- வஸீம் ஹூஸைன் -
இஸ்லாமிய மார்க்கமென்பது பூரண வாழ்க்கைத் திட்டமாகும். மனித வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலும் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துகின்றது. அவ்வாறே குடும்ப கட்டமைப்பிலும் வழிகாட்டலை வழங்குகின்றது.
கணவன், மனைவி, பிள்ளைகள், தாய், தந்தையர் போன்றவர்களுக்கிடையான உரிமைகள், கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. அதே போன்று ஏனைய உறவு முறைகளுக்கும் அவர்களோடு இணைந்து வாழ்வதற்குமான வழிவகைகளையும் குர்ஆனும், நபியவர்களின் பொன் மொழிகளும் வழிகாட்டுகின்றன.
குடும்ப உறவுகள் ஒரு தனி மனிதனின் ஓர் அங்கமாகும். குடும்ப உறவுகளை பேணுகின்ற விடயத்தில் ஒவ்வொருவரும் அதிக அக்கறை எடுக்க வேண்டும். உறவினர்களுடன் உறவுகளை முறித்துக் கொள்வபவர்கள் சுவனம் நுழையமாட்டார்கள் என்ற அளவிற்கு எமது மார்க்கம் எச்சரிப்பதை பார்க்கலாம்.
நபியவர்கள் கூறினார்கள்.
மது போதையில் மூழ்கியவன், சூனியத்தை உண்மை என நம்பியவன், குடும்ப உறவை துண்டிப்பவன் ஆகிய மூவரும் சுவனம் நுழையமாட்டான்
(ஆதாரம் – அஹ்மத்)
மேலும்
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
இச் செய்தி குடும்பங்களுக்கிடையில் உறவுகளைப் பேணுவது ஈமானுடன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த குடும்ப கட்டமைப்புகள் அல்லது குடும்ப உறவுகள் சுக்கு நூறாய் உடைந்து போவதை அவதானிக்கலாம். குறிப்பாக சிற்சில சில்லறைப் பிரச்சினைகள் ஆல மரத்தை சாய்ப்பதை போல குடும்பங்களை வேரறுப்பதை காண்கின்றோம். அப்படியான உறவுகளிடையே கருவறுக்கும் முறைகளுள் ஒன்றாக அன்பளிப்பும் மாறியுள்ளது.
அன்பளிப்பு பற்றி இஸ்லாம்.
இஸ்லாமிய மார்க்கம் ஒரு மனிதனை ஏனையவர்களோடு தொடர்புபடுத்தி பல அம்சங்களை பேசுகின்றது. அவற்றை வணக்கமாக கூட ஆக்கியுள்ளது. அதே போன்று ஒருவருக் கொருவர் அன்பளிப்புக்களை பரிமாரிக் கொள்வதை இஸ்லாம் அனுமதித்திருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் ஊக்குவிக்கின்றது எனலாம்.
நபியவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நபியவர்களும் அன்பளிப்புகள் செய்துள்ளார்கள். அவர்களது பாசறையில் பட்டை தீட்டப்பட்ட ஸஹாபாக்கள் கூட தங்களது பெரும் பெரும் சொத்துக்களை அன்பளிப்புச் செய்துள்ளார்கள்.
நவீன சூழலில் அன்பளிப்பு
அன்பளிப்பு முறைகளை பொறுத்தமட்டில் ஒருவருக்கொருவர் மாறி மாறி அன்பளிப்புச் செய்கின்ற போது உள்ளங்களுக்கிடையில் பினைப்பு ஏற்பட்டு அன்பு அதிகரிக்கின்றது. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் அன்பளிப்புகள் இருக்கின்ற போது குடும்ப கட்டமைப்பில் உறுதி ஏற்படுகின்றன.
ஆனால்!
இன்று அன்பளிப்புக்களால் குடும்ப கட்டமைப்பு சிதருண்டு சிக்கி தவிக்கும் பரிதாப நிலை உருவாகியுள்ளது. ஹதிய்யா என்று அரபு மொழியில் அழைக்கப்படும் அன்பளிப்பு இன்று புதிய பரிணாம வளர்ச்சியில் பல பெயர்களால் அழைக்கப்பட்டு குடும்பங்களை சூரையாடுகின்றன. மொய், வட்டா, கடன், செப்பு, போன்ற பெயர்களால் விழுங்க முடியாத விஷமாக மாறியுள்ளது.
வீட்டில் நிகழும் நல்ல காரியங்களுக்கு ஒருவர் ஒரு மோதிரத்தை அன்பளிப்புச் செய்தால் அன்பளிப்பு செய்தவரின் ஏதாவது நிகழ்விற்கு அந்த மோதிரத்தை விட பெறுமதியான அன்பளிப்பை செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகி காலப்போக்கில் அப்படியான அன்பளிப்பு செய்ய முடியாமல் வசதி குன்றினால் குறித்த நிகழ்வை பகிஷ்கரிக்கும் துர்பாக்கிய நிலைக்குள் மக்கள் தள்ளப்படுகின்றனர்.
அன்பளிப்பு கொடுப்பவரும் எடுப்பவரும் தமக்குள் இதை விட பெரிது கொடுக்க வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்ற நோக்கில் அன்பளிப்புக்கள் செய்வதால், குறைந்த விலையில் அன்பளிப்பு வழங்க வசதியுள்ளவன் வெட்கித்து நிகழ்வுகளை பகிஷ்கரிக்கிறான். அல்லது கடன் மேல் கடன் வாங்கி தன்னையும் தனது குடும்பத்தையும் சிக்கலுக்குள் தள்ளுகிறான்.
தனது நண்பனது மகளின் திருமணத்திற்கு அன்பளிப்புச் செய்ய போதிய வசதியில்லாமல் தொலைந்து போன நண்பர்கள் எத்தனை பேர்?
உன் சாச்சி 2000 மோதிரம் தானா? வைத்தார் என்ற கேள்விகளுக்குள் சிக்கித்தவிக்கும் மகள்களின் உளக் குமுறல்கள் சொல்லன்னாதவை.
அவர் எனது மகன் பிறந்த நேரம் 5000 ரூபாய் பணம் வைத்தார். இப்போது அவரது மகளுக்கு 5500 ரூபாய்க்கு ஒரு கிப்ட் வாங்கி கொடுத்தால் கடன் முடிகிறது என்று கணவனுடன் சஞ்சலிக்கும் மனைவிகள் எத்தனை பேர்?
திருமணத்திற்கு நிறைய ஆக்கள் மொய் வைப்பார்கள் அந்த பணத்தை கொண்டு பெரிய மஹாலில் பிரமாண்டமாக கல்யாணத்தை வைக்கலாம் என ஆலோசனை வைத்த போது பொருளாதார ரீதியாக வளம் குன்றிய மாமன், மச்சான், அண்ணண் எல்லாம் நழுவிச் சென்ற சந்தர்ப்பங்கள் எத்தனை எத்தனையோ?
அவளுடைய மகளுடைய பிறந்தநாளுக்கு நான் உடுப்பு வாங்கி கொடுத்த என்ட மகன்ட கத்னாவுக்கு என்ன செய்த உங்க ஆக்கள் என்ற நச்சரிப்புக்குள் வாழும் மனசுகள் எத்தனை?
இப்படி அன்பளிப்புகளை வழங்கப் போய் திடகாத்திரமான பல குடும்பங்கள் தத்தளிப்பதை காணலாம்.
இவற்றிற்கு என்ன காரணம்? ஏன் தான் இப்படியான இழி நிலையோ? இஸ்லாம் பற்றியும் குடும்ப உறவு பற்றியும் அதன் மகத்துவம் பற்றி தெரியாத சில வறட்டு கௌரவமும் முறட்டு புத்தியும் கொண்டவர்கள் அன்பளிப்புகளை தவறாக பயன்படுத்துகின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது சொல்லிக்காட்டி மானபங்கப்படுத்துகின்றனர்.
“உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்
நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக) உயர்ரகக் குதிரையொன்றில் (அவருக்கே அதைத் தானமாகக் கொடுத்து) அனுப்பி வைத்தேன். அந்தக் குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். அவர் அதை மலிவான விலைக்கு (கேட்டால்கூட) விற்றுவிடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர். தனது தானத்தைத் திரும்பப் பெறுபவன் நாய்க்கு நிகரானவன் ஆவான். தான் எடுத்த வாந்தியைத் தானே தின்கிறது நாய்” என்றார்கள்.
( முஸ்லிம் 3313 )
மேற் கூறப்பட்டுள்ள செய்தியில் கொடுத்த தர்மத்தை திருப்பி கேட்பவன் நாய்க்கு ஒப்பானவன். நாய் தான் தான் சாப்பிட்டதை வாந்தியடுத்து மீண்டும் சாப்பிடுகிறது என கூறியுள்ளார்கள்.
நம்மவர்கள் மத்தியில் திருப்பிக் கேட்பது குறைவு என்றாலும் அதை விட கூடுதலாக பெற வேண்டும் என்ற மனோபாவம் பலரது மனதில் உள்ளதாகும். சில வேளைகளில் அப்படியான மனங்கொண்டவர்களும் நாய்க்கு ஒப்பாகலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே அன்பளிப்பு என்பது இடிந்து வீழ்ந்த ஒன்றை கட்டியெழுப்பும் ஓர் ஆயுதம். அதனை தவறாக பயன்படுத்தி விரிசலை உண்டு பண்ணாது நாம் வாழ முனைய வேண்டும். எதிர்பார்ப்பு ஏதுமற்ற வகைகள் அன்பளிப்புகளை நாமும் வழங்குவதோடு சகுனம் பார்க்கும் சகுனிகளிடம் இருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுன்னதான இபாததை செய்ய போய் குடும்ப உறவு கருவறும் என்றால் அந்த அன்பளிப்பு விடயத்தில் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அன்பளிப்புகளை வழங்கும் போது அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கூலியை நாம் எதிர்பார்க்கின்ற போது நிச்சயம் அந்த அன்பளிப்பில் எமக்கும் பறக்கத் இருக்கிறது என்பதை உணர்ந்து செயலாற்றுவோம். அதற்கு எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் எமக்கு அருள்பாலிப்பானாக!
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.