26. லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ. وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ. لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ. تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ. سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْر
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)
1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை ஏதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ “
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கின்றது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "83 வருடம் நாம் வாழ்வோமா?" என்பதே கேள்விக்குரியானது! ஆனால் ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே அச்சிறப்பான இரவில் தொழுகை, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களை அதிகமதிகம் செய்துவிட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இது நல்ல முடிவல்ல. நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி சொல்வதற்காக வெளியில் வந்தார்கள். அல்லாஹ் அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்து கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சில அடையாளங்களைக் கூறினார்கள். "ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்" இப்படி கூறுவதினால் "ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களில் அமல்கள் செய்யப் தேவையில்லை" என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. மற்ற 20 நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்களை செய்யவேண்டும் என்பதுதான்.
27. இஃதிகாஃப்
وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)
1) ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
2) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
4) (நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பி விடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
விளக்கம்: இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும், நோன்பு காலத்திலும் நோன்பு இல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி வெளியில் செல்லக்கூடாது, நோன்பின் கடைசிப்பத்தில் இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின் இரவை அடைந்து கொள்ளலாம். எவருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
28. குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும் குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
3) உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து(குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
6) "எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ.
விளக்கம்: குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும் அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள் அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ
திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நம்மை நோக்கி சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளைக்கு எத்தனை எழுத்துக்கள் படிக்க நமக்கு வாய்ப்பிருக்கிறது. அதன் நன்மைகளை நம்மால் கணக்கிட முடியுமா? சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
29. ஸதகத்துல் ஃபித்ர்
1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை ''தர்மமாக" கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
2) நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
4) நபி (ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள்.ஆதாரம்: திர்மிதி
விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக "தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்" ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!
ஸதக்கத்துல் ஃபித்ராவின் சட்டங்கள் :
கடமை : இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பின் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி (ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள்.
அளவு : இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு “முத்து” எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபியவர்கள் ஒரு “ஸாவு” கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும்.
நாள் : இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.
30. பெருநாள் தொழுகை
1) நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ
2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதலி ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா
4) நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி.
விளக்கம் : நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஈதுத் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ கிடையாது. ஈதுத் தொழுகைக்கு முன் பின் சுன்னத்தும் கிடையாது.
31. ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்
1) "யார் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்". என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.