பாடம் 02
2.1 ஸுன்னவைப் பாதுகாப்பதில் ஸலபுகளின் பங்கு
ü நபிகளாரின் காலம்
ü நபித் தோழர்களின் காலம்
ü தாபிஈன்களின் காலம்
ü ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு.
ஹதீஸ் என்பது நபிகளாருடைய காலத்துடன் தொடர்புபடுவதால் ஹதீஸ்கலையும் அக்காத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனும் ஹதீஸும் கலந்து விடக்கூடாது என்பதால் ஆரம்பத்தில் குர்ஆனைத் தவிர்ந்த எதனையும் எழுதவேண்டாமென்று தடை செய்தார்கள். என்றாலும் இரு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற சில நபித் தோழர்கள் ஹதீஸ்களை எழுதித் தொகுத்து வைக்க தொடங்கினர். உதாரணமாக : அலீ (ரழி), அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) போன்றொரைக் குறிப்பிடலாம்.
ஹதீஸ் கலையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராயும் ஆய்வாளர்கள் அதனைப் பல கட்டங்களாக பிரிக்கின்றனர் அவற்றில் பிரதானமானது :
1. நபி (ஸல்) அவர்களின் காலம்
2. ஸஹாபாக்களின் காலம்
3. தாபிஈன்களின் காலம்.
4. ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு.
2.1.1 நபி (ஸல்) அவர்களின் காலம்.
இஸ்லாத்தின் மூலாதாரங்களில் குர்ஆனுக்கு அடுத்தபடியாக காணப்படப்கூடிய ஹதீஸை குர்ஆனைப் போலவே பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஸஹாபாக்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு ஸஹாபியும் தன்னால் இயன்ற முறையில் ஹதீஸ்களைப் பாதுகாத்தனர். அந்த வகையில் நபியவர்கள் காலத்தில் ஹதீஸ்கள் பிரதான மூன்று முறைகளில் பாதுகாக்கப்பட்டன.
1. மனனமிடல் 2. எழுத்தில் பதித்தல் 3. செயல்படுத்தல்
மனனமிடல் :
நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்கள் அவர்களது காலத்தில் பாதுகாக்கப்பட்ட ஒரு சிறந்த முறை மனனமிடலாகும். ஒன்றை நினைவிலிருத்திக் கொள்வதில் அரபு மக்களிடம் ஓர் அலாதியான திறமை காணப்பட்து. இதற்காக நபியவர்கள் தோழர்களை தூண்டிக் கொண்டேயிருந்தார்கள். “எவர் எனது வார்த்தைகளை செவிமெடுத்து, அவற்றைப் பாடமிட்டுப் பாதுகாத்து ஏனையவர்களுக்கும் அவர் கேட்டவாறே அவற்றை அறிவிக்கின்றாரோ அல்லாஹ் அவரை ஒளிபெறச் செய்வானாக. ஏனென்றால் அவை யாருக்கு அறிவிக்கப்படுகின்றனவோ அவர் அறிவிப்பவரை விட சிலவேளை அவற்றைச் சிறப்பாக விளங்கலாம்.” (அபூ தாவூத்)
எழுத்தில் பதித்தல் :
ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொகுக்கப்படவில்லை என்ற தப்பான அபிப்ராயம் மக்கள் மத்தியில் காலாகாலமாக இருந்து வருவதை எம்மால் அவதானிக்க முடியும். இக்கருத்துக்கு அடிப்படையாக அமைந்த விடயம் இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள்தாம் ஹதீஸ்களை முதன் முதலாக ஒன்று திரட்டினார்கள் என்று சில அறிஞர்கள் கூறியதை தவறுதலாக புரிந்துகொண்டதாகும். இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும், ஸஹாபாக்களுடைய காலத்திலும், தாபிஈன்களுடைய காலத்திலும் ஹதீஸ்கள் ஒன்று திரட்டப்பட்டதை வரலாற்றை பார்க்கின்ற போது எம்மால் புரிந்துகொள்ள முடியும்.
நபி (ஸல்) அவர்கள் வஹியின் ஆரம்பகாலத்தில் ஹதீஸ்களை எழுதவேண்டாம் எனக் கட்டளையிட்டிருந்தார்கள். “என்னைத்தொட்டும் எந்த ஒன்றையும் எழுதவேண்டாம். எவராவது குர்ஆனைத் தவிர வேறு ஏதாவது ஒன்றை எழுதினால் அதனை அழிக் கட்டும்” என நபியவர்கள் கூறியதாக அபூஸஈதில் குத்ரி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் ஹதீஸ்களை எழுதவேண்டாம் என தடை விதித்ததற்குக் காரணம் குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்துவிடக் கூடாது என்பதற்காகவும், குர்ஆன் புறக்கணிக்கப் படக் கூடாது என்பதற்காகவும் தான் என்பதை அறிஞர்கள் தெளிவுபடுத்தி இக்காரணங் கள் இல்லாமல் போன போது நபியவர்கள் ஹதீஸ்களை எழுதுவதற்கு தாராளமாக அனுமதித்தார்கள் என விளக்கியுள்ளனர். இதற்கு சான்றாக பின்வரும் ஹதீஸ்கள் அமைந்துள்ளன.
அபூஹ{ரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபித்தோழர்களில் என்னை விட ஹதீஸ் அதிகமாக உள்ள எவரும் கிடையாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்களைத் தவிர, அவர் எழுதுவார், நான் எழுதமாட்டேன். (புஹாரீ)
நபியவர்கள் மக்கா வெற்றியின் போது செய்த பிரசங்கத்தை அபூஷாஹ் என்பவர் எழுதித்தரும்படி கேட்ட போது நபியவர்கள் : அபூஷாஹிற்கு எழுதிக் கொடுங்கள் எனக் கூறினார்கள் (புஹாரி). மேற்கண்ட இரு செய்திகளும் நபியவர்கள் பிற்காலத்தில் ஹதீஸ்களை எழுத அனுமதித்ததைக் காட்டுகின்றது.
செயல்படுத்தல் :
நபிகளாரின் காலத்தில் நபித்தோழர்கள் தாம் கற்றுக்கொண்ட ஹதீஸ்களை செயல்படுத்தி வந்தனர். நபி (ஸல்) அவர்களின் வாழ்வை அவ்வாறே பின்பற்றிச் செல்ல வேண்டுமென்ற உணர்வு அவர்களிடம் காணப்பட்டது. வணக்கங்கள், குடும்ப வாழ்கை, சமூக வாழ்கை என அனைத்திலும் ஸஹாபாக்களின் வாழ்வு ஸுன்னாவின் நடைமுறையாக இருந்தது.
2.1.2.நபித்தோழர்களின் காலம் :
அகீதாவைப் போதிப்பதிலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்புவதிலும் ஸஹாபாக்கள் எந்த அளவு ஈடுபாடு காட்டினார்களோ அதேபான்று ஹதீஸ்களைத் தொகுக்கின்ற விடயத்திலும் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.
• ஹதீஸ்களை மனனம் செய்வதற்கும், மனனம் செய்த ஹதீஸ்களை உறுதிப் படுத்தவும் தமது மாணவர்களுக்கு ஏவக்கூடியவர்களாகக் காணப்பட்டார்கள்.
• ஸஹாபாக்களில் சிலர் சிலருக்கு ஹதீஸ்களை எழுதி அனுப்பக்கூடியவர்களாகக் காணப்பட்டார்கள். உஸைத் பின் ஹுழைர் (ரழி) அவர்கள் நபியவர்களின் சில ஹதீஸ்களை மர்வான் பின் ஹகம் என்பவருக்கு எழுதி அனுப்பியதை எமக்கு சான்றாக எடுக்கலாம்.
• ஹதீஸ்களை எழுதும் படி தமது மாணவர்களுக்கு ஏவக்கூடியவர்களாகக் காணப் பட்டனர். அனஸ் பின் மாலிக் (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), உமர் பின் ஹத்தாப் (ரழி), அலீ (ரழி) போன்றோர் ஹதீஸ்களை எழுதுவதற்குத் தூண்டக் கூடியவர்களாகக் காணப்பட்டார்கள்.
ஸஹாபாக்களுடைய காலத்தில் ஹதீஸ்கள் எழுதப்பட்டாலும் அவை தலைப்புக்கள் அடிப்படையிலோ, அல்லது பாடங்கள் அடிப்படையிலோ ஒழுங்குபடுத்தப்படவில்லை. மனனம் செய்வதற்கும், அதனை மீட்டுவதற்கும் மாத்திரமே ஸஹாபாக்களுடைய காலத்தில் ஹதீஸ்கள் எழுதப்பட்டன.
2.1.3 தாபிஈன்கள் காலம் :
ஸஹாபாக்களுடைய காலத்தைப் போன்றே தாபிஈன்களுடைய காலத்திலும் ஹதீஸ்கள் ஏடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. ஆமிர் அஷ்ஷஃபி (ரஹ்), ஹஸனுல் பஸரீ (ரஹ்), ஸஈத் இப்னு முஸய்யப் (ரஹ்), இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி (ரஹ்) போன்றவர்கள் ஹதிஸ்களை எழுதித் தொகுக்கக்கூடியவர்களாக காணப்பட்டார்கள். ஸஹாபாக்களின் காலத்தில் காணப்பட்டதை விட அதிகமாக ஹதீஸ்கள் தாபிஈன்களின் காலத்தில் பரந்த அளவில் எழுதப்படத் தொடங்கின. ஹதீஸ்களை மனனம் செய்த ஸஹாபாக்கள் மற்றும் மூத்த தாபிஈன்களின் மரணம், மனனம் செய்வதில் ஏற்பட்ட வீழ்ச்சி, பித்அத்களும் பொய்களும் பரவியமை போன்ற காரணங்கள் இக்காலகட்டத்தில் ஹதீஸ்கள் பரந்த அளவில் எழுதப்படக் காரணங்களாகும்.
இக்காலத்தில் கலீபா உமர் இப்னு அப்தில் அஸீஸ் மற்றும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி ஆகிய இருவரும் ஹதீஸ்களைத் தொகுப்பதில் ஆற்றிய சேவை மகத்தானதாகும். இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : “உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஹதீஸ்களை ஒன்று திரட்டுமாறு எங்களுக்கு ஏவினார்கள். நாங்கள் ஏடு ஏடாக ஹதீஸ்களை எழுதி ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுப்பினோம்”. இக்காலத்திலேயே ஹதீஸ்கள் பரிபூரணமாக தொகுக்கப்படத் தொடங்கின.
2.1.4. ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு :
இந்நூற்றாண்டு இஸ்லாமியக் கல்வியின் குறிப்பாக ஹதீஸ் கலையின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகின்றது. ஹதீஸ்களைத் தேடி உலகின் பல பாகங்களுக்கும் அறிஞர்கள் பிரயாணம் செய்தது இக்காலத்தில் காணப்பட்ட ஒரு சிறப்பம்சமாகும். மஸானீத், ஸிஹாஹ், ஸுனன் போன்ற பெயர்களில் இக்காலத்தில் ஹதீஸ் கிரந்தங்கள் எழுதப்பட்டன. குறிப்பாக 'ஸிஹாஹுஸ் ஸித்தா" அல்லது 'அல்குதுபுஸ்ஸித்தா" என்று அழைக்கப்படக்கூடிய புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜா போன்ற முக்கியமான ஹதீஸ் கிரந்தங்கள் இக்காலத்திலேயே எழுதப்பட்டன. ஹதீஸ்களை ஸஹீஹ், ளஈப் என தரம்பிரித்து கூறுகின்ற ஒரு போக்கு இக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே சிறிய தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்களின் காலத்தில் ஹதீஸ்களோடு ஸஹாபாக்களினதும், தாபிஈன்களினதும் மார்க்கத் தீர்ப்புக்கள் ஹதீஸ் கிரந்தங்களில் எழுதப்பட்டன. ஆனால் இந்நூற்றாண்டில் அந்த முறை மாறி நபியவர்களின் ஹதீஸ்கள் மாத்திரம் தொகுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதே போன்று பின்வந்த நூற்றாண்டுகளில் வந்த அறிஞர்களும் ஹதீஸ் கலையின் வளர்ச்சிக்கு பல வகையில் சேவைகளைப் புரிந்துள்ளனர்.
கேள்வி இல 18
ஹதீத் கலை தோற்றம் பெற்ற வளர்ச்சிக் கட்டங்களை குறிப்பிடுக?
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.