நரகில் நுழைவிக்கக்கூடிய காரணிகள்

 (ஸாஜிதீன் மஹ்ரூப்- ஸஹ்வி)
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்... சாந்தியும் சமாதானமும் நபியவர்கள் மீதும் அவர்களுடைய உம்மத்தின் மீதும் உண்டாவதாக...

அல்லாஹ் இவ்வுகில் மனிதனை தப்பிற்கும் தவறுக்கும் மத்தியில் படைத்து இருக்கிறான், ஆகவே மனிதன் நன்மையான காரியங்களையும் செய்கிறான் அதேபோல் நரகம் நுழைவதற்கு காரணமான பாவமான காரியங்களையும் மேற்கொள்கிறான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நரகத்தில் நுழைவிக்கும் காரணிகளை அடையாளமிட்டு வகைப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். இந்த காரணிகளை இரண்டாக வகுக்கலாம், ஒன்று நரகத்தில் நுழைவித்து நிரந்தரமாக தங்கச்செய்பவை. அடுத்தது குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக நரகத்தில் நுழைவிக்க செய்பவை. இவற்றை சற்று விரிவாக நோக்குவோம், அவையாவன :

௦1. பெற்றோரை நோவினை செய்தல்

பெற்றோருக்கு செய்யவேண்டிய நற்காரியங்களை விட்டுவிடல், அவற்றில் பொடுபோக்காக இருத்தல், அவர்களை சொல்லாலும் செயலாலும் இம்சித்தல் போன்ற செயற்பாடுகள் ஒரு மனிதனை நரகத்தில் நுழைந்திடச்செய்யும்.



அல்லாஹ்வுதஆலா திருறையில் பின்வருமாறு கூறுகிறான் :

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (17:23)


இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:24 )

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : மூன்று நபர்களுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்குகிறான் அவர்களில் ஒருவர் பெற்றோரை நோவினை செய்யக்கூடியவர். ( அஹ்மத் 2/69 நசாயி 5/80 )

இவ்வாறான மோசமான கெட்ட காரியத்தை செய்பவன் நரகில் அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாவான்.


2. குடும்ப உறவை துண்டித்து வாழ்தல்

குடும்ப உறவை மதிக்காமை, அவர்களோடு நல்ல முறையில் நடந்துகொள்ளாமை, அவர்கள் கஷ்டப்படும் போது உதவி செய்யாமை, அவர்களுடன் அடிக்கடி முரண்படுதல், போன்ற காரியங்கள் இதில் அடங்கும்.

அல்லாஹ்வின் தூதர் நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : உறவுகளை துண்டித்து வாழ்பவன் சுவனம் நுழையமாட்டான். ( புஹாரி 5984 முஸ்லிம் 2555 )

அல்லாஹ்வுதஆலா திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் :

(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ? ( 47:22 )

இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான். ( 47:23 )

இன்றைய நடைமுறையில் ஒரு சில அற்ப காரியங்களுக்காக முரண்பட்டவர்களாக தகுந்த காரணம் இல்லாமல் சாக்குப் போக்குகளை கூறிக்கொண்டு அநேக உறவுகள் மடிந்து கிடக்கின்றன. அதிலும் சிலர் அவர்கள் எங்களோடு நல்ல முறையில் நடப்பதில்லை அதனால்தான் நாங்களும் அவர்களோடு நல்ல முறையில் நடப்பதில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதை காணலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ( முஸ்லிம் : 5991 )


3. வட்டி சாப்பிடல்

வட்டி என்பது ஒரு சமூக விரோத செயல், துன்பத்தில் இருப்பவனை மீண்டும் இக்கட்டான நிலைக்கு தள்ளும் செயற்பாடு, வட்டி பெரும் பாவங்களில் ஒன்று, வட்டியோடு தொடர்புடையவனின் வீட்டில் ஏதாவது நிகழ்வுகள் நடந்தால் மனிதன் அங்கு செல்ல வெட்கப்படுகிறான், வட்டி கொடுப்பவனை கண்டால் முகம்சுழிக்கிறான், ஆக ஒட்டுமொத்தத்தில் இந்த வட்டி ஒரு மனிதனை நரகத்தின்பால் தள்ளும். எவராவது வட்டி ஹராம் என்று தெரிந்தும் அதனோடு தொடர்புபட்டு இருக்கிறாரோ அவர் தங்குமிடம் நரகம்தான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ( 2:275 )

வட்டியை அல்லாஹ் அழித்து நஷ்டமாக்கி விடுவான்.

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. ( 2:276 )

இன்னும் அல்லாஹ் வட்டி கொடுப்பவனோடு போர்பிரகடனம் செய்கிறான்.

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். ( 2:279 )

வட்டி கொடுப்பவன், வாங்குபவன், அதற்கு சாட்சியாக இருப்பவன், அதை எழுதுபவன் என அனைவருக்கும் சமமான தண்டனையுண்டு.

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் வட்டி கொடுப்பவன், வாங்குபவன், அதனை எழுதுபவன், அதற்கு சாட்சியாக இருப்பவனையும் சபித்தார்கள். ( முஸ்லிம் : 1598 )

இன்று முஸ்லீம்களுக்கு மத்தியில் வட்டி வீதம் அதிகரித்து காணப்படுகிறது. அதற்கு பிரதான காரணமாக வட்டி வங்கிகள், சங்கங்கள், பினான்ஸ் போன்றவற்றை குறிப்பிடலாம், வங்கிகள் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு தமது கிளைகளை நிறுவி முஸ்லீம்களுக்கென்று தனியான பிரிவையும் உருவாக்கியிருக்கின்றன. இதனால் அவர்கள் வட்டி வலையில் சிக்கித்தவிக்கிறார்கள். எனவே இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

04. அநாதைகளின் சொத்துகளை சுரண்டல்

பிள்ளைகள் பருவ வயதை அடையாத நிலையில் பெற்றோர் மரணிக்கும் போது அப்பிள்ளைகளை குடும்ப உறவினர்கள் அல்லது பெற்றோரின் நண்பர்கள் பொறுப்பெடுக்கிறார்கள், அவ்வாறு பொறுப்பெடுப்பவர்கள் அப்பிள்ளைகளின் சொத்துகளில் நீதமாக நடந்து கொள்ளவேண்டும். அவர்களின் சொத்துக்களை கபளீகரம் செய்வது, அதனை நஷ்டமாக்கி அழிப்பது போன்ற காரியங்கள் மனிதனை நரகிற்கு இட்டுச்செல்லும். இது ஒரு பாரிய அமானித மோசடியாகும், கெட்ட ஈனச்செயலகும். யாரும் தனது சொத்து அழிந்து போவதை விரும்பமாட்டார்கள், எனவே அந்த பிள்ளைகளின் கஷ்டநிலையை பயன்படுத்தி இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது மிகப்பெரிய குற்றமாகும்.

இறைவன் திருமறையில் :

நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். ( 4:10 )

05. பொய் சாட்சியம் சொல்வது

இருவருக்கிடையில் சண்டைகள், பிளவுகள் ஏற்பட்டு சாட்சி தேவைப்படும் போது சாட்சி சொல்பவர் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் அதைவிட்டு தான் காணாததை அல்லது அறியாததைக் கொண்டு சாட்சி சொல்லல், கண்டு அல்லது நன்கு அறிந்து அதற்கு மாற்றமாக சாட்சி சொல்லல் ஒரு மனிதனை நரகத்திற்கு கொண்டு சேர்க்கும்.

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : ஒரு சஹாபியை பார்த்து நீர் சூரியனை பார்க்கிறீரா அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார் பின்பு நபியவர்கள் நீ சாட்சி சொல்வதாக இருந்தால் அவ்வாறு சொல் இல்லையனில் சாட்சி சொல்வதை விட்டுவிடு என்றார்கள்.

இந்த ஹதீஸில் நபியவர்கள் சூரியனின் தெளிவை போன்று சாட்சி இருக்கவேண்டும் என்று வழிகாட்டியுள்ளார்கள், அதற்கு மாற்றமாக மிகைப்படுத்தல், பொய் புரட்டு இருக்கக்கூடாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

06. இலஞ்சம் கொடுத்தல், வாங்குதல்

தான் செய்த குற்றத்திலிருந்து விடுபடுவதற்காக அல்லது தனக்காக வேண்டி சிபாரிசு செய்வதற்காக எவர் இலஞ்சம் கொடுக்கிறாரோ, யார் அதனை வாங்குகிறாரோ இவர்கள் இருவரும் நரகில் நுழைவர். இலஞ்சம் கொடுத்தல், வாங்குதல் நரகத்திற்கு கொண்டுசெல்லும்.

நபி ( ஸல் ) அவர்கள் இலஞ்சம் வாங்குபவனையும், கொடுப்பவனையும் சபித்தார்கள். ( அபூதாவூத் : 3582 ) இது ஒரு பெரும் பாவமாகும்.

இன்று சர்வ சாதரணமாக இலஞ்சம் மக்கள் மத்தியில் மிதக்கிறது, வானக ஓட்டுனர்கள் முதல் தொழில், அரச நியனமனங்கள், நீதிமன்றங்கள் என இலஞ்சம் தாண்டவமாடுகிறது.

இறைவன் திருமறையில் :

அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள். ( 2:188 )

குறிப்பு : எவன் தனக்கு அநீதி இழைக்கப்படுமிடத்து அதனை தவிர்பதற்காக இதாவது ஒன்றை கொடுப்பது இதனுள் அடங்காது.


07. பொய் சத்தியம் செய்வது

இன்றைய சூழலில் சாதாரண சிறு காரணங்களுக்காக எந்தவித இறை பயமும் இல்லாமல் தான் பொய் சொன்னால் மாட்டிக்கொள்வேன் என்பதற்காக, அல்லது தான் செய்த தவறைக்கொண்டு என்னை கேவலப்படுத்துவார்கள் என்பதற்காக பொய் சத்தியம் செய்து அதிலிருந்து விடுபடுவதை காணலாம். இச்செயல் நரக படுகுழியில் விழுத்தாட்டிவிடும்.

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : எவர் பொய் சத்தியம் செய்து தனது சகோதரனுடைய சொத்தை எடுத்துக்கொள்கிறாரோ அவர் மறுமையில் நரகில் தனது இருப்பிடத்தை ஆக்கிக்கொள்ளட்டும்.

பேராசை, உலக அற்ப இலாபங்களுக்காக இவ்வாறான படுபாதகர செயல்களை செய்பவர்கள் ஒரு கனம் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.


08. தீர்ப்பு கூறும் போது அறிவில்லாமல் நடுநிலை தவறி தீர்ப்பு கூறல்
இரு நபர்களுக்கு மத்தியில் பிளவுகள் ஏற்பட்டு இருவருமாக சேர்ந்து ஒரு நடுவரை வைத்து பேச முன்வருகின்றபோது அந்த நடுவர் நீதமான முறையில் அறிவோடு நடுநிலை தவறாமல் தீர்ப்பு சொல்ல வேண்டும். நடுநிலை தவரும் போது தவறிழைத்தவர் நல்லவராகவும் நல்லவர் கெட்டவராகவும் மாறிவிடுகிறார். ஆதலால் இவ்வாறு தீர்ப்பு சொல்பவர் நரகம் நுழைந்து விடுகிறார்.

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : நீதிபதிகள் 3 வகைப்படுவர் அதில் ஒருவர் சுவர்க்கமும் இருவர் நரகமும் நுழைவர். சுவர்க்கம் நுழைபவர் எப்படியானவர் என்றால் சரியானதை அறிந்து அதன்படி தீர்ப்பு சொல்வார். நரகம் நுழையும் இரண்டு நீதிபதிகளில் ஒருவர் சரியானதை அறிந்து அதற்கு மாற்றமாக ( நடுநிலை தவறி ) தீர்ப்பு சொல்வர். அடுத்தவர் அறிவில்லாமல் தீர்ப்பு சொல்வார். எனவேதான் இருவரும் நரகம் நுழைவார்கள்.

இவ்வாறு நரகத்திற்குள் நுழைவிக்கும் காரணிகள் பல இருக்கின்றன குறிப்பாக தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில் மோசடி செய்தல், உருவம் வரைதல், பெருமையடித்தல், கஞ்சத்தனம் செய்தல், மனிதர்களுக்கும் நல்ல விடயங்களுக்கும் எப்போதும் மாற்றமாக நடத்தல், தங்கம் வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்தல் போன்றன மனிதனை நரகின்பால் தள்ளுகின்றன.

எனவே ஒரு குறுகிய காலம் இவ்வுலகில் வாழ்கிறோம், இவ்வாறு வாழும் நாம் இப்படியான காரியங்களை செய்யும் போது மறுமையில் நமது நிலைமை கேள்விக்குறியதாக மாறிவிடுகிறது. ஓரிரு அற்ப இலாபங்களுக்காக நீண்டதொரு வாழ்கையை இழக்க நேரிடும். ஆகவே இப்படியான பாவமான காரியங்களை நமது வாழ்வில் தவிர்ந்து நடப்போமாக... இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக...

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget