ஷஃபான் 15ம் இரவைக் கொண்டாடலாமா?


எம். அஹ்மத் (அப்பாஸி, வெலிகம)

புகழனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே, சாந்தியும், சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. இறைவன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்: ‘இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்’ (5:3), நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “யார் எங்களுடைய இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கின்றாரோ அவ்விடயம் தட்டப்பட்டு விடும்.’ (புகாரி 2697,முஸ்லிம்1718) 

அல்லாஹ் இச்சமுகத்திற்கு அவர்களுடைய மார்க்கத்தைப் பரிபூரணப்படுத்தி அவனுடைய நிஃமத்தையும் பூரணப்படுத்தி விட்டான் என்பதை மேற்கண்ட இறைவசனமும், நபி மொழியும் தெளிவாகக் கூறுகின்றன. நபியவர்கள் அல்லாஹ்வால் இந்த உம்மத்துக்கு மார்க்கமாக்கப்பட்ட அனைத்து சொல், செயல்களையும் தெளிவுபடுத்தி எத்திவைக்காமல் அந்த நபியுடைய உயிரை அல்லாஹ் கைப்பற்றவில்லை. நபியவர்களுக்குப் பின்னால் இஸ்லாம் என்ற பேரில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து சொல், செயல்களும் - அதனை உருவாக்கியவரின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் சரி – அதை உருவாக்கியவர் மீதே அது தட்டப்பட்டு விடும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இவ்விடயத்தை நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின்னால் வந்த மார்க்க அறிஞர்களும் அறிந்து, அந்த பித்அத்களை நிராகரித்து, அதைவிட்டும் மக்களை எச்சரித்தார்கள். 

ஷஃபான் 15 (பராஅத் இரவி)ல் செய்யப்படும் மூன்று விடுத்தம் ஸூரா யாஸின் ஓதி துஆக் கேட்டல், அண்ணதானம் வழங்கல், இரவில் நின்று வணங்கல், அன்றைய தினம் நோன்பு நோற்றல் போன்றவை இவ்வாறு மக்களால் உருவாக்கப்பட்ட பித்அத்களில் அடங்குகின்றன. இச்செயல்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்தவொரு ஆதாரமும் இல்லை. இந்த இரவின் சிறப்புப் பற்றி ஏற்றுக் கொள்ள முடியாத மிகவும் பலவீனமான செய்திகளே வந்துள்ளன. இந்த இரவில் நின்று வணங்குவது பற்றி வந்த அனைத்து செய்திகளும் ‘மௌலூஃ’ எனும் இட்டுக் கட்டப்பட்டவையாகவும், மற்றும் சில மிகவும் பலவீனமானவையாகவும் தான் உள்ளன. ஷாம் (ஸிரியா) தேசத்தைத் சேர்ந்த சில அறிஞர்கள் இவ்விரவைக் கொண்டாடியதாக அறிவுப்புக்கள் வந்துள்ளன. என்றாலும் ஏனைய அனைத்து அறிஞர்களும், : “இவை பித்அத், இதன் சிறப்புப் பற்றி வந்த அனைத்து செய்திகளும் பலவீனமானது, இன்னும் சில இட்டுக்கட்டப்பட்டவை” என்ற கருத்தையே கூறியுள்ளனர். 

இமாம் இப்னு றஜப் (றஹ்) அவர்கள் தனது ‘லதாஇபுல் மஆரிப்’ என்று நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள் : “ஷஃபான் 15ல் நின்று வணங்குவது பற்றி நபியிடமிருந்தோ நபித்தோழர்களிடமிருந்தோ எந்த அடிப்படையான ஆதாரங்களும் வரவில்லை.’ மார்க்க ஆதாரங்கள் அடிப்படையில் தரிபடாத எந்தவொன்றையும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உருவாக்க முடியாது. அதை அவர் தனியாகவோ கூட்டாகவோ, இரகசியமாகவோ பகிரங்கமாகவோ எவ்வாறு செய்தாலும் அது அனுமதிக்கப்படாத ஒன்றே. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : “யாராவது எங்களுடைய மார்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்தால் அது தட்டப்பட்டதாகும்’ (ஆதாரம்: முஸ்லிம்: 1718) 

ஷஃபான் நடுப்பகுதி பற்றி வந்துள்ள அறிவிப்புக்களை உற்றுநோக்கினால் அவை இரண்டு விதமாக வந்துள்ளதை அவதானிக்கலாம்.

1. ஷஃபான் 15ம் நாளை தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்கள் மூலம் சிறப்பித்தல். இது பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “ஷஃபான் மாத நடுப்பகுதி (15) இரவில் வந்து விட்டால் அதன் இரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள்.’ (ஆதாரம் : இப்னு மாஜாஃ 1388, பைஹகீயின் ஷுஃபுல் ஈமான் 3542) மேற்கண்ட செய்தி ஏற்றுக் கொள்ள முடியாத மிகவும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் அபீ ஸப்ரா என்பவர் பொய்யரென சந்தேகிக்கப்படுபவர். இவ்வாறு அவ்விரவை வணக்கங்களைக் கொண்டு சிறப்பிப்பது பற்றி வந்துள்ள அனைத்து செய்திகளும் ஒன்றோ இட்டுக்கட்டப்பட்டவை, அல்லது ஆதாரத்திற்கு எடுக்க முடியாத மிகவும் பலவீனமானவை என இமாம்களான இப்னுல் ஜௌஸீ, பைஹகீ, இப்னுல் கய்யிம், அபூ ஷாமா அஷ்ஷாபிஈ, இராகீ போன்றோர் கூறியுள்ளனர். இமாம் அல்இராக்கி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : ‘ஷஃபான் 15ல் தொழப்படும் தொழுகை பற்றிய செய்தி நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யாக இட்டுக் கட்டப்பட்டதாகும்.’ 

2. ஷஃபான் 15ம் இரவு பற்றி பொதுவாக வந்துள்ள சிறப்புக்கள். அதே இரவில் அல்லாஹ் கீழ்வானத்திற்கு இறங்கி தனது அடியார்களை நோட்டமிடுகின்றான். பிணங்கிக் கொண்டவர்களையும் இணைவைப்பாளர்களையும் தவிர ஏனையோரை மன்னிக் கின்றான் என்பதாகவும், அத்தினத்தில் கல்ப் கோத்திரத்தினருக்கு சொந்தமான ஆடுகளின் முடியளவை விட அதிகம் பேருக்கு மன்னிப்பு வழங்குகின்றான் என்பதாகவும் பல அறிவிப்பக்கள் பின்வரும் நபித்தோழர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி), ஆஇஷா (ரலி), அபூ ஹுரைரா (ரலி), முஆத் (ரலி), அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி), அபூ ஸஃலபா (ரலி), அபூ பக்ர் (ரலி), உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி), அபூ உமாமா (ரலி), அவ்ஃப் பின் மாலிக் (ரலி), உபைய் பின் கஃப் (ரலி) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி). அவற்றில் அவற்றில் ஓரளவு விமர்சனத்திற்குரிய செய்திகளாக முஆத் (ரலி), ஆஇஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி), அபூ பக்ர் (ரலி), ஆகியோர் வாயிலாக அறிவிக்கப்பட்ட செய்திகளை எடுத்துக் கொள்ளலாம். ஏனைய அனைத்து அறிவிப்புக்களும் விமர்சனத்தையும் தாண்டிய மிக பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவே உள்ளன. 

1. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முஆத் (ரலி) அறிவிக்கின்றார்கள் : ஷஃபான் 15ம் இரவில் அல்லாஹ் தனது அடியார்களை நோட்டமிட்டு, அவர்களில் பிணங்கிக் கொண்டவர்களையும் இணைவைப்பாளர்களையும் தவிர ஏனைய அனைவரையும் மன்னிக்கின்றான். (இப்னு ஹிப்பான் 5665). இதன் அறிவிப்பாளர் வரிசையில் பல குளருபடிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு இச்செய்தி முஆத் (ரலி) உடைய ஹதீஸாகவும், இன்னொரு தடவை அபூ ஸஃலபா (ரலி) உடைய ஹதீஸாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நபித்தோழருடைய பெயர் கூறப்படாமல் மக்ஹூல், அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ, கஸீர் பின் முர்ராஃ போன்ற தாபிஈன்கள் நேரடியாக நபியிடமிருந்து அறிவிக்கும் முர்ஸல் செய்தியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் இடம்பெறும் மக்ஹூல் என்பவர் தான் இச்செய்தியைக் கேட்டதாகக் கூறும் மாலிக் பின் யகாமிர் என்பவரை சந்திக்கவில்லை. அதனால் இது தொடர் அறுபட்ட செய்தி என்பதாவும் அறிஞர்கள் கூறியுள்ளனர். இத்தனை விமர்சனங்கள் இருப்பதால்தான் அபூ ஹாதம் அர்ராஸீ, தாரகுத்னீ போன்றோர் இச்செய்தி பலவீனமானதாகக் கூறியுள்ளனர். 

2. ஆஇஷா (ரலி) அறிவிக்கிறார் : 'நான் நபி (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் மதீனா மையவாடியான 'பகீயில்' வானத்தை நோக்கி தலையை உயர்த்தியவர்களாக பிராத்தனையில் இருந்தார்கள். என்னைக் கண்டதும் ஆயிஷாவே! அல்லாஹ்வும், அவனது தூதரும் உனது விவகாரத்தில் அநீதி இழைத்து விடுவர் என நீ பயப்படுகின்றீரா? என்று கேட்டார்கள். அதற்கு நான், ஒருபோதும் இல்லை. நீங்கள் என்னை விட்டு விட்டு வேறு மனைவியரிடம் வந்து விட்டதாக நினைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள்: 'ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியான 15ம் இரவில் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து 'கல்ப்' கோத்திரத்திரத்திற்கு சொந்தமான ஆடுகளின் முடியளவை விட அதிகம் பேருக்கு மன்னிப்பு வழங்குகின்றான்’ என்று கூறினார்கள்' (ஆதாரம் திர்மிதீ 739, இப்னுமாஜாஃ 1389, அஹ்மத் 26018). இதன் அறிவிப்பாளர் வரிசை தொடர்அறுபட்டதாகவும், அதில் இடம்பெறும் ஹஜ்ஜாஜ் பின்அர்தஆ என்பவர் அதிகம் மனன சக்தி குன்றிய அதிகம் தவறிழைக்கக் கூடியவர் எனப் பல ஹதீஸ்கலை விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அறிவிப்பாளர் தொடரில் ஹஜ்ஜாஜ் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவரிடமோ, யஹ்யா பின் அபீ கஸீர் உர்வா பின் ஸுபைரிடமோ ஹதீஸ்களை செவிமடுக்கவில்லை என இமாம் புஹாரி அவர்கள் கூறியதை இமாம் திர்மிதீ தனது ஸுனனில் பதிந்துள்ளார்கள். அதேபோன்று இந்த யஹ்யா என்பவர் தான் சந்திக்காதவர் களிடமிருந்து கேட்காத செய்திகளை அறிவிக்கக் கூடியவர் (இர்ஸால்) என்று விமர்சிக்கப்பட்டவர். எனவே இத்தனை விமர்சனங்களுக்குட்பட்ட இச்செய்தியும் பலவீனமாதே. 

3. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள் : ஷஃபான் 15ம் இரவில் அல்லாஹ் தனது அடியார்களை நோட்டமிட்டு, அவர்களில் பிணங்கிக் கொண்டவர்களையும் இணைவைப்பாளர் களையும் தவிர ஏனைய அனைவரையும் மன்னிக்கின்றான். (அஹ்மத் 6642). இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் இப்னு லஹீஆ மற்றும் அவரின் ஆசிரியர் ஹுயைய் பின் அப்தில்லாஹ் ஆகிய இருவரும் பலவீனமானவர்கள். எனவே இச்செய்தியும் பலவீனமானதே. 

4. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ பக்ர் (ரலி) அறிவிக்கின்றார்கள் : ஷஃபான் 15ம் இரவில் அல்லாஹ் கீழ்வானுக்கு இறங்கி தனது அடியார்களில் பிணங்கிக் கொண்டவர் களையும் இணைவைப்பாளர் களையும் தவிர ஏனைய அனைவரையும் மன்னிக்கின்றான். (முஸ்னதுல் பஸ்ஸார் 80).இதன் அறிவிப்பாளர் வரிசையில் இமாம் பஸ்ஸாரின் ஆசிரியர் அம்ரு பின் மாலிக், மற்றும் இடயில் வரும் அப்துல் மலிக் பின் அப்தில் மலிக் ஆகிய இருவரும் பலவீனமானவர்கள். இந்த செய்தியை இமாம்களான புஹாரி, அபூ ஹாதம், உகைலீ, இப்னு அதிய், பஸ்ஸார் மற்றும் பலர் பலவீனப்படுத்தியுள்ளனர். 

மேலே கூறப்பட்ட இறைவசனங்கள், நபி மொழிகள், அறிஞர்களின் விளக்கங்களை நோக்கும் போது ஷஃபான் நடுப்பகுதியிரவை தொழுகை அல்லது வேறு வணக்கங்களைக் கொண்டு குறிப்பாக்குவதும், அந்நாளில் நோன்பு நோற்பதும் வெறுக்கப்பட்ட பித்அத் என்பது உண்மையான மார்க்கத்தை தேடும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றது. அவ்விரவின் சிறப்புப் பற்றி பல நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அறிவிப்பாளர் வரிசைகளையும் சேர்த்து இச்செய்தி ஹஸன் என்ற தரத்திலுள்ளதாக சில அறிஞர்கள் கூறியுள்ளனர். எனினும் அனைத்து அறிவிப்பளர் வரிசைகளும் மிக பலவீனமானதாக உள்ளதால் இதனை ஹஸன் என்ற தரத்திற்கு உயர்த்த முடியாதென வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு வாதத்திற்கு ஷஃபான் 15ம் இரவின் சிறப்பு பற்றி வந்துள்ள செய்தி ஹஸன் எனும் தரத்திலுள்ள ஆதாரபூர்வமான செய்திதான் என வைத்துக் கொண்டாலும் அவ்விரவில் மூன்று யாஸீன்கள் ஓதவோ, இரவை வணக்கங்களைக் கொண்டு சிறப்பிக்கவோ எவ்வித வலுவான ஆதாரங்களுமில்லை. இதன்படி அவ்விரவின் சிறப்பை நாம் அடைய செய்ய வேண்டியது இரண்டு விடயங்கள் தான். ஒன்று அல்லாஹ்வுக்கு இணைவைக்காமலிருக்க வேண்டும். மற்றது யாருடனாவது பிணக்கப் பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டு ஒற்றுமையாக வேண்டும். இதனை விட வேறு எவ்வித புதிய வணக்கத்திற்கும் இத்தூய மார்க்கத்தில் இடமில்லை. 

அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய பிரார்த்தனை எனும் வணக்கத்தை அவனல்லாத கப்ருகளில் அடங்கப்பட்டுள்ளவர்களிடம் கேட்டு, அவனுக்கு இணைவைத்துவிட்டு வருடாவருடம் ஷஃபான் 15ல் மூன்று யாஸீன்கள் என்ன முன்னூறு யாஸீன்கள் ஓதியும் என்ன பயன்? 

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள் : “நீங்கள் ஏனைய இரவுகளை விட்டு விட்டு வெள்ளிக்கிழமை இரவை மாத்திரம் நின்று வணங்குவதன் மூலம் குறிப்பாக்க வேண்டாம், ஏனைய தினங்களை விட்டு விட்டு வெள்ளிக்கிழமையை மாத்திரம் நோன்பைக் கொண்டு குறிப்பாக்க வேண்டாம். அவர் ஏனைய தினங்களிலும் நோன்பு பிடிப்பவராக இருந்தாலே தவிர.” (ஆதாரம் : முஸ்லிம் 1144) இவ்வாறு ஓர் இரவை ஏதாவதொரு வணக்கத்தின் மூலம் குறிப்பாக்குவது ஆகுமானதாக இருந்தால் அதற்குத் தகுதியான நாள் வெள்ளிக்கிழமையாகும். ஏனெனில் சூரியன் உதித்த நாற்களில் அந்நாளே சிறந்ததாகும். இத்தினத்தையே நபியவர்கள் வணக்கங்களின் மூலம் குறிப்பாக்குவதைத் தடைசெய்திருக்கும் போது ஏனைய தினங்களை எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி குறிப்பாக்குவது அறவே கூடாது. 

லைலதுல் கத்ர் இரவு, ரமழான் மாத இரவுகளில் அதிகம் நின்று வணங்கவது மார்க்கத்தில் உள்ளது என்பதால் அதனை நபியவர்கள் எங்களக்கு கற்றுத்தந்து அவர்களும் செய்து காட்டினார்கள். இதே போன்று மிஃராஜுடைய இரவோ பராஅத் உடைய இரவோ நின்று வணங்குவது மார்க்கத்திலுல்லது என்றால் அதனையும் நபியவர்கள் சொல்லி செய்துகாட்டியிருப்பார்கள். அப்படி நடந்திருந்தால் நபித் தோழர்கள் மறைக்காமல் இந்த உம்மத்துக்கு எத்திவைத்திருப்பார்கள். 



அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget