இஸ்லாமிய போதனை மக்கா மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வேளை அரேபியா மட்டுமன்றி அகில உலகுமே அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. இஸ்லாம் எனும் அறிவுத் தீபத்தை ஏற்ற வந்த அன்னல் நபி உம்மி (எழுத வாசிக்கத் தெரியாத) தூதராவார். அவர் இந்தத் தூதை எடுத்துச் சொன்ன சமூகம் (எழுத வாசிக்கத் தெரியாத) உம்மி சமூகமாகும் என்பதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.வரலாற்று ஏடுகள் அக்காலத்தை ‘ஜாஹிலிய்யக்காலம்’ என அடையாளப் படுத்துகின்றன. நபி (ஸல்) அவர்களது 23 வருடகால கடின முயற்சியின் பின்னர் அரேபியர்களிடையே கலாசார பண்பாட்டு ரீதீயான முன்னேற்றம் ஏற்பட்டது போல் மிகப் பெரிய அளவில் அறிவியல் பேரெழுச்சியும் ஏற்பட்டது. அரேபிய தீபகற்பத்தையும் தாண்டி ஐரோப்பிய உலகுக்கும் அறிவொளிகளை வழங்கும் அளவிற்கு மகத்தானதொரு மாற்றம் நிகழ்ந்தது. இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்களால் கூட புறக்கணித்து விட முடியாத அளவுக்கு அறிவியல் எழுச்சியின் உச்சத்தை அடைய அந்த சாதாரண ஆட்டுமந்தை மேய்த்தவர்களைத் தூண்டியது எது? இந்த திடீர் திருப்பத்திற்கான காரணங்கள் என்ன? அறிவியல் துறையில் முஸ்லிம்கள் நிகழ்த்திய சாதனைகள்? அதற்குச் சாதகமாக இருந்த காரணிகள், இன்றைய காலகட்டத்தில் இத்துறை முஸ்லிம்களுக்கு மத்தியில் வீழ்ச்சி அடைந்தற்கான காரணங்கள் என்பனவற்றை இங்கு நோக்குவோம்.
முஸ்லிம்களின் அறிவியல் எழுச்சி
கி.பி. 500ம் ஆண்டு முதல் 1500ம் ஆண்டுவரையுள்ள காலம் மத்தியகாலம் என வரலாற்றில் அழைக்கப்படுகிறது. இருண்ட காலம் என்றும் வர்ணிக்கப்படும் இக்காலப் பிரிவில் ஐரோப்பிய நாடுகள் கூட கலை, கல்வி, கலாசார ரீதீயில் பெரிய வீழ்ச்சியைக் கண்டிருந்தன. இதே வேளை கிறிஸ்தவ உலகு அறிவியல் துறைக்கெதிரான அறிவிக்கப்படாத யுத்தத்தையே தொடங்கியிருந்தது.
கி.பி. 283ல் எகிப்திய ஆட்சிப்பீடத்திலேறிய இரண்டாம் தொலமி அலெக்சாந்திரியாவில் நிறுவிய பிரமாண்டமான நூல் நிலையத்தை தியோபிளஸ் எனும் பாதிரியின் தூண்டுதலால் கி.பி. 391ல் கிறிஸ்தவர்கள் தீயிட்டுக் கொழுத்தினர். அறிவியலை மதத்தின் பெயரால் எதிர்த்தவர்கள் அறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை. ‘இயேசு கிறிஸ்துவுக்குப்பின் எந்த விஞ்ஞானத்துக்கும் இடமில்லை, அவருடைய போதனைகளுக்குப் பின் எந்தவிதமான விஞ்ஞானப் போதனைகளும் தேவையில்லை. (3) என்று போதிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் பலர் மதப்பிரிவினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறு அறிவியலுக்கெதிரான போராட்டம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையில் முஸ்லிம் உலகு அறிவுத்தாகம் கொண்டு, அறிவியலில் மோகம் கொண்டு பண்டைய அறிவியல் செல்வங்களைத் தேடி வந்து பெற்று அவற்றை மேலும் மெருகூட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
மேற்குறித்த நிலை பற்றி பிரபல வரலாற்றாசிரியரான H.G.Wells தனது நூலில், ‘முதல் முதலில் கிரேக்கரே தத்துவ விசாரணையை ஆரம்பித்தனர். அவர்களுக்குப் பின்னர் அரேபியர் அம் முறையைத் தொடர்ந்தனர். அரிஸ்டோடில் விதைத்த தத்துவம், அலெக்ஸாந்திரியாவில் புகழ்பெற்ற நூதனசாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. இவை அரேபியரின் எழுச்சிக்குப் பின்னரே முளைவிட்டு பழம் தரத் துவங்கின என்று குறிப்பிடுகின்றார்.
அழிவின் விளிம்பிலிருந்த அறிவியலை முஸ்லிம்கள் பாதுகாத்திருக்காவிட்டால் பழம் பெரும் அறிவியல் முதுசங்கள் பல இன்றை உலகுக்குக்கிடைக்காது போயிருக்கலாம். அழிவிலிருந்து அறிவியலைப் பாதுகாத்தமை முஸ்லிம்கள் அறிவியல் உலகுக்குச் செய்த மிகப் பெரும் சேவையாகும். இது குறித்து பேராசிரியர் Stanislas Guyand அவர்கள் தனது Encyceopadie des science religieusus என்ற ஜேர்மனிய நூலில் மத்தியகால வரலாறுகளிலேயே இஸ்லாத்தின் வரலாறு நாகரிகத்தின் வரலாறாகவே விளங்குகிறது. புறக்கனிக்கப்பட்ட கிரேக்க விஞ்ஞானத்தையும் தத்துவ சாத்திரங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்து, மேற்குலகை எழுச்சிபெறச் செய்து அறிவியக்க வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாக இருந்ததற்காக நாம் முஸ்லிம்களுக்கு மிகவும் கடமைப்படடுள்ளோம். ஏழாம் நூற்றாண்டில் பழைய உலகம் மரண வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது அரேபியர்கள் பெற்ற வெற்றி இந்த உலகில் புதிய குருதியைப் பாச்சியது.’ என்று குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்டதொரு கூற்றல்ல.
இதே கருத்தை C.E. Storss என்ற அறிஞர் Many Greeds -One cross என்ற நூலில் இருள் அடைந்திருந்த யுகத்தில் விஞ்ஞானம், தத்துவம் போன்ற ஒளிச்சுடர்களை உயரப்பிடித்திருந்த பெருமை அரேபிய முஸ்லிம்களையே சாரும். அவர்களே அரிஸ்டோட்டில், பிளேட்டோ, இயுக்லித் தொலமி ஆகியோரின் நூல்களை அறபு மொழியில்பெயர்த்து பாதுகாத்தனர். அவர்களாலேயே இந்நூல்களை மறுமலர்ச்சிக்காலத்தில் ஐரோப்பியரும் தத்தம் மொழிகளில் பெற்றுக்கொள்ள முடிந்தது’என்று குறிப்பிடுகின்றார்.
அன்று அரேபியர் ஏற்படுத்திய அறிவியல் எழுச்சிதான் இன்றைய ஐரோப்பாவின் அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது என்பதை மேற்படி கூற்றுக்கள் உறுதி செய்கின்றன. அன்றைய அவர்களது அறிவியல் தாக்கம் இன்றுவரை வியாபித்துள்ளததைக் காணலாம். இதனைப் பின்வரும் கூற்று உறுதிப்படுத்துகின்றது.
‘ஐரோப்பாவில் லௌகீகத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும், அறியாமை இருள் சூழ்ந்திருந்தபோது ஸ்பெயின் முஸ்லிம்கள் சிறப்பு வாய்ந்த நாகரிகத்தையும் ஸ்தீரமான பொருளாதார வாழ்க்கையையும் அமைத்திருந்தார்கள். கலை, விஞ்ஞானம், தத்துவம், கவிதை முதலிய துறைகளின் வளர்ச்சியில் முஸ்லிம் ஸ்பெயின் பெரும் பங்கெடுத்தது. அவர்களின் கருத்துக்களின் செல்வாக்கு 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோமஸ் அக்யனாஸ், தாந்தே போன்ற தத்துவ ஞானிகளின் சிந்தனைகளையும் தாக்கத் தவறவில்லை. முஸ்லிம் ஸ்பெயின் ஐரோப்பாவின் ஒளிவிளக்கைப் போல விளங்கியது.
இக்கூற்று அன்றைய அவர்களது அறிவியல் எழுச்சியின் தாக்கம் நீண்ட நெடிய வரலாறுடையது என்பதையும் ஐரோப்பாவின் மறுமலர்ச்சித் தொட்டிலாக திகழ்ந்தது ஸ்பெயினே என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இறுதியாகவும் ஒட்டுமொத்தமாகவும் முஸ்லிம்கள் அறிவியல் துறைக்காற்றிய பங்குபற்றிக் கூறுவதாயின், பேராசிரியர் பிலிப் கே. ஹிட்டி History of Arabs எனும் தனது நூலில் கூறுவது போன்று ‘மத்திய கால ஆரம்பத்தில் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியவர்கள் அரேபியர்களைப் போல வேறு எவரும் இல்லை’ என்று கூறலாம்.
அறிவியல் துறையில் இவ்வாறு எழுச்சி பெற்ற முஸ்லிம்கள் அத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதையும் ஓரளவு விரிவாக விளங்கிக்கொள்வது மேற்குறித்த கூற்றுக்களின் உன்னதத் தன்மையை உணர்ந்து கொள்ள வழிவகுக்கும். இவ்வகையில் முஸ்லிம்களின் அறிவியல்துறை சாதணைகள் பற்றி இங்கு நோக்கப்படுகிறது.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.