2017

அறிவை உலக அறிவு, இஸ்லாமிய அறிவு என வேறுபடுத்திப் பார்த்திட முடியாது. ஏனெனில் எம்மைச் சூழவுள்ள பிரம்மாண்ட படைப்புக்களை ஆய்வு செய்து, அதனூடாக நம்மையும், இப் பிரபஞ்சத்தையும் படைத்து, நிர்வாகம் செய்துகொண்டிருக்கும் அல்லாஹ்வை அறிந்து அவனை வழிபடுவதே உண்மையான அறிவாகும்.

விஞ்ஞானத் துறையில் கல்விபயிலும் ஒருவர் அதனூடாக அல்லாஹ்வை அறிந்திட முனைய வேண்டும். புவியியல் துறையில் கல்வி பயிலும் ஒருவர் அதன் அத்தாட்சிகளின் மூலம் அல்லாஹ்வை அறிந்திட முனைந்திட வேண்டும். வானவியல் துறையில் கல்விபயிலும் ஒருவர் அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து படைப்பாளன் அல்லாஹ்வை அறிந்திட முனைந்திட வேண்டும்.

ஆக, கல்வியின் அனைத்துத் துறைகளும் இப்பிரபஞ்சத்தின் அத்தாட்சிகளை எமக்கு விரிவாக ஆய்வு செய்ய சந்தர்ப்பம் வழங்குகிறது என்பதை எம்மால் உணர முடிகிறது. அத்தகைய அறிவைத் தேடும் புதிய கல்வியாண்டிலே நாம் இப்போது கால்தடம் பதிக்க இருக்கிறோம் என்பதையிட்டு முதலில் நாம் சந்தோசப்பட வேண்டும்.

இத்தருணம் பாடசாலை மட்டத்திலும், இஸ்லாமிய கலாசாலை மட்டத்திலும் கல்வியின் பல கட்டங்களில் இருப்போருக்கு அடுத்த கட்ட நகர்வினை வழங்க இருப்பதனால், அந்நகர்வை நாம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான சில ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குவதே அக்கட்டுரையின் நோக்கமாகும்.

1. இஹ்லாஸ் (தூய எண்ணம்):

கல்வித் தேடலில் அதி முக்கிய பங்கு வகிப்பது தூய எண்ணமாகும். இஸ்லாம் அத்தூய எண்ணத்தை அல்லாஹ்வுக்காக ஆக்கிக் கொள்ளுமாறு எமக்கு கட்டளை பிறப்பித்துள்ளது. நாம் கற்கும் கல்வியின் மூலம் எமது செயற்பாடுகளை அமைத்திட வேண்டுமென திடவுறுதி பூண்டுவதோடு, அது அல்லாஹ்வுக்கும், இஸ்லாத்திற்கும் உரியதாக மாத்திரமே இருக்க வேண்டுமென நாம் முடிவெடுத்திட வேண்டும்.

எமது சமூகத்தில் தூய எண்ணம் இல்லாத கல்வியின் மூலம் பெருமை, பொறாமை, ஊழல் போன்ற நடைமுறைக்கு சாராத அம்சங்கள் மலிந்து காணப்படுவதை நாம் நம் கண்ணெதிரே பார்த்த வண்ணமிருக்கிறோம்.

எண்ணம் தூய்மையாகும் போதே ஆசிரியரால் சிறந்த கல்வியை மாணவனுக்கு வழங்கிடவும், பெற்றோரால் சிறந்த வழிகாட்டல்களை தம் பிள்ளைகளுக்கு வழங்கிடவும், மாணவனால் சிறந்த பாதையைத் தேர்வு செய்யவும் முடிகின்றது.

நபி r அவர்கள் கூறினார்கள், “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவனும் தான் எண்ணியதன் பயனையே அடைகிறான்.” (புஹாரி 6689).

2. இஸ்லாமிய அறிவு

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் சென்றவுடன் பெற்றோரின் கண்கானிப்பை இழக்கின்றனர். வெளிச் சூழலில் ஆண்கள், அல்லது பெண்களின் காதல் வலை, போதை வஸ்துப் பாவனை, திருட்டுத் தொழில், பாலியல் சமாச்சாரங்கள் போன்றன இவர்களை தமது வலைக்கு இழுப்பதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொள்கின்றன. யாருடைய கண்கானிப்பும் இன்றி இவ்வாறான விடயங்களில் ஈடுபடும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் எப்படி பயனுள்ளதாக அமையும்..? சமூகம் ஏற்றுக்கொள்ளும் ஓர் சிறந்த பிரஜையாக எவ்வாறு அவர்களால் மாற முடியும்..? தமது குற்றங்கள் நிரூபனமாகாமல் இருக்க தடயங்களை அழிக்க வேண்டி ஏற்படுகிறது. தமது குறைகளை மறைக்க வீட்டில் பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தாம் தப்பித்திட பலரை மாட்டிவிட வேண்டிய சூழ்நிலை பாடசாலையில் ஏற்படுகின்றது. அதையும் மீறி தாம் தண்டிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை பழிதீர்க்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது. இவ்வாறான பிரஜைகளாலே சமூகத்தில் பாரிய குற்றச்செயல்களும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மதிக்காத நிலமையும் காணப்படுகின்றது.

இறையச்சமும், சிறந்த இஸ்லாமிய விழுமியங்களும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வழிகாட்டல்களாக செல்லுமானால் இவ்வாறான குற்றச்செயல்களும், தீய பண்புகளும் சமூகத்தில் தோன்றாமல் பாதுகாத்திடலாம். அவ்வாறே இஸ்லாமிய வகுப்புக்களுக்கும், பகுதி நேர அல்குர்ஆன் மணன வகுப்புக்களுக்கும் பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதும், இஸ்லாமிய அறிவை சிறுவயதிலிருந்து அவர்களுக்கு ஊட்டுவதிலும் அதிக கரிசனை காட்டிட வேண்டும்.

பாடசாலையில் கற்பிக்க வேண்டிய கடமையை மறந்து, அல்லது உதாசீனம் செய்து பகுதி நேர வகுப்புக்களில் அதிக கவனம் செலுத்தும் ஆசிரியர்களும் இது விடயத்தில் இறைவனைப் பயந்திட வேண்டும். அவர்களிடம் ஹராம், ஹலால் பற்றிய அறிவு அவசியம் இருந்தாக வேண்டும். தாம் எடுக்கும் சம்பளத்துக்காக மாத்திரம் வேலை பார்க்காது சிறந்த பயனுள்ள சமூகத்தை உருவாக்குவதில் அவர்களும் பாரிய கவனத்தை செலுத்திட வேண்டும். ஏனைய பணம் சம்பாதிக்கும் பொருளாதார துறைகளைப் போன்று கல்வித் துறையை அவர்கள் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து, தன்னை நம்பி வரும் மாணவ சமூகத்தை அவர்கள் திறன்பட மேம்படுத்திட வேண்டும்.

“அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவன் உங்களுக்கு கல்வியை வழங்குவான்”. (அல்குர்ஆன் 02:282) என அல்குர்ஆன் குறிப்பிடுவதிலிருந்து இறையச்சம் இருப்போனுக்கு கல்வியை அல்லாஹ் பயனுள்ளதாக மாற்றிவிடுவான் என்பது தெளிவாகின்றது.

3. நண்பர் தெரிவு

மாணவர்கள் தமக்கான சிறந்த நண்பர்களைத் தேர்வு செய்வது மிகவும் அவசியமாகிறது. இஸ்லாமிய அறிவு பெற்ற, சிறந்த நற்பண்புள்ள, கல்வியில் அதிக ஆர்வமுள்ள நண்பர்களைத் தேர்வு செய்வது தலையாயக் கடமையாகும். சிலர் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதை இழிவாகவும், மரியாதைக்கு தூரமானதாகவும் கருதுகின்றனர். அதை நாகரிகம் எனவும் எண்ணி பெருமைப்படுகின்றனர். தான் எவ்வளவு மடமையில் இருக்கிறோம் என்பதை சிறிதும் எண்ணிப்பார்ப்பதில்லை.

தமது வகுப்பு நண்பர்களை தரம் பிரித்து, தாம் அதில் கடைசி தரம் எனவும், முதலாம் தரத்தினர் புத்தகப் பூச்சிகள், எம்மைப் போன்று வெளி அறிவு இல்லாதவர்கள் எனவும் மட்டம் தட்டி பேசும் கலாச்சாரம் எப்போது நம் சமூகத்தை விட்டும் ஒழியுமோ அப்போதே கல்வியில் போட்டி போடும் சமூகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

நபி r அவர்கள் கூறினார்கள், 'நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்: அல்லது அதன் நறுமணத்தையாவது பெறலாம்! கொல்லனின் உலை உம்முடைய வீட்டையோ உம்முடைய ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்!' (புஹாரி 2101).

04. பொறுப்புணர்ச்சி பெறுதல்.

சிறந்த கல்வியைப் பெறுவதை மாணவர்களும், அதை சிறந்த முறையில் வழங்குவதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் உணர்ந்திட வேண்டும். பிள்ளை வீட்டில் இருக்கக்கூடாது. அவன் பாடசாலை, பகுதி நேர வகுப்பு என காலையில் சென்று இரவில் தான் வர வேண்டுமென கடமை பேசும் பெற்றோர்களும், வீட்டில் இருந்தால் ஒரே வேலையும், ஏச்சுப் பேச்சும் தான் என எண்ணும் மாணவர்களும், இவன் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி நமது வாழ்வு செழிப்பாக வேண்டும் என நினைத்திடும் ஆசிரியர்களும் ஒரு போதும் கல்வி மீதான தமது பொறுப்புக்களை உணர்ந்திட முடியாது.

பாடசாலையில் கற்கும் பாடங்கள் ஸ்திரத் தன்மையடைவது வீட்டுப் படிப்பில் தான். பெற்றோர் புதிய கல்வி முறைகளுக்கு பழக்கப்படாமல் இருப்பதும், அல்லது தமது பிள்ளை படிக்கிறானா? என்பதை பரிசீலனை செய்யாமல் தமது வேலைகளைக் கவனிப்பதிலும் இருப்பது வீட்டுப் படிப்பில் பின்னடைவை ஏற்படுத்திடும்.

வெளிநாட்டில் தொழில் புரியும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கஷ்டங்களை மறைத்திட சொகுசு வாழ்வைத் தருவதானது 80 வீதமான பிள்ளைகளின் வாழ்வில் கல்விப் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதை அநேக பாடசாலை அதிபர்கள் குறிப்பிட்டுள்ளனர். படித்து முன்னேர வேண்டும் என்பதற்காக கேட்பதையெல்லாம் தமது பிள்ளைகளுக்கு செய்து தருவது பிள்ளைகளிடம் கல்வியை வளர்க்காமல் சொகுசையும், பணத்தின் மீதான எதிர்பார்ப்பையுமே ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பெற்றோர் தமது பிள்ளை கல்வியில் பின்னடைவை சந்தித்ததும் செலவு செய்த பணங்களை எண்ணி கவலைப்படுவதில் எவ்விதப் பயனும் இல்லை. பிள்ளைகளுக்கு தமது தொழிலின், குடும்பத்தின் நிலையை உணர்த்தி கல்வியை வழங்குவதே அவர்களிடம் தூய நிலையான கல்வியை ஏற்படுத்துவதில் அதிக பங்கு வகிப்பதோடு, பொறுப்புணர்ச்சியும் ஏற்பட வழிவகுக்கின்றது.

பிறரின் வசதிகளையும், அவர்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் முறைகளைப் பார்த்தும் நம்மில் பலர் தமது பிள்ளைகளும் அவ்வாறு இருக்க வேண்டுமென ஆசைப்படுவது தோல்வியிலே முடிவடையும். ஒரு பிள்ளை மருத்துவம் செய்வதால் எனது பிள்ளையும் மருத்துவம் செய்ய வேண்டுமென எண்ணுவதும், ஒரு பிள்ளை சொந்த வாகனத்தில் பாடசாலை செல்கிறது என்பதற்காக தானும் வாகனத்தை வாங்க எண்ணுவதும், ஒரு பிள்ளை சொகுசாக வாழ்கிறது என்பதற்காக அவை அனைத்தும் என் பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டுமென எண்ணுவதும் பிள்ளையின் கல்வியிலும், தமது பொருளாதாரத்திலும் அதிக பாதிப்பை செலுத்துகின்றது. முடிவில் தனது பிள்ளை தெரிவு செய்ய இருந்த கல்வித் துறையும் பாதிப்படைந்து, தான் சேகரிக்க இருந்த செல்வமும் இழந்து கைசேதமே எனக்கு வந்த சோதனை என திண்டாடும் நிலையே இன்று சில பெற்றோருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

தமது பொறுப்புக்களை உணர்ந்து கடமையாற்றும் எந்தத் தரப்பினரும் தோல்வியை சந்திப்பது அரிது. அப்படி சந்தித்தாலும் மறு தடவை அதில் விழுவதும் அரிது. மாணவர்கள் தமது பொறுப்புக்களை முதலில் உணர்ந்திட வேண்டும். தாம் எதை படிக்க வேண்டும், எந்தத் துறையில் தமது உயர் கல்வியைத் தொடர வேண்டும் என்பதை தமது சக்திக்கு உட்பட்ட எல்லையில் வைத்து, சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். பிறரை மிஞ்சிட வேணடுமென்ற கர்வத்தினால் எதையும் தீர்மானிக்கக் கூடாது. அதேபோல் நாம் எப்படியோ தேர்ச்சி பெற்றால் போதும் என்ற எண்ணமும் கல்வியைத் தொடரும் போது அவர்களிடத்தில் வந்துவிடக் கூடாது. அவ் எண்ணம் பரீட்சைக்கு மாத்திரம் தன்னை தயார்படத்தும் கல்வி போதும் எனும் எண்ணத்தை வளர்த்திடுமே தவிர, வாழ்கையில் வெற்றி பெற கல்வி வேண்டும் எனும் எண்ணத்தை குழிதோண்டிப் புதைக்கிறது.

அவ்வாறே பெற்றோரும் தமது பிள்ளை எதில் சிறந்து விளங்க வேண்டுமென அவனது சக்திக்கு உட்பட்ட எல்லையில் நின்று சிந்திக்க வேண்டும். தான் விட்டதை இவன் தொடர வேண்டும், ஒருவனை கல்வியில் பழிவாங்க இவனைத் தயார்படுத்த வேண்டும், பிறரை விட எனது குடும்பம் உயர் அந்தஸ்த்தில் இருக்க இவனை சொகுசாக படிக்க வைக்க வேண்டும் போன்ற சிந்தனைகளைக் கலைந்து பிள்ளை மீதான தனது சுயபொறுப்பையும், சமூகப் பொறுப்பையும் சிறந்து சிந்தித்து செயற்பட வேண்டும்.

தனது பிள்ளை பெரிய பாடசாலையில் படிக்கிறது என்பதற்காகவோ, அதி திறமை சாலி என்பதற்காகவோ, அல்லது பணம் மட்டுமே குறிக்கோல் என்பதற்காகவோ மற்ற பிள்ளைகளின் கல்வியில் சில ஆசிரியர்கள் சிரத்தை எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியதாகும். பொறுப்பை உணராத ஆசிரியர்கள் தமது பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைப்பாடுகளை பிற பிள்ளைகளின் பெற்றோர் நிலையில் நின்று சிந்தித்திட வேண்டும்.

நபி r அவர்கள் கூறினார்கள், 'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.' புஹாரி 893

ஆக மாணவனும், பெற்றோரும், ஆசிரியர்களும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படல் அவசியமாகும்.

5. அறிவுத் தாகத்தை உணர்தல்.

வகுப்பறையை மூன்றாகப் பிரித்து, முதல் பகுதியில் அமர்பவர்கள் படிப்பாளிகள் என்றும், நடுப்பகுதியில் அமர்பவர்கள் படிப்பும்-கேலிக்கையும் கொண்டவர்கள் என்றும், இறுதியில் இருப்பவர்கள் கேலிக்கை மாத்திரம் புரிபவர்கள் என்றும் இன்று திரைப்படங்கள் மூலமாகவும், கல்வியில் அதிக சிரத்தை எடுக்காமல் இருக்கும் மாணவர்கள் மூலமாகவும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு தரப்பினர் மற்றைய இரு தரப்பினரையும் வில்லனாகவும், தனது நட்புக்கு தகுதியற்றவர்கள் எனவும் கருத வைப்பதையும் அவ் விளம்பரங்கள் செய்த வண்ணமே இருக்கின்றன.

முன் வரிசையில் இருப்பவன் மாத்திரம் தான் அறிவாளன் எனக் கருதுவது முட்டாள் தனமான எண்ணமாகும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான திறமையைப் பெற்றிருப்பர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதைத் தவிர்த்து தன்னை உயர்த்தியும், மற்றவர்களைத் தாழ்த்தியும் பார்ப்பது கல்வியில் உள்ள தனது தாகத்தைக் குறைக்க வழிசெய்கிறது.

சமூகத்தில் படித்தவனை விட படிக்காதவனே இன்று உயர்வாக இருக்கிறான் என்ற மாயை பலராலும் பரப்பப்பட்டு வருகின்றது. அது திறமை அடிப்படையில் யதார்த்தமானது என வைத்துக்கொண்டாலும் படிக்கும் மாணவர்களிடம் இவ்வாறான எண்ணங்கள் தலைதூக்குவது மிகவும் ஆபத்தானது. தன்னிடமுள்ள திறமையை அறியாத எத்தனையோ மாணவர்கள் இன்னும் இருக்கின்றர். அவ்வாறானவர்கள் இந்த மாயையில் விழுந்தால் அறிவின் மீதான தனது தாகம் குறைந்து இறுதியில் சமூகத்தில் கல்வியால் தாழ்த்தப்பட்ட நிலைக்கு செல்லும் அபாயமே இவர்களுக்கு ஏற்படும்.

நாம் யாருடன் என்ன பேச வேண்டும் என்பதை உணராமல் பிறரிடம் அறிந்தோ அறியாமலோ பல விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம். கேட்போரிடம் அது என்ன தாக்கத்தை உண்டுபன்னும் என்பதை அணுவளவும் சிந்திப்பதில்லை. எனவே நாம் கல்வி சம்பந்தமாகவும், சமூகத்தின் சாதனையாளர்கள் சம்பந்தமாகவும் பேசும் போது நிதானமாகவும், எதிரில் இருப்பவரின் நிலை அறிந்தும் பேசிட வேண்டும். அல்லது மௌனமாக இருந்திட வேண்டும். இதுவே இஸ்லாம் காட்டித் தந்த வழியாகும். பல கேள்விகளைக் கேட்டு தன்னிடம் வருவோருக்கு அவர்களின் தேவையையும், நிலைமைகளையும், திறமைகளையும் அவதானித்தே நபியவர்கள் பதில்களை வழங்கியுள்ளார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் ஹதீஸ் நூட்களில் காணப்படுகின்றன.

சிலர் வெட்க சுபாவத்துடன் இருப்பதால் வகுப்பறையில் கற்றலின் போது தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டறிவதில் தாழ்வுத் தன்மையை உணர்கின்றனர். அறிவைத் தேடும் ஒருவன் குறித்த பாடத்தில் அதிக கேள்விகளைக் கேட்பதால் சிறந்த அறிவை அடைகிறான். அது அவனின் அறிவுத்தாகத்தை பிரதிபலித்துக் காட்டுகிறது. இப்னு அப்பாஸ் y அவர்கள் இஸ்லாமிய உலகின் சிறந்த அறிஞர்களில் ஒருவராக இருக்கிறார்கள். அவர்களிடம் இவ் அடைவு பற்றி கேட்கப்பட்டபோது, கேள்வி கேட்கும் நாவும், புத்திசாலியான சிந்தனையுமே என்னை உயர்த்தியது எனக் குறிப்பிட்டார்கள்.

சில மாணவர்கள் எப்போதும் ஆசிரியர்களுக்கு மரியாதையை வழங்குவது கிடையாது. இதனால் தனது ஆசிரியரை கொலை செய்த வரலாறுகள் கூட பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் பார்த்திருக்கிறோம். தனக்கு கல்வியைத் தரும் ஆசானை மதிக்காமல் இருக்கும் எம் மாணவனுக்கும் அறிவின் தாகம் என்பது எப்போதும் எட்டாக் கனியாகும்.

அறிஞர் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள், எனது ஆசிரியர் மாலிகின் முன் நான் புத்தகத்தின் தால்களை அவருக்குக் கேட்காதவாறு மெதுவாகவே பிரட்டுவேன்.

அறிஞர் ரபீஃ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள், எனது ஆசிரியர் ஷாபிஈ வகுப்பில் இருக்கும் போது தண்ணீர் குடிக்கவும் நான் துணிந்திடமாட்டேன்.

தமது ஆசிரியர்களை நேசித்து அவர்களுக்கு மரியாதையும் செலுத்தியுள்ள இவர்கள் தான் இறுதியில் இஸ்லாமிய உலகு தலையில் வைத்துக்கொண்டாடும் அளவுக்கு மாபெரும் மேதையாக மாறினார்கள். வயதில் குறைந்தவர் தனக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டாலும் அறிவு என்ற ஒரே காரணத்திற்காக அவருடன் நல்ல முறையில் நடந்தால் தான் தான் பெறும் அறிவு தனக்கு பயனுள்ளதாகவும், மென்மேலும் அறிவில் தாகம் ஏற்படுவதற்கும் உறுதுணையாய் அமையும் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.

6. நீதமாக நடத்தல்.

மாணவர்கள் தமது கல்வியை சிறந்த முறையில் தொடர வேண்டுமாக இருந்தால் பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்களுடன் நீதமாக நடந்திட வேண்டும்.

ஒரு பிள்ளையை விட மற்ற பிள்ளை மீது அதிக கரிசனை காட்டுவதானதும், அன்பை வெளிப்படுத்துவதும், மற்ற பிள்ளைக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்த விடயமே.. குறிப்பாக இது கல்வியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர்வதே இல்லை. நான் எவ்வளவு படித்தாலும் எனது பெற்றோர் என்னை மேற்படிப்பைத் தொடர விடமாட்டார்கள்... எனது மற்ற சகோதர சகோதரிகள் மீது தான் அதிக அக்கரை காட்டுகிறார்கள் என புலம்பும் பலரை நாம் சந்தித்திருக்கிறோம். இதுவிடயத்தில் பெற்றோர் சற்று சிந்திக்க வேண்டும்.

அவ்வாறே பணவசதி, ஊர் கௌரவம், அழகு, சிறந்த படிப்பு போன்ற எத்தனையோ விடயங்களை வைத்து மாணவர்களை எடைபோடும் ஆசிரியர்களும் இது விடயத்தில் கவனமெடுக்க வேண்டும். அனைவரையும் ஒரே பார்வையால் பார்த்திட வேண்டும். தமது கடமை அடிமட்ட மாணவனை முன்கொணர்வது தான் என்பதை உணர்ந்திட வேண்டும். பரீட்சையில் இறுதியாக வரும் மாணவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் தனது கற்பித்தலை அமைத்திட வேண்டும். அப்போது தான் கல்வியில் முன்நிற்கும் எதிர்கால சமூகத்தை தைரியமாக அமைத்திடலாம்.

அல்லாஹ் கூறுகிறான், நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். அல்குர்ஆன் 05 08

ஆக புதிய கல்வியாண்டை முன்னோக்க இருக்கும் மாணவ சகோதரர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சிறந்த ஆழுமையை உருவாக்குவதில் அதிக கரிசனை எடுதிதிட வேண்டும். தமது பிள்ளைகளை எதிர்கால சமூகத்திற்கு அறிவாளிகளாக வழங்கிட பாரிய முயற்சிகளை எவ்விதப் பாகுபாடின்றியும், கல்வியில் பெருமை, பொறாமை போன்ற போட்டிகளைத் தவிர்த்து தூய சிந்தனையுடனும் வழங்கிட ஒன்று சேர்ந்திட வேண்டும். நேர முகாமைத்துவத்தையும், தமது கஷ்ட நஷ்டங்களையும், சமூகத்தின் தேவையையும் பிள்ளைகளுக்கு உணர்த்தி, அவர்களுக்குப் பொறுத்தமான கல்வித் துறையைத் தேர்வு செய்திட முன்வர வேண்டும்.

ஆக்கம்: J.M. Hizbullah (Anvary, Riyady) B.Com Reading

புத்தாண்டு பண்டிகை ஈஸா நபி அவர்களின் பிறப்போடு தொடர்புபட்டதாகும். கிறிஸ்தவர்களிடத்தில் டிசம்பர் – 31 இரவுக்கென்று தனித்துவமான வழிகெட்ட சிந்தனைகள் காணப்படுகின்றன. இவைகள் டிசம்பர் – 25 இல் இருந்து ஆரம்பிக்கின்றன. 

புத்தாண்டை மையமாக வைத்து முஸ்லிம்களிடத்தில் பல வழிகெட்ட புரிதல்கள் காணப்படுகின்றன. அந்த நாள் அண்மிக்கும் போது தமது வீடுகளை, வியாபார நிலையங்களை துப்புரவு செய்து ஒளி விளக்குகளால் அலங்கரிப்பார்கள், happy new year என்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தொங்க விடுவார்கள், உணவுகள், குடிபானங்கள், பலகாரங்கள், இனிப்பு பண்டங்களை பரிமாறுவார்கள். அந்த நாளில் யாரும் யாருக்கும் ஏசவோ, கோபப்படவோ கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் அந்த நாளில் ஏதும் தீங்கு நடந்தால் அது வருடம் பூராக நீடிக்கும் என்று பயப்படுவார்கள். நல்ல திட்டங்களை வகுத்து அது வருடம் பூராக தொடரும் என்று நம்புவார்கள். இவற்றுக்கெல்லாம் எந்தவித அடிப்படையோ, ஆதாரமோ கிடையாது. 

இன்னும் அந்நாளில் நேரடியாகவோ அல்லது சமுக வலைதளங்கள் மூலமாகவோ வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். அல்லது வாழ்த்துக்களுக்கு பதிலும் அளிப்பார்கள். இவைகள் அனைத்தும் ஹராமாகும். முற்றிலும் தவிர்ந்து கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இது முஸ்லிம்களின் பண்டிகை அல்ல கிறிஸ்தவர்களின் பண்டிகையாகும். 

புத்தாண்டு எந்த வகையில் இஸ்லாமிய மார்க்கத்தோடு முரண்படுகிறது

01- இந்நாளை பெருநாளாக கொண்டாடுவது பித்அத் ஆகும். இதற்கு இஸ்லாத்தில் எந்த வித அடிப்படையும் கிடையாது.

நபி ( ஸல் ) கூறினார்கள் : யார் ஒருவர் இஸ்லாம் சொல்லாத ஒரு செயலை செய்கிறாரோ அந்த செயல் அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. ( முஸ்லிம் )

குறிப்பிட்ட ஒரு நாளை பண்டிகையாக கொண்டாடி, வாழ்த்துக்கள் பரிமாற வேண்டும் என்றால் அதற்கு மார்கத்தில் அங்கீகாரம் இருக்க வேண்டும்.

02- ஒரு முஸ்லிம் நோன்பு, ஹஜ் ஆகிய பெருநாட்கள் தவிர வேறு ஒரு பண்டிகையை கொண்டாடுவது ஹராமாகும். 

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது; அந்த மக்கள் இரண்டு நாட்களில் விளையாடி மகிழ்பவர்களாக இருந்தார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹூத்தஆலா இந்த இரண்டு நாட்களுக்கு பகரமாக உங்களுக்கு வேறு இரு நாட்களை ஆக்கியிருக்கிறான் என்று கூறினார்கள். ( அஹ்மத் ) 

03- இஸ்லாத்தில் எவருடைய பிறப்பையும் மையமாக வைத்து அவர்கள் பிறந்த நாளில் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியாது ( உதாரணம் : நபிமார்கள், நல்லடியார்கள் ) பிறப்பும், இறப்பும் இறைவனிடத்தில் எந்தவொரு நலவையோ, தீங்கையோ ஏற்படுத்தாது. 

நபியர்வர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அந்த மக்கள் "நபிகளாரின் மகன் இப்ராஹிம் மரணித்ததால் தான் இது ஏற்பட்டது" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் நிச்சயமாக எவர் வாழ்வதன் மூலமாகவோ, அல்லது மரணிப்பதன் மூலமாகவோ சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. கிரகணம் ஏற்படுவதை கண்டால் தொழுங்கள், பிரார்த்தனை புரியுங்கள் என்று கூறினார்கள். ( புகாரி )

இதனால் தான் எவர் பிறப்பதாலும், மரணிப்பதாலும் எந்தவோரு நலவோ, கேடோ எற்படுவதில்லை. அதற்கு இஸ்லாத்தில் எந்தவொரு முக்கியத்துவமும் கிடையாது, நல்லடியார்கள் யாரும் இதனை மையமாக வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் கிடையாது. 

04- ஈஸா நபி அவர்கள் பிறந்ததை மையமாக வைத்து கொண்டாடுவது அவர்கள் மீது அதீத அன்பு கொள்வதும், அவர்களை எல்லை கடந்து புகழ்வதுமாகும். இது கிறிஸ்தவர்களின் பண்பாகும்.

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா நபியவர்களை புகழ்ந்தது போன்று என்னை புகழ வேண்டாம், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான், நீங்கள் ( என்னை ) இறைவனின் அடியான், அவனின் தூதர் என்றே கூறுங்கள். ( புகாரி ) 

நபிமார்களை எல்லை கடந்து புகழ்வதை, அவர்களின் மீது அதீத அன்பு காட்டுவதை, அவர்களை வணங்குவதை, அவர்களின் அந்தஸ்தை மனிதன் என்ற அந்தஸ்தை விட்டும் அதிகரிப்பதை இஸ்லாம் தடைசெய்திருக்கிறது. இறைவன் அவனை மட்டும் வணங்குவதற்காக நபிமார்களை, ரசூல்மார்களை அனுப்பினான். மாறாக நபிமார்களை மக்கள் வணங்க, புகழ அதீத அன்பு காட்ட அனுப்பப்படவில்லை.

05- இந்த நாளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, முஸ்லிம் அல்லாதவர் ( காபிர் ) கள் மீது அன்பு கொள்வது, அவர்களின் உணர்வுகளில் இரண்டற கலப்பது, பல சந்தர்ப்பங்களில் அவர்கள் சரியான பாதையில் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்பதாக உணர்த்திவிடுகிறது. இவை அனைத்தும் இஸ்லாத்தில் ஹராமாகும்.

அல்லாஹ்வுத்தஆலா கூறுகிறான் ; முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

06- இந்நாளை முஸ்லிம்கள் பண்டிகையாக கொண்டாடுவதால் அவர்கள் கிறிஸ்தவர்களோடு ஒன்றாகிவிடுகிறார்கள், அவர்களுக்கென்றே தனித்துவ பண்புகளில் இவர்களும் கூட்டுச் சேர்ந்து விடுகிறார்கள். 

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு கூட்டத்திற்கு சொந்தமான அமலை செய்கிறாரோ அவரும் அக்கூட்டத்தை சேர்ந்தவராவார். ( அபூதாவூத் ) 
வெளி நடத்தைகளில் ஒப்பாவது அவர்களின் கொள்கை சார்ந்த விடயங்களில் ஒப்பவதை குறித்து நிற்கும். இதனால் இஸ்லாம் மாற்று மதத்தவர்களோடு ஒப்பாகும் அனைத்து அம்சங்களையும் தடை செய்திருக்கிறது.

07- முஸ்லிம்களின் பண்டிகை இரு பெரும் வணக்கங்களின் (நோன்பு,ஹஜ்) அமையப்பெற்றிருக்கிறது. அதன் மூலம் அவர்கள் தங்கள் இறைவனுக்கு நன்றிசெலுத்துகிறார்கள். அதே போன்று முஸ்லிம்கள் அந்த இரு பெரும் வணக்கங்களை நிறைவேற்றி அந்த நாளில் சந்தோசமடைகிறார்கள். இந்த சிறப்பம்சம் இந்த புத்தாண்டு பண்டிகையில், கிறிஸ்தவ மதத்தில் கிடையாது, எனவே ஒரு முஸ்லிம் இந்த பண்டிகையை கொண்டாடவும் முடியாது, கிறிஸ்தவ மதத்தை பின்பற்றவும் முடியாது. 

08- இந்நாளில் பண்டிகை கொண்டாடுவது நபி ( ஸல் ) அவர்களின் வழிமுறைக்கு முரணானதாகும். 

ஏனனில் நபியவர்கள் அவர்களுக்கென்றே தனித்துவ பண்புகளில், ஆடை அணிகலன்களில், வணக்க வழிபாடுகளில் மாற்றமாக நடந்து காட்டியிருக்கிறார்கள். இதனை ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும். இது ஒரு முஸ்லிம் தவிர்ந்து கொள்ள வேண்டிய பாரிய அடிப்படை அம்சமாகும். இதனை நபியவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். 

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் முன்னோர்களின் அடிச்சுவட்டை முழம் முழமாக, சான் சானாக பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கெனில் அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் நுழைவீர்கள். அதற்கு ஸஹாபாக்கள் (நபியவர்களிடத்தில்) நீங்கள் யூத, கிறிஸ்தவர்களையா? சொல்கிறீர்கள் என்று கேட்கே அதற்கு நபியவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். ( புகாரி, முஸ்லிம் )

எனவே இப்படியான இஸ்லாத்தை விட்டும் எம்மை தூரமாக்கும் வழிபாடுகள் அவை கடுகளவானாலும் அவற்றிலிருந்து முற்று முழுதாக விலகி நடப்பதோடு, இஸ்லாமிய கடமைகளுக்கு முக்கியமளித்து எம் வாழ்வில் செயற்படுத்த வல்ல இறைவன் துணை புரிவானாக!

ஆக்கம் : sajideen mahroof (Sahvy, Riyadhy) B.A Reading

ஆக்கம்: J.M. ஹிஸ்புல்லாஹ் (அன்வாரி),  BCom Reading.

நத்தார் பண்டிகை ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான ஜனவரி 7ஆம் நாள் இப் பண்டிகையைக் கொண்டாடுகின்றன.

இப் பண்டிகையின் போது திருப்பலி, குடில்கள், கிறிஸ்மஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்மஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்மஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன சடங்குளாக நிறைவேற்றப்டுகின்றன. அவை நத்தார் பண்டிகையின் அடையாளங்களாகவும் திகழ்கின்றன.

இப்பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது? இது கொண்டாடப்படும் திகதி சரிதானா? முஸ்லிம்கள் இப்பண்டிகையின் போது எவ்வாறு இருக்க வேண்டும்? கிறிஸ்தவர்கள் இது பற்றி அறியவேண்டியது என்ன? என்பவற்றை சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கிறிஸ்மஸ் கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று என்பதை கட்டுரையினுள் செல்லுமும் நாம் அறிந்திட வேண்டும்.

நத்தார் பண்டிகையின் வரலாறு

நத்தார் பண்டிகை பல பண்டைய கால பண்டிகைகளின் தொகுப்பாகவே காணப்படுகின்றது. அப்பண்டிகைகளும், நத்தார் பண்டிகையில் அதன் தாக்கமும் வருமாறு:

சடுர்நலியா பண்டிகை

உரோமப் பேரரசின் நாட்களில், சடுர்நலியா, இத்தாலி முழுவதும் நன்கறியப்பட்ட குளிர்கால கொண்டாட்டமாகும். இது சனிக் கடவுளை மதிப்பதற்காக நடைபெற்ற பண்டிகையாகும். சடுர்நலியாவின் போது களியாட்டங்களும், கேளிக்கை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன் போது பரிசு பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தது. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும், சிறுவர்களுக்கு பொம்மைகள் வழங்குவதும் வழக்கமாக காணப்பட்டது. இப்பண்டிகையின் போது மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அரங்கேரின. இது ஆண்டுதோறும் டிசம்பர் 17- டிசம்பர் 24 வரை நடைபெற்றது.

நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி (Natalia Solis invicti) பண்டிகை.

உரோமர்கள் டிசம்பர் 25 ஆம் நாள் வெற்றிவீரன் சூரியன் (sol invictus) என்றைழைக்கப்பட்ட சூரியக்கடவுளின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி என்ற பண்டிகையை கொண்டாடினர். இது கி.மு. 218-222 இல் உரோம அரசனான எலகாபலுஸ் காலத்தில் உரோமுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கி.மு. 270-275 இல் அவுரேலியன் காலத்தில் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. சோல் இன்விக்டுஸ் ("வெற்றிவீரன் சூரியன்", "தோல்வியடையாத சூரியன்") சிரியாவில் தொடக்கத்தைக் கொண்ட சூரியக் கடவுளாவார். இதுவும் டிசம்பர் 25லே கொண்டாடப்பட்டு வந்தது. ஏனெனில் இத்தினம் குளிர்கால சம இராப்பகல் கொண்ட நாளாக ஜூலியஸ் சீசர் கி.மு. 45 இல் அறிமுகப்படுத்திய ஜூலியன் நாட்காட்டியில் இடம்பெற்றது. எனினும் தற்காலத்தில் அது டிசம்பர் 21 அல்லது 22 இல் வருகின்றது. சோல் இன்விக்டுஸ் கிறிஸ்துமசின் தொடக்கத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளதாக கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. ஏனெனில் சில ஆரம்ப கிறிஸ்தவ எழுத்தாளர்களான சிப்ரியன் போன்றோர் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதைக் காணலாம்.

யூல் பண்டிகை

ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் கடைசி தொடக்கம் ஜனவரி ஆரம்பம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது இடியின் கடவுளை மகிமைப் படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். இதன் போது அந்நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு எரிதங்களும் புதுவருடத்தில் பிறக்கப் போகும் கால்நடைகளை குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியுமளவும் பண்டிகை தொடரும். இது சுமார் 12 நாட்கள் வரை எடுக்கலாம். ஜெர்மனியில் இதையொத்த பண்டிகை மிட்விண்டனெச் (மத்திய குளிர்கால இரவு) என அழைக்கப்பட்டது.

நத்தாருக்கும் இப்பண்டிகைகளுக்குமான தொடர்பு

மார்ச்சு மாதம் 25ஆம் நாள் மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவி வந்தது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாவைக் கொண்டாடலாயினர்.

இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பண்டைக் காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த சோல் இன்விக்டி விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர்.

இத்தாலி உட்பட தென் ஐரோப்பாவில் கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த போது, அம்மக்கள் சடுர்நலியா விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்பு விழாவை அமைத்தனர்.

ஸ்கென்டினேவியா உட்பட வடக்கு ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டமையால் அதன் ஆதி வழிபாட்டு முறைகளான யூல் பண்டிகை கிறிஸ்மஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறு பல பண்டிகைகளினதும், வணக்க வழிபாட்டு முறைகளினதும் தொகுப்பாகவே நத்தார் பண்டிகை இடம்பெறுகிறது.

எனவே, வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ் பண்டிகை- டிசம்பர் 25ம் நாள் கொண்டாட்டங்கள்- கிறிஸ்த்தவர்களுடைய பண்டிகை அல்ல. மாறாக, புறஜாதியினருடைய பண்டிகை என்பது நிரூபணமாகின்றது.

இயேசு எப்போது பிறந்தார்?

இயேசு டிசம்பர் 25இல் பிறந்ததாக கி.பி. மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் தேச சஞ்சாரியுமான செக்டுஸ் ஜூலியஸ் அப்ரிகானுஸ் என்பவரால் கி.பி. 221 இல் கிறிஸ்தவருக்காக எழுதப்பட்ட நூல் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நாள் இயேசு கருவில் உருவாகியதாக கருதப்படும் மார்ச் 25இலிருந்து ஒன்பது மாதங்கள் கடந்த நாளாகும்.

இது போன்ற பல ஆதாரங்களை கிறிஸ்தவத் திருச்சபையும், இன்னும் பல கிறிஸ்தவ அமைப்புக்கள் கூறி இப்பண்டிகையை வழுப்பெறச் செய்தாலும், 1800 களில் கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபைகள், கிறிஸ்தவ தூய்மைவாதிகள், அங்கிலிக்கன் திருச்சபையினர் போன்றோர் இயேசு டிசம்பர் 25 ல் பிறக்கவில்லை என்றும், அத்தினத்தை கொண்டாடுவது கூடாது என்றும் பிரச்சாரம் செய்து வெற்றியும் கண்டார்கள்.

எனினும் 18, 19ம் நூற்றாண்டுகளில் சிலர் கிறிஸ்மஸ் பண்டிகையை சமூக களியாட்டம் வீண்விரயம் செய்யும் காலமாக அல்லாமல் குடும்பம், நல்லெண்ணம், கருணை போன்றவற்றில் மையப்படுத்தி கொண்டாடும் பழக்கத்தை முன் கொணர்வதில் முக்கிய பங்காற்றினர். இதற்காக பல நூற்களையும், சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதி விநியோகித்து, மங்கிப் போன கொண்டாட்டத்தை உயிர்ப்பித்தனர்.

முதலாம், இரண்டாம் உலகப்போரின் போது அநேக நாடுகள் கிறிஸ்தவர்களின் கைவசமானதால் இப்பண்டிகை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த இவர்களுக்கு இலகுவானதாய் அமைந்தது. 20 ஆம் நூற்றண்டில் அமெரிக்காவில் கிறிஸ்மஸ், மத சார்பானதா? சார்பற்றதா? என்பதைப் பற்றிய சர்ச்சைக்கு முகம் கொடுத்தது. இறுதியில் அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி இது எவ்வித மதச் சார்பும் இன்றிய கொண்டாட்டம் என உலகம் முழுதும் பரவியது.

அதுவே இன்றைய முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தினரும் கொண்டாடும் ஓர் பொது விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.

ஆக, இயேசு டிஸம்பர் 25ல் பிறந்தார் என்பது திட்டமிடப்பட்ட வரலாற்றுச் செருகல் என்பது நிரூபனமாகிறது.

இதனை மேலும் வலியுருத்த பைபிளும், அல்குர்ஆனும் இயேசுவின் பிறப்புத் தினம் குறித்து என்ன கூறுகின்றன என்பதைப் பார்ப்போம்.

பைபிளில் இயேசுவின் பிறப்பு நாள்.

1. இயேசு பிறந்த நாள் குறித்து லூக்கா அதிகாரம்: 02.

அகுஸ்து சீசரின் கட்டளைப்படி மக்கள் தொகையைக் கணக்கில் தன் குடும்பத்தை பதிவு செய்ய தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், அவருக்கு மண ஒப்பந்தமான மரியாவும் நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றனர். அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்து, பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.[1] இதன்பின் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர் தோன்றி அவர்களிடம், 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.' எனக்கூறி இயேசுவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தனர். அவர்கள் சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டு வணங்கினர்.

மேற்படி பைபிள் குறிப்பிடுகின்ற பிரதேசங்கள் டிசம்பர் 25 காலப்பகுதியில் பனி உறையக் கூடிய மிகக் கடுமையான காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் வணிகக்கூட்டம் உள்ளிட்ட யாரும் பயணங்கள் மேற்கொள்வதில்லை. எனவே, மக்கள் பயணம் செய்ய முடியாத குளிர்காலத்தில் அகுஸ்துராயனால் இக்கட்டளை நிச்சயம் இடப்பட்டிருக்க முடியாது.

2. இயேசு பிறந்த நாள் குறித்து லூக்கா சுவிசேஷம் 2:8 .

"அந்தநாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக் கொண்டிருந்தார்கள்"

பனிஉறைகின்ற குளிர்காலத்தில் இடையர்கள் வயல்வெளிகளில் தங்குவது கிடையாது. மாறாக, அறுவடை முடிந்ததன் பிற்பாடு கோடையின் பிற்பகுதியிலேயே வயல்வெளிகளில் தங்கி, மந்தையைக் காத்து வருவது (கிடை கட்டுவது) வழக்கமாகும். அதன் மூலம் அறுவடை முடிந்த விளை நிலங்களை அடுத்த வேளாண்மைக்கு முன் இயற்கை உரமிட்டு வளப்படுத்துவதும் வழக்கமாகும்.

எனவே, பைபிளின் கூற்றுப்படி இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது கோடையின் பிற்பகுதியாகும். மாறாக, குளிர்காலமான டிசம்பர் 25 கிடையாது.

இது குறித்து -Joe Kovacs- என்கின்ற கிறிஸ்த்தவ அறிஞர் தனது ‘Shocked by the Bible’ எனும் நூலில் இயேசு டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்தை நிராகரிக்கிறார்.

lord.activeboard.com என்ற வலைத்தளம் பைபிளை மேற்கோள்காட்டி இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் தான் என ஆதார அடிப்படையில் வாதடுகின்றது.

பைபிளில் எங்குமே இயேசுவின் பிறந்தநாள் பற்றிய எந்தவொரு குறிப்பும் கிடையாது. மேலும், இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடுமாறு பைபிள் கட்டளையிடவுமில்லை. மாறாக, பைபிள் வசனங்களை ஆய்வுக்குட்படுத்தும் போது இயேசு கோடைகாலத்தின் இறுதிப்பகுதியில் பிறந்தார் என்கின்ற முடிவுக்கே வரமுடிகின்றது.

அல்குர்ஆனில் இயேசுவின் பிறப்பு நாள்.

இறைவேதம் திருக்குர்ஆனில் 19 வது அத்தியாயம் இயேசுவின் அருமைத் தாயார் மர்யம் -மரியாள்- அவர்களின் பெயரால் அழைக்கப்படுகின்றது. அந்த அத்தியாயத்தின் 22-26 வசனங்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி பின்வருமாறு பேசுகின்றது.

அல்லாஹ் கூறுகிறான், "பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். "பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்) நீர், உண்டு பருகி மனநிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் "நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவீராக! " (19:22-26)

இறைவேதம் திருக்குர்ஆன் குறிப்பிடும் பேரீச்சை பழம் காய்க்கும் காலம் கோடைக் காலமாகும். எனவே அல்குர்ஆனிலும் இயேசுவின் பிறப்பு கோடைகாலத்தில் தான் அமையப் பெற்றது என்பது நிரூபனமாகின்றது.

அல்குர்ஆன் மற்றும் பைபிளின் ஆதாரங்கள் அடிப்படையில் இயேசு டிஸம்பர் 25ல் பிறக்கவில்லை எனவும், அத்தினத்தில் இயேசுவின் பிறப்பாகக் கொண்டாடப்படும் விழா புறஜாதியினரின் விழா எனவும், இப் பிறப்புக் கொண்டாட்டம் பின்னால் வந்த சில கிறிஸ்தவ அமைப்புக்களாலும், யூதர்களாலும் திட்டமிட்ட முறையில் வரலாற்றுக் குறிப்பாக மாறியதையும் இதனூடாக எம்மால் அறியமுடிகின்றது.

ஆக இவ்விழாவை தூய கிறிஸ்தவர்கள் எப்போதும் கொண்டாட மாட்டார்கள்.

முஸ்லிம்களும், கிறிஸ்மஸ் தினமும்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் கிறிஸ்மஸ் தினம் குறித்து பின்வரும் கூற்றுக்களும், வழக்கங்களும் இருந்து வருகின்றன.

1. இயேசுவை கிறிஸ்த்தவர்களை விடவும் முஸ்லிம்களே மதித்து நடப்பதற்கு தகுதியானவர்கள்.

மேற்கூறப்பட்ட கூற்றின் பிரகாரம் முஸ்லிம்களில் சிலர் இயேசுவை மதிக்க வேண்டும் எனும் பெயரில் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

இது இஸ்லாம் தடுத்துள்ள மாபெரும் குற்றச்செயலாகும். ஏனெனில் நாம் பின்பற்ற வேண்டிய முஹம்மத் நபிக்கே பிறந்த நாள் விழா எடுக்க முடியாது என இஸ்லாம் தடைவிதிக்கும் போது, ஏனைய நபிமார்களுக்கு எவ்வாறு பிறந்த நாள் விழாவை எடுக்க முடியும்

கிறிஸ்தவர்களில் பலர் இயேசுவை இறைவனாகவும், இறைவனின் மகனாகவும் ஏற்று இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை எனவும், அவன் யாரையும் பெறவுமில்லை, எவராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை என்ற கொள்கையை ஏற்ற முஸ்லிம்கள் இவ்விழாவில் பங்கேற்பது இறைவனாக, அல்லது இறைவனின் புதல்வனாக இயேசுவை ஏற்பது போன்றதாகும். இது முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் அம்சம் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. இப் பண்டிகை நல்லெண்ணம், சமாதானம் போன்றவற்றை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட கூற்றின் பிரகாரம் சடுர்நலியா பண்டிகையைத் தழுவி கொண்டாடப்படும் இவ்விழாவில் பரிசில்களைப் பரிமாறல், வாழ்த்துக்கள் கூறல், வாழ்த்துத் தெரிவித்து குறுந்தகவல் மற்றும் அட்டை விநியோகம், சமூக வலையத்தளங்களில் வாழ்த்துச் செய்திகளைக் கூறல் போன்ற பல விடயங்களை முஸ்லிம்களும் செய்து வருகின்றனர்.

இதுவும் இஸ்லாம் தடுத்துள்ள விடயமாகும். 20ம் நூற்றாண்டில் பிரகடணப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் மதச்சார்பற்ற விழா என்ற கூற்றும் திட்டமிடப்பட்ட சதியாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, நல்லெண்ணம் வளர்க்க வேண்டும், சமாதானமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பது ஆதிக்கவாதிகளின் மாயையில் நாம் விழுந்துவிட்டதை உணர்த்தி நிற்கிறது.

இமாம் இப்னுல் கையில் ரஹிமஹுல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

“வேற்று மதத்தினரின் அடையாளங்களான அவர்களின் பெருநாள் தினம், அவர்களின் நோன்பு போன்றவற்றை வைத்து வாழ்த்துத் தெரிவிப்பது இஸ்லாம் முற்றாகத் தடைசெய்துள்ளது. அவ்வாறு வாழ்த்துக் கூறுவது அவர்களின் கொண்டாட்டத்தையும், அவர்களின் கொள்கைகளையும் ஏற்பதற்கு சமன். அல்லாஹ்விடத்தில் இது மது அருந்தல், கொலை செய்தல் போன்ற தடைசெய்யப்பட்ட காரியங்களை செய்த அளவுக்கான தண்டனையைப் பெற்றுத் தரும்.” (அஹ்காமுத் திம்மா 1:441-442)

கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் முகமாக எக்காரியம் செய்தாலும் அது இஸ்லாத்திற்கு முரணான அம்சமாகவே மாறிவிடும். அது கிறிஸ்தவ மத நண்பர்களின் உறவு வேண்டும் எனும் அடிப்படையில் செய்தாலும் சரியே. அல்லாஹ்வுக்காக வேண்டி இஸ்லாம் அனுமதித்த நல்ல விடயங்களில் கிறிஸ்லதவர்களோடு நாம் நட்பு பாராட்ட முடியும். இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களில் நாம் அவர்களுடன் நட்பு பாராட்டக் கூடாது. இதுவே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். 

அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே!” (58:22)

ஆக டிஸம்பர் 25ல் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் விழா உண்மையில் இயேசு பிறந்த தினம் கிடையாது. இக்கருத்திலே தூய கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர். மாறாக இது பல பண்டைய பண்டிகைகளின் தொகுப்பாகவும், அப்பண்டிகைகளைக் கொண்டாடி வந்த மக்களின் கிறிஸ்தவத்திற்கான மத மாற்றத்தின் விளைவாகவும், தூய கிறிஸ்தவத்தை சிதைக்கும் நோக்கில் செயல்பட்ட சில கிறிஸ்தவ அமைப்பினரால் சொருகப்பட்ட சிந்தனையின் வடிவமாகவும் இக் கிறிஸ்மஸ் பண்டிகை காணப்படுகின்றது.

இது விடயத்தில் தூய கிறிஸ்தவர்களும் குறிப்பாக முஸ்லிம்களும் விழிப்பாக இருந்திட வேண்டும். அல்லாஹ்வே போதுமானவன்.

துணை நின்றவை
1. விக்கிபீடியா மற்றும் இதர வலைத்தளங்கள்.
2. கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள். ஆக்கம் – முஹம்மத் அர்ஷாத்.

முஸ்லிம்கள் சிலரிடம் சலாதுன் நாரியா என்ற நரக சலவாத்தை மார்க்கம் என்று கருதி ஓதும் வழக்கம் இருந்து வருகின்றது.சில குறிப்பிட்ட தடவைகள் ஓதினால் ஏழைகள் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற தவறான எண்ணத்தில் ஆலிம்களை அழைத்து அவர்களுக்குரிய கட்டணங்கள் கொடுத்தும் ஓதப்பட்டு வருகின்றது.
இது மார்க்கத்தில் உள்ளதா என்று அறிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
இந்த சலவாத்து நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப்பின் வந்த சில அறிவீனர்களால் உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்த்தெறியும் பல கருத்துக்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன.
இனி எவ்வாறு இஸ்லாமிய  அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானது என்பதை பார்ப்போம்.
சலாதுன் நாரியா
( اللهم صل صلاة كاملة ، وسلم سلاما تاما على سيدنا محمد ، الذي تنحل به العقد ، وتنفرج به الكرب ، وتقضى به الحوائج ، وتنال به الرغائب ، وحسن الخواتيم ، ويستسقي الغمام بوجهه الكريم ، وعلى آله وصحبه عدد معلوم لك )
அல்லாஹும்ம சல்லி சலாத்தன் காமிலத்தன், வ சல்லிம் சலாமன் தாம்மன், அலா சய்யிதினா முஹம்மதின், அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத், வ தன் பரிஜு பிஹில்  குரப், வ துக்லா பிகில் ஹவாயிஜூ, வ துனாலு பிகி ரகாயிபு. வ ஹுஷ்னுள் ஹவாதிம், வ யுஸ்தஷ்கள் கமாமு, பி வஜ்ஹிஹில் கரீம்.வ அலா ஆலிஹி வசஹபிஹி  பீ குல்லி லம்ஹத்தின் வ நப்சின் பி அததி குல்லி மஹ்லூமின் லக.
இதன் பொருள் பின் வருமாறு:
அல்லாஹ்வே எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மது எப்படி பட்டவரென்றால் அவர் மூலமாகத்தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம்தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம்தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்று கொள்ளப் படுகின்றன. அவருடைய திரு முகத்தின் மூலம்தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.”
மேற்கண்ட நரக சலவாத்தில் நபிகள் நாயகம் ஸல்  அவர்களின்  மூலம்தான் சிக்கல் அவிழ்கின்றது என்றும் துன்பம் நீங்குகிறது என்றும் தேவை நிறைவேற்றப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இறைவனுக்கு மட்டுமே உரிய இத்தகைய ஆற்றலை இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாக கூறுவது நரகத்தில் சேர்க்க கூடிய இணைக் கற்பிக்கின்ற காரியமாகும். இதனை ஓதும் மக்களும் நம்மை எங்கு போய் சேர்க்கும் என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.
துன்பங்களை நீக்குபவன் யார்?
1.       ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களை காப்பாற்றுகிறான் (6:64)

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் துன்பங்களையும் சிக்கல்களையும் நீக்க முடியும் என்று நம்பிய தீயவர்களைப் பார்த்து இறைவன்  கேட்கும் கேள்வி

2.       நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது நெருக்கடியை சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்க்கு பதில் அளித்து துன்பத்தைப் போக்கி உங்களை பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா?அல்லாஹ்வுடன் வேறு கடவுளா?குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (27:62)
நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரக சலவாத்தை நாம் ஓதலாமா?
நாட்டங்களை நிறைவேற்றுபவன் யார்?
நாட்டங்களை நிறைவேற்றும் ஆற்றல் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு உண்டு என்றால் நபிகளாரின் அனைத்து நாட்டங்களும் ஏன் அவர்கள் நிறைவேற்றிக்கொள்ளவில்லை? அவர்களின் அனைத்து நாட்டங்களும்  நிறைவேற்றப்பட்டதா? இதை நாம் முதலில் சிந்திக்க வேண்டாமா?
நபியவர்கள் தம்முடைய சிறிய தந்தை அபுதாலிப் ஏகத்துவ கொள்கையை ஏற்க வேண்டும் என்று விரும்பினார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இந்த மாபெரும் நாட்டம் இறைவனால் நிறைவேற்றப்படவில்லை. மாறாக நபியவர்களுக்கு நாடியதை செய்யும் ஆற்றல் இல்லை என்பதை கீழ்க்காணும் வசனம் தெளிவு படுத்துகின்றது.
முஹம்மதே! நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன். (9:80)
நபியவர்கள் காலத்தில் மக்காவில் வாழ்ந்த அபு ஜஹ்ல்,உத்பா,ஷைபா போன்ற அணைத்து காபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார்கள் என்பதை கீழ்க்காணும் வசனம் விளக்குகின்றது.
அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்! (26:3)
நபிகள் நாயகம் மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பியும் அவை நிறைவேற்றப்படவில்லை என்றால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்ற இந்த சலவாத்தில் வரக்கூடிய வரிகள் இறைவசனங்களுக்கு முரண்பட்ட நிரந்தர நரகத்தை தேடி தரக்கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை.
அழகிய இறுதி முடிவை தருபவன் யார்?
நபியவர்களின் மூலமாகத்தான் அழகிய இறுதி முடிவு நமக்கு கிடைக்கின்றது என்று எண்ணுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற இணைக் கற்பிக்கின்ற வரிகளாகும்.
ஒருவர் சொர்க்க வாசியாக மரணிப்பதும் நரக வாசியாக மரணிப்பதும் இறைவனின் நாட்டமே!
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் சொர்கத்திற்கென்றே சிலரை படைத்துள்ளான். அவர்கள் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான். நரகத்திற்கென்று சிலரைப் படைத்துள்ளான் அவர்கள் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்.    அறிவிப்பவர் : ஆயிஷா ரலி
இதை சிந்தித்தாலே மேற்கண்ட நரக சலவாத்தை ஓதினால் நரகத்தை தான் சென்றடைவோம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மழை பொழிவிப்பவன் யார்?
மழை பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் கிடையாது. ஆனால் நபியவர்களுக்கும் உண்டு என்றால் அவை இறை வசனங்களுக்கு முரண்பட்டு நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.
நீங்கள் அருந்தும் தண்ணீரை பற்றி சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? (56:68)
மர்யமின் குமாரர் ஈசா அலை அவர்களை கிறித்தவர்கள் வரம்பு மீறி புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்தியதைப் போல் என்னையும் வரம்பு மீறி புகழ்ந்து விடாதீர்கள். அல்லாஹ்வின் அடியார், அல்லாஹ்வின் தூதர் என்று அழையுங்கள் என்று கூறிய நபிகளாரின் போதனைகளையெல்லாம் புறம் தள்ளிவிட்டு இறை வார்த்தைகளுக்கு மாற்றமாக வாழ்த்து கூறுவதுதான் நாம் நபிகள் நாயகம் ஸல் அவர்களை கண்ணியப்படுத்தும் புகழும் விதமா? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் நாம் கொண்ட அன்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளான். அது அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக்கூடிய விதமே தவிர நாம் அவர்களிடம் அருளை வேண்டி  இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு வேட்டு வைக்கக்கூடிய வடிகால் இல்லை.
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகின்றான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக இறை அருளை வேண்டுங்கள். சலாமும் கூறுங்கள். (33:56)
மேற்கண்ட வசனம் இறங்கிய உடன் சஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் சலவாத் சொல்வது எப்படி என்று கேட்டுக் கற்றுக்கொண்டார்கள். அவைகளைத்தவிர நாம் உருவாக்கிய புகழ் மாலைகள் ஒரு போதும் இறை நெருக்கத்தை பெற்றுத்தறாது மாற்றாக இறை கோபத்தையே அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் அல்லஹ்வின் தூதரே தங்கள் மீது சலாம் கூறும் முறையை நாங்கள் அறியோம். சலவாத் கூறுவது எப்படி? என்று கேட்கப்பட்டது...
அதற்கு நபியவர்கள் "அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா சல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க  ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்" என்று சொல்லுங்கள் என பதில் அளித்தார்கள்.
தொழுகை அல்லாத சமயங்களில் சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் என்றோ சல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
யார் அல்லாஹ்விடம்  என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆ செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் அருள் பத்து தடவை நம் மீது பொழியப் பட வேண்டுமென்றால் அவர்கள் காட்டித்தந்தவாறு அவர்கள் மீது நாம் சலவாத் கூறினால் மட்டுமே தவிர நமது சொந்த வழியில் உருவாக்கி அதனை வணக்கம் என கருதுவோமேயானால் அது அல்லாஹ்வின் சாபத்தை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்  என்பதில் சந்தேகம் இல்லை.
அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரும் இந்த சலவாத் நாரியாவை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் சலவாத்தை கூறுவோம்.அளப்பரிய நன்மைகளை அடைவோம்
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
“யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி - 2550, முஸ்லிம் - 1718)



சவூதி அரேபியாவில் அப்ஹா நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் மூலம் உயர் கல்வியைத்தொடர்வதற்காக தகுதிவாய்ந்த வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை 24/12/2017 தொடக்கம் 07/01/2018 வரையுள்ள காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தின் கீழ்வரும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக பதிவேற்றலாம்.

விண்ணப்பிப்பதற்குத் தேவையான ஆவணங்கள்.

👉அரபியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட க.பொத. உயர்தரச் சான்றிதல்(شهادة الثانوية).

👉காலாவதியற்ற கடவுச்சீட்டு(جواز السفر).

👉ஜம்இய்யாக்களில் அல்லது சமூகப்பணிகளில் ஈடுபடும் ஆலிம்களிடமிருந்து (சவூதி அரேபிய பல்கலைக்கழகங்களில் வெளியேறியவர்கள் வரவேற்கத்தக்கது) பெறப்பட்ட 2 நற்சான்றிதல்கள் (التزكيات).

விண்ணப்பதாரி தெரிவு செய்யப்படுவதற்கான நிபந்தனைகள்.

▪க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் அதன் சான்றிதல் அரபியில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருத்தல்.

▪காலாவதியற்ற கடவுச்சீட்டைக் கொண்டிருத்தல்.

▪25 வயதிற்குட்பட்டவராயிருத்தல்.

▪அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதலைப் பெற்றிருத்தல்.

▪சான்றிதல்கள் அனைத்தும் வெளிநாட்டமைச்சிலும் இலங்கையிலுல்ல சவூதி அரேபிய தூதுவராலயத்திலும் உறுதிப்படுத்தல்.

▪தற்போது சவூதி அரேபியாவில் (எவ்வகையிலும்) வசிக்காதவராயிருத்தல்.

https://registration.kku.edu.sa/kku/ui/guest/request_scholarship/index/steeringScholarshipIndex.faces

தகவல்: முஹம்மத் அவ்ன் சமூன்
16/12/2017.


மனித இயல்பு, வழமை, வணக்கம் சார்ந்த ஸுன்னாக்கள்:
நபி (ஸல்) அவர்களுடைய எல்லா செயற்பாடுகளையும் நாம் ஸுன்னத்தாகக் கருத வேண்டுமா? அல்லது வணக்கம் என்ற அடிப்படையில் செய்த செயற்பாடுகளைத் தான் பின்பற்ற வேண்டுமா? என்ற அடிப்படையில் அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களுடைய செயற்பாடுகளை பல கோணங்களில் வகுத்துள்ளனர். சிலர் 3 வகைகளாகவும், இன்னும் சிலர் 5 வகைகளாகவும், இன்னும் சிலர் 7 வகைகளாகவும் வகுத்துள்ளனர். என்றாலும் இவையணைத்தையும் ஆய்வு செய்து பார்த்த சில அறிஞர்கள் எல்லா செயற்பாடுகளையும் மூன்று வகைக்குள் அடக்கலாம் என்கின்றனர். அவை :

1. மனித இயல்பு என்ற ரீதியில் நபியவர்கள் செய்த காரியங்கள்.

2. வழக்கம் என்ற ரீதியில் நபியவர்கள் செய்த காரியங்கள்.

3. வணக்கம் என்ற ரீதியில் நபியவர்கள் செய்த காரியங்கள்.

இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக சற்று அலசுவோம்.

மனித இயல்பு சார்ந்த செயல்கள் :

நபி (ஸல்) அவர்கள் ஏனைய மனிதர்களை விட்டும் வஹீ இறங்குவதன் மூலமே வேறுபடுகின்றார்கள். மனிதர்களுக்கு என்னென்ன இயற்கைத் தேவைகள் உள்ளனவோ அதே தேவைகள் நபியவர்களுக்கும் மனிதர் என்ற ரீதியில் உள்ளன. அது போன்ற இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அவர்கள் நபி என்பதற்கும் சம்பந்தமில்லை. 
இவ்வாறு மனிதர் என்ற அடிப்படையில் நபியவர்கள் செய்த செயற்பாடுகள் இரண்டு வகைப்படுகின்றன :

1. நபியவர்கள் தேர்வு செய்யாமல் இயல்பாகவே ஏற்படக்கூடிய செயல்கள். உதாரணமாக : நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியான விடயங்களைக் கேட்கும் போது அவர்களது முகம் பிரகாசமடையும். வெறுக்கும் செயலைக் காணும் போது அவர்களது முகத்திலே அது தென்படும். இனிப்புப் பண்டங்களை விரும்புவார்கள். உடும்பிறைச்சியை வெறுப்பார்கள். இது நபியவர்களையும் மீறி உள்ளத்தில் ஏற்படுகின்ற சில செயற்படுகள். அதனை அவர்களால் தவிர்க்க முடியாது. இதில் நபியவர்களைப் பின்பற்றுவது என்பதில்லை. வணக்கம் என்ற அடிப்படையிலல்லாமல் மனித இயல்பென்ற ரீதியில்தான் நபியவர்கள் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
என்றாலும் விருப்பு, வெறுப்பக்களில் செயற்கையாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய பகுதியும் உள்ளதென்பதை இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் ஏவப்பட்டுள்ள விடயங்களை விரும்புவார்கள். தடுக்கப்பட்டவைகளை வெறுப்பார்கள். இதில் நாம் அவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும். உதாரணமாக பெரும்பான்மையான நற்செயல்களில் நபியவர்கள் வலதை முற்படுத்துவதை விரும்புவார்கள். அதே போன்று பொய், பொய்யர்கள் மற்றும் நயவஞ்சகர்களை வெறுப்பார்கள். இவை மார்க்க அடிப்படையில் செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட விருப்பு, வெறுப்புக்களாகும். அவற்றில் நாமும் நபியவர்களைப் பின்பற்ற வேண்டும்.

2. தேர்வு செய்து செய்யும் விடயங்கள். மனிதர் என்ற அடிப்படையில் அவை அத்தியவசியமானதாகவும் இருக்கின்றன. உண்ணல், பருகல், வெளிவாசல் செல்லல், ஆடையணிதல், நடத்தல், உட்காருதல், உறங்குதல் போன்ற இன்னோரன்ன செயற்களைக் குறிப்பிடலாம். இவை விரும்பியோ விரும்பாமலோ ஏற்படக்கூடிய செயற்பாடுகளல்ல. விரும்பினால் செய்யலாம், இல்லாவிடில் தவிர்ந்து கொள்ளலாம். என்றாலும் முற்றுமுழுதாக அவற்றைதத் தவிர்ந்து கொண்டால் விபரீதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை நபியவர்கள் மார்க்க அடிப்படையில் செய்யவில்லை.

இதிலும் பின்பற்றுதல் கிடையாது. அடிப்படையில் இவை வணக்கமல்ல. உண்ணுவது ஸுன்னத் என்றோ, உறங்குவது ஸுன்னத் என்றோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் அவற்றை செய்யும் முறைகளை நபியவர்கள் காட்டித் தந்திருந்தால் அந்த முறைகளில் ஸுன்னத் வரும். உதாரணமாக, அடிப்படையில் உண்ணுவது ஸுன்னத்தல்ல. ஆனால் உண்ணும் முறையை நபியவர்கள் காட்டித்தந்துள்ளார்கள். அந்த முறையைக் கடைபிடிப்பது ஸுன்னத்தாகும். இந்த ஸுன்னத் செயலுக்கல்ல, செயல்முறைக்கென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உறங்குவது அடிப்படையில் ஸுன்னத்தல்ல. ஆனால் நபியவர்கள் இஷாவுக்குப் பின் அதிக நேரம் விழித்திருப்பதை வெறுத்துள்ளார்கள். அந்த அடிப்படையில் நேர காலத்துடன் தூங்குவது விரும்பத்தக்கதென்று சொல்லலாம்.

வழக்கம் சார்ந்த செயல்கள் :
நபி (ஸல்) அவர்கள் வழமையாக செய்து வந்த சில செயற்பாடுகள் உள்ளன. அவை வணக்கத்துடன் நேரடியாக தொடர்புபடாதவை. அவற்றை நபியவர்கள் தான் வாழ்ந்த ஊரின் வழக்கப்பிரகாரம் செய்து வந்துள்ளார்கள். உதாரணமாக : நபியவர்கள் தனது வாகனமாக அக்காலத்தில் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்ட ஒட்டகம், குதிரை, கழுதை போன்றவற்றையே பயன்படுத்தி உள்ளார்கள். உணவு வகையில், பேரீத்தம் பழம், வாற்கோதுமை, அரிக்கப்படாத மாவினால் செய்யப்பட்ட உரோட்டி, சில சந்தர்ப்பங்களில் இறைச்சி, மோர், ஸரீத் என்ற ஒரு வகையுணவு போன்றவற்றையே பயன்படுத்தியுள்ளார்கள். இவைதான் அக்கால மக்களிடத்தில் பிரதான உணவாக இருந்தது. ஆடையை நோக்கினால், கவச ஆடை, வேட்டி, மேலங்கி, ஜுப்பா, தலைப்பாகை, தொப்பி போன்ற பல ஆடைகளை அணிந்துள்ளார்கள். இவை மக்கா மதீனாவில் அக்காலத்து மக்கள் பயன்படுத்திய ஆடைகளாகும். அதே போன்று நபியவர்கள் தனது தலை முடியை நீள வளர்த்திருந்தார்கள். சில சந்தர்ப்பங்களில் கத்தரித்துக் கொள்வார்கள். இது போன்ற விடயங்களை நபியவர்கள் தனது சமூகத்திற்கும் வழமைக்குமே விட்டுவிட்டார்கள். ஒவ்வோர் ஊரிலும் என்னென்ன வகை ஆடைகள் அணியப்படுகின்றனவோ அவற்றைத்தான் அவ்வூர்வாசிகள் அணியவேண்டும். ஏனெனில் ஒருவரைத் தனியாக எடுத்துக் காட்டும் வகையில் பிரபலாகும் நோக்கில் வித்தியாசமான ஆடைகளை அணிவதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள். (அபூ தாவூத் 4029, இப்னு மாஜாஃ 3606, அஹ்மத் 5664). ஆண்கள் பெண்களைப் போன்றோ பெண்கள் ஆண்களைப் போன்றோ அணியக்கூடாது. கரண்டைக் காலுக்குக் கீழால் அணியக்கூடாது. காபிர்கள் பிரத்தியேகமாக அணியும் ஆடைகளையும் அணியக் கூடாது. இது போன்ற சில வரையறைகளுக்குட்பட்டு அந்தந்த ஊரில் அணியப்படும் எந்த ஆடையையும் அணியலாம். அதில் வெள்ளை நிற ஆடையை நபியவர்கள் விரும்பி அணிந்தது மாத்திரமல்லாமல் தூண்டியுமுள்ளார்கள். (அபூ தாவூத் 3878, திர்மிதீ 994, அஹ்மத் 2219). இதில் குறிப்பிட்ட ஆடை ஸ{ன்னத் என்று சொல்வதற்கு மேலதிகமான ஆதாரம் தேவை.

ஒருவர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான ஆடைகளை அணிந்துள்ளார்கள் என்று தானும் அது போன்ற ஆடைகளை அணிந்தால் அவரைக் குறைகூற முடியாது. கிண்டலடிக்கவும் கூடாது. அவர் நபியவர்கள் மீது வைத்திருக்கும் நேசத்தின் வெளிப்பாடுதான் அது. ஆனால் அதனை ஸுன்னத் என்று வாதாட முடியாது. அதற்கு மேலதிகமான ஆதாரங்கள் தேவை. இன்ன ஆடையை அணிந்தால் இன்ன நன்மையுண்டு என்று ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஆடையைப் பற்றி ஹதீஸ்கள்; வந்திருந்தால் அவ்வகை ஆடைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதுவல்லாமல் நபியவர்கள் இன்னின்ன ஆடைகள் அணிந்துள்ளார்கள். ஸஹாபாக்கள் இன்னின்ன ஆடைகள் அணிந்துள்ளார்கள் என்ற எத்தனை ஆதாரங்களைத்தான் முன்வைத்தாலும் அவை அக்கால ஆடைப் பழக்கம் என்ற வகையில் அணிந்தார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

வணக்கம் சார்ந்த செயல்கள் :

நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கிலே செய்த செயல்களையே வணக்கம் என்கிறோம். இதனை எவ்வாறு நாம் அறிந்து கொள்வதென்றால் ஒரு செயலை நபியவர்கள் செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் : 
  • அதனை ஏவியிருப்பார்கள்.
  • அல்லது ஆர்வமூட்டியிருப்பார்கள்.
  • சிறப்புக்களை எடுத்துக் கூறியிருப்பார்கள்
  • கிடைக்கும் நன்மைகளை சொல்லியிருப்பார்கள். 
உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் தொழுது விட்டு ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று கூறினார்கள். (புஹாரி 631). ஹஜ் செய்யும் போது ‘என்னிடமிருந்து உங்களது வணக்கங்களை (ஹஜ் முறை) எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். (முஸ்லிம் 1297). அதேபோன்று நபியவர்கள் தர்மம் கொடுப்பார்கள். அதனைத் தூண்டியுமுள்ளார்கள். அல்குர்ஆன் ஓதியது மாத்திரமல்லாது அதனை ஓதுபவருக்குரிய நன்மையை சுட்டிக் காட்டியுள்ளார்கள். தாடி வைத்ததுடன் அதனை எமக்கும் ஏவியுள்ளார்கள். இவ்வாறு பல வணக்க வழிபாடுகளைத் தாம் செய்தது மாத்திரமல்லாமல் பிறருக்கும் அதனைச் செய்யுமாறு ஏவியும் தூண்டியுமிருப்பார்கள். அவற்றையே நாம் வணக்கம் என்ற ரீதியில் நபியவர்கள் செய்த செயல்கள் என்கிறோம். இவ்வகை செயற்பாடுகளைப் பொறுத்த வரையில் அவை வாஜிபாக அல்லாது ஸுன்னத்தாக இருக்கும். எனவே நபியவர்களுடைய ஒரு செயலை ஸுன்னத் என்று நாமும் செய்ய எத்தனிக்க முன் அதனை அவர்கள் வணக்கம் என்ற ரீதியில் தானா செய்தார்கள் என்பதை மேற்கண்ட வரையறைகள் மூலம் உறுதிப்படுத்தி விட்டே நாமும் செய்ய வேண்டும்.

வணக்கத்தையும் வழக்கத்தையும் பிரித்தரிய சில வழிகள் :

1. வணக்கத்தை நபியவர்கள் செய்ததுமட்டுமல்லாமல் அதனை மற்றவர்களுக்கு ஏவியோ, தூண்டியோ, அதிலுள்ள சிறப்புக்களை சுட்டிக்காட்டியோ, அதனால் கிடைக்கும் நன்மைகளை தெளிவு படுத்தியோ இருப்பார்கள். ஆனால் வழக்கம் எனும் போது அதனைச் செய்ததுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். உடைகளில் வெள்ளை நிறத்தைத் தவிர இன்ன உடைகளை அணியுங்கள் என்றோ, இன்ன உடையை அணிந்தால் இத்தனை நன்மை என்றோ எந்தவொரு ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஸஹீஹான நபிமொழிகளிலும் இடம்பெறவில்லை. அதே போன்றுதான் உணவு, வாகனங்கள் ஆகியவற்றிலும். அதனை ஏற்கனவே கூறிய மார்க்க வரையறைகளுடன் எமது வழக்கத்திற்கே விட்டுள்ளார்கள். அவ்வாறு நபியவர்கள் அணிந்தார்கள், நபித் தோழர்கள் அணிந்தார்கள் என்று பல நபிமொழிகள் வந்தாலும் அதே ஆடைகளை நாமும் அணிவது ஸுன்னா எனக்கூறுவதற்கு மேற்கூறப்பட்ட வகையில் அலாதியான ஆதாரங்கள் தேவை.

2. வழக்கமான செயற்பாடுகளை நபியவர்கள் நபித்துவத்துக்கு முன்னரும், பின்னரும் செய்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்துக்கு முன்னரும் ஜுப்பா, தொப்பி, தலைப்பாகை, வேட்டி, சால்வை போன்றவற்றை அணிந்துள்ளார்கள். நபித்துவத்திற்குப் பின்னரும் அணிந்துள்ளார்கள். நபித்துவத்துக்கு முன்னர் நபியவர்கள் செய்த சில விடயங்களை நபித்துவத்திற்கப் பின்னர் வணக்கமாகக் காட்டித் தந்துள்ளார்கள். உதாரணமாக, இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மரபுகள் என்று நபி (ஸல்) அவர்கள் கத்னாச் செய்தல், தாடி வளர்த்தல், மீசை கத்தரித்தல் போன்றவிடயங்களை வழமையாக செய்து விட்டு நபித்துவத்திற்குப் பின் அதனை வணக்கமாகத் தூண்டியுள்ளார்கள். ஊர் வழமை, மனித இயல்பு என்ற ரீதியில் திருமணம் செய்து விட்டு நபித்துவத்திற்குப் பின் அதன் அடிப்படையை ஒரு வணக்கமாகப் பிரகடனப் படுத்தினார்கள். ஆடை விடயத்திலும் அவ்வாறிருந்தால் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் அவை தெளிவுபடுத்தப்பட்டிருக்கும்.

3. வழமை என்ற ரீதியில் நபியவர்கள் செய்து வந்த வேலைகளை அக்காலத்துக் காபிர்களும் செய்துதான் வந்தார்கள். தொப்பி, தலைப்பாகை, சால்வை, ஜுப்பா, வேட்டி போன்றனதான் அவர்களுடையவும் ஆடைகளாக இருந்துள்ளன. நபியவர்கள் பயணித்த ஒட்டகம், குதிரை, கழுதை போன்றனதான் அவர்களுடையவும் வாகனங்களாக இருந்தன. எனவே இது வணக்கமாக இருந்தால் ஒரு தரப்பு செய்யாமல் விட்டிருப்பார்கள்.

மேற்கண்ட நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகளில் வணக்கத்தைத் தவிர்ந்த ஏனைய இரு வகைகளின் குறைந்தபட்ச சட்டமாக அனுமதி என்பதையே நாம் எடுக்கலாம். ஏனெனில் நபியவர்களுடைய செயற்பாடுகளில் தடை செய்யப்பட்டவையோ வெறுக்கப்பட்டவையோ இருக்க மாட்டாது. வணக்கங்களில்தான் வாஜிப் அல்லது ஸுன்னத் என்ற சட்டம் வரும். என்றாலும் அவர்கள் வழமையாகச் செய்யும் ஒரு காரியத்தில் ஒரு வழிமுறையைக் காட்டியிருந்தால் அந்த செயலல்லாமல் அந்த வழிமுறை ஸுன்னத்தாகக் கணிக்கப்படும். இது பற்றி மேலே விளக்கியுள்ளேன். 

ஸுன்னா தர்கிய்யா :

நபி (ஸல்) அவர்கள் செய்யாமல் விட்ட விடயங்களை நாமும் விடுவது கடமையாக அல்லது ஸுன்னத்தாக சில சமயங்களில் அமையும். அது போன்ற சந்தர்ப்பங்களில் அதனைச் செய்வது பித்அத்தாகி விடும். நபி (ஸல்) அவர்கள் ஒன்றை விட்டார்களென ஸஹாபாக்கள் ஒன்றோ தெளிவாகக் கூறுவார்கள். அல்லது அச்செயலைச் செய்ததாக யாரும் ஆதாரபூர்வமாக அறிவித்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் பெருநாள்த் தொழுகையை அதான், இகாமத் இன்றித் தொழுதார்கள் என்று ஸஹாபாக்கள் அறிவித்துள்ளார்கள். நாமும் அத்தொழுகையில் அதானையும் இகாமத்தையும் விடுவதே ஸுன்னத்தாகும். தொழுகையில் ஆரம்பத்தில் நிய்யத்தை வாயால் மொழிந்ததாகவோ, இறுதியில் நபியவர்கள் துஆ ஓத ஸஹாபாக்கள் ஆமீன் சென்னதாகவோ அவர்கள் யாரும் ஆதாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே அவற்றை நாம் செய்வது பித்அத்தாகி விடும். இவ்வாறு நபியவர்கள் செய்யாமல் விட்ட ஒன்றை நாமும் விடுவது ஸ{ன்னத் என்று சொல்ல இரு நிபந்தனைகள் உண்டு :

1. அச்செயலைச் செய்வதற்கான தேவைப்பாடு இருந்தும் அதனை அவர்கள் விட்டிருக்க வேண்டும். 
2. அதனைச் செய்வதற்கிருக்கும் தடைகள் இல்லாமலிருந்தும் அதனை விட்டிருக்க வேண்டும். 

உதாரணமாக தொழுகைக்குப் பின் துஆக் கேட்டால் அது ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்புள்ள ஒரு சந்தர்ப்பம். அதுவும் நபியவர்கள் கேட்டு ஸஹாபாக்கள் ஆமீன் சொல்வதென்றால் இன்னும் அதிகவாய்ப்புள்ள சந்தர்ப்பம். அவ்வாறான தேவைப்பாடிருந்தும், அதனைச் செய்ய எந்த தங்குதடைகளும் இல்லாமலிருந்தும் நபியவர்கள் அதனைச் செய்யாமல் விட்டார்களென்றால் நாமும் அதனைத் தவிர்ந்து கொள்வதுதான் நபிவழி. மாறாக அதனைச் செய்வது நபியவர்கள் செய்யாத ஒரு பித்அத்தைச் செய்வதாகும். அதே போன்றுதான் மீலாத்விழாக்களும். ஸஹாபாக்களை நரகத்தின் விளிம்பிலிருந்து சுவனத்தின் வாயிலுக்கே அல்லாஹ்வின் உதாவியால் கொண்டு சென்றவர்கள் அந்த நபி (ஸல்) அவர்கள். அப்படிப்பட்ட ஒரு நபி பிறந்த தினத்தைக் கொண்டாடும் தேவை அந்த நபித்தோழர்களுக்கு நபியுடைய காலத்திலேயே இருந்திருக்காதா? மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி உருவானதும் அதனைச் செய்வதற்கான எந்தவித தடைகளும் இல்லாமலே இருந்தது. அவ்வாறிருந்தும் அந்த நபியோ அல்லது ஸஹாபாக்களோ மீலாத்விழாக் கொண்டாவில்லையென்றால் நாமும் அதனைக் கொண்டாடாமலிருப்பதே நபிவழி. இவ்வாறு பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

நபி (ஸல்) அவர்கள் ரமழானில் இரவுத்தொழுகை ஜமாஅத்தாகத் தொழ வேண்டிய தேவையிருந்தும் இரண்டு அல்லது மூன்று தினங்கள் தொழுகை நடத்தி விட்டு ஒரு தடைக்காக அதனை விட்டுவிட்டார்கள். அதுதான் அத்தொழுகை மக்கள் மீது ஜமாஅத்தாகவே தொழுவது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம். எனவே அத்தடை நீங்கினால் அது மீண்டும் ஸுன்னத் என்ற நிலைக்கு வந்து விடும். இப்போது யாரும் நபியவர்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழாமல் விட்டார்களே. எனவே தனித்துத் தொழுவதுதான் ஸுன்னா என்று கூற முடியாது.

எனவே ஸுன்னாவை சரியான முறையில் விளங்கி அதன்படி நடக்கவும், பித்அத்களை இணங்கண்டு அவற்றைத் தவிர்ந்து கொள்ளவும் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் துணை புரிவானாக.

முற்றும்.

சென்ற புதன்கிழமை இரவு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் குத்சை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் விதத்தில் தன் தூதரகத்தை குத்ஸிற்குமாற்றுமாறு விடுத்த அறிவித்தல் பல சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக மாறி பல ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக் கோசங்கள் என்று பல கண்டனஅறிக்கைகளை நாம் காண்கிறோம். கனடா, கொரியா போன்ற முக்கிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன.

இந்த நேரத்தில் நாம் மிக முக்கியமாக சில விடயங்களை எம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து கொள்ளவேண்டும். இப்படியான நிகழ்வுகள் முஸ்லிம் உம்மத்திற்கு புது விடயமோ, ஆச்சரியப்பட வேண்டிய அம்சமோ கிடையாது . ஏனெனில் ஏற்கனவே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தான் பலஸ்தீனின் குத்ஸ் உட்பட அதிக பகுதிகள் இன்று வரை இருக்கிறது அது மட்டுமன்றி ஐக்கிய நாடுகள் சபையோ, அமெரிக்காவோ முஸ்லிம்களுக்கு நலவு செய்யவோ உதவி செய்யவோ முன்வரப் போவதுமில்லை.

அதேபோன்று தான் இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த நாடுகளையோ அடுத்தவர்களையோ குறைகூற முன், ஆர்ப்பாட்டங்களில், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முன் ஒரு முறை நான் இஸ்லாமியனாக இருக்கிறேனா, என்னிடம் இஸ்லாம் இருக்கிறதா என்று எங்களின் பக்கமே எம் ஆல்காட்டி விரலைத் திருப்பி கேள்வி கேட்க வேண்டிய கட்டாயக் கடமையில் இருக்கிறோம்.

முகத்தில் ஒரு துளிகூட தாடிகூட இல்லை, ஜமாஅத் தொழுகைக்கே செல்வதில்லை, குர்ஆன் ஓதிய நாவுகளையே தேடிப்பார்க்கவேண்டும் என்றிருக்க உலக மக்களின் பிரச்சினைக்கு இவர் தான் தீர்வு சொல்லப்போவது போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் அந்த நாடு இன்னும் ஏன் மௌனமாக இருக்குது, அது அமெரிக்காவிற்கு வால்பிடிக்கும் நாடு, யூதர்களின் கைக்கூலி என்றெல்லாம் கொக்கரித்து எந்தப் பயனும்கிடையாது. அல்லாஹ் கூறுகின்றான் “ இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக்கொடுத்தால், இவர்கள் தொழுகையை நிலைநாட்டி; ஸகாத்தையும் கொடுத்து நன்மையை ஏவி, தீமையை விட்டும் தடுப்பார்கள், மேலும், சகல காரியங்களின்முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.”

எனவே முதலில் எம்மில் இஸ்லாத்தைக் கொண்டு வந்து எம்மை நரகை விட்டும் மீட்கும் பணியைச் செய்துவிட்டுதான் அடுத்தவர்களுக்கு உதவ முயற்சிக்க வேண்டும்.

குத்சைப் பாதுகாக்க வேண்டுமென்றால், இஸ்ரேலை அங்கிருந்து விரட்ட வேண்டுமென்றால் எம்மிடம் அதற்கான பூரண பலமும் சக்தியும் காணப்பட வேண்டும், அப்பலத்தைப்பெற அல்லாஹ்வின் உதவி வேண்டும், அல்லாஹ்வின் உதவியைப் பெற அவனுக்கு நாம் உதவவேண்டும். அல்லாஹ்வுக்கு உதவுவது என்பது இஸ்ரேலுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வதோ, பேனாக்களால் கிறுக்கி விளையாடுவதோ, அடுத்த நாடுகளையும் மன்னர்களையும், உலமாக்களையும் திட்டித் தீர்ப்பதோகிடையாது மாற்றமாக நாம் எங்களை இறைவனுக்குப் பொருத்தமான அடியானாக மாற்றுவதே தவிர வேறில்லை. அல்லாஹ் கூறும்போது “ அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்போர் எவருமில்லை, அவன் உங்களைக் கைவிட்டு விட்டால் அதன் பின் யார்தான் உங்களுக்கு உதவி செய்வார்கள்"

எனவே எம் பேனாக்களையும், நாவுகையும்அடுத்தவர்களுக்காக உபயோகிக்க முன் எமக்காக உபயோகித்து அதன் மூலம் முஸ்லிம் உம்மத்திற்கு உதவ முயற்சிப்போமாக...

F.R.Muhammad (Abbasy,Riyady) 
B.A Reading
Al-Imam Muhammad Bin Saud Islamic University

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget