ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி (பாடம் – அகீதா, நாள் 05)



பாடம் - 05
5.1. ஈமானின் அடிப்படைகள்.
அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று நம்பி, ஏற்றுக் கொள்ளுதல். அவனது உலூஹிய்யத், ருபூபிய்யத் முதலியவைகளை உறுதியாக உண்மைப்படுத்தி, பூரணமாக ஏற்றுக்கொள்ளுதல், அதைக் கொண்டு உள்ளம் அமைதியடைதல், இறைவன் தடுத்தவைகளை தவிர்ந்தும், ஏவியவைகளை எடுத்தும் நடத்தல், நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தையும், தன் இறைவன் புறத்திலிருந்து மார்க்கமாக அவர் கூறிய அனைத்து ஸஹீஹான விடயங்களையும் ஏற்றல், அவர் ஏவியவைகளை எடுத்து நடத்தல், விலக்கியவற்றை விட்டும் தவிர்ந்து நடத்தல், இவையனைத்திலும் பணிவையும், அமைதியையும் வெளிப்படுத்தல் போன்ற அனைத்தும் ஈமான் என்ற வட்டத்தினுள் உள்ளடங்கும்.
மார்க்க அடிப்படையில் ஈமானைப் பின்வருமாறு வரைவிலக்கணப் படுத்தலாம் : உள்ளத்தால் நம்பிக்கை கொண்டு, நாவினால் மொழிந்து, உறுப்புக்களால் செயற்படுவதே ஈமான் ஆகும், இது அல்லாஹ்வுக்கு வழிப்படுவதன் மூலம் அதிகரிக்கும், மாறு செய்வதன் மூலம் குறையும்.
இதற்கு ஆறு (அர்கான்) அடிப்படைகள் இருக்கின்றன, அவை அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், ரஸூல்மார்கள், மறுமை நாள், கழா கத்ர் முதலியவற்றை நம்புதல் ஆகும்.
அல்லாஹ் கூறுகிறான், “புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்… (இவையே புண்ணியமாகும்)” (அல்குர்ஆன் 02: 177),
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.” (அல்குர்ஆன் 54: 49).
5.1.1 அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்ளுதல்.
அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்ளுதல் பின்வரும் நான்கு விடயங்களை உள்ளடக்கும் :
1. அல்லாஹ் இருக்கிறான் என்று ஏற்று நம்புதல்.
2. அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவன் அவன் மாத்திரம் என்று ஏற்றல்.
3. அனைத்து வணக்கங்களும் அவன் ஒருவனுக்கு மாத்திரமே செலுத்தப்படல்.
4. அல்லாஹ்வுடைய பெயர் பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துதல்.
 ஒருவன் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்என்ற திருக்கலிமாவை நாவால் மொழிந்தால் மாத்திரமே அவன் முஸ்லிமாகிறான்.
அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதன் முக்கிய அம்சம் அவனை ஒருமைப் படுத்துவதாகும். அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள வசனங்களினதும், நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்களிலினதும் பார்வையில் மூன்று முறைகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்திட வேண்டும்.
அல்லாஹ்வுக்கு மாத்திரம் வணக்க வழிபாடுகளை நிலை நிறுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அனைத்து அல்குர்ஆன் வசனங்களும் இறைமைக் கோட்பாட்டில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதையும், இப்பிரபஞ்சத்தைப் படைத்து, பரிபாலித்துக் கொண்டிருக்கின்றவன் அல்லாஹ் என்பதை வலியுறுத்திவரும் அனைத்து அல்குர்ஆன் வசனங்களும் பரிபாலணக் கோட்பாட்டில் அவனை ஒருமைப் படுத்துவதையும், அல்லாஹ்வின் பெயர், பண்புகளுக்கு நிகராக எவருமே இருக்க முடியாது என்பதை வலியுறுத்தி வரும் அனைத்து அல்குர்ஆன் வசனங்களும் அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவதையும் குறித்து நிற்கின்றன.
பரிபாலக் கோட்பாட்டிற்கான உதாரணம்: “உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.  பின்னர் அர்ஷின் மீது உயர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.” (அல்குர்ஆன் 07:54)
இறைமைக் கோட்பாட்டிற்கான உதாரணம்: உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.” (அல்குர்ஆன் 02:163)
திருநாமங்கள், பண்புகளுக்கான உதாரணம்: “அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.” (அல்குர்ஆன் 42:11). ல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உண்டு, அதை வைத்தே அவனை அழையுங்கள்” (அல்குர்ஆன் 7:180).
5.1.2. பரிபாலக் கோட்பாடு (தவ்ஹீதுர் ருபூபிய்யா).
இது அல்லாஹ் இருக்கிறான் என்று நம்புவதையும், படைத்தல், உணவளித்தல், ஆட்சிபுரிதல், கொடுத்தல், தடுத்தல், நன்மை பயக்குதல், தீங்கு விளைவித்தல், உயிர்ப்பித்தல், மரணிக்கச் செய்தல் போன்ற அவனது செயற்பாடுகள் மூலம் அவனை ஒருமைப்படுத்துவதையும் குறிப்பிடுகின்றது. அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்” (அல்குர்ஆன் 39:62).
. பரிபாலிப்பவன் (ரப்புன்)
அவனே அனைவராலும் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன், இல்லாமல் இருந்த அனைத்தையும் படைத்து, பரிபாலனம் செய்பவன். அனைத்து விடயங்களுக்கும் அவனே அதிபதி, அனைத்து விடயங்களையும் அவனே அறிந்தவன். அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உண்மைகள் அனைத்தும் தெளிவாகப் புரிந்துவிடும். அல்லாஹ் கூறுகிறான், “உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?” (அல்குர்ஆன் 51:21), “ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-” (அல்குர்ஆன் 91:7)
. இஸ்லாமிய மற்றும் பகுத்தறிவு சார்ந்த சான்றுகள்.
ஒரு மனிதன் தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்துப் பார்த்தால் போதும். தன்னைப் படைத்த, நுட்பமான, அனைத்தையும் அறிந்த இறைவன் ஒருவன் இருக்கத்தான் செய்கிறான் என்பதைப் புரிந்துகொள்வான். அவனுக்கு தனது இந்திரியத் துளியை சுயமாக உருவாக்க முடியாது. அப்படித்தான் முடிந்தாலும் அதை இரத்தக்கட்டியாக, பின்னர் சதைக்கட்டியாக, எலும்புகள் நிறைந்த ஒரு பூரண உடம்பாக அதை அவனால் மாற்ற முடியாது.
அவ்வாறு தான் இவ்வுலகைப் பற்றியும் அதில் உள்ளவைகள் பற்றியும் சிந்தித்தால் படைத்து, பரிபாலிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?” (அல்குர்ஆன் 41:53),
இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம்.” (அல்குர்ஆன் 41:37).
வானத்தை உற்று நோக்கி, அதில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஏனைய கோள்கள், அவ்வாறே பூமியிலுள்ள மண், மரம், மலைகள், ஆறுகள், கடல் போன்றவைகளையும், அவை வடிவமைக்கப்பட்டுள்ள விதங்கள் பற்றியும், அதன் ஒழுங்கமைப்புக்களையும் சிந்தித்தாலே போதும். இயற்கை என்பதற்கும் மேலால் அதனை உருவாக்கி, வழிநடாத்தக்கூடிய ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள முடியும். அல்லாஹ் கூறுகிறான், “அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அவ்வாறல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.” (அல்குர்ஆன் 52: 35-36).
அல்லாஹ்வின் ஒவ்வொரு படைப்பிலும் மனிதனுக்கு நன்மை பயக்கும் விடயங்கள் இருப்பதோடு, அவனைப் பற்றி சிந்திக்கவைக்கும் ஒரு நுட்பம் இருந்துகொண்டே இருக்கும். அவன் எதையும் வீணாகப் படைக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான், “மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 21: 16).
. பரிபாலக் கோட்பாட்டை இணைவைப்போரும் ஏற்றிருந்தனர்.
நபி r அவர்களின் காலத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் கூட அல்லாஹ்வின் பரிபாலனக் கோட்பாட்டை ஏற்றிருந்தனர். நாத்திகர்கள், பிர்அவன், இப்ராஹீம் நபியுடன் வாதாடியவன் போன்ற சிலரே இதை மறுத்துள்ளனர். ஆனால் அல்லாஹ்வின் இறைக் கோட்பாட்டை ஏற்றிருக்கவில்லை. சிலைகள், கற்கள் போன்றவற்றை வணங்கி அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தனர்.
அல்லாஹ் கூறுகிறான், ““நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும், இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக! அல்லாஹ்வுக்கேஎன்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக! ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராகஅல்லாஹ்வேஎன்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக! எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)என்று கேட்பீராக.. அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)என்று கூறுவார்கள். (உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.” (அல்குர்ஆன் 23:84-89)
அவர்கள் வணங்கி வந்த சிலைகளும், கற்களும் கடவுள்கள் அல்ல, அவற்றால் நமக்கு எப்பயனும் கிடையாது, இவைகள் அனைத்தும் படைக்கப்பட்டவையே, இவற்றால் நமக்கு நன்மைகளையோ, தீமைகளையோ ஏற்படுத்தி விட முடியாது என அவர்கள் அறிந்திருந்தனர். மாறாக அவர்கள் தமக்கும், அல்லாஹ்வுக்கும் மத்தியில் நெருக்கத்தையும், தொடர்பையும் ஏற்படுத்தக் கூடிய இடைத்தரகர்களாக இவற்றைப் பயன்படுத்தினர்.
அல்லாஹ் கூறுகிறான், “இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்).” (அல்குர்ஆன் 39:03).

கேள்வி இல 05

ரப்புன் என்பதன் கருத்து யாது?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget