக்கும்  மிகப்பிரபல்யமாகத் தெரிந்த ஒரு இலக்கண நூல்தான் “அல்பியது இப்னு மாலிக்” இன்று பெரும்பாலான அறபுக்கலாசாலைகளில் இந்நூல் பாடத்திட்டத்தில் உள்ளதென்பது இவ்விலக்கண நூலின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றது. இமாம் இப்னு மாலிக் அவர்கள் பல நூல்களை இவ்வுலகிற்கு தந்திருந்தாலும் அவர் இன்றும் கூட மாணவர்களின் உள்ளங்களில் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணம் நான் மேற்சொன்ன அவருடைய இலக்கண நூலான “அல்பியது இப்னு மாலிக்” ஆகும்.

இக்கட்டுரையில் இமாம் இப்னு மாலிக் அவர்களின் வாழ்வு, அறிவுப்பணி, அறபு மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பாக சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பிறப்பும் பரம்பரையும் :-
இப்னு மாலிக் என்று பிரபல்யமாக அறியப்படும் தலை சிறந்த  இலக்கண அறிஞரின் முழுப்பெயர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு மாலிக் அத்தாயி அல் ஜெய்யானி. இமாம் அவர்கள் ஹிஜ்ரி 600 ல் ஸ்பெயினில் பிறந்தார்கள். இவர் ஷாபி மத்ஹபை சேர்ந்த அறிஞர் ஆவார். ஹிஜ்ரி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய இலக்கண மா மேதையாக எல்லோராலும் இமாம் அவர்கள் போற்றப்படுகிறார்.

வாழ்வும் அறிவுத்தேடலும்:-
இமாம் அவர்கள் ஸ்பெயினில் பிறந்து தனது இளம் வயதில் திமஸ்கிற்கு சென்று தனது கல்விப்பயணத்தை ஆரம்பித்தார். அங்கு  வாழ்ந்த காலப்பகுதியில் பல்வேறு அரசியல் பிரச்சினைகளும் குழப்பங்களும் நிறைந்து காணப்பட்டன. சிலுவை யுத்தங்கள், தாத்தாரிகளுடைய தாக்குதல்கள் இடம்பெற்ற கசப்பான காலப்பகுதியில் இமாம் அவர்கள் வாழ்ந்தாலும் அறிவுத்தேடலிலுமு, கற்பித்தல் செயற்பாடுகளிலும் கூடுதலாக ஈடுபட்டார்கள் என்பது இமாம் அவர்களின் அறவுப்பணியை படம்பிடித்துக்காட்டுகின்றது.

ஆசிரியர்கள்:-
இமாம் அவர்கள் அபூ அலி அஸ்சல்வபீன், தாபித் இப்னு ஹய்யான், இப்னு எயீஸ் அல் ஹல்பி, அஸ்ஸகாவி, ஹஸன் இப்னு ஸபாஹ் போன்ற அறிஞர்களிடம் கல்விபயின்று இலக்கணம், அறபு மொழி, கவிதை போன்றவற்றில் விற்பன்னராக திகழ்ந்தார்கள்.

அறிவாற்றல்:-
இமாம் இப்னு மாலிக் அவர்கள் பல்வேறு அறிஞர்களிடம் கற்று தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி உலகமே வியந்து பார்க்கின்ற அளவுக்கு பெரும் அந்தஸ்தை அடைந்துள்ளார். இமாம் அவர்கள் அறபு மொழியில் பாண்டித்தியம் அடைந்தது மட்டுமல்லாமல் (இல்முல் கிராஆத்) கிராஆத் கலையிலும், அறபு இலக்கண இலக்கியத்திலும் தடம் பதித்துள்ளார் என்பதை அவரது வரலாறு சான்றுபகர்கின்றது. 

எந்தளவுக்கென்றால் மக்கள் இமாம் சீபவைகி, இமாம் ஷமஷ்ஹரி போன்ற அறிஞர்களின் இலக்கண புத்தகங்களிருந்து பிரயோசனம் அடைந்தது மட்டுமல்லாமல் இமாம் இப்னுமாலிகின் “அல்பியா” என்ற இலக்கண நூலை கற்றுக்கொள்வதிலும் மனனமிடுவதிலும் அதிகம் ஆர்வம் காட்டினார்கள். தனது அல்பியா என்ற இலக்கண நூலில் ரஜ்ஸ் என்ற மெட்டில் ஆயிரம் பய்த்களை கொண்டு வந்து இலக்கண சட்டங்களை தெளிவு படுத்துகின்றார்.
இலக்கண விதிகளை  தெளிவுபடுத்துவதற்கு கவிதைகளை யாத்தது மட்டுமல்லாமல் தனது “அல்பியா” என்ற நூலில் ஏனைய இலக்கண அறிஞர்கள் பாவிக்காத சில புதுமையான தலைப்புக்களையும் பயன்படுத்தியிருப்பது இமாம் அவர்களின் மதிநுட்பத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

அல்பியா என்ற இலக்கண நூலிற்கு உலமாக்கள் அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பதைப்பார்க்கிறோம். இந்நூலை விரிவுரை செய்து சுமார் 40 க்கும் மேற்பட்ட விரிவுரை நூல்கள் இது வரைக்கும் எழுதப்பட்டுள்ளன.
உதாரணமாக சில நூல்களை இங்கு குறிப்பிடுகின்றேன்.
1.   அவ்லஹீல் மஸாலகி இலா அல்பியத்திப்னு மாலிக் - ஜலாலுத்தீன் இப்னு ஹிஷாம்
2.   சரஹ் இப்னு அகீல்  - பஹாஉத்தீன் அப்துல்லாஹ் இப்னு அகீல்
3.   மன்ஹஜீஸ் ஸாலிகி இலா அல்பியதிப்னு மாலிக் - அபுல் ஹசன் அலி நூருத்தீன்

இப்படி இமாம் அவர்களின் அல்பியா என்ற இலக்கண நூல் பெரும் வரவேற்பையும் கண்ணியத்தையும் அவருக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றது. இவரைப்பற்றி ஏனைய அறிஞர்கள் கூறும் போது
இமாம் ஷாபி அவர்கள் பிக்ஹீத் துறையில் எப்படி பண்டித்தியம் பெற்றவர்களாக இருந்தாரோ அதே போன்று இமாம் இப்னு மாலிக் அவர்களும் அறபிலக்கணத்;துறையில் பாண்டித்தியம் பெற்ற மேதையாவார்”.

இமாம் அவர்களின் சிறப்பு என்னவென்றால் இலக்கண விதிகளை தெளிவுபடுத்துவதற்கு அல் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் கொண்டு வருவார். மேலும் அரேபிய கவிதைகளை கொண்டுவந்து இலக்கண சட்டங்களை தெளிவுபடுத்த முயற்சிப்பார். ஏனைய உலமாக்கள் இவர் எங்கிருந்து கவிதைகளை கொண்டு வருகின்றார் என்று வாயில் விரல் வைக்கின்ற அளவுக்கு இலக்கிய அறிவுள்ள மேதையாக இமாம் அவர்கள் இருந்துள்ளார்கள்.

இமாம் அவர்களின் நூல்கள்:-
இமாம் இப்னு மாலிக் அவர்கள் அறபு மொழி, சர்ப், இலக்கணம், கிறாஆத் கலை போன்ற துறைகளில் சுமார் 40 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக.
இங்கு சில நூல்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.
1.   அல்பியத்துப்னி மாலிக் பின் நஹ்வி வஸ்ஸர்பி
2.   லாமியதுல் அப்ஆல்
3.   உத்ததுல் ஹாபிழ் வஉம்ததுல் லாபிழ்
4.   ஈஜாசுத் தஃரீப்
5.   சவாஹிதுத் தவ்லிஹ்
6.   துஹ்பதுல் மவ்தூத் பில் மக்சூரி வல் மம்தூதி

இமாம் அவர்களின் மாணவர்கள்:-
இமாம் இப்னு மாலிக் அவர்களுக்கு பல மாணவர்களும் இருந்துள்ளனர் அவர்களில்
1.   பத்ருத்தீன் முஹம்மத் (இமாம் அவர்களின் புதல்வன்)
2.   சம்சுதீன் இப்னு ஜஃவான்
3.   இப்னுல் அத்தார்
4.   ஸைனுத்தீன் அபூ பக்கர்
5.   அபு அப்தில்லாஹ் அஸ்ஸய்ரபி  போன்ற மாணவர்களை குறிப்பிட முடியும்.

மரணம்:-
இலக்கண இலக்கிய மாமேதையான இமாம் அவர்கள் அறபு மொழியை பாதுகாப்பதற்கும் அதனை செம்மைப்படுத்துவதற்கும் தன்னாலான பங்களிப்புக்களை வழங்கிவிட்டு ஹிஜ்ரி 672ல் இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget