அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
எல்லாப் புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடர்ந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய கடமைகளில் ஒன்று ரமளான் மாதத்தின் நோன்பாகும். இம்மாதத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விளக்கமாக கூறியிருக்கின்றார்கள். அதன்படி நாமும் நடந்தால் இம்மாதத்தின் நலன்களைப் பெற்று நன்மக்களாகலாம். இந்த உயரிய நோக்கோடு இச்சிறு கட்டுரையை நான் எழுதியுள்ளேன். ஆகவே இதைப் படித்து ரமளான் மாதத்தின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்களாகுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனின் அருளையும், பிழைப்பொறுப்பையும் தந்து, சுவர்க்கத்தில் நுழையும் வாய்ப்பையும், நரக வேதனையிலிருந்து பாதுகாப்பையும் தந்தருள்வானாக!
1. ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
(1) இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: ரமளான் மாதத்தின் நோன்பு முஸ்லிமான புத்தியுள்ள, வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால் சிலருக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியிருக்கிறது. நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எனும் தலைப்பில் இதன் விபரங்களை பார்க்கலாம்.
2. ரமளான் மாதத்தின் சிறப்புகள்
(1) ரமளான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
(2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் "நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!" என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)
(3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்ப்பவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
(4) நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். ஆகவே நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
(5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹுதஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டது தான் ரமளான் மாதமும். இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது, நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது; அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான். "யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்" என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!
3. ரமளான் நோன்பின் சிறப்புகள்
(1) "நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்" ஆகவே நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் "நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும். இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
(2) நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
(3) சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு "அர்ரய்யான்" என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். "நோன்பாளிகள் எங்கே" என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலில் நுழையமாட்டார்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
(4) நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் ஆகிய இரு சந்தோஷங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
விளக்கம்: வணக்கங்களை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியது நாம் அல்லாஹ்விற்கு, கட்டுப்படுகின்றோமா இல்லையா? என்பதை சோதனை செய்வதற்குத்தான். வணக்கங்களை நாம் செய்வதினாலோ, அல்லது விடுவதினாலோ அல்லாஹ்விற்கு எந்த லாபமோ, நஷ்டமோ கிடையாது. இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு வணக்கத்தைக் கடமையாக்குவதின் மூலமாக "எப்படிப்பட்ட தியாகத்தையும் அல்லாஹ்விற்காக நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா" என்பதைச் சோதிப்பதற்குத்தான். அப்படிச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பைப் பொறுத்தவரையில் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கும் முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது, இவைகளை வெறும் சடங்குக்காகச் செய்யக்கூடாது. வணக்கம் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வது தான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று)பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)
தக்வா (இறையச்சம்) என்றால் அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்தும் தடை செய்தவைகளைத் தவிர்த்தும் நடப்பதுதான். "தக்வாவின் உரிய தோற்றத்தை" நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவனாக இருந்தும் தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை. தாகமுள்ளவனாக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இது தான் ''இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்". இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால் தான் தொழாதவர் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்து தொழ ஆரம்பித்து விடுவார். பாவங்களில் ஈடுபடக்கூடியவர் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் ஈமான் கொண்டவர்களே அல்லாஹுவைப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். ஆகவே அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்ந்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீதுல் குத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே" அது (நோன்பு) எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுக்கின்றேன், (காரணம்) அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்குக் காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ் (மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால் தான். எனவே நோன்பு விஷயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று மற்ற எல்லா விஷயங்களிலும், எல்லாக் காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சிவாழ்வோமாக..!
யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கின்றாரோ அதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை. யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லாப் பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு. ஏன் இந்த நல்ல பண்புகளை நோன்பு அல்லாத மாதங்களிலும் தொடரக்கூடாது? நோன்பு மாதத்தில் எந்த இறைவனை அஞ்சி இந்த நல்ல செயல்களில் ஈடுபட்டோமோ அவன் நோன்பு அல்லாத மாதங்களில் நம்மைக் கண்காணிப்பதில்லையா? நோன்பு அல்லாத மாதங்களில் நாம் மரணிப்பதற்கு வாய்ப்பில்லையா? ஏன் நோன்பு மாதத்தோடு இந்த நல் அமல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்! விடை கிடைக்கும். நல் அமல்களை, தொடர்ந்து செய்வதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக...!
4. பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்
(1) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால்(அம்)மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
(2) பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள். மேகம்(பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ரமளான் மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும். ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை தென்படவில்லையானால் நோன்பு மாதத்துக்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாளை விட அதிகமாக ஒரு மாதமும் வரமுடியாது. "முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் தான் மாதம் வரும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்."
5. சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது
(1) ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன்னால் உங்களில் யாரும் (சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் சுன்னத்தான எந்த நோன்பையும் நோற்கக்கூடாது. காரணம் அந்த இரு நாட்களும் ரமளான் மாதமாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. இதற்கு "சந்தேக நாட்கள்" என்று சொல்லப்படும். உதாரணமாக ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், வியாழன் இரு நாட்களும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இந்த இரு நாட்களில் வழமையாக நோன்பு நோற்று வருபவருக்கு ரமளான் மாதத்துக்கு முந்திய ''சந்தேகமான நாட்களிலும்" நோன்பு நோற்க அனுமதியுள்ளது.
6. ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு
(1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். இன்னும் சில அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான்; மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
(2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
(3) நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
(4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
(5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ''ஸஹர் உணவு உண்பதுதான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது "வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்". இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!
7. ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்
(1) நான் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபியவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸுப்ஹுடைய) பாங்குக்கும் ஸஹர் உணவுக்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ் (ரலி) அவர்கள் கேட்டதற்கு ஐம்பது ஆயத்து ஓதும் அளவு என்று விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ஸஹர் உணவை இரவின் கடைசிப்பகுதி வரை, பிற்படுத்துவது சுன்னத்தாகும், அதாவது ஸஹர் உணவுக்கும் ஸுப்ஹுடைய பாங்குக்கும் மத்தியில் ஐம்பது ஆயத்து ஓதுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் பிற்படுத்த வேண்டும். இதுவே நபிவழியாகும். ஆனால் ஃபஜ்ருடைய நேரம் வந்த பின்(அதாவது ஸுப்ஹுடைய பாங்கு சொல்லப்பட்டதும்) உண்ணவோ குடிக்கவோ கூடாது.
8. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு
(1) நபி (ஸல்) அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸப்ஹுடைய பாங்குக்குப் பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பு பரிபூரணமானதுதான். அதே போல் பகல் நேரத்தில் நோன்பு நோற்றவர் தூக்கத்தினால் குளிப்பு கடமையாகிவிட்டால் குளித்துக் கொண்டால் மாத்திரம் போதும். ஆனால் வேண்டுமென்றே ஒருவர் நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் முழுக்காளியாவது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றமாகும். அது நோன்பையும் முறித்துவிடும்.
தொடரும்....
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.