பாடம் - 04
4.1. அகீதாவின் கலைச்சொற்கள்
4.1.1 அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்:
அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினர் என்போர் வெற்றி பெற்ற கூட்டித்தினர் ஆவார்கள். இவர்கள் எவ்வித நெறிபிறழ்வுகளும் இன்றி தனது வழியிலும், தனது தோழர்கள் சென்ற வழியிலும் பயணிப்பார்கள் என நபி (ஸல்) அவர்களே முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். இவர்கள் அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் மாத்திரம் தமது வாழ்வில் எடுத்து நடந்து, வழிகெட்ட கொள்கைகளின் பாதையை விட்டும் தூரமாகி நடப்பார்கள். நபியவர்கள் கூறினார்கள், “பனூ இஸ்ரவேலர்கள் 71 கூட்டத்தினர்களாகப் பிரிந்தார்கள். எனது சமூகம் 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். அதில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் நரகில் நுழைந்திடும். அப்போது அவரிடம், ‘அந்த ஒன்று எது’ என வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், ‘நானும் எனது தோழர்களும் இன்று இருப்பதைப் போன்று இருப்பவர்கள்’ எனக் கூறினார்கள்” (ஆதாரம்: அபூதாவூத் 4597, திர்மிதி 2641)
நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஆதாரபூர்வமானதை ஸலபுகள் விளங்கிய பிரகாரம் விளங்கி, பின்பற்றி நடப்பதன் காரணமாக அஹ்லுஸ்ஸுன்னா என்ற பெயரையும், வழிகெட்ட கூட்டத்தின் கருத்துக்களைப் பின்பற்றாது இஸ்லாமிய மார்க்கத்தில் உண்மையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து நடந்ததன் காரணமாக ஜமாஅத் என்ற பெயரையும் இக்கூட்டத்தினர் கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் அஹ்லுல் அதர், அஹ்லுல் ஹதீஸ், அத்தாஇபா அல்மன்ஸூரா, அல்பிர்கா அந்நாஜியா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.
4.1.1.1 அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் சில அடிப்படைகள்:
இது எவ்விதக் கொள்கைகளினதோ, வழிமுறைகளினதோ அடிப்படைகள் கிடையாது. மாறாக இஸ்லாமிய சட்ட ஒழுக்கத்தின் மூலம் பெறப்பட்ட அடிப்படைகளாகும். எனவே இவர்களின் அடிப்படை விதிகள் பின்வருமாறு பெறப்பட்டுள்ளன.
1. இஸ்லாமிய கொள்கையின் மூலம் அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும், ஸலபுகளின் இஜ்மாவுமாகும்.
2. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையானதே. ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் அது ஆஹாதாக இருந்தாலும் அனைவரும் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்களே.
3. அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் விளங்கிக் கொள்வதற்கான அளவுகோல், அவற்றில் தெளிவாக இடம்பெற்றுள்ள வசனங்களும், ஸலபுகளும், அவர்களின் போக்கின் அடிப்படையில் சென்றோரும் விளங்கிய விதங்களுமாகும்.
4. மார்க்கத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்களே தெளிபடுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள். எனவே இதுவும் மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களில் உள்ளது தான். தமது கருத்துக்களைச் சொருகுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.
5. இஸ்லாத்தினுள் புதிதாக இணைக்கப்பட்ட அனைத்தும் நூத அனுஷ்டானங்கள். அவைகள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் நரகத்தின் பக்கமே கொண்டு சென்றுவிடும்.
6. அல்குர்ஆனும், ஸுன்னாவும் குறிப்பிடும் அனைத்து அம்சங்களையும் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்ளும். அதில் தெளிவான முரண்பாடுகள் எப்போதும் தோன்றாது. அவ்வாறு முரண்பாடுகள் தோன்றுவதாக சந்தேகம் ஏற்பட்டால் பகுத்தறிவை விட அல்குர்ஆன், ஸுன்னாவையே முற்படுத்த வேண்டும்.
7. இஸ்லாமிய கொள்கை சார்ந்த விடயத்தில் இதற்கென்று உத்தியோகப்பூர்வமாகப் பயன்படுத்தும் சொற்களையே அவசியம் பயன்படுத்திட வேண்டும். புதிது புதிதாக உருவாக்கப்பட்ட சொற்களை உபயோகப்படுத்துவதை விட்டும் தவிர்ந்திட வேண்டும்.
8. தவறுகள் செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெற்ற தனி ஒருவர் நபி (ஸல்) அவர்கள் மாத்திரமாவார். அவ்வாறே சமூகம் என்ற அடிப்படையில் அவரது சமூகமே வழிகேட்டில் ஒன்று சேர்வதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது தவிர மற்றைய தனிமனிதர்கள் தவறுகள் புரிவதிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்கள் கிடையாது. எனவே அவர்களுக்கு மத்தியில் தவறுகளும், முரண்பாடுகளும் ஏற்படுகின்ற போது, அவர்களும் அதை உணர்வதோடு, மற்றவர்களும் அதனை மன்னித்து விட்டு அவரை அல்குர்ஆன், ஸுன்னாவின் பக்கம் மீளச்செய்ய வேண்டும்.
9. நல்ல கனவுகள் என்பது யதார்த்தமானதாகும். அது நபித்துவத்தின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படுகின்றது.
10. இஸ்லாம் வீண் வாதங்களை இழிவுபடுத்தி, நல்ல விடயங்களுக்காக வாதாடுவதை வரவேற்றிருக்கின்றது. அதிலும் எந்த விடயங்களில் மூழ்க வேண்டாம் என ஸஹீஹான ஹதீஸ்களில் தடை வந்துள்ளதோ அவ்விடயங்களில் மூழ்கி விவாதங்களில் ஈடுபடக் கூடாது.
11. ஸலபுகளின் வழிமுறை வஹீயுக்கு முன்னுரிமை வழங்குவதே. ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமானதாக இருந்தால் அதுவே எனது கருத்தாகும் என இமாம் அபூ ஹனீபா (ரஹ்) கூறியுள்ளார்கள். இந்த கப்ரில் அடங்கப்பட்டிருக்கும் நபியவர்களைத் தவிர ஏனைய அனவருடைய வார்த்தைகளிலும் எடுக்க வேண்டியதுமுள்ளது. தட்ட வேண்டியதுமுள்ளது என இமாம் மாலிக் (ரஹ்) நபியவர்களின் கப்ரை சுட்டிக்காட்டிக் கூறினார்கள். எனது நூலில் ஹதீஸிற்கு மாற்றாமாக ஏதாவது கருத்தைக் கண்டால் ஹதீஸை எடுத்துக் கொண்டு எனது கருத்தைப் புறக்கணித்து விடுங்கள் என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள். நீங்கள் என்னையோ, மாலிகையோ, ஷாபிஈயையோ, அவ்ஸாஇயையோ, ஸவ்ரியையோ கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர். அவர்கள் தமது கருத்துக்களை எங்கிருந்து பெற்றார்களோ அங்கிருந்தே நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள் என இமாம் அஹ்மத் (ரஹ்) கூறியுள்ளார்கள். இதிலிருந்து இம்மாபெரும் இமாம்கள் மத்ஹப் பிடிவாதத்தை விட்டு, வஹீயுக்கு முன்னுரிமை வழங்கும் படியே ஏவியுள்ளார்கள்.
4.1.2. ஸலபிய்யாக்கள்:
ஸலப் என்பதன் தமிழ் அர்த்தம் முன்சென்றோர் என்பதாகும். ‘நானும் எனது தோழர்களும் இன்று இருப்பதைப் போன்று இருப்பவர்கள்’ என்ற நபியவர்களின் கூற்றுக்கேற்ப அவர்களில் முதன்மையானவர்கள் நபியும் அவரது தோழர்களுமே. இவர்களை சரியான முறையில் துயர்ந்த இஸ்லாத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்து மரணித்த சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், அவர்கள் சென்ற வழியில் பயணிப்போரும் ஸலபுகளில் அடங்குவார்கள். அவர்களுக்கு முரண்படுவோர் ஸலபுகள் என்று கூறப்படாமல் பித்அத்வாதிகள் என்றே அழைக்கப்படுவார்கள்.
நபித் தோழர்கள், அறிதல், விளங்குதல், செயலில் கொண்டு வருதல், அமுல்படுத்தல் என்ற அடிப்படையில் அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் பின்பற்றியவாறு தாமும் பின்பற்றி நடத்தலை ஸலபுகளின் வழிமுறை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இவ்வழிமுறையே இறுதி நாள் வரை நீடித்திருக்கும். முஸ்லிம்கள் அனைவரும் இவ்வழியிலேயே பயணித்திட வேண்டும். இது தவிர பொருந்திக்கொள்ள முடியாத பெயர்களைச் சூட்டிக்கொண்டு ஹவாரிஜ்கள், ராபிழாக்கள், ஷீயாக்கள், முஃதஸிலாக்கள், முர்ஜியாக்கள், ஜபரிய்யாக்கள், கத்ரிய்யாகள் என எத்தனை வழிகெட்ட கூட்டத்தார் தோன்றினாலும் அவர்கள் அனைவரும் ஸலபுகளின் போக்கிற்கு முரணானவர்களே.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “எனது சமுதாயத்தில் உண்மைக்கு உதவி செய்திடும் ஒரு குழுவினர் இருந்து கொண்டே இருப்பார்கள். துரோகம் நினைப்பவர்களால் அவர்களுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்திட முடியாது. அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்கள் இவ்வாறே இருப்பார்கள்.” (அறிவிப்பவர்: ஸவ்பான் t, ஆதாரம்: முஸ்லிம்1920)
4.1.3. வஹ்ஹாபிகள்:
இப்பெயர் இன்று நம் மத்தியில் பிரபல்யமாய் இருக்கின்றது. இதன் முக்கியத்தையும், அதன் நிலைப்பாடுகளையும் அறிய முன்னர் இச்சொல்லின் உண்மை நிலை என்னவென்று அறிவது சாலச் சிறந்ததாகும்.
இது நாம் முன்னர் பார்த்த முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு ஸுலைமான் அத்தமீமீ அல் ஹன்பலீ / என்பவரின் அழைப்புப் பணிக்கே நிறைய மக்களால் பெயராகச் சூட்டப்படுகின்றது. சரியான முறையில் சிந்திப்போர், இவர் தூய்மையான ஏகத்துவத்திற்காகவும், மரணித்தவர்களோடு தொடர்புபடுதல், மரம் மட்டைகளை கடவுளாக வணங்குதல் போன்ற இணைவைத்தலோடு தொடர்புடைய விடயங்களை விட்டும் இஸ்லாத்தைப் பாதுகாத்திட பெரும்பாடுபட்டவர் என்பதை அறிந்திடுவர்.
இஸ்லாத்தின் துறைகள் அடிப்படை அம்சம், கிளை அம்சங்கள் என இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. அடிப்படை அம்சமான இஸ்லாத்தின் நம்பிக்கை சார்ந்த கொள்கையில் முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த கருத்தையே கொண்டிருக்க வேண்டும். அதில் இரண்டாம் கருத்திற்கு இடம் கிடையாது. கிளை சார்ந்த அம்சங்களான இஸ்லாமிய சட்டக்கலை போன்ற துறைகளில் பலபேருக்கும் இடம், காலம் போன்ற மாற்றங்களைக் கவனித்து பல கருத்துக்கள் காணப்படலாம்.
முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் / அவர்களும் கிளைசார்ந்த அம்சங்களில் ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தவர். ஆனால் அடிப்படை அம்சத்தில் ஸலபுகளின் கொள்கையைக் கொண்டிருந்தவர்.
அரேபிய தீபகற்பத்தில் இவர் வாழ்ந்த பிரதேசங்களில் எல்லாம் இணைவைப்புக் கள் அதிகரித்தும், மூடநம்பிக்கைகள் மலிந்தும் காணப்பட்ட வேளையில் இவற்றுக்கெதிராக தனது அழைப்புப் பணியைத் தொடர்ந்தார். தவறானவற்றைத் தெளிவுபடுத்தி, சரியான தூய இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்தார். அந்நேரத்தில் அவருக்கு திர்இய்யா எனும் பகுதியில் கவர்ணராக இருந்த அல் இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் என்பவரின் நட்பு கிட்டியது. இவரின் அழைப்புப் பணியால் ஈர்க்கப்பட்ட கவர்ணரும், அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என பெரும் பட்டாளமே இணைந்து இவரோடு சேர்ந்து அழைப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அரேபிய தீபகற்பத்தில் இருந்த பெரும்பாலான இணைவைப்புக்கள் அழிக்கப்பட்டு, தூய இஸ்லாம் பரவ ஆரம்பித்தது. இவரின் அழைப்புப் பணியானது அல்குர்ஆன், ஸுன்னாவிற்கு உட்பட்டதாகவே இருந்தது.
ஆனால் இன்று சமூகத்தில் இவரின் இத்தூய கொள்கைகளை ஆதரிப்போருக்கு வஹ்ஹாபிகள் எனப் பெயரிட்டு, அதற்குப் பல எதிர்மறையான கருத்துக்களையெல்லாம் தெரிவித்து வருகின்றனர். தூய இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தில் மீண்டும் மிளிர வேண்டும் என அரும்பாடுபட்ட இம் மகானை இன்று அடாவடித்தனம், அட்டூழியம், குப்ருக்கு இட்டுச் செல்லும் கொள்கைகள் போன்ற பாரிய ஆயுதங்களால் கூறுபோட்டு, அவரின் பெயரிற்கே பங்கம் விளைவிக்க இவரின் இணைவைப்பை ஒழிக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இணைவைப்பை ஆதரிப்போர் முனைந்து செயற்படுகின்றனர்.
எனவே இன்று நம் சமுதாயத்தில் இடம்பெறுவது போல், ஒருவரை ஒருவர் திட்டித் தீர்க்கவோ, பகைமை பாராட்டவோ, ஒருவரின் கொள்கையை உறுதிப்படுத்த கண்மூடித்தனமான அம்சங்களை இஸ்லாம் என்னும் பெயரில் செய்திடவோ, மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிடவோ, இயக்கத்திற்கு ஆள் சேர்க்கவோ அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரினதும், ஸலபுகளினதும், இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் / என்பவரதும் போராட்டம் அமையவில்லை. முஸ்லிம்கள் அனைவரும் அடுக்கு செங்கல்லினால் கட்டப்பட்ட கட்டிடத்தைப் போன்றவர்கள். ஒருவர் இன்னொருவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் காணும் நல்ல பண்பை எடுத்துக்கொண்டு, தீய பண்பை விட்டுவிட வேண்டும். இஸ்லாமிய விடயங்களை முற்படுத்தும் போது பிற முஸ்லிமை காபிரைப் போன்று பார்ப்பதை நிறுத்திட வேண்டும். இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஓர் விடயத்தில் சந்தேகமோ, விமர்சனங்களோ, கருத்து முரண்பாடுகளோ எழுகின்ற போது அவற்றை சுமுகமாகத் தீர்த்திட சிறந்த ஆய்வுகளை முழுமையாக செய்திட வேண்டும். அவ் ஆய்வின் மூலம் கிடைக்கப்பெறும் சரியான, ஏகோபித்த முடிவுகளை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி இல 04
ஸலபுகள் என்போர் யார்? அவர்களுக்கு எதிரான வழிகெட்ட கொள்கையுடையவர்கள் இரு கூட்டத்தின் பெயரை குறிப்பிடுக?
கருத்துரையிடுக...
அன்புள்ள சகோதரர்களே!
எமது சமூகவலைத்தளம் மூலமாக இஸ்லாமிய அடிப்படைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நன் நோக்கில் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் இப் போட்டி நிகழ்வை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எனவே தயவு செய்து கேள்விகளுக்கான விடைகளை பின்னூட்டமாக பதிய வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இணைத்தள ஊடகப் பிரிவு
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.