ஹதீஸியல் ஆய்வு
அல்லாஹ்வால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நபிமார்களில் இறுதியானவர் எம் உயிரிலும் மேலான முஹம்மத் (ஸல்) அவர்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதரென ஏற்று, ஏவியதை எடுத்து நடப்பதும், தடுத்ததைத் தவிர்ந்து கொள்வதும், அவர்கள் அறிவித்த தகவல்களை உண்மைப்படுத்துவதும் நாம் அவர்களை ஈமான் கொள்வதில் உள்ளடங்குகின்றது. அத்துடன் அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் சொல்வதும், அவர்களை நேசிப்பதும் பிரதான அம்சங்களில் உள்ளவை.
நபி (ஸல்) அவர்களை நேசிப்பதன் பிரதான அறிகுறி அவர்களைப் பின்பற்றுவதாகும். "நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான்"என (நபியே) நீர் கூறுவீராக.(ஆல இம்ரான் 31) அன்னாரை நேசிப்பது கடமையென்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. (பார்க்க : தௌபா 24). எனினும் அவர்களை நேசிப்பதென்பதன் பேரில் அவர்கள் கூறாத, அவர்களில் வாழ்க்கையில் நடைபெறாத நிகழ்வுகளை அன்னார் பக்கம் சேர்க்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்களை நேசித்து, கண்ணியப்படுத்தும் நோக்கில் அவர்களைப் பற்றிக் கூறப்படும் செய்திகளில் அவர்களுடைய பிறப்புடன் தொடர்பான பல அற்புதங்கள் முதன்மை வகிக்கின்றன. அவற்றில் பிரதானமானது முஹம்மத் (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டு, தொப்புள்குடி வெட்டப்பட்ட நிலையில் பிறந்தார்கள் என்பதாகும்.
இக்கட்டுரையில் அதுபற்றி வந்துள்ள அறிவிப்புக்களை சற்று ஆராய்ந்து அச்செய்திகள் ஆதாரபூர்வமானவையா என்பதை விளங்க முயற்சிப்போம்.
நபி (ஸல்) அவர்களுக்கு கத்னாச் செய்யப்பட்ட விடயத்தில் 3 கருத்துக்கள் உள்ளன :
1. நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டவராகப் பிறந்தார்கள்.
2. நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் அவர்கள் கத்னாச் செய்துவிட்டார்கள்.
3. நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களது பாட்டனார் அப்துல்முத்தலிப் அக்கால வழக்கப்பிரகாரம் கத்னாச் செய்து விட்டார்கள்.
இவை பற்றி இடம்பெற்றுள்ள சில அறிவிப்புக்களை சற்று விரிவாக நோக்குவோம்.
1. நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டவராகப் பிறந்தார்கள் என்பதாகக் குறிப்பிடும் அறிவிப்புக்கள் :
நபி (ஸல்) அவர்கள் பிறக்கும் போதே கத்னாச் செய்யப்பட்டுத்தான் பிறந்தார்கள் என்பது பற்றி 5 நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் : அனஸ் பின் மாலிக் (ரலி), அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), அபூ ஹரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி). இந்த ஐந்து அறிவிப்புக்கள் பற்றியும் சற்று நோக்குவோம்.
1. அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) கூறினார்கள் : நான் கத்னாச் செய்யப்பட்டவனாகப் பிறந்தது அல்லாஹ்விடத்தில் எனக்குள்ள மரியாதையிலுள்ளது. என்னுடைய மறைவிடத்தை யாரும் காணவில்லை.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இச்செய்தி பின்வரும் நூல்களில் இடம்பெறுகின்றது : இமாம் தபரானீயின் அல்முஃஜமுல் அவ்ஸத் (6148), அபூ நுஐமின் ஹில்யதுல் அவ்லியா 3/24, அதே அறிஞரின் தலாஇலுந்நுபுவ்வத் (91), அல்கதீபுல் பஃதாதியின் தாரீகு பஃக்தாத் 2/179 (187) இப்னு அஸாகிரின் தாரீகு திமஷ்க் (762, 763, 764)இப்னுல் ஜௌஸியின் அல்இலலுல் முதனாஹியாஃ (264) அழ்ழியாஉல் மக்திஸீயின் அல் அஹாதீஸுல் முஃக்தாரா (1864).
மேற்கண்ட நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் ஸுப்யான் பின் முஹம்மத் அல் ஃபிஸாரீ அல் மிஸ்ஸீஸீ என்றொருவர் இடம் பெறுகிறார். அவர் பொய்யரெனச் சந்தேகிக்கப்பட்டவர் எனப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். அவர்களில் அபூ ஹாதம், இப்னு ஹிப்பான், இப்னு அதிய், அபூ நுஐம் போன்றோர் பிரதானமானவர்கள். (பார்க்க : இப்னு அபீ ஹாதமின் அல்ஜர்ஹு வத்தஃதீல் 990, இப்னு ஹிப்பானின் அல்மஜ்ரூஹீன் 471, இப்னு அதீயீன் அல்காமில் 845).
இதே செய்தி நூஹ் பின் முஹம்மத் அல்அய்லீ, மற்றும் முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் ஜாரூத் ஆகியோர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நூஹ் பின் முஹம்மத் அல்அய்லீயைப் பற்றி இமாம் தஹபீ (ரஹ்) "இவர் பொய்க்கு ஒப்பகும் ஒரு செய்தியை ஹஸன் பின் அரஃபா என்பவரைத் தொட்டும் அறிவித்துள்ளார்" (மீஸானுல் இஃதிதால் இல 9141, அல்முஃக்னீ பிள்ளுஅஃபா 6682). ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) இதனைத் தனது லிஸானுல் மீஸானில் (இல 8183) பதிவு செய்து விட்டு மேற்கண்ட நபிமொழியைக் கூறியுள்ளார்கள். முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் பின் ஜாரூத் பற்றி அவர் வாயிலாக அறிவித்த ஹாபிழ் இப்னு அஸாகிரே அவர் பொய்யரெனக் கூறியுள்ளார்கள். (தாரீகு திமஷ்க் 764).
எனவே பல அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டிருந்தாலும் இச்செய்தி மிகவும் பலவீனமானது. இதனை இமாம்களான இப்னு அஸாகிர், இப்னுல் ஜௌஸீ, இப்னுல் கைய்யிம், தஹபீ மற்றும் அல்பானீ பலர் மிகவும் பலவீனமானதாகக் கூறியுள்ளனர்.
2. அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டு, தொப்புள்குடி வெட்டப்பட்ட நிலையில் பிறந்தார்கள். இது அப்துல் முத்தலிபைக் கவர்ந்து, அவர்களிடம் இடம்பிடித்துக் கொண்டது. எனது இப்புதல்வருக்கு நிச்சயம் எதிர்காலத்தில் முக்கியத்துவம் உண்டு என்று கூறினார். அதே போன்று அவருக்கு முக்கியத்துவமிருந்தது.
அப்பாஸ் (ரலி) அறிவித்துள்ள இச்செய்தி பின்வரும் நூல்களில் இடம்பெறுகின்றது : இப்னு ஸஃதின் அத்தபகாதுல் குப்ரா (1/ 82), அபூ நுஐமின் தலாஇலுந் நுபுவ்வாஃ (92), பைஹகீயின் தலாஇலுந் நுபுவ்வாஃ (1/ 114), இப்னு அஸாகிரின் தாரீகு திமஷ்க் (3/ 79).
இச்செய்தியின் அனைத்து அறிவிப்பாளர் வரிசையிலும் யூனுஸ் பின் அதாஃ என்பவர் இடம்பெறுகின்றார். அவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர். இமாம் இப்னு ஹிப்பான் இவரைப் பற்றி "ஆச்சரியமான செய்திகளை அறிவிப்பவர், இவரை ஆதாரத்திற் கொள்ள முடியாது" எனக் கூறியுள்ளார்கள். இமாம்களான ஹாகிம், அபூ நுஐம் ஆகியோர் இவரைப்பற்றி "ஹுமைதுத் தவீல் என்பவரைத் தொட்டும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பர்" எனக் கூறியுள்ளனர். (பார்க்க : அல்மஜ்ரூஹீன் 1243, ழுஅபாஉ அபீ நுஐம் 166, மீஸானுல் இஃதிதால் 9914, லிஸானுல் மீஸான் 8723).
எனவே இச்செய்தியும் மிகவும் பலவீனமானது.
3. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்டு, தொப்புள்குடி வெட்டப்பட்ட நிலையில் பிறந்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இச்செய்தியை ஹாபிழ் இப்னு அதிய் (ரஹ்)அவர்கள் தனது அல்காமிலிலும் (2/ 399, இல 347) அவரின் வாயிலாக ஹாபிழ் இப்னு அஸாகிர் (ரஹ்) தனது தாரீகு திமஷ்கிலும் (3/ 411) பதிந்துள்ளனர்.
இவ்வறிவிப்பில் இடம்பெறும் ஜஃபர் பின் அப்தில் வாஹித் அல்ஹாஷிமீ என்பவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர். இமாம்களான இப்னு ஹிப்பான், அப்னு அதிய், தாரகுத்னீ, இப்னு அஸாகிர், தஹபீ மற்றும் பலர் இவரைப் பொய்யர் என்றும், பொய்யரெனச் சந்தேகிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர். அத்துடன் அநேகமானோர் அதற்கு சான்றாக மேற்கண்ட நபிமொழியைக் கூறியுள்ளனர். (பார்க்க: அல்மஜ்ரூஹீன் 185, அல்காமில் 347, அழ்ழுஅஃபாஉ வல்மத்ரூகூன் 142, தாரீகு திமஷ்க் 9806, மீஸானுல் இஃதிதால் 1511, அல்முஃனீ ஃபிழ்ழுஅஃபா 1150.) மஸ்லமா பின் காஸிம் என்பவர் மாத்திரம்தான் இந்த ஜஃபர் பின் அப்தில் வாஹித் நம்பகமானவர் என்று கூறியுள்ளார். பல அறிஞர்தளின் கூற்றுக்களுக்கு மாற்றமாக உள்ள இக்கருத்தை ஏற்க முடியாது. அது மாத்திரமின்றி இந்த ஜஃபரை வலுப்படுத்திய மஸ்லமாவே விமர்சனத்திற்குரியவர். ஹதீஸ்கலை அறிஞர்களின் விதிமுறைப் பிரகாரம் விமர்சிக்கப்படும் ஒருவர் இன்னொருவரைப் பற்றி பெரும்பான்மையினருக்கு மாற்றமாகத் தீர்ப்புச் செய்தால் அது ஏற்கப்பட மாட்டாது. எனவே இவரது கூற்று செல்லுபடியாக மாட்டாது. அதனடிப்படையில் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இச்செய்தியும் இட்டுக்கட்டப்பட்டது. அல்லது அதற்கு நெருங்கிய மிகவும் பலவீனமானது.
4. அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்யப்பட்ட நிலையில் பிறந்தார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இச்செய்தி தாரீகு திமஷ்கில் (3/ 411) பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்த் தொடரில் பல குறைகளுள்ளன. இஸ்மாஈல் பின் முஸ்லிம் அல்மக்கீ என்பவர் பெரும்பான்மையான அறிஞர்களால் மிகவும் பலவீனமானவர் அல்லது பலவீனமானவர் என விமர்சிக்கப்பட்டவர். (பார்க்க: அல்ஜர்ஹ் வத்தஃதீல் 669, அல் மஜ்ரூஹீன் 36, அல்காமில் 120, மீஸானுல் இஃதிதால் 945, தஹ்தீபுத் தஹ்தீப் 1/ 331).
அவரிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் கஸீர் அல்கூஃபீ என்பவரும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர். மிகவும் பலவீனமானவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் "முன்கருல் ஹதீஸ்" எனும் வார்த்தையை இமாம் புஹாரி மற்றும் இப்னு அதிய் ஆகியோரும், "மத்ரூக்" எனும் வார்த்தையை ஸகரிய்யா அஸ்ஸாஜீயும் இவருக்குப் பயன்படுத்தியுள்ளனர். மற்றும் இமாம்களான அலீ பின் மதீனீ, அஹ்மத் பின் ஹன்பல், இஜ்லீ, அபூ ஹாதம் அர்ராஸீ, உகைலீ, இப்னு ஹிப்பான், அபூ அஹ்மத் அல்ஹாகிம், இப்னு ஹஜர் போன்றோர் இவர் பலவீனமானவர் என்பதை உணர்த்தும் பலதரப்பட்ட வார்த்தைகளை இவரது விடயத்தில் கூறியுள்ளனர். அது மாத்திரமின்றி இவர் ஷீஆக் கொள்கையைச் சார்ந்தவர் என்பதையும் பலர் கூறியுள்ளனர். இமாம் யஹ்யா பின் மஈன் மாத்திரம் அவர் பரவாயில்லை என்று கூறியுள்ளார். அதையும் அவரிடம் சுட்டிக்காட்டப்பட்ட போது எனக்கு முஹம்மத் பின் கஸீரிடமிருந்து நல்ல ஹதீஸ்கள்தான் கிடைத்தன என்று இப்னு மஈன் கூறியுள்ளார். பெரும்பான்மையினருக்கு மாற்றமாகக் கூறிய இப்னு மஈனின் இவ்வார்த்தை ஏற்கப்பட மாட்டாது. அதுவும் முஹம்மத் பின் கஸீர் அறிவிப்பாளர் வரிசைகளைக் குழப்பக்கூடியவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் தவறை விபரித்துள்ளார். அதற்குப் பல உதாரணங்களை இமாம்களான இப்னு அதிய் மற்றும் தஹபீ தமது நூல்களில் கூறியுள்ளனர். எனவே குற்றச்சாட்டு தெளிவாக விபரிக்கப்பட்டிருக்கும் போது வலுப்படுத்துவோரின் கூற்றைக்கான பலவீனப் படுத்துவோரின் கூற்றுக்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுவது ஹதீஸ்கலை அறிஞர்களின் பொதுவிதி. (الجرحالمفسر مقدمعلى التعديل). அந்த அடிப்படையில் முஹம்மத் பின் கஸீர் என்பவரும் பலவீனமானவர் என்பதே வலுவான கருத்தாகும். (பார்க்க : அல்ஜர்ஹ் வத்தஃதீல் 308, அல் மஜ்ரூஹீன் 985, அல்காமில் 1731, மீஸானுல் இஃதிதால் 8098, தஹ்தீபுத் தஹ்தீப் 9/ 418, லிஸானுல் மீஸான் 1154).
அவரிடமிருந்து அறிவிக்கும் அலீ பின் முஹம்மத் அல்ஃபாரிஸீ யாரென அறியப்படாதவர். இவ்வாறு இவ்வறிவிப்பாளர் வரிசையில் தொடராக மூன்று குறைகள் காணப்படுவதால் இதுவும் மிகவும் பலவீனமான செய்தியாகவே கணிக்கப்படுகின்றது. அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இச்செய்தியை இப்னு அஸாகிர் மாத்திரமே அறிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
5. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் தொப்புள்குடி வெட்டப்பட்டு, கத்னாச் செய்யப்பட்டவராகப் பிறந்தார்கள்.
இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் இச்செய்தி அபூ நுஐமின் தாரீகு அஸ்பஹானிலும் (1/ 192), இப்னு அஸாகிரின் தாரீகு திமஷ்கிலும் (3/ 414, இல 765) இடம்பெறுகின்றது. இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துர்ரஹ்மான் பின் அய்யூப் அல்ஹிம்ஸீ என்பவர் பலவீனமானவரென இமாம்களான உகைலீ, தஹபீ ஆகியோர் கூறியுள்ளனர். (பார்க்க : அழ்ழுஅஃபாஉல் கபீர் 914, மீஸானுல் இஃதிதால் 4819). அத்துடன் அவரிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் முஹம்மத் பின் ஸுலைமான் அல்பாகன்தீ என்பவர் ஹதீஸில் தத்லீஸ் எனும் இருட்டடிப்புச் செய்யக்கூடியவரெனவும், தவறுவிடக்கூடியவர் என்றும் அறிஞர்களால் விமர்சிக்கப் பட்டவர். (பார்க்க : அல்காமில் 1788, மீஸானுல் இஃதிதால் 8130, லிஸானுல் மீஸான் 7356, ). அவரிடமிருந்து அறிவிக்கும் அபுல் ஹஸன் அஹ்மத் பின் முஹம்மத் அல்கதீப் அல்மல்ஹமீ என்பவர் தரம் அறியப்படாதவர். எனவே இவ்வறிவிப்பிலும் மூன்று அறிவிப்பாளர்கள் தொடராக விமர்சிக்கப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இச்செய்தியும் மிக பலவீனமானது.
சுருக்கமாகக் கூறுவதாயின் நபி (ஸல்)அவர்கள் கத்னாச் செய்யப்பட்டு, தொப்புள் கொடியும் வெட்டப்பட்ட நிலையில் தான் பிறந்தார்கள் என்று குறிப்பிட்டு வந்திருக்கும் ஐந்து நபிமொழிகளில் ஒன்று இட்டுக்கட்டப்பட்டதாகவும், ஏனைய நான்கும் மிகவும் பலவீனமானதாகவும் உள்ளதை அவதானிக்கலாம். மேலும் முதலாவது ஹதீஸாகிய அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தியில் மாத்திரம்தான் நபி (ஸல்) அவர்களது கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்தும் ஸஹாபாக்கள் நபியைப் பற்றிக் கூறிய அறிவிப்புக்களாகவே உள்ளன.
இமாம் ஹாகிம் (ரஹ்) தனது முஸ்தத்ரகில் (4177) நபியவர்கள் கத்னாச் செய்யப்பட்டுப் பிறந்தது முதவாதிர் எனும் அதிகம் பேரால் அறிவிக்கப்பட்ட செய்தியெனக் கூறியுள்ளார்கள். அதனை ஆட்சேபித்து ஹாபிழ் தஹபீ அவர்கள் "இது ஆதாரபூர்வமானதென்பதையே நான் அறியமாட்டேன். அவ்வாறிருக்க எவ்வாது இது முதவாதிர் ஆகும்" என்று கூறியுள்ளார்கள். (ஹாபிழ் இப்னுல் முலக்கினின் முக்தஸர் இஸ்தித்ராகிஸ் தஹபீ அலா முஸ்தத்ரகில் ஹாகிம் இல 446). அதே போன்று ஹாபிழ் இப்னுல் ஜௌஸீ தனது அல்இலலுல் முதனாஹியாஃவில் (264) அனஸ் (ரலி) அவர்களின் செய்தியை அறிவித்து விட்டு "நபியவர்கள் கத்னாச் செய்யப்பட்டுத் தான் பிறந்தார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை, எனினும் இச்செய்தி ஆதாரபூர்வமானதல்ல" என்று கூறியுள்ளார்கள். எனினும் தனது கருத்தை வலுப்படுத்தும் எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இமாம் இப்னு கஸீர் (ரஹ்) தனது அல்பிதாயாவில் (3/ 388) "இச்செய்தி பல அறிவிப்புக்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதனைப் பலர் ஸஹீஹான செய்தியென்றும், இன்னும் சிலர் முதவாதிர் என்றும் கருதுகின்றனர். இவ்வனைத்திலும் ஆட்சேபனையுண்டு." என்று கூறியுள்ளார்கள்.
2. நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கத்னாச் செய்துவிட்டார்கள் என்று குறிப்பிடும் அறிவிப்புக்கள்.
நபி (ஸல்)அவர்களது இதயம் பிளக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜிப்ரீல் (அலை) நபிக்கு கத்னாச் செய்து விட்டார்கள் என்று மற்றும் சிலர் கூறுகின்றனர். அபூ பக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தியையே இவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இச்செய்தியை இமாம் தபரானி தனது அல்முஃஜமுல் அவ்ஸத்திலும் (5821), அபூ நுஐம் தனது தலாஇலுந் நுபுவ்வத்திலும் (93), இப்னு அஸாகிர் தனது தாரீகு திமஷ்கிலும் (3/ 410) பதிந்துள்ளனர்.
இச்செய்தியும் மிகவும் பலவீனமானது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் பல குறைகளுள்ளன. முஹாரிப் பின் ஸுல்லம் அஸ்ஸியாதீ அவர்கள் தரம் அறியப்படாதவர். அவரிடமிருந்து அவரது மகன் மாத்திரம் தான் ஹதீஸ்கள் அறிவித்துள்ளார். மஸ்லமா பின் முஹாரிப் ஆகிய அவரது மகனும் தரம் அறியப்படாதவர். மேலும் இதிலுள்ள அப்துர்ரஹ்மான் பின் உயைனா என்பவர் யாரென்றே அறியப்படாதவர். இவர் மாத்திரம்தான் இச்செய்தியை அறிவித்துள்ளதாக இமாம் தபரானீ அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அறிவித்து விட்டுக் கூறியுள்ளார்கள்.
ஹாபிழ் அல்ஹைஸமீ அவர்கள் தனது மஜ்மஉஸ் ஸவாஇத்தில் (13853)இச்செய்திக் கூறிவிட்டு "இதில் அப்துர்ரஹ்மான் பின் உயைனா மற்றும் மஸ்லமா பின் முஹாரிப் ஆகியோர் உள்ளனர். அவர்கள் யாரென எனக்குத் தெரியாது, ஏனையோர் வலுவானவர்கள்" என்று கூறியுள்ளார்.
ஒரு புறம் அறிவிப்பாளர் வரிசை அடிப்படையில் இச்செய்தி மிவும் பலவீனமானதாக உள்ளதுடன் இதில் கூறப்பட்டுள்ள செய்தியும் பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்படுகின்றது. நபி (ஸல்) அவர்களுடைய இதயம் பிளக்கப்பட்ட செய்தி பற்றி பல ஸஹீஹான ஹதீஸ்கள் பிரபலமான நூல்களில் பதியப்பட்டுள்ளன. அதில் எந்தவொரு அறிவிப்பிலும் அச்சந்தர்ப்பத்தில் ஜிப்ரீல் (அலை) நபியவர்களுக்கு கத்னாச் செய்து விட்டதாக இடம்பெறவில்லை. எனவே இச்செய்தி அறிவிப்பாளர் தொடர், கருப்பொருள் இரு அடிப்படைகளிலும் பலவீனமானதே.
3. நபி (ஸல்) அவர்களுக்கு பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் கத்னாச் செய்துவிட்டார்கள் என்று குறிப்பிடும் அறிவிப்புக்கள்.
நபி (ஸல்) அவர்கள் பிறந்து ஏழாவது தினத்தில் அவர்களது பாட்டன் அப்துல் முத்தலிப் நபியவர்களுக்கு கத்னாச் செய்து விட்டு, அதற்காக விருந்தொன்றையும் ஏற்பாடு செய்தார்கள். அத்துடன் அவர்களுக்கு முஹம்மத் எனப் பெயரிட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கும் இச்செய்தியை இமாம் இப்னு அப்தில் பர்ர் (ரஹ்) தனது அத்தம்ஹீத் எனும் நூலிலும் (23/ 140), அல்இஸ்தீஆப் எனும் நூலிலும் 1/ 51 பதிவு செய்துள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையும் ஏற்கமுடியுமானதல்ல. இதன் அறிவிப்பாளர் வரிசையிலுள்ள முஹம்மத் பின் அபிஸ்ஸிர்ரீ என்பவர் நம்பகமானவராக இருந்தாலும், அதிக நபிமொழிகளை அறிவித்ததால் அதிகம் தவறிழைக்கக் கூடியவரென இமாம்களான அபூ ஹாதம், இப்னு அதிய், இப்னு வழ்ழாஹ், தஹபீ, இப்னு ஹஜர் போன்றோர் கூறியுள்ளனர். (பார்க்க : அல்ஜர்ஹ் வத்தஃதீல் 452, தஹ்தீபுல் கமால் 5578, மீஸானுல் இஃதிதால் 8114, தஹ்தீபுத் தஹ்தீப் 9/ 424). அவர் வாயிலாக மாத்திரம்தான் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ஆசிரியர் அல் வலீத் பின் முஸ்லிம் பிரபலமான நம்பகமான ஒருவர். எனினும் அவர் தனது ஆசானிடமிருந்து தான் நேரடியாகக் கேட்டதை உணர்த்தும் 'ஸமிஃது", 'ஹத்தஸனா", 'ஹத்தஸனீ" போன்ற சொற்களைப் பயன்படுத்திக் கூறாமல் அவரது அறிவிப்புக்கள் ஏற்கப்பட மாட்டாது. ஏனெனில் இவர், அறிவிப்பாளர் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தும் 'தத்லீஸ்" எனும் மோசடி வகையில் பிரபலமானவர். அவ்வாறானோர் தாம் தமது ஆசானிடமிருந்து நேரடியாகக் கேட்டதை உணர்த்தும் சொற்களைப் பயன்படுத்திக் கூறாமல் அவர்களது அறிவிப்புக்கள் ஏற்கப்பட மாட்டாது. இங்கு வலீத் பின் முஸ்லிம் தாம் நேரடியாகக் கேட்டதை உணர்த்தாமல் 'அன்" என்ற எழுத்தைப் பயன்படுத்தித் தான் அறிவித்துள்ளார்கள். அதேபோன்றவர் தான் இக்ரிமாவிடமிருந்து அறிவிக்கும் அதாஃ அல் குராஸானீ என்பவரும் தத்லீஸில் பிரபலமானவர். அவரும் இங்கு தான் நேரடியாகக் கேட்டதை உணர்த்தாமல் 'அன்" என்ற எழுத்தைப் பயன்படுத்தித் தான் அறிவித்துள்ளார். எனவே இம்மூன்று குறைகளையும் கொண்டுள்ள இவ்வறிவிப்பாளர் வரிசையையும் ஏற்க முடியாது.
மேற்கூறப்பட்ட மூன்று கருத்துக்களுக்கும் ஏற்றுக்கொள்ளத் தக்க வலுவான ஆதாரங்கள் இல்லையென்பதை இங்கு நாம் கவனிக்கலாம்.
வலுவான கருத்து :
மேற்கூறப்பட்ட மூன்று கருத்துக்களிலும் வலுவான கருத்து எதுவென்பதை நேரடியான ஸஹீஹான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியாது. அது பற்றி வந்திருக்கும் அனைத்து நபிமொழிகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப் பட்டவை என்பதை மேலே தெளிவுபடுத்தினோம். எனினும் நபியவர்கள் அக்கால முறைப்படி பிறந்த பின்னர்தான் கத்னாச் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதே வலுவானதாக இருக்கின்றது. அதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம் :
1. ஒருவர் கத்னாச் செய்யப்பட்டுப் பிறப்பதென்பது அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வு. அது ஒருவருக்கு நிகழ்ந்ததாகக் கூறுவதாயின் அது பல நபித்தோழர்களால் வலுவான ஆதார அடிப்படையில் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.
2. நபியவர்களுக்கு அப்துல் முத்தலிப்தான் கத்னாச் செய்து விட்டார்கள் என்பதற்கு மேலதிகமான ஆதாரங்கள் தேவையில்லை. ஏனெனில் கத்னா என்பது நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் அழகிய முன்மாதிரிகளில் ஒன்று. அதனை மக்கத்து குரைஷிகளும் பின்பற்றி வந்தனர். அவர்களது வழமைப் பிரகாரம் குழந்தைக்குப் பொறுப்பாக இருக்கும் ஆண்தான் இதனையும் நிறைவேற்றுவார். தந்தையை இழந்து பிறந்த நபியவர்களுக்கு அப்துல் முத்தலிபே பொறுப்பாக இருந்தார்கள்.
3. கத்னாச் செய்வது மக்கத்து குரைஷிகளின் வழமை. அதனை புஹாரியில் இடம்பெறும் அபூ ஸுஃப்யான் – ரோம் மன்னர் ஹிரெக்லயிஸ் இருவருக்கிடையில் நடைபெற்ற உரையாடலின் மூலம் புரிந்து கொள்ளலாம். (புஹாரி 07).
4. ஒரு வாதத்திற்காக நபியவர்கள் கத்னாச் செய்யப்பட்டுத் தான் பிறந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதனை நபியவர்களுக்குப் பிரத்தியேகமாக வழங்கப்பட்ட ஒரு சிறப்பாகக் கருத முடியாது. ஏனெனில் அவர்களுக்கு முன்னரும் பின்னரும் கத்னாச் செய்யப்பட்டுப் பிறந்தவர்கள் சிலர் உள்ளனர். உதாரணத்திற்காக இப்னு ஸய்யாத் என்பவன் கத்னாச் செய்யப்பட்ட நிலையில் பிறந்ததாக இப்னு ஸுபைர் (ரலி), உம்முஸலமா (ரலி) ஆகியோரைத் தொட்டும் வலுவான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டு பதிவாகியுள்ளது. (முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக் 20831, முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா 38683, இமாம் இப்னுல் அஸீரின் உஸுதுல் காபாஃ 3023, இமாம் தஹபீயின் தஜ்ரீது அஸ்மாஇஸ் ஸஹாபா 3366)இதே விடயம் ஆஇஷா (ரலி) அவர்களைத் தொட்டும் நபியவர்கள் கூறியதாகவே ஓர் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அது மிகவும் பலவீனமானது. அதேபோன்று இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்களுடைய காலத்திலும் பைத்துல் மக்திஸில் போதித்துக் கொண்டிருந்த அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் உஸ்மான் அல்கலீலீ என்பவரும் இவ்வாறு கத்னாச் செய்யப்பட்ட நிலையில் பிறந்ததாக தனது ஸாதுல் மஆத் எனும் நூலில் (பாகம் 1, பக் 80) குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோன்று ஹிரெக்லயிஸ் மன்னர் கூட அவ்வாறு பிறந்ததாகவும், அதனைக் கிண்டலடித்து இம்ரஉல் கைஸ் எனும் ஜாஹிலிய்யாக் காலத்து கவிஞன் கவிதைகள் மூலம் வசைபாடியதாக சில அறிவிப்புக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அதே இப்னுல் கைய்யிம் (ரஹ்) தனது துஹ்பதுல் மௌலூத் எனும் நூலில் (பக் 340) கூறியுள்ளார்கள்.
5. கத்னா என்பது குரைஷிகளிடத்தில் உன்னதமாகப் பார்க்கப்பட்ட ஒரு விடயம். பிறந்த பின் கத்னாச் செய்வதைத் தான் அவர்கள் பெருமையாகப் பார்ப்பார்கள். கத்னாச் செய்யப்பட்டுப் பிறப்பதை இழிவாகக் கருதும் ஒரு நிலை அக்காலத்தில் இருந்து வந்தது. அதனால்தான் இம்ரஉல் கைஸ் கூட கத்னாச் செய்யப்பட்டுப் பிறந்த ஹிரெக்லயிஸ் மன்னரை வசைபாடினான். எனவே நபித்துவத்துக்கு முன்னாலே அம்மக்களிடத்தில் மதிக்கப்பட்டு வந்த நபியவர்கள் உண்மையிலேயே கத்னாச் செய்யப்பட்டுப் பிறந்திருந்தால் அவர்களை அம்மக்கள் மதித்திருக்க மாட்டார்கள்.
முடிவுரை :
சுருக்கமாகக் கூறுவதாயின் நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்தின் வழமைப் படி பிறந்த பின்னாலேயே கத்னாச் செய்யப்பட்டார்கள். அவர்களுக்குப் பொறுப்பாயிருந்த அப்துல் முத்தலிப் தான் நபியவர்களுக்கு கத்னாச் செய்து விட்டுள்ளார்கள் என்பதற்கு தனிப்பட்ட ஆதாரங்கள் தேவையில்லை. கத்னாச் செய்வது அரபுகளின் வழமை என்பதற்கு ஆதாரமிருக்கும் போது ஒவ்வொருவருக்கும் கத்னாச் செய்யப்பட்டதற்கான ஆதாரம் அவசியமில்லை. மாறாக கத்னாச் செய்யப்படா விட்டால், அல்லது பிறக்கும் போதே கத்னாச் செய்யப்பட்டிருந்தால் அதற்குத்தான் பிரத்தியேகமான ஆதாரம் தேவை. ஏனெனில் அதுதான் வழமைக்கு மாற்றமான புது நிகழ்வு. அதனை உறுதிப்படுத்தத் தான் ஆதாரங்கள் தேவை. அவ்வாறு இடம்பெற்றுள்ள அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமானவையே என்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்னு நதீம் என்பவர் நபியவர்கள் கத்னாச் செய்யப் பட்டுத்தான் பிறந்தார்களென ஒரு நூல் எழுதியுள்ளார்கள். அதற்கு மறுப்பாக ஹிஜ்ரி 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்னுல் அதீம் என்பவர் நபியவர்கள் பிறந்த பின்னர்தான் கத்னாச் செய்யப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி ஒரு நூல் எழுதியுள்ளார்கள். எனினும் இவ்விரு நூட்களும் எழுத்துப் பிரதிகளாகவே உள்ளன. அவற்றை மேற்கோல்காட்டி இமாம் இப்னுல் கய்யிம் அவர்கள் தனது நூட்களில் இதுபற்றிப் பல கருத்துக்களைப் பதிந்துள்ளார்கள்.
எனவே நபியவர்களை கண்ணியப்படுத்த, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார பூர்வமான பல அற்புதங்கள் உள்ளன, ஆதாரபூர்வமற்ற விடயங்களை அவர்களுக்குக் கூறி கண்ணியப்படுத்த வேண்டிய எத்தேவையும் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் காட்டிய பிரகாரம் எமது வாழ்கையை அமைத்துக் கொள்வதுதான் அவர்களை கண்ணியப்படுத்தி மதிப்பதன் அதி உச்சகட்டம். அதனைத் தான் அல்லாஹ்வும் விரும்புகின்றான் என்று கூறி இக்கட்டுரையை நிறைவுக்குக் கொண்டு வருகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நேரான பாதையில் செலுத்துவானாக.
M.Ahmed (Abbasi, Riyady)
B.A (Hons), M.A Reading
Al-Imam Muhammad Bin Saud Islamic University
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.