ஒரு முஸ்லிம் இஸ்லாத்திற்கு முரணாக செய்யும் சில செயல்கள் அல்லது சொல்லும் சில சொற்கள் அவனை இஸ்லாம் என்ற உண்மையான மார்க்கத்தை விட்டும் வெளியேற்றி விடுகிறது. எனவே அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவதால் அவனது உடல் பொருளுக்கு இஸ்லாம் உத்தரவாதம் அளிக்காது. ஆகவே தான் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுகின்ற காரணங்களுள் மிகத் தீயதும் பயங்கரமானதுமான முக்கிய பத்துக் காரியங்களை மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவற்றிலிருந்து முழுமையாக நாம் விலகுவதுடன் மற்றவர்களையும் விலக்கிப் பாதுகாப்புப் பெறுவதற்காக அவற்றை இறை வசனங்களின் துணையுடன் சுருக்கமாக பார்ப்போம்.
1. அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிறைவேற்ற வேண்டிய வணக்க, வழிபாடுகளில் இன்னுமொருவரை கூட்டு சேர்த்தல்.
'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்'. (அல்குர்ஆன் - 04 : 48)
2. அடியான் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இடைத்தரகர் ஒருவரை ஏற்படுத்தி தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யுமாறு அவரிடம் கோருதல்.
'தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், 'இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை' என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; 'வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்' என்று கூறும்'. (அல்குர்ஆன் - 10 : 18)
3. இணை கற்பிப்பவர்களை காபிர்கள் என கருதாமல் இருத்தல் அல்லது அவர்கள் காபிர்களா என சந்தேகித்தல் அல்லது அவர்களின் வணக்கங்களை சரி காணுதல்
'இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்'. (அல்குர்ஆன் - 03 : 85)
4. நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலை விட ஏனையோரின் வழிகாட்டல்கள் தான் பரிபூரணம் என நம்புதல், அல்லது நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பை விட ஏனையோரின் தீர்ப்பே சிறந்தது என நம்புதல்.
'அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை'. (அல்குர்ஆன் - 12 : 40)
5. நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த ஷரீஅத்திலிருந்து ஏதேனும் ஒன்றை வெறுத்தல். அதனை அவன் (அமலாக) செய்து கொண்டிருந்தாலும் சரியே!
'ஏனெனில்: அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்'. (அலகுர்ஆன் - 47 : 09)
6. நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்திலுள்ள ஏதாவது ஒன்றையோ அல்லது அல்லாஹ்வின் பிரதிபலனையோ, தண்டனையையோ கேலி செய்தல்.
'நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று) அவர்களிடம் நீர் கேட்பீராயின் உடனே அவர்கள் 'நாங்கள் நகைச்சுவையாகவும் விளையாட்டாகவும் தான் பேசிக் கொண்டிருந்தோம். என்று கூறுவார்கள். அவர்களிடம் நீர் கூறும் 'அல்லாஹ்வையும் அவனுடைய வசனங்களையும் அவனுடைய தூதரையும் தான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமா?. போலிக் காரணம் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிச்சயமாக நிராகரித்து விட்டீர்கள்'. (அல்குர்ஆன் - 09 : 65,66)
7. சூனியம் செய்தல்; இதன் மூலம் நல்ல தொடர்புகளைப் பிரித்தல், தீயவற்றை ஆசையூட்டல்.
'அவர்கள் இருவரும் 'நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காபிர்கள் ஆகிவிடாதீர்கள்' என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை'. (அல்குர்ஆன் - 02 : 102)
8. முஷ்ரிக்குகளை ஆதரிப்பதும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவுதலும்.
'முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான் நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்'. (அல்குர்ஆன் - 05 : 51)
9. சிலருக்கு நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தின் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் இருக்கலாம் என நம்புதல்.
'இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்'. (அல்குர்ஆன் - 03 : 85)
10. அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கற்றறிய முற்படாமையும் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்காமையும்.
'எவர் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவுபடுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்'. (அல்குர்ஆன் - 32 : 22)
இஸ்லாத்தை முறிக்கும் மேற்கூறிய செயல்களை வேண்டுமென்று செய்வதற்கும் விளையாட்டாக செய்வதற்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்டாலே தவிர. மேலும் நம்மை அறியாமலே இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் இது போன்ற விடயங்களிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!.
வினா இல - 10
இஸ்லாத்தை முறிக்கும் செயல்கள் இரண்டை ஆதாரத்துடன் குறிப்பிடுக .
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.