வாழ்த்துக்களுடன் ஸாஜிதீன் மஹ்ரூப் ஸஹ்வி
ஈகை திருநாள்
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ், சாந்தியும் சமாதானமும் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் மீதும் இவ்வுலகத்தார் அனைவர் மீதும் உண்டாவதாக.... ஆமீன்
இறைவன் இவ்வுலக மக்களுக்கு இஸ்லாத்தின் பிரதான இரு கடமைகளோடு தொடர்புபடுத்தி இரு பெருநாட்களை கடமையாக்கியிருக்கிறான்.
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அந்த மக்கள் இரண்டு நாட்களில் விளையாடி மகிழ்பவர்களாக இருந்தார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வுத்தஆலா இந்த இரண்டு நாட்களுக்கு பகரமாக வேறு இரு நாட்களை ஆக்கியிருக்கிறான் என்று கூறினார்கள். ( அஹ்மத் : 1134 )
முதன் முதலாக ஹிஜ்ரி 2 ம் ஆண்டு நோன்பு பெருநாள் தொழுகையை நபியவர்கள் தொழுதார்கள்.
தொழும் இடம் :
பெருநாள் தொழுகையை திடலில் நிறைவேற்றுவது ஒரு சுன்னத்தான வணக்கமாகும். நபி ( ஸல் ) அவர்கள் நோன்பு, ஹஜ் பெருநாள் தினங்களில் தொழுவதற்காக திடலுக்கு செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். ( புஹாரி 956 முஸ்லிம் 889 )
இதில் ஆண், பெண், மாதவிடாய் பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் திடலுக்கு செல்ல வேண்டும். மாதவிடாய் பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் பெருநாள் குத்பாவில் கலந்து கொள்வார்கள்.
தொழும் திடலுக்கு செல்லுமுன் குளித்து நறுமணம் பூசி புத்தாடை அணிந்து தக்பீர் சொல்லுவது சுன்னத்தான வணக்கமாகும். அதேபோன்று நோன்புப் பெருநாள் என்றால் எதாவது சாப்பிட்டதன் பின்னும் ஹஜ் பெருநாள் என்றால் சாப்பிடாமலும் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ( திர்மிதி 542 )
பெருநாள் தக்பீரை பொறுத்தவரை பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் வந்துள்ளன. ( உதாரணமாக : அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா ) ஒவ்வொரு ஊர்களிலும் எவ்வாறு தக்பீர் சொல்லப்படுகிறதோ அவ்வாறே நாமும் தக்பீர் சொல்வது சாலச் சிறந்ததாகும்.
தொழுகை நேரம் :
நோன்புப் பெருநாள் என்றால் சூரியன் உதித்ததில் இருந்து இரண்டு ஈட்டியளவு உயர்ந்ததின் பின்னும் ஹஜ் பெருநாள் என்றால் ஒரு ஈட்டி அளவு உயர்ந்ததின் பின் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு ஈட்டி அளவு என்பது சுமார் 15 நிமிடங்களாகும்.
பெருநாள் குத்பாவுக்கு முன்னால் பெருநாள் தொழுகையை நிறைவேற்றல் :
நபி ( ஸல் ) அவர்கள், அபூ பக்கர், உமர், உஸ்மான் ( ரலி ) போன்ற சஹாபாக்கள் பெருநாள் குத்பாவுக்கு முன்னால் பெருநாள் தொழுகையை நிறைவேற்றக்கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பாளர் : இப்னு உமர் ( ரலி ) ( புஹாரி 962 முஸ்லிம் 884 )
அதான், இகாமத் இல்லாத தொழுகை :
ஒரிரு தடவை அல்லாமல் பல தடவை நபி ( ஸல் ) அவர்களுடன் தொழுதுள்ளேன். அவர்கள் அதான், இகாமத் இல்லாமல் பெருநாள் தொழுகையை ஆரம்பிப்பார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் ( ரலி ) ( முஸ்லிம் 885 )
இரண்டு ரக்அத்துகள் கொண்ட தொழுகை :
நபி ( ஸல் ) அவர்கள் நோன்பு பெருநாள் தினத்தன்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். இன்னும் அதற்கு முன்னாலோ பின்னலோ எந்த தொழுகையையும் தொழவில்லை. அறிவிப்பாளர் : இப்னு உமர் ( ரலி ) ( புஹாரி 989 முஸ்லிம் 884 )
நபி ( ஸல் ) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதலாவது ரக்அத்தில் ஏழு தடவை தக்பீரும் இறுதி ரக்அத்தில் ஐந்து தடவை தக்பீரும் சொன்னார்கள். ( அஹ்மத் 2/180 )
இமாம் இப்னுல் கையும் அவர்கள் கூறுகிறார்கள் : இந்த தக்பீர்களுக்கு இடையில் குறிப்பிட்ட எந்த துஆவும் கிடையாது மாறாக சற்று அமைதியாக இருக்க வேண்டும். ( ஸாதுல் மஆத் 1/443 )
பெருநாள் குத்பா :
பெருநாள் தொழுகையை தொடர்ந்து இமாம் பெருநாள் குத்பா நிகழ்த்துவார். அதிலே மக்களுக்கு தர்மங்கள் செய்து அல்லாஹ்வை வணங்கி நற்காரியங்களில் ஈடுபடுமாறு வலியுறுத்துவர்.
பெருநாள் வாழ்த்து :
பெருநாள் தினத்தில் சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது “”தகப்பலல்லாஹு மின்னா வமின்க’” என்ற வாசகத்தை ஓதி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். எனவே இதனை நாமும் கூறி ஏனைய வாழ்த்துகளை விட்டுவிடுவது சாலச் சிறந்ததாகும்.
பெருநாள் தினம் என்பது ஒரு சந்தோஷமான தினம், அதிலே ஒவ்வொருவரும் உண்டு குடித்து மகிழ வேண்டும். அதனால் தான் நபியவர்கள் அத்தினங்களில் நோன்பு பிடிப்பதை தடை செய்திருக்கிறார்கள். மேலும் வீட்டுக்கு வருகின்ற விருந்தாளிகளை இன்முகத்தோடு முகமன் கூறி வரவேற்க வேண்டும், நண்பர்களுக்கு மத்தியில் வாழ்த்துக்களை கூறி அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்ளவேண்டும். குடும்ப உறவுகளிடத்தில் சென்று உறவுகளை புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக அத்தினத்தில் யாரும் பகைமை பாராட்டக்கூடாது.
அதேபோன்று அந்நாளில் வீண்விரயங்கள், ஆண் பெண் கலப்பு, இஸ்லாத்துக்கு முரணான கொண்டாட்டம், குதூகலங்கள், பெண்கள் நறுமணம் பூசி தனது உடல் அங்கங்கள் வெளிப்படும் அளவுக்கு இறுக்கமான ஆடைகளை அணிந்து வெளியில் நடமாடுதல் முற்றாக தவிக்கப்பட வேண்டும்.
எனவே இவ்வாறு இஸ்லாம் கூறிய முறையில் இவ் ஈகை திருநாளை கொண்டாட இறைவன் நமக்கு அருள் புரிவனாக...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.