ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 23

பிக்ஹ் கலை அறிஞர்கள் ஓர் அறிமுகம்
ஸஹாபாக்களில் மார்க்க அறிஞர்கள்

நபி (ஸல்) அவர்களுக்கு பின் ஸஹாபாக்களே மார்க்க சட்டங்களை மிகவும் அறிந்தவர்களாக காணப்பட்டனர். அதனால் மக்களுக்கு ஏற்படும் மார்க்க பிரச்சினைகளை அவர்களிடமே கேட்கக்கூடியவர்களாக இருந்தனர், அவர்களில் அதிகமானவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குபவர்களாக காணப்பட்டனர். அவர்களில் மிகவும் பிரபல்யமானவர்களாக நான்கு கலீபாக்களும், ஆஇஷா, ஹப்ஸா, அனஸ் இப்னு மாலிக், அபூ ஹூரைரா, அப்துல்லாஹ் இப்னு அம்ர், அபூ அய்யூப், ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், அப்துல்லாஹ் இப்னு உமர், ஸுபைர் இப்னுல் அவ்வாம், அபூ மூஸா அல்அஷ்அரி, அபூ தர்தா, அபூ ஸஈத் அல்குத்ரி (ரலி) போன்றோரைக் குறிப்பிடலாம்.



தாபிஈன்களில் மார்க்க அறிஞர்கள்

உர்வத் இப்னு ஸுபைர், ஸஈத் இப்னு முஸைய்யப், அல்காசிம் இப்னு முஹம்மத் இப்னு அபூபக்ர், ஹாரிஜா இப்னு ஸைத், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், அபூஸலமத் இப்னு அப்துர்ரஹ்மான், சுலைமான் இப்னு யஸார் போன்றோர்கள் தாபிஈன்களில் பிரபல்யமானவர்களாவர். இவர்கள் 'அல் புகஹாஹூஸ் ஸப்ஆ' என்று அழைக்கப்படுவர்.



மத்ஹப்கள் ஓர் அறிமுகம்

ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இஸ்லாம் வேகமாகப் பரவியது. பல மொழிகளையும் கலாச்சாரங்களையும் சார்ந்த அரபியல்லாத பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். இதனால் மார்க்கம் தொடர்பான புதிய பிரச்சினைகள் தோன்றின. அவற்றுக்கு இஸ்லாமியத் தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு அன்றைய அறிஞர்களைச் சார்ந்திருந்தது. அவர்கள் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் நுணுக்கமாக ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கினார்கள்.

இவ்வாறு அல்குர்ஆன் ஸூன்னாவின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் அறிஞர்கள் முஜ்தஹித்கள் எனப்படுவர். இவர்கள் ஈடுபட்ட துறை பிக்ஹூத்துறை என அழைக்கப்படுகிறது. இத்தகைய அறிஞர்கள், தம்மிடம் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு, தமக்குக் கிடைத்த அல்குர்ஆன், அல்ஹதீஸ் ஆதாரங்களை வைத்துத் தீர்ப்பு வழங்கினார்கள். ஏற்கனவே அவர்கள் அல்குர்ஆன், அல்ஹதீஸ் போதனைகளை வகுப்புகளாக நடாத்தி வந்தமையால் சட்டப் பிரச்சினைகளின் தீர்வுகளை மக்களுக்கு முன்வைத்தனர்.



இவ்வாறு பாட போதனைகளை நடாத்தியும், பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியும் பங்களிப்புச் செய்தவர்களில் ஒரு சிலர் குறிப்பிடத்தக்கவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களுள் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) , மாலிக் (ரஹ்), ஷாபிஈ (ரஹ்), அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) ஆகிய நால்வரும் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பெற்று மக்களுக்கு மத்தியில் பிரகாசிக்கிறார்கள். பிற்காலத்தில் இவர்களது கருத்துக்களும் தீர்ப்புகளும் மத்ஹப் என்ற பெயரில் வளர்ச்சியடைந்தன.



இமாம் அபூ ஹனீபா (ரஹ்)

இமாமுல் அஃழம் அபூ ஹனீபா நுஃமான் இப்னு ஸாபித் (ரஹ்) கூபாவில் ஹி80ல் பிறந்து பக்தாதில் ஹி150ல் மரணித்தார்கள். இமாமவர்கள் சிறு வயதிலேயே அறிவும் ஆற்றலும் உடையவராகத் திகழ்ந்தார்கள். எனினும் அவர்கள் தொடர்ந்து படிக்க முடியாமல் தந்தையின் வியாபாரத்தில் ஈடுபட்டார்கள். அவரது திறமையை அவதானித்த இமாம் ஆமிர் அஷ்ஷஃபி (ரஹ்) அவர்கள் படிப்பைத் தொடருமாறு அவரைத் தூண்டினார்கள். தொடர்ந்து படித்த அவர்கள் பிற்காலத்தில் சிறந்த அறிஞராகப் பாராட்டப்பட்டார்கள்.

கூபாவில் ஹம்மாத் இப்னு அபூ ஸூலைமான் (ரஹ்) என்ற அறிஞரிடம் மார்க்க கல்வியை கற்றார்கள். அவரது திறமையை கண்ட ஆசிரியர் தமது கலாபீடத்தில் இவர்களை உதவியாளராக அமர்த்திக் கொண்டார்கள்;. பல வருடங்கள் ஆசிரியருடன் சேர்ந்து பிக்ஹூத் துறையில் நிபுணத்துவம் பெற்றார்கள். ஆசிரியர் மரணித்த போது அவர்களது இடத்துக்கு இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களே நியமிக்கப்பட்டார்கள்.

இவர்களிடம் தர்க்க ரீதியாக கருத்துக்களை முன்வைக்கும் திறமை காணப்பட்டது. அது மார்க்க சட்டங்களை தெரிந்து கொள்வதற்கும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் பேருதவியாக அமைந்தது. பிக்ஹூப் பிரச்சினைகள் அதிகரித்திருந்த அக்காலத்தில் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூபாவிலிருந்து அறிஞர்களை ஓன்று கூட்டினார்கள். ஜாமிஉ கூபாவில் ஒன்று கூடிய அறிஞர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தினார்கள். கூட்டு முயற்சியாக சட்டத் தீர்ப்புகளை கண்டறிந்தார்கள். அவற்றை எழுத்துருவிலும் தொகுத்தார்கள்.

இது தவிர அல் ஆலிம் வல் முதஅல்லிம், முஸ்னத் முதலிய நூல்களையும் அவர் தொகுத்தளித்துள்ளார்கள். பிற்காலத்தில் இவர்களது சட்டத் தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் மாணவர்களான இமாம் அபூ யூசுப் , இமாம் ஸுபர் , முஹம்மத் ஹஸன் ஷைபானி (ரஹ்) முதலானோர் ஹனபி மத்ஹபை உருவாக்கினார்கள்.



இமாம் மாலிக் (ரஹ்)

'இமாமு தாரில் ஹிஜ்ரா' என்றழைக்கப்படக்கூடிய அபூ அப்தில்லாஹ் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்கள் ஹி97ல் பிறந்து ஹி179ல் மரணித்தார்கள். இமாமவர்கள் தாபிஈன்களை சந்தித்தவர் என்பதால் அவர்கள் மூலம் ஷரீஆ சட்டங்களையும் விளங்கிக் கொண்டார்கள். மதீனாவில் வாழ்ந்த அறிஞர்களிடம் மார்க்க கல்வியை கற்றுக் கொண்ட இவர்கள் சிறந்த ஹதீஸ் கலை அறிஞராகவும், பிக்ஹூத் துறை அறிஞராகவும் திகழ்ந்தார்கள்.



மதீனாவில் வாழ்ந்தமையால் அவர்களுக்கு அநேக ஹதீஸ்கள் கிடைத்தன. அவற்றைக் கற்று மனனமிட்டதோடு மஸ்ஜிதுன் நபவியில் ஹதீஸ் வகுப்பும் நடாத்தி வந்தார்கள். இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் ஈராக்கில் செய்த பணியை இவர்கள் ஹிஜாஸில் செய்து வந்தார்கள். பிக்ஹ் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஹதீஸ் ஆதாரங்களை வைத்துத் தீர்ப்பு வழங்கினார்கள். தம்மிடம் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் உடனே பதிலளிக்கமாட்டார்கள். தம்மை விட சிறந்த அறிஞர்களிடம் சென்று தீர்ப்புப் பெறுமாறு அனுப்பி வைப்பார்கள். தமக்குத் தெரியவில்லையாயின் தயக்கமின்றி தெரியாது என்றே கூறுவார்கள். அந்தளவு இறையச்சமும், பணிவும் அவர்களிடம் காணப்பட்டன.

அக்காலத்தில் பிக்ஹ், ஹதீஸ் தொடர்பான கல்வி மக்களுக்கு அவசியமாக இருந்தது. ஆதலால் பிக்ஹ் சட்டங்களையும், ஹதீஸ்களையும் உள்ளடக்கிய 'முவத்தா' என்ற நூலை தொகுத்தளித்தார்கள். இது தவிர வேறு பல நூல்களும் அவர்களால் எழுதப்பட்டன. அவர்கள் வழங்கிய சட்ட தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டே மாலிக் மத்ஹப் உருவானது. இவர்களது சட்டத்தீர்ப்புகளை அறிவிப்புச் செய்தோரில் இமாம்களான முஹம்மத் இப்னு ஹஸன் , யஹ்யா அல்லைஸீ , முஸ்அப் அஸ்ஸுபைரீ (ரஹ்) போன்றவர்கள் பிரதானமானவர்கள் ஆவர்.



இமாம் ஷாபிஈ (ரஹ்)

'இமாமு குறைஷ்' அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்ஷாபிஈ (ரஹ்) பலஸ்தீனிலுள்ள காஸாவில் ஹி150ல் பிறந்து எகிப்தில் ஹி204ல் மரணித்தார்கள். சிறு வயதில் தந்தையை இழந்த இவர்கள் தாயுடன் மக்கா சென்று தனது மாமாவுடன் வாழ்ந்தார்கள். ஏழு வயதில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து கொண்டார்கள்.

கல்வி கற்பதில் ஆர்வம் கொண்ட அவர்கள் கற்பதற்கான வாய்ப்புக்கள் எங்கெல்லாம் காணப்பட்டனவோ அங்கெல்லாம் சென்றார்கள். மக்கா, மதீனா, பக்தாத், எகிப்து என அவர்களது கல்விப் பயணம் அமைந்தது. மக்காவில் முஸ்லிம் இப்னு காலித்(ரஹ்), மதீனாவில் மாலிக் (ரஹ்), பக்தாத்தில் இமாம் அபூ யூசுப் (ரஹ்) ஆகியோரிடமும் இன்னும் பலரிடமும் மார்க்கக் கல்வியை கற்றுக்கொண்டார்கள். இதனால் இவர்கள் ஹதீஸ், பிக்ஹ், அரபு மொழி போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவராகக் காணப்பட்டார்கள்.

இரவு நேரத்தை மூன்றாக வகுத்து ஒரு பகுதியை அறிவாராய்ச்சிக்கும், மறு பகுதியைத் தூக்கத்திற்கும், மூன்றாம் பகுதியை இறை வணக்கத்திற்கும் செலவிட்டார்கள். மாணவர்களுக்கு பாடங்களை போதித்த அதேவேளை, இவர்கள் பல நூல்களையும் எழுதியுள்ளார்கள். அவற்றுள் கிதாபுல் உம்மு, அர்ரிஸாலாஹ், முஸ்னத் என்பன பிரசித்தமானவை. இஸ்லாமிய சட்ட திட்டங்களை (பிக்ஹ்) பிரித்தாராயும் உஸுலுல் பிகஹ் எனும் துறைக்கு முதன் முதலில் இவர்களே வித்திட்டார்கள். இமாமவர்களது சட்டத் தீர்ப்புகளை வைத்தே ஷாபிஈ மத்ஹப் உருவானது. இவர்களது சட்டத்தீர்ப்புகளை பரவச்செய்த பெருமை இமாம் முஸனீ , இமாம் ரபீஃ , இமாம் நவவி (ரஹ்) ஆகியோரையை சாரும்.



இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)
அன்று இஸ்லாமிய கிலாபத்தின் தலைநகராக பக்தாத் இருந்தது. அங்கு ஹி164ம் ஆண்டு பிறந்து ஹி241ல் மரணித்த 'இமாமு அஹ்லிஸ் ஸுன்னா' அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களுக்கு வேறிடங்களுக்கு சென்று கற்க வேண்டிய தேவை இருக்கவில்லை. எனினும் மக்கா, மதீனா நகரங்களுக்குச் சென்று ஹதீஸ்களைக் கற்று, அவற்றை மனனம் செய்து நாடு திரும்பினார்கள். இமாம் ஷாபிஈ , அபூ யூஸூப் (ரஹ்) போன்ற அறிஞர்களிடம் மார்க்கக்கல்வியை கற்றார்கள். அவர்களது ஹதீஸ் தொகுப்பு நூல் 'முஸ்னத் அஹ்மத்' எனப்படுகிறது.

இமாமவர்கள் அக்காலத்தில் மார்க்கத் தீர்ப்பு வழங்கிய அறிஞர்களுள் முக்கியமானவராவார். ஹதீஸ் துறையிலும், பிக்ஹூத் துறையிலும் கவனம் செலுத்திய அவர், பிக்ஹூத் துறையின் சமகால தேவையை பூர்த்தி செய்தார்கள். இவரது காலத்தில் பக்தாத், அறிவியல் துறையில் உச்சத்தை அடைந்தது. அதே நேரத்தில் பிற மத கலாசாரத் தாக்கங்களும் மார்க்கத்தில் உட்புகுந்தது. இஸ்லாத்துக்கு முரண்பட்ட கருத்துகளை கலீபாக்களும் அங்கீகரிக்கும் நிலை ஏற்பட்டது. இவ்வேளையில் இமாமவர்கள் சத்தியத்துக்காகப் போராடி சிறைவாசம் அனுபவித்தார்கள். அன்றைய அரசு இவர்களுக்கு கசையடியை தண்டனையாக வழங்கியது.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் அறிவை மக்கள் மத்தியில் பரவச்செய்த பெருமை அவர்களது மகன் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களையே சாரும். அவர்கள்தான் தனது தந்தையால் தொகுக்கப்பட்ட முஸ்னதை அறிவிப்புச் செய்தவர்கள். மறுபுறத்தில் அவர்களது பிக்ஹூத்துறைக் கருத்துக்களை மக்களுக்கு அறிவித்த பெருமை அவர்களது மற்றொரு மகன் ஸாலிஹ் (ரஹ்) மற்றும் சிரேஷ்ட மாணவர் இமாம் அபூதாவூத் (ரஹ்) (ஸுனன் அபீதாவூத்தின் ஆசிரியர்) ஆகிய இருவரையுமே சாரும்.



வினா   இல - 23
 
இமாம் ஷாபி அவர்களால் தொகுக்கப்பட்ட நூல்கள் மூன்று கூறுக? .









கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget