(மஹ்ரூப் ஸாஜிதீன் - ஸஹ்வி )
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்து லில்லாஹ்... சாந்தியும் சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் ( ஸல் ) அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழ்கின்ற அனைவர் மீதும் உண்டாவதாக...
அல்லாஹ் மனித ஜின் வர்க்கத்தை படைத்த நோக்கம் அவனை வணங்குவதற்கே என்று திருமறையில் குறிப்பிடுகின்றான். எனவே இதன் மூலம் வணக்கம் என்பது தொழுவது, நோன்பு பிடிப்பது, குர்ஆன் ஓதுவது மாத்திரம் வணக்கம் கிடையாது மாறாக அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களையும் குர்ஆன் சுன்னா வழிகாட்டலில் மேற்கொள்ளும் பொது அது வணக்கமாக மாறுகின்றது.
உதாரணமாக அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் மேற்கொள்ளும் உண்ணுதல், குடித்தல் போன்ற செயற்பாடுகள் நபியவர்கள் காட்டித்தந்த துஆ ஓதுதல், அவர்கள் அதன் போது ஏவிய, தவிர்த்த விடயங்களை எடுத்து நடக்கும் போது அந்த விடயம் வணக்கமாக மாறிவிடுகின்றது, அல்லாஹ் அதற்கு கூலி வழங்குகின்றான்.
மனிதன் தேகாரோக்கியம் பெறுவதற்கு உணவு மிகப் பிரதான அம்சமாகும். உணவின் மூலமே உடலின் பாகங்கள் தொழிற்படுகின்றன. எனவே வெறுமனே உண்ணாமல் குர்ஆனும் சுன்னாவும் காட்டித்தந்த பின்வரும் ஒழுங்குகளை கடைபிடித்து உண்டு பருக வேண்டும்.
முதலாவதாக ஒரு மனிதன் உண்ணுகின்ற உணவும் குடிக்கின்ற குடிபானமும் ஹலாலானதாகவும் வீண்விரயம் இல்லாமலும் இருக்க வேண்டும். ஒரு அடியானின் பிரார்த்தனை இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இது மூலக் காரணியாகவும் அமைகிறது.
இறைவன் கூறுகிறான் : நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். ( 2:172 )
இறைவன் கூறுகிறான் : உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. ( 7:31 )
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் நீண்ட நேரம் பிரயாணம் செய்த தலையில் புழுதிகள் படிந்து முடிகள் அலங்கோலமான நிலையில் உள்ள ஒரு மனிதரைப்பற்றி கூறினார்கள் அந்த மனிதரோ தனது இரு கைகளையும் வனத்தின் பால் உயர்த்தி இறைவனிடத்திலே பிரார்த்தனை செய்கிறார். ஆனால் அவர் உண்ணுகின்ற உணவும் குடிக்கின்ற குடிபானமும் உடுக்கின்ற உடையும் ஹராமானது. ஆக ஹாராத்திலே வளர்க்கப்பட்ட உடம்பு எப்படி அவரின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். என்று கூறினார்கள் ( முஸ்லிம் )
உண்ணும் பிஸ்மி சொல்லி சாப்பிட வேண்டும்.
( நபி(ஸல் ) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா ( ரலி ) கூறினார்கள் :
நான் இறைத்தூதர் ( ஸல் ) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். ( ஒரு முறை ) என் கை உணவுத்தட்டில் ( அங்கும் இங்குமாக ) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன ( து கை ) க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. ( புகாரி 5376, முஸ்லிம் 4111, 4112 )
எனவே இந்த நபி மொழி சாப்பிடும் முன் பிஸ்மி சொல்லுதல், வலது கையால் சாப்பிடுதல், தனக்கு அருகாமையில் உள்ள உணவை சாப்பிட வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.
அதேபோன்று சாப்பிடும் முன் பிஸ்மி சொல்ல மறந்தால் நினைவு வருகின்ற போது “ பிஸ்மில்லாஹி பி(f) அவ்வலிஹி வ ஆகிரிஹி “ என்ற துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்.
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூறட்டும், அவர் அப்படி ஆரம்பத்திலே அல்லாஹ்வின் பெயரை நினைவு கூற மறந்தால் “ பிஸ்மில்லாஹி பி(f) அவ்வலிஹி வ ஆகிரிஹி “ என்று ஓதிக் கொள்ளட்டும். அபூதாவூத் : 3767
மேலும் ” நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் ( தன் கூட்டத்தாரிடம் ), “ இன்றைய இரவில் உங்களுக்கு ( இங்கே ) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை ” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூறாவிட்டால் ஷைத்தான் ( தன் கூட்டத்தாரிடம் ), “ இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது ” என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “ இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள் ” என்று சொல்கிறான். ( முஸ்லிம் 4106 )
ஷைத்தான் இவ்வாறு நுழைவதன் மூலம் நாம் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் அதிலே பரகத் ஏற்படாது, பசியாறவும் முடியாது அதேபோன்றுதான் அவன் வீட்டிலே நுழைவதனால் குடும்பத்திலே சண்டை சச்சரவுகள், பிளவுகள் தகராறுகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
வலது கையால் சாப்பிடுதல்
சாப்பிடுதல், குடித்தல், கொடுத்தல், வாங்குதல் போன்ற அனைத்து நற்காரியங்களுக்கும் வலது கையை பயன்படுத்த வேண்டும். நமது குழந்தைகளையும் சிறிய வயதில் இருந்தே இதற்கு பழக்கப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லை எனில் தொடர்ந்தும் இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் சைத்தானுக்கு ஒப்பானவர்கள் சைத்தான் இடது கையால் சாப்பிடுகிறான், குடிக்கிறான். இடது கையால் உண்ணுவதும் குடிப்பதும் பெருமையின் அடையாளமாகும்.
” அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4108)
மேலும் “ அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக்கையால் தான் பருகுகிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாஃபிஉ ( ரஹ் ) அவர்கள் தமது அறிவிப்பில் “ இடக் கையால் வாங்காதீர்கள். இடக் கையால் கொடுக்காதீர்கள் ” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள். (முஸ்லிம்4109)
மேலும் ” சலமா பின் அல்அக்வஉ ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் “ வலக் கையால் உண்பீராக!” என்று சொன்னார்கள். அவர், “ என்னால் முடியாது ” என்றார். அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள், “ உம்மால் முடியாமலே போகட்டும்! ” என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை ( அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களுக்குக் கட்டுப்படாமல் ) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது. ( முஸ்லிம் 4110)
மேலும் இப்னு மாஜாவில் பதிவு செய்யப் பட்ட ஹதீஸில் மேலதிகமாக ” வலது கையால் பிடியுங்கள், வலது கையால் கொடுங்கள், ஏன் என்றால் ஷைத்தான் இடது கையால் கொடுக்கிறான், எடுக்கிறான் “. என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.
கீழே விழுந்த உணவை பொருக்கி உண்ண வேண்டும்
நாம் சாப்பிடும் போது சிலவேளை உணவு சாப்பாட்டுத் தட்டை விட்டு விலகி கீழே விழுகின்ற பொது அதிலே ஒட்டியிருக்கின்ற தூசுகளை தட்டி விட்டு அதனை உண்ண வேண்டும்.
” அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவரது உணவுக்கவளம் ( உண்ணும்போது தவறி ) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து, அதில் ஒட்டியிருப்பதை அகற்றி ( ச் சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும், ( உண்ட பின் ) தம் விரல்களை உறிஞ்சுவதற்கு முன் கைக்குட்டையால் கையைத் துடைத்துவிட வேண்டாம். ஏனெனில், தமது உணவில் எந்தப் பகுதியில் வளம் ( பரக்கத் ) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை ஜாபிர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 4137 )
சைத்தான் என்பவன் நம்மோடு ஓட்டிக்கொண்டே வாழ்கிறான். நாம் நபியவர்களின் வழிகாட்டலை விட்டு விலகி நடக்கும் போது அவன் நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறான். எனவே நாம் ஒரு போதும் அதற்கு வழியமைத்துக் கொடுக்கக் கூடாது.
சாப்பிட்டு முடிந்ததன் பின் விரல்களை சுவைக்க வேண்டும்
சாப்பிடுவதன் நோக்கம் சாப்பிட்ட சாப்பாட்டின் மூலம் பசியாறி அதிலே அபிவிருத்தி ஏற்படவேண்டும். சிலவேளை அந்த பரகத் கையில் ஒட்டி இருக்கின்ற உணவில் கூட இருக்கலாம், எனவே இவ்வாறு விரல்களை சுவைக்கும் போது அது ( பரகத் ) நம்மை விட்டும் தப்பிவிடாது.
கஅப் பின் மாலிக் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் மூன்று விரல்களால் உணவு உட்கொள்வார்கள். உண்டு முடித்ததும் அவ்விரல்களை உறிஞ்சுவார்கள். ( முஸ்லிம் 4135 )
பானங்களை அருந்தும் போது அதிலே மூச்சு விடக்கூடாது
அபூகத்தாதா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நபி ( ஸல் ) அவர்கள் ( பருகும் ) பாத்திரத்தினுள் மூச்சு விட வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
( முஸ்லிம் 4124 )
இந்த நபி வழியை புறக்கணித்து செயற்பட்டால் மூச்சு விடும் போது வெளியாகின்ற கிருமிகள் அந்த பானத்திலே கலந்து மீண்டும் அது உட்சென்று நோய் ஏற்படவும் காரணமாக அமைகிறது.
கடும் சூடான நிலையில் உணவை உட்கொள்ளக்கூடாது
அஸ்மா பின்த் அபூபக்கர் ( ரழி ) அவர்கள் சமைத்தால் அதன் சூடு ஆறும் வரை மூடிவைப்பர்கள் இன்னும் நபியவர்கள் நிச்சயமாக அதிலே தான் பரகத் இருக்கிறது என்று கூறியதை நான் செவியுற்றேன் என்று அறிவிக்கிறார்கள். இப்னு ஹிப்பான் : 5207
இதில் பரகத் என்ற சொல் குறிப்பது யாதனில் கடும் சூடு ஆறிய பின் இளம் சூட்டோடு சாப்பிடுவதன் மூலம் நன்கு அதன் ருசியை சுவைத்து சாப்பிட முடியும். இல்லையனில் எந்தவித சுவையையும் உணர முடியாது, பூரண திருப்தியையும் அடைய முடியாது.
சாய்ந்து கொண்டு சாப்பிடக் கூடாது
அபூ ஜுஹைஃபா ( ரலி ) கூறினார்கள் :
நான் நபி ( ஸல் ) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், ‘ நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன் ’ என்று கூறினார்கள். ( புகாரி 5399 )
கட்டில், கதிரை போன்ற உபகரணங்களில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு சாப்பிடும் பொது மரணம் கூட சம்பவிக்கலாம். ஆகவே அழகான முறையில் அமர்ந்து சாப்பிடுவது நபிவழியாகும்.
சாப்பாட்டை குறை சொல்வது கூடாது
இன்றைய காலத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக உணவை குறை சொல்லுதல் காணப்படுகிறது. இது ஒரு அழகிய பண்பல்ல. இதை தவிர்ந்து நடப்பதன் மூலம் சந்தோசமாகவும் அன்பாகவும் வாழ முடியும்.
அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. ஒரு பொருள் பிடித்தால் அதை உண்பார்கள்; பிடிக்காவிட்டால் ( உண்ணாமல் ) விட்டுவிடுவார்கள். ( முஸ்லிம் 4190 )
சாப்பிடும் போது தொழுகை
நன்கு பசியுடன் சாப்பிடும் போது பாங்கு சொல்லப்பட்டால் போதுமான அளவு சாப்பிட்டு முடிந்தன் தொழ வேண்டும். அவ்வாறு இல்லையாயின் அவருடைய முழு எண்ணமும் சாப்பட்டிலே தான் இருக்கும் இதனால் பூரண இறையச்சத்தொடு தொழுகையை நிறைவேற்ற முடியாது.
இறைத்தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘ இகாமத் ’ சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். ( பிறகு தொழச் சொல்லுங்கள் ). ( புகாரி 5463 )
சாப்பிட்டு முடிந்ததன் பின் இறைவனை புகழ்தல்
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முறை உணவு உண்ட பின்னர் அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற, அல்லது ஒரு முறை பானம் அருந்திய பிறகு அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்.
இதை அனஸ் பின் மாலிக் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 5282 )
சாப்பிட்டு முடிந்ததன் பின் “ அல்ஹம்து லில்லாஹி ல்லதி அத்அமனி ஹாதா வரசகநீஹி மின் கைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வாஹ் “ என்ற துஆவை ஓத வேண்டும். அவர் விருந்தாளியாக இருந்தால் விருந்தளித்தவருக்கு “ அல்லாஹும்ம பாbரிக் லஹும் பீமா ரசக்தஹும் வஹ்பிர்லஹும் வர்ஹம்ஹும் “ என்று பிரார்த்திக்க வேண்டும்.
சாப்பாடு, குடிபானம் என்பன அல்லாஹ்வின் அருட்கொடைகளில் உள்ளதாகும். இந்த அருட்கொடைகளை அவன் வழிகாட்டிய முறையில் அனுபவிக்க வேண்டும். இதனால் தான் அவனின் இறை திருப்தியையும் பல மடங்கு அருட்கொடைகளையும் பெறமுடியும். அவனின் அருட்கொடைகள் நம்மை விட்டும் திரும்புமாயின் நமது நிலமை பரிதாபமாகி விடும். நாளை மறுமை நாளில் அவன் நமக்கு அளித்த அருட்கொடைகளைப் பற்றி கேள்வி கேட்கப்படுவோம்,
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.