ஹுஃதைபா பின் யமானி (றழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்; இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானோ தீயவை என்னைத் தீண்டிவிடுமோ என அஞ்சிய காரணத்தினால், நபியவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். (புகாரி, முஸ்லிம்)
நன்மைகளை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நலவுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஆசைவைக்கிறோம். அதே போன்று, தீங்குகளில் விழுந்துவிடாதிருக்க தீமைகளைப் பற்றி நாம் அறிந்துவைப்பதும் அவசியமாகும். அந்த வகையில்; ""லா இலாஹ இல்லல்லாஹ்'" என்ற ஷஹாதாக் கலிமாவுக்கு, அல்லாஹ்வும், அவனது தூதர்களும் ஒரு பொருள் கொடுத்திருக்கும் போது, வேறு சிலர், பொறுத்தமில்லாத பொருளைக் கொடுத்து மக்களை திசைதிருப்பி, அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். எனவேதான், இக்கலிமாவின் உண்மையான பொருளையும் அதற்குரிய ஆதாரங்களையும் கூறுவதோடு, வழி கெட்ட, அல்லது, வழி தவறிய சிந்தனையுடையவர்கள் இதற்கு வேறுபட்ட பல அர்த்தங்களையும் தருவதால், அப்பொருள்கள், அதற்குரிய பதில்கள், மற்றும் தவறான பொருள்களால் ஏற்படும் விபரீதம் யாது என்பவைகளையும் அறிவதே இந்நூலின் நோக்கமாகும்.
""லா இலாஹ இல்லல்லாஹ்'" வின் சரியான பொருள்: உண்மையாக வணக்கத்துக்குரிய (வணக்கத்திற்கு தகுதியான) இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
"லா இலாஹ இல்லல்லாஹ்" என்பது இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது.
1. லா இலாஹ - நிராகரித்தல் (வணக்கத்திற்குரிய கடவுள் எதுவுமில்லை என ஒட்டுமொத்தமாக நிராகரித்தல்)
2. இல்லல்லாஹ் - ஏற்றுக்கொள்ளல். (வணக்கத்திற்குரிய கடவுள் அல்லாஹ் மட்டுமே என ஏற்றுக்கொள்ளல்)
இந்த இரண்டு அம்சங்களைப் பற்றி போதிக்கவே அல்லாஹ்வின் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்.
அல்லாஹ், அவனது தூதர்களை அனுப்பியதன் நோக்கம் யாது?
அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் எதற்காக, எதனைப் போதிக்க அனுப்பப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் தெளிவாகவே அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், (1)அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; (2)ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம். அல் குர்ஆன்: 16:36
தூதர்கள் அனுப்பப்பட்ட நோக்கம், அல்லாஹ்வை மட்டும் வணங்கி, அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்ளச் செய்வதற்காகவேயாகும்.
وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்காதிருக்கவே உனதிரட்சகன் கட்டளையிட்டிருக்கிறான். அல் குர்ஆன் 17:23
அல்லாஹ் மனித இனத்தைப் படைத்த நோக்கம் யாது?
அல்லாஹ் கூறுகிறான்:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ
“ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை.” (51:56)
அல்லாஹ் மனிதர்களைப் படைத்த நோக்கம், அவ்விறைவனை வணங்குவதற்கும், நபிமார்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம் மனிதர்கள் அல்லாஹ்வையன்றி வேறு எதனையும் வணங்கக்கூடாது என்றும் போதிக்கவுமே என்பதனை மேலுள்ள வசனங்களிலிருந்து அறிந்துகொள்வதோடு, ''லாஇலாஹ இல்லல்லாஹ்'' என்பதன் சரியான பொருள் உண்மையாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை'' என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
இக்கலிமாவின் பொருளாக மேற்கூறப்பட்டது, எங்கள் சிறுவயது முதல் சொல்லித்தரப்பட்டவைதான். ஆனாலும், அதிக முஸ்லிம்கள், இக்கலிமாவுக்கு சரியான பொருள் தராது, அப்பொருளுக்கு ஏற்ப செயற்படாது, ஷைத்தனிய வழியில் செல்பவர்களாக இருக்கிறார்கள்.
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டியவர்கள், இன்று அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணமே இந்த ஷஹாதாக் கலிமாவை சரிவர அறியாமையும், அதற்குரிய பொருளை தராததுமேயாகும்.
தெளிவாக கடவுள் இல்லையெனக் கூறுபவர்களாகிய நாஸ்திகர்களுக்கும் இணைவைக்கும் முஸ்லிம்களுக்குமுள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்.
நாஸ்திகர்களுக்கும் ஏகத்துவத்தை மறுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள வேறுபாடு:
· நாஸ்திகர்கள், (எதுவும் கடவுள் இல்லை என, ஒட்டு மொத்தமாக, வணங்கப்படும் அனைத்தையும் நிரகரிப்பதில் தெளிவாக இருக்கின்றனர். அதாவது, ஷஹாதாக் கலிமாவின் முதல் பகுதி கூறுவது போன்று “ لا إله ” (நிராகரித்தல்) எதுவும் கடவுள் இல்லையென தெளிவாக இருக்கின்றனர். ஆனால், அதன் இரண்டாவது பகுதியான “ إلا الله ” (அல்லாஹ் ஒருவன் தான் கடவுள்) என்பதை ஏற்க மறுக்கின்றனர்.
· இணைவைப்பில் ஈடுபடும் முஸ்லிம்களோ, “ إلا الله ” (ஏற்றுக்கொள்ளல்) வணக்கத்துகுரியவன் அல்லாஹ் என்பதை (பூரண விளக்கமின்றி) ஏற்றுக் கொண்டு, “لا إله” (நிராகரித்தல்) மனிதர்களால் தெய்வங்கள் என்று வணங்கப்படுபவைகளை பரிபூரணமாக நிராகரிக்காதிருக்கின்றனர்.
· நாஸ்திகர்கள் எதுவும் கடவுளில்லை எனக்கூற, முஸ்லிம்களோ, விளக்கமின்றி அல்லாஹ் அல்லாதவர்களையும் வழிபடுகின்றனர்.
எழுதியவர் : Abul Hasan (Sahwi,Madeni)
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.