ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 13

ஆறு ஹதீஸ்கலை அறிஞர்களும் அவர்களின் கிரந்தங்களும்

ஹதீஸ்கலையின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற பாடத்தில் நாம் பிரபல்யமான ஹதீஸ் கிரந்தங்களில் சிலதைக் குறிப்பிட்டிருந்தோம். அவற்றை இங்கு சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸஹீஹூல் புஹாரி

அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாஈல் அல்புஹாரி என்ற அறிஞரால் எழுதப்பட்டதே ஸஹீஹூல் புஹாரி ஆகும். இவர் உஸ்பகிஸ்தானிலுள்ள புஹாரா என்ற இடத்தில் ஹி194ம் ஆண்டு பிறந்து ஹி256ம் ஆண்டு மரணித்தார். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் மாணவர்களுள் ஒருவரான இவர்கள் மனன சக்தியில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள். 'ஸஹீஹூல் புஹாரி' என்ற பெயரில் இந்த கிரந்தம் பிரபல்யமாக அழைக்கப்பட்டாலும் நூலாசிரியர் இதற்கு அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் முஸ்னதுல் முஹ்தஸர் மின் உமூரி ரஸூலில்லாஹி வசுனனிஹி வஐயாமிஹி என்று பெயரிட்டார்கள். தனது 16வது வயதில் இக்கிரந்தத்தை எழுதத் தொடங்கிய இமாம் புஹாரி அவர்கள் தமது 32ம் வயதில் ஏறத்தாழ 16 ஆண்டுகால அயராத உழைப்பின் பிறகே அதனை எழுதிமுடித்தார்கள்.

தமக்கு முன்னைய காலத்தில் எழுதப்பட்ட ஹதீஸ் நூற்களில் ஸஹீஹ், ஹஸன், ழஈப்ஃ ஆகிய அனைத்துத் தரங்களிலுமுள்ள நபிமொழிகள் காணப்பட்டன. ஆனால் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் ஒன்று திரட்டும் நோக்கிலேயே இவர்கள் ஸஹீஹூல் புஹாரியை எழுதினார்கள். இந்நூலில் மொத்தமாக சுமார் 7397 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளதாக இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் திரும்பத் திரும்ப இடம்பெறும் ஹதீஸ்களைத் தவிர்த்தால் 2602 ஹதீஸ்கள் இந்நூலில் உள்ளன.

இதில் திரும்பத் திரும்ப இடம்பெறும் ஹதீஸ்களும் உள்ளடங்கும். இதில் காணப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் விடயமாகும். பல அறிஞர்கள் இந்நூலிற்கு விரிவுரைகள், நூலிற்கான சுருக்கம், அதில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் பற்றிய ஆய்வு போன்றவைகளையும் எழுதியுள்ளனர். சுமார் 71 அறிஞர்கள் இதற்கு விரிவுரை எழுதியுள்ளார்கள். அவற்றில் மிகவும் பிரபலமானது இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் எழுதிய 'பத்ஹூல் பாரி' என்ற நூலாகும்.



ஸஹீஹ் முஸ்லிம்

ஹதீஸ் கிரந்தங்களில் ஸஹீஹூல் புஹாரிக்கு அடுத்த தரத்தில் அறிஞர்களால் மதிக்கப்படுவது 'ஸஹீஹ் முஸ்லிம்' ஆகும். இதனுடைய முழுப்பெயர் 'அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்' என்பதாகும். அபுல் ஹூஸைன் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் அந்நைஸாபூரி என்ற அறிஞரால் இந்நூல் தொகுக்கப்பட்டது. இவர்கள் ஈரானிலுள்ள நைஸாபூர் என்ற கிராமத்தில் ஹி.204ல் பிறந்து ஹி.261ல் மரணித்தார்கள். இவர் இமாம் புஹாரியின் முக்கிய மாணவர்களில் ஒருவர். இதில்; திரும்பத் திரும்ப இடம்பெறா வண்ணம் சுமார் 4000 ஹதீஸ்கள் உள்ளன.



திரும்பத் திரும்ப இடம்பெறும் ஹதீஸ்கள் அடங்கலாக சுமார் 12000 ஹதீஸ்கள் உள்ளன. இந்நூலிற்கு பல அறிஞர்களால் விரிவுரை எழுதப்பட்டாலும் இமாம் நவவி அவர்களால் எழுதப்பட்ட 'அல்மின்ஹாஜ்' என்ற நூலே பிரபல்யமானதாகும்.



ஸுனன் அபூதாவூத்

ஹதீஸ் கிரந்தங்களில் புஹாரி, முஸ்லிம் ஆகிய இரு கிரந்தங்களுக்கும் அடுத்தபடியாக மதிக்கப்படுவது 'ஸுனன் அபூதாவூத்' ஆகும். இந்நூல் அபூதாவூத் ஸுலைமான் இப்னு அஷ்அஸ் அஸ்ஸிஜிஸ்தானி அவர்களால் எழுதப்பட்டது. இவர் ஈரானில் உள்ள ஸிஜிஸ்தான் என்ற இடத்தில் ஹி.202 ம் ஆண்டு பிறந்து ஹி.275ம் ஆண்டு மரணித்தார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் மாணவர்களுள் இவரும் ஒருவர்.

இந்நூலில் சுமார் 5275 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இவைகளில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அதிகமாக காணப்பட்டாலும் சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஏனைய நூல்களுக்கு விரிவுரை நூல்கள் எழுதப்பட்டதைப் போன்று இதற்கும் அதிகமான விரிவுரை நூல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் இமாம் கத்தாபி அவர்களால் எழுதப்பட்ட 'மஆலிமுஸ் ஸுனன்' என்ற நூலும் இந்தியாவைச் சேர்ந்த ஷம்ஸுல் ஹக் அழீம் ஆபாதீ என்பவரால் எழுதப்பட்ட 'அவ்னுல் மஃபூத்' என்ற நூலும் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.



ஜாமிஉத் திர்மிதி

ஸுனன் அபூதாவூதுக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுவது அபூஈஸா முஹம்மத் இப்னு ஈஸா அத்திர்மிதி அவர்களால் இயற்றப்பட்ட 'ஜாமிஉத் திர்மிதி' என்ற ஹதீஸ் கிரந்தமாகும். இவர் இன்றைய உஸ்பகிஸ்தான் நாட்டிலுள்ள திர்மித் என்ற ஊரில் ஹி.209ம் ஆண்டு பிறந்து ஹி.279ம் ஆண்டு மரணித்தார்கள். இவர் இமாம் புகாரியின் முக்கியமான மாணவர்களில் ஒருவராவார். இந்நூல் 'ஸுனனுத் திர்மிதி' என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. இதில் சுமார் 3891 நபிமொழிகள் பதியப்பட்டுள்ளன.

இவைகளில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அதிகமாக காணப்பட்டாலும் சில பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஏனைய நூல்களுக்கு விரிவுரை நூல்கள் எழுதப்பட்டதைப் போன்று இதற்கும் அதிகமான விரிவுரை நூல்கள் எழுதப்பட்டன. அவற்றுள் மாலிக் மத்ஹபின் பிரபல்யமான அறிஞர் இப்னுல் அரபி எழுதிய 'ஆரிழதுல் அஹ்வதீ' என்ற நூலும், இந்தியாவைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் முபாரக் பூரி அவர்களால் எழுதப்பட்ட 'துஹ்பதுல் அஹ்வதீ' என்ற நூலும் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.





ஸுனன் நஸாஈ

கிழக்கு ஈரானிலுள்ள நஸா எனும் நகரத்தில் ஹி.215ம் ஆண்டு பிறந்த அபூ அப்திர்ரஹ்மான் அஹ்மத் இப்னு சுஐப் அந்நஸாஈ அவர்களால் எழுதப்பட்டதே 'ஸுனன் அந்நஸாஈ'. இவர்கள் ஹி.303ம் ஆண்டு மரணித்தார்கள்.

சுமார் 5769 ஹதீஸ்களை உள்ளடக்கிய இந்நூல் ஸுனனுத் திர்மிதிக்கு அடுத்து மதிக்கப்படுகின்றது. இவை இதே நூலாசிரியர் தொகுத்த 'அஸ்ஸுனனுல் குப்ரா' என்ற நூலிலிருந்து தேர்வு செய்து தொகுக்கப்பட்டவையாகும். இந்நூலிற்கு ஓரிரு விரிவுரை நூல்களே எழுதப்பட்டுள்ளன. அதில் இமாம் ஸுயூதி அவர்களால் எழுதப்பட்ட 'ஸஹ்ருர் ருபா அலல் முஜ்தபாஹ்' என்ற விரிவுரை நூல் முக்கியமானதாகும்.





ஸுனன் இப்னுமாஜா

கஸ்பியன் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள ஈரானிய நகரமான கஸ்வீனில் ஹி209ம் ஆண்டு பிறந்த அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு யஸீத் இப்னுமாஜா அல்கஸ்வீனீ அவர்களால் எழுதப்பட்ட கிரந்தம் ஸுனன் இப்னுமாஜா. இவர் ஹி273ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்கள்.

சுமார் 4341 ஹதீஸ்களை உள்ளடக்கிய இக்கிரந்தம் ஸுனன் நஸாஈயிற்கு அடுத்து மதிக்கப்படுகின்றது. இந்நூலிற்கு 'அல்இஃலாம் பிஸுன்னதிஹி அலைஹிஸ் ஸலாம்' எனும் பெயரில் இமாம் முஃக்லதாய் என்ற அறிஞரும், 'மிஸ்பாஹூஸ் ஸுஜாஜா ஷரஹ் ஸுனன் இப்னிமாஜா' எனும் பெயரில் இமாம் ஸுயூதி அவர்களும் எழுதியுள்ள விரிவுரைகள் பிரபலமானது.



வினா   இல - 13
 
ஸஹீஹுல் புஹாரியில் மொத்தமாக எத்தனை ஹதீஸ்கள் உள்ளன ?




கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget